1. கே: ‘சிட்டி குரூப்’ என்னும் உலக வங்கி அறிக்கை- இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. ஆனால், மோடி தம் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும், வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறாரே, இது ஏமாற்றுதானே?
– கி. ராஜவேல், அம்பத்தூர்.
ப : பெரும் ஏமாற்றுப் பதில் ஆகும். அண்மையில் ரஷ்யாவுக்குப் போய் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் கைகுலுக்கி விருந்துண்டு உரையாடியபோது, ரஷ்ய – உக்கிரைன் போருக்கு, (ரஷ்ய இராணுவத்திற்கு ஆள் பற்றாக்குறையோ என்னவோ) இந்தியாவிலிருந்து பல இளைஞர்களை நல்ல வேலை வாய்ப்பு என்று கூறி அழைத்து வந்து ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களை (உயிருள்ளவர்களை) மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று
பிரதமர் மோடி கோரிக்கை வைத்த செய்தி மூலம் அறிய வேண்டிய உண்மை என்ன?
இந்தியா என்ற நம் நாட்டு அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்பு தராததால்தானே ரஷ்யாவிற்குச் சென்றார்கள். அதுவே சான்றல்லவா? – இராணுவத்திலாவது சேர்ந்து வாழ்வாதாரத்தைக் காப்பாற்றத்தானே! அதுவே தகுந்த வேலை கிட்டாமைக்கு – வேலை கிட்டாத் திண்டாட்டத்திற்குப் பகிரங்க ஆதாரம் அல்லவா?
2. கே: திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் போன்றே தேர்தல் அறிக்கை வெளியிட்டு, பிரிட்டனில் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உண்மையிலேயே ‘திராவிட மாடல்’ ஆட்சி உலகின் ‘ரோல் மாடல்’ ஆட்சிதானே?
– வி. ராம், வடஆர்க்காடு.
ப : அதைவிட, அங்கே கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமரான ரிஷிசுனேக் என்ற பார்ப்பனர் இந்து மதப் பெருமை, கீதை மீது பிரமாணம் எல்லாம் செய்து, அவரது கட்சிக்குத் தோல்வியைத் தந்தார்!லேபர் கட்சி வென்றது! அதுபோல மோடி அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட வலது சாரி அதிபரின் கட்சியும் தோல்வி!
3. கே: நச்சுச் சாராயம் குடித்து இறந்தோர்க்குப் பத்து லட்சம் இழப்பீடு என்பது மிக அதிகம். அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற அறிவுரை பற்றித் தங்கள் கருத்து என்ன?
– பு. கோபால், ராயப்பேட்டை.
ப : இனிமேலாவது அத்தகைய பண உதவி தவிர்க்கப்பட வேண்டும். கொடுத்ததைத் திரும்பப் பெற முடியாது; கூடாது. நிர்க்கதியான குடும்பத்தினருக்கு கல்வி, வேலை தந்து புது வாழ்வு தரலாம்!
4. கே: ‘நீட்’ தேர்வுக்கு தற்போதைய விசாரணையிலே நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் தீர்வு கிடைக்குமா? அந்த வழக்கை இப்போதே சேர்த்து விசாரித்து முடிவு காண முடியாதா?
– வி. ராம்மோகன், கூடுவாஞ்சேரி.
ப : மக்கள் மன்றம் மூலமே இறுதி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!
5. கே: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்ற சந்திரபாபு நாயுடுவின் திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
– என். ரேணுகா, காஞ்சிபுரம்.
ப : சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகள் பயன்படா.
6. கே: கொலைக் குற்றவாளிகள், ரவுடிகள் எல்லோரையும் தங்கள் கட்சியில் பா.ஜ.க. சேர்த்து வருவதற்கும், தமிழகத்தில் அதிகரித்துவரும் படுகொலைகள், ரவுடிகளின் அச்சமற்ற செயல்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பும், சதித்திட்டமும் உள்ளதாக வரும் கணிப்புகளை தமிழக அரசு எச்சரிக்கையாகக் கொண்டு விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் அல்லவா?
– சிவ. பாலாஜி, பழங்காநத்தம்.
ப : ஆம் என்க! – இப்போது செயல் துவங்கிவிட்டது!
7. கே: உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ஆய்வுக்கு எடுத்து தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் நீட்டிற்கு எதிரான வலுவான வாதங்கள் தமிழ்நாட்டின் சார்பில் வைக்கப்படுமா?
– பா. ராகவன், விக்கிரமசிங்கபுரம்.
ப : வாதங்கள் ஓரளவே பயன்படும்; தீர்ப்புகள்தான் முக்கியம். அது இப்போது எப்படி என்பதுதான் மிகப் பெரிய கேள்விக் குறி?
8. கே: ஒன்றிய பா.ஜ.க. அரசு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், தன்னுடைய தன்னிச்சையான பாசிச செயல்பாடுகளைத் தொடர்வதை, அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்க்காமல் இருப்பது விட்டுப் பிடிக்கும் போக்கா? கடிவாளத்தைக் கையாளுவார்கள் என்று நம்பலாமா?
– சுப. ராணி, திருப்பூர்.
ப : கூட்டணிக் கட்சிகளால் ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. காலம் விடையளிக்கும்.
அரசியல் எப்போதும் எதிர்பாராத் திருப்பங்களைக் கொண்டு வரக்கூடியதே!