சாமியார்களுக்கு எதிராக ஓர் ஊடகவியலாளரின் போராட்டம்…

Uncategorized திரைப்பார்வை

மகராஜ் என்னும் ஹிந்துஸ்தானி மொழி திரைப்படம் இந்திய சமூகத்தில் இன்றும் நிலவிக்கொண்டு இருக்கும் – சாமியார்கள் மூலம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் – தீமைகளுக்கு எதிரான பத்திரிகையாளரின் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படம் ஆகும்.
குஜராத் பத்திரிகையாளர் சவுரப் ஷர்மா 2014ஆம் ஆண்டில் எழுதிய ‘மகாராஜ்’ எனும் நாவலைத் தழுவி இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கர்சன்தாஸ் எனும் பத்திரிகையாளர் முன்னெடுத்த சமூகச் சீர்திருத்த இயக்கச் செயல்பாடும் சமூகத்தில் நிலவும் தீமைகளுக்கு எதிரான அவருடைய முயற்சிகளும் திரையில் காட்டப் பட்டுள்ளன.

இந்தப் படத்தை சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ளார். அமிர்கானின் மகனான ஜுனைத் கான் புதுமுகமாக அறிமுகமாகிறார்.
முற்போக்குச் சிந்தனை கொண்டவரான அமிர்கான் தனது மகனின் முதல் படத்தையே முற்போக்குக் கருத்துகள் கூறும் படமாக அறிமுகப்படுத்தி உள்ளார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், 1862ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் ஒருவர் மதத் தலைவர் ஒருவரின் பாலியல் குற்றங்கள் குறித்து எழுதத் தொடங்குகிறார். இதற்காக, பாம்பேயில் (தற்போதைய மும்பை) பிரிட்டிஷ் உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைச் சந்திக்கிறார்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சமூகத்தில் நிலவிய பழமைவாத மத வழக்கங்கள் மற்றும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவது உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்த அந்தப் பத்திரிகையாளர் யார்?

யார் அந்த கர்சன்தாஸ் முல்ஜி ?

பக்தைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டிய ‘மகாராஜ்’ – சமூக அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்த கர்சன்தாஸ் முல்ஜி யார்?
அமிர்கானின் மகன் ஜுனைத் கான் கர்சன்தாஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கர்சன்தாஸ் பம்பாயில் குஜராத்தி குடும்பத்தில் 25, ஜூலை 1832ஆம் ஆண்டு பிறந்ததாக, அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் பி.என். மோத்திவாலா எழுதியுள்ளார். குஜராத்தி பள்ளியொன்றில் ஆரம்பக் கல்வியையும் பின்னர் ஆங்கிலப் பள்ளியிலும் அவர் பயின்றார்.

இந்தப் படத்தின் கதைப்படி, அவர் குழந்தைப் பருவத்தில் இருந்தே திறமையானவராகவும் சமூகத்தில் நிலவும் பழக்க வழக்கங்கள் குறித்துக் கேள்வி கேட்பவராகவும் இருந்தார். அவர் பெரும்பாலும் இத்தகைய கேள்விகளைத் தன் குடும்பத்தினரிடம் கேட்டார், அவை சமூக வழக்கங்கள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரானதாகக் கருதப்பட்டன.

உதாரணமாக, “நாம் ஏன் தினமும் கோவிலுக்குச் செல்கிறோம்? கடவுளுக்கு குஜராத்தி மொழி தெரியுமா? கடவுள் நம்முடைய ஊரைச் சேர்ந்தவரா? பெண்கள் ஏன் முக்காடு அணிந்திருக்கின்றனர்?” என்பன போன்ற கேள்விகளைக் கேட்டார்.
குஜராத்தி மொழி பத்திரிகையாளரான கர்சன்தாஸ் முல்ஜி, மதத்தின் பெயரால் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவது குறித்து எழுதத் தொடங்கினார்.

அவருடைய இதழியல் காரணமாகவும் சமூக வழக்கங்கள் குறித்துக் கேள்வி எழுப்புவதாலும் அவர் பல சிரமங்களை எதிர்கொண்டார்.

மகாராஜா யார்?

ஜாடுநாத் ஜி மகாராஜ் என்பவர், கிருஷ்ணரை வழிபடும் வைணவ புஷ்டி மார்க் எனும் பிரிவின் மதிக்கத்தக்க தலைவர். இந்தப் பிரிவைச் சேர்ந்த மதகுருக்கள் தங்களை ‘மகாராஜ்’ என அழைத்துக் கொள்வர்.

