பெரியார் – அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு

2024 நூல் மதிப்புரை ஜுலை 16-31

 

நூல் : பெரியார் அம்பேத்கர் 
இன்றைய பொருத்தப்பாடு 
ஆசிரியர் : ஆ. இராசா 
வெளியீடு : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் –
முதல் பதிப்பு : 2023
பக்கங்கள் : 96
விலை : ரூ.100/—

மறைந்த பின்னும், கடந்த 50 ஆண்டுகளாக இன்றும் எதிரிகளின் தூக்கத்தைக் கெடுப்பவராக இருந்து வருபவர் பெரியார். எதிரிகளின் வெறித்தனத்தால் அவரது சிலைகள் இன்றும் சேதப்படுத்தப்படுவதே அதற்கான சான்று!

மறைந்து 68 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் அம்பேத்கரின் சிலைகளை எதிரிகள் சேதப்படுத்துகிறார்கள். இந்தியாவில் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளைத் தான் அதிகமாகச் சேதப்படுத்தி வருகின்றார்கள்!

இவ்வாறு இந்த இரண்டு தலைவர்களிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகள் ஏதாவது உண்டா? அவற்றின் இன்றைய பொருத்தப்பாடு எது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தருவதாக அமைந்துள்ளது இந்த நூல்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயங்கும் பெரியார் உயராய்வு மய்யம் நடத்திய கருத்தரங்கம் – பெரியார் -‘அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு’ என்னும் தலைப்பில் ஒன்றிய அமைச்சராக இருந்த ஆ. இராசா அவர்கள் 22.02.2008 அன்று ஆற்றிய உரையின் சுருக்கம் தான் இந்த நூல்!

பெரியாரும் அம்பேத்கரும் ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தியே தங்களது சமூகப் போராட்டத்தை, இயக்கத்தைத் துவக்கினார்கள்!
பிறவி இழிவை ஒழிக்க வேண்டும் என்றும்; சூத்திரர், பஞ்சமர் பட்டம் போகாமல் ஜாதி ஒழியாது என்றும், ஜாதி ஒழிய வேண்டுமென்றால் அதற்கு இந்து மதம் ஒழிய வேண்டுமென்றும், தனது நியாயமான வாதங்களை எடுத்து வைத்து தனது போராட்டங்களை இறுதிவரை நடத்தியவர் பெரியார்!

அதைப் போலவே, தீண்டாமைக்கு எதிராக தனது போராட்டத்தைத் துவக்கியும்; ஜாதியை ஒழிக்கும் வழி என்ற வரலாற்றுச் சிறப்புரையை நிகழ்த்தியும், நான் இந்துவாகச் சாக மாட்டேன் என முடிவு செய்து புத்த மதத்திற்கு மாறியும், தனது வாதங்களை எடுத்து வைத்துப் பயணம் செய்தவர் அம்பேத்கர்!

பெரியாரும் அம்பேத்கரும் சிறந்த நண்பர்கள். “பெரியாரைப் போன்று சமூக மாற்றத்திற்குப் பாடுபட்டவர் இந்தியாவில் யாரும் கிடையாது!” என அம்பேத்கரும், “பலன் கருதாது செயற்கரிய தொண்டு செய்தவர்கள் வரிசையில் – ஏசுநாதர், முகமது நபி, புத்தருக்கு அடுத்து நான்காவதாக அம்பேத்கர்!” என பெரியாரும் ஒருவரையொருவர் சரியாக அடையாளம் கண்டு கொண்டிருந்தார்கள்!
இவர்கள் இருவரைப் பற்றி இன்றைய பொருத்தப்பாடு என்ன? அவர்கள் இருவரும் வேறுபடும் இடங்கள் எவை? போன்ற பல கேள்விகளுக்கு ஓர் ஆய்வாளரின் பதில்களாக, பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் ஆழ்ந்து கற்றறிந்த நூலாசிரியர் ஆ.இராசாவின் இந்த உரை சிறப்பாக அமைந்துள்ளது!

பெரியாரையும் அம்பேத்கரையும் ஒப்பிடும்போது அவர்கள் ஒன்றிணைந்த புள்ளியும், மாறுபட்டுப் போன இடங்களும் பல உண்டு என்கிறார் ஆ.இராசா!

இந்தி இந்த தேசத்திற்கு அலுவல் மொழியாக இருக்கலாம் எனச் சொன்னவர் அம்பேத்கர்! இந்தி அடுத்த மொழியினர் மீது ஆதிக்கம் செலுத்தி விடும் எனக் கருதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி கண்டவர் பெரியார்!

ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்று சொன்னவர் அம்பேத்கர். ஆனால், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்று போராடிய இயக்கங்களுக்குத் தந்தையாக இருந்தவர் பெரியார்!

தமிழ்நாடு தமிழருக்கே என்று கேட்டவர் பெரியார்!

ஆனால், அம்பேத்கர் பிரிவினையை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை!

இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டவர் அம்பேத்கர்! ஒரே தேசியத்தை ஏற்க மறுத்தவர் பெரியார்! இப்படி இருவரிடையே பல வேற்றுமைகள்!

இந்த மண்ணில் இந்துவாகப் பிறந்த ஒருவருக்கு ஜாதியில்லாமல் வாழ சாத்தியமில்லை . ஏனெனில், ஜாதிகளின் தொகுப்பே இந்து மதம். ஆகவே, இந்தப் பிறவி இழிவுக்குக் காரணம் – இந்து மதம் என்ற ஒற்றைப் புள்ளியில் பெரியாரும் அம்பேத்கரும் ஒரே குரலில் பேசினார்கள், எழுதினார்கள்; போராடினார்கள்; இறுதி வரைக்கும் பயணம் செய்தார்கள். அந்த ஒரே காரணத்தால் தான் அவர்களின் சிலைகள் இன்றும் எதிரிகளால் தாக்கப்படுகின்றன!

பெரியாரும் அம்பேத்கரும் ஜாதியை ஒழித்தே ஆக வேண்டும் என்று கிளம்பினார்கள். அதன் காரணமாகவே மதத்தையும் கடவுளையும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெரியாரின் நாத்திகம் சமூக அடிப்படையில் தர்க்கரீதியில் எழுப்பப்பட்டது.

அதனால் தான் பெரியார், ” நான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று விரும்புகிற இந்தப் போரில், உன்னுடைய கடவுளை – மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று சொன்னால், காப்பாற்றிக் கொண்டு போ!” என மிகுந்த உறுதியோடு பேசியிருக்கிறார்!
அம்பேத்கரோ, “வேதங்களையும், சாஸ்திரங்களையும் மறுப்பது மட்டுமல்ல, வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற எல்லாவற்றையும் புத்தரைப் போல், குருநானக்கைப் போல் நீ அறுத்து விடு!” என்று கட்டளையிட்டார்!
அம்பேத்கரை விட பெரியார் எந்த இடத்தில் உறுதியானவர் என்பதற்கு புகழ் பெற்ற ‘புனே ஒப்பந்தம்’ பற்றிய வரலாற்று நிகழ்வுகளை விளக்கி, இன்றைