உலக மக்கள் புரிந்து கொள்ளும் குறியீடுகள்…

2024 கட்டுரைகள் ஜுலை 16-31

மனித குல வரலாற்றில் தகவல் தொடர்பு என்பது மிக மிக முக்கியமானது. குரங்கு இனத்திலிருந்து மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த பொழுது மனிதன் வெறும் ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறான்-இன்றைக்கு விலங்குகளும் பறவைகளும் பயன்படுத்துவது போல. அது ஆபத்திலிருந்து தப்பிக்கவும், உணவுக்கும் இனப்பெருக்கத்திற்கும் பயன்பட்ட ஒலிகள்.

அதற்குப் பின்பு ஒரு குழுவாக ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த பிறகு மொழிகள் தோன்றியிருக்கின்றன. இன்றைக்கு உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. சில மொழிகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. சில மொழிகள் மறைந்து கொண்டிருக்கின்றன.

மனிதர்கள் ஓரிடத் தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்ய ஆரம்பித்த பொழுது மனிதர்களுக்கு மொழி தெரியா
விட்டாலும், முக்கியமான தேவைகளுக்குச் சைகை மொழியைப் பயன்படுத்தினர். இன்றைக்கு உலகம் முழுவதும் தெரிந்த மொழியாகச் சைகை மொழி இருக்கிறது; உடல் மொழி இருக்கிறது.

கடந்த 10, 20 ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற ஊடகங்கள் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப் பயன்படுத்து பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறுகின்ற பொழுது ‘எமோசி’ என்று சொல்லப்படுகின்ற குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். என்னைப் போன்ற 50, 60களில் இருப்பவர்களுக்கு இந்தக் குறியீடுகளின் பொருள் பெரிதும் புரிவதில்லை. இதனைப் புரிந்துகொள்வதற்கு நாம் முயற்சியும் எடுத்துக் கொள்வதுமில்லை. ஆனால், இன்றைக்கு இளைஞர்களின் தகவல் பரிமாற்றத்தில் இந்த ‘எமோசி’களின் பயன்பாடு என்பது மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. துக்கமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், குழப்பமாக இருந்தாலும், பயமாகஇருந்தாலும், இந்த உணர்வுகளை எல்லாம் சமூக ஊடகத்தில் அடுத்த முனையில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்கும் ஒரு கருவியாக, ஒரு மொழியாக இந்த எமோசிக் குறியீடுகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இன்றைக்குப் புழக்கத்தில் 1000க்கும் மேற்பட்ட இந்த எமோசிக் குறியீடுகள் இருக்கின்றன. தமிழில் நம்மிடம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை வைத்துச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. சொற்களின் மூலம் நாம் நம்முடைய உணர்வுகளை அடுத்தவர்களுக்குப் பேச்சாலோ, எழுத்தாலோ தெரியப்படுத்துகிறோம். ஆனால், இந்த ‘எமோசி’ என்னும் குறியீடுகள் சொற்களும் அல்ல; எழுத்துக்களும் அல்ல. இவை ஒரு படமாக இருக்கலாம், லோகோவாக இருக்கலாம், அந்தப் படமோ,லோகோவோ சிரிக்கும் முகமாக இருக்கலாம், அழும் முகமாக இருக்கலாம். இவை எல்லாம் எலக்ட்ரானிக் ஊடகங்களில், வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்ற எமோசிக் குறியீடுகள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமோசிகள் இருக்கின்றன, ஒவ்வொரு எமோசிக்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் இருக்கிறது. இந்த எமோசிக் குறியீடுகள் உலகில் உள்ள எல்லா மொழியினருக்கும் பொதுவானவை. அனைவராலும் புரிந்து கொள்ளப்படக்கூடியவை. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய அதாவது முகநூலை, டுவிட்டரை. வலைத்தளத்தை வாட்ஸ்அப்பை, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தக் கூடியவர்கள் இந்த எமோசிக் குறியீடுகளைப் பற்றியும் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

எனக்குத் தெரிந்த ஒரு தோழர் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியைப் போட்டிருந்தார். அந்தச் செய்திக்கு நான் மகிழ்ச்சி என்று நினைத்த ஓர் எமோசிக் குறியீட்டை அனுப்பி இருந்தேன். ஆனால், நான் அனுப்பிய எமோசிக் குறியீட்டின் உண்மையான பொருள் – ‘அதிர்ச்சி!’ அந்தத் தோழர் என்னை அழைத்து, தோழர் நான் போட்ட கருத்திற்கு அதிர்ச்சி என்று ஓர் எமோசிக் குறியீட்டை அனுப்பி இருக்கிறீர்கள். எனது கருத்துக்கு அதிர்ச்சி ஏன் அடைந்தீர்கள் என்று கேட்டார். நான் உடனே, ‘தோழர், நான் மகிழ்ச்சி என்னும் எமோசிக் குறியீடு என்றுதான் அனுப்பினேன். ஆனால், அதற்கு வேறொரு பொருள் என்பது இப்போதுதான் தெரிகிறது, வருத்தப்படுகிறேன்” என்று சொன்னேன். இப்படி வருத்தம் எல்லாம் படாமல் இருப்பதற்கு இந்த எமோசிக் குறியீடுகளைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

சில நேரங்களில் சில ஆங்கிலச் சொற்களுக்கு உண்மையான பொருள் தெரியாமல் பயன்படுத்திக் கேலிக்கு உள்ளாவதைத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அப்படித்தான் இந்த எமோசிக் குறியீடுகளும். இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் அவற்றின் உண்மையான அர்த்தத்தையும் – பொருளையும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். இல்லை எனில் அது தவறானப் பொருளை எதிர்த்தரப்பில் இருப்பவர்களுக்குக் கொடுத்து விடும். சிலர் நம்மிடம் அதை எதிர்த்துக் கேள்வி கேட்பார்கள். பலர் கேள்வி கேட்காமலேயே என்ன இப்படி எமோசி சிம்பல் போட்டு விட்டார் என்று சொல்லி நம்மிடம் கோபித்துக் கொண்டு கூட அமைதியாகப் போய்விடக்கூடும். எனவே, இந்த எமோசிக் குறியீடுகளைப் பற்றி அறிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது.