குஜராத், கத்தியவார், கட்ச் மற்றும் மத்திய இந்தியாவில் புஷ்டிமார்க் பிரிவைப் பின்பற்றுபவர்கள் வளம் படைத்த வணிகர்கள் முதல் விவசாயிகளாகவும் உள்ளனர். இவர்களுள் செல்வாக்குமிக்க பாட்டியா மற்றும் பனியா ஜாதியினரும் அடங்குவர்.

இந்தப் பிரிவின் மதத் தலைவர்கள், பெண் பக்தர்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி, ‘சரன் சேவா’ எனும் சடங்கின் பெயரில், அவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டி, அதை மத வழக்கமாக முன்வைத்தனர்.

‘எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில், “மகாராஜ் தன் பெண் பக்தர்களுடன் மட்டும் உடல்ரீதியான உறவு வைத்துக் கொள்ளாமல், ஆண் பக்தர்களின் மனைவிகளையும் தன்னுடைய பாலியல் இச்சைக்காக அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பார்” என்று அனு குமார் எழுதியுள்ளார்.

கர்சன்தாஸ் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மதம் மற்றும் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த வழக்கம் குறித்து நன்றாக அறிந்திருந்தாலும், அவர்கள் ‘மகாராஜாக்களின்’ பக்தர்கள் மற்றும் தங்களுடைய சொந்தக் குடும்பத்தினராலேயே கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.

‘சரன் சேவா’ எனும் இத்தகைய தீய வழக்கத்திற்கு எதிராக அவர் குரல் எழுப்பியபோது, அவர் தன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், இந்த வழக்கத்தைத் தன் இதழியல்” மூலமாக அவர் தொடர்ந்து எதிர்த்து வந்தார்.

அவர் ஆரம்பத்தில் தாதாபாய் நவுரோஜியின் ‘ரஸ்த் குஃப்தார்’ எனும் செய்தித்தாளில் எழுதி வந்தார். பின்னர், ‘சத்ய பிரகாஷ்’ எனும் இதழைச் சொந்தமாக ஆரம்பித்தார். அதில் அவர் எழுதிய கட்டுரை மகாராஜா ஜாடுநாத் என்பவரை, அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுக்கும் அளவுக்குக் கடும் கோபத்திற்கு ஆளாக்கியது.

அவதூறு வழக்கு என்ன?

மதம் என்ற பெயரில் ஜாடுநாத் மகாராஜ் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதாகக் குற்றம் சாட்டி, கர்சன்தாஸ் அந்த இதழில் எழுதியிருந்தார்.

இதையடுத்து, கர்சன்தாஸுக்கு எதிராக 1862ஆம் ஆண்டில் பம்பாய் நீதிமன்றத்தில் ‘மகாராஜ்’ சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, மகாராஜ் ஜாடுநாத்தை தனக்குப் பதிலாக விசாரிக்க வேண்டும் என கர்சன்தாஸ் வாதிட்டார். ஏனெனில், அவரைப் பொறுத்தவரை புஷ்டி மார்க் பிரிவு உண்மையான இந்து மதப் பிரிவல்ல; அதிலிருந்து மாறுபட்ட இப்பிரிவு பக்தர்களின் மனைவிகள் மற்றும் மகள்களை ‘மகாராஜ்’ பாலியல் ரீதியாகத் தன்னைத் திருப்திப்படுத்த அனுப்பும் தீய வழக்கத்தை ஆரம்பித்தது.

இப்பிரிவின்மீது ‘மகாராஜ்’ மீது கர்சன்தாஸ் முல்ஜியின் குடும்பத்தினரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் நிறைந்த நீதிமன்றத்தில் 24 நாட்கள் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இதற்காகப் பல நேரடிச் சாட்சியங்களையும் மகாராஜ் வழங்கினார்.

தான் மகாராஜ் ஜாடுநாத் மற்றும் மற்ற ‘மகாராஜாக்களுக்கு’ பாலியல் நோய்க்காகச் சிகிச்சை அளித்ததாக மகாராஜின் மருத்துவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். பல பெண் பக்தர்களுடன் உடலுறவு கொண்டதால் இந்நோய் அவர்களுக்கு ஏற்பட்டதாக, மருத்துவர் ஒப்புக்கொண்டார்.

கர்சன்தாஸ் இந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார். இந்த வழக்கு அக்காலத்தில் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட அடிப்படையாக இருந்தது.

இதுதவிர, இந்து சமூகத்தில் அக்காலத்தில் நிலவிய பல வழக்கங்களுக்கு எதிராக கர்சன்தாஸ் குரல் எழுப்பினார். ஜாதிய அமைப்புக்கு எதிராகவும் கணவரை இழந்தவர்கள் மறுமணம் செய்வதற்கு ஆதரவாகவும் அவர் பல முயற்சிகளை எடுத்தார்.
கர்சன்தாஸின் முயற்சிகளும் நீதிமன்ற உத்தரவும் சில அச்சு ஊடகங்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டன. அவருக்கு ‘இந்திய லூதர்’ என உள்ளூர் ஆங்கில அச்சு ஊடகத்தால் பட்டம் வழங்கப்பட்டது.

கர்சன்தாஸ் நண்பர்கள் சொல்வது என்ன?

கர்சன்தாஸின் சமகாலத்தவரும் செய்தித்தாள் உதவியாளருமான மதப்தாஸ் ரகுநாத் தாஸ் 1890ஆம் ஆண்டில் எழுதிய புத்தகத்தில், கர்சன்தாஸ் உதவியுடன் கணவரை இழந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட அனுபவம் குறித்து எழுதியுள்ளார்.

தனது திருமணம் குறித்து அவர் குறிப்பிடுகையில், கணவரை இழந்த பெண்ணை மறுமணம் செய்வது சாதாரண விஷயம் அல்ல என்றும், “எனவே அதை நிகழ்த்திக் காட்ட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் தந்தையின் சார்பில் கர்சன்தாஸ் நின்று மணப்பெண்ணைக் கொடுத்ததாகவும், ஆனால், பழமைவாதக் குழுக்களிடம் இருந்து வந்த கடும் எதிர்வினை காரணமாக எழுந்த அச்சத்தால், கர்சன்தாஸுக்கு பிரிட்டிஷ் காவல் ஆய்வாளர் பாதுகாப்புக்காக லத்திகளை வழங்கியதாகவும் அவர் எழுதியுள்ளார்.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமணம் நடைபெறும் இடத்தில் நான்கு காவலர்களை நிறுத்தியதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பல வழிகளிலும் கர்சன்தாஸ் சமூகத்திற்கு சவால் விடுத்துள்ளார். மாதவ தாஸ் ரகுநாத் தாஸ் இந்து சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவு குறித்து எழுதுகையில், “அய்ரோப்பாவுக்குப் பயணம் செய்வது மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்று. கணவரை இழந்த பெண்ணைத் திருமணம் செய்வதைவிடப் பெரிய குற்றம்” என எழுதியுள்ளார்.

“இந்து மதத்தைப் பின்பற்றாதவர்களின் இருப்பிடத்திற்குச் சென்றதால் கர்சன்தாஸ் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் எந்தத் தவறும் செய்யாமலேயே வெளியேற்றப்பட்டனர்” என ரகுநாத் தாஸ் எழுதியுள்ளார்.

“கர்சன்தாஸ் இறந்த பிறகு அவருடைய மனைவியும் குழந்தைகளும் மன்னிப்பு கோர வேண்டும் என அப்பிரிவினர் வற்புறுத்தினர். மாட்டுச் சாணத்தை உடல் முழுவதும் பூசி, நாசிக் புனித நதியில் நீராடி, தங்கள் ‘பாவத்தைப்’ போக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் மாதவ தாஸ் ரகுநாத் தாஸ் எழுதியுள்ளார்.”

இந்தப் படத்தை ஹிந்தி மொழிப் படம் என்று கூறுகிறார்கள். ஆனால். உண்மையில் இதில் பேசப்படுவது ஹிந்தி மொழி அல்ல.
அமிர்கான் எப்போதுமே புதுமைகளைச் செய்பவர், தனது தங்கல் என்ற படத்தில் அரியானா மக்களே பேச மறந்துபோன அவர்களது மொழியான அரியானா மொழியிலேயே எடுத்திருப்பார். அதே போல் இந்தப் படத்தையும் 1900க்கு முன்பு பேசப்பட்ட உருது மற்றும் வட்டார மொழி கலந்து பேசப்பட்ட ஹிந்துஸ்தானி மொழியிலேயே முழுமையாக எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 