மஞ்சள் நிறத்தில் உள்ள சிரிக்கும் முகம் மகிழ்ச்சியையும் நட்புத் தன்மையையும் குறிக்கிறது. மஞ்சள் நிறத்தில் உள்ள கண்களுடன் கூடிய சிரிக்கும் முகம் மகிழ்ச்சியையும் நட்பையும் பெருமிதத்தையும் குறிக்கிறது. மஞ்சள் நிறத்தில் உள்ள சிரிக்கும் கண்களுடன் உள்ள சிரிக்கும் முகம் முழுமையான மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இப்படிச் சிரிக்கும் முகத்தோடு மேலே ஒரு சின்ன இளிப்புக் குறியீடோடு இருக்கக் கூடிய எமோசிக் குறியீடு ஒரு வேலையைச் செய்து முடித்த பெருமிதத்தை, பாராட்டைக் குறிக்கிறது. இப்படி ஒவ்வொரு எமோசிக் குறியீடுக்கும் ஒவ்வொரு பொருள் இருக்கிறது. இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள https://emojipedia.org/ போன்ற பல இணையதளங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் நாம் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதைப் போல இந்த எமோசிக் குறியீடுகளின் அர்த்தத்தை நாம் கற்றுக்கொள்ளமுடியும்.1000 எமோசிக் குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதில்லை.பெரும்பாலும் ஒரு 50 எமோசிக் குறியீடுகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.அவற்றை மட்டுமாவது நாம் தெரிந்து வைத்துக்கொள்ளலாம்.

ஒரு நண்பரை நேரடியாக நாம் பார்க்கின்ற பொழுது, அவருடைய முகத்தை வைத்து, அவருடைய உடல் மொழியை வைத்து அவர் உற்சாகமாக இருக்கிறாரா?, சோர்வாக இருக்கிறாரா?, குழப்பத்தில் இருக்கிறாரா என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். அதற்கு ஏற்றாற்போல் நாம் நமது உரையாடலை ஆரம்பிக்கிறோம். இன்றைய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் ஓர் உரையாடலை ஆரம்பிக்கின்ற பொழுது தாங்கள் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்பதை ஓர் எமோசிக் குறியீடு போட்டு ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு துயரமான அல்லது சோகமான எமோசிக் குறியீட்டைப் போட்டால் எதிர் தரப்பில் இருந்து ஏன் சோகம்? ஏன் துயரமாக இருக்கிறீர்கள்? என்று உரையாடலை ஆரம்பிக்கிறார்கள். இப்படி ஓர் உரையாடலை ஆரம்பிப்பதற்குக் கூட இந்த எமோசிக் குறியீடுகள் பயன்படுகின்றன. ஒரு கவிதையை முகநூலில் பதிவேற்றி இருக்கிறார்கள். அதை நாம் படிக்கின்றோம், அந்தக் கவிதை நமக்குப் பிடித்திருக்கின்றது என்று சொன்னால் ஓர் இதயச் சிம்பலை நாம் அனுப்புகிறோம். நன்றாக இருக்கிறது என்று பொருள். இப்படித் தங்களுடைய உணர்வுகளை நீட்டி, முழக்கி எழுதாமல் அல்லது சொல்லாமல் ஒரு குறியீட்டின் மூலம் தெரிவிப்பது என்பது இன்றைய சமூக ஊடகத் தகவல் பரிமாற்றத்தில் வழக்கமாக இருக்கிறது.

உலக எமோசி தினம் என்பது ஜூலை 17ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. விக்கிப்பீடியோ போல எமோசிபீடியா இணையதளத்தை ஆரம்பித்த ஜெருமி பர்கி (Jeremy Burge) என்பவர் இதனைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, ஜூலை 17ஆம் நாளை உலக எமோசி தினம் என்று 2014ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். அன்று முதல் உலகெங்கும் உலக எமோசி நாள் ஜூலை 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.ஜூலை 17ஆம் நாள் எமோசி குறியீடுகளுக்கான சிறப்பான நாளாக,அதனைப் பற்றி எழுதும் – பேசும் – சிந்திக்கும் – நாளாக ஆக்கப்பட்டுள்ளது.

முதல் எமோசிக் குறியீடு 1999ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் தொலைபேசித் துறையில் வேலை பார்த்த பொறியாளர் சீகேடக குரிகா (Shigetaka Kurika) என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்பு அவரே 176 எமோசிக் குறியீடுகளை உருவாக்கி இருக்கிறார். கூகுள் நிறுவனம் 2007இல் சில பொதுவான எமோசிக் குறியீட்டுப் படங்களைப் பயன்படுத்தலாம் என்று கணினி மென்பொருட்களை நெறிப்படுத்தும் குழுவிடம் அனுமதி பெற்றிருக்கிறது. 2010இல் கூகுள், மைக்ரோசாப்ட், முக நூல், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கான எமோசிக் குறியீட்டுப் படங்களை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கணினி யுகத்தில் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பேசிக் கொள்ளும் – புரிந்து கொள்ளும் மொழியாக இந்த எமோசிக் குறியீட்டுப் படங்கள் உருவாகி இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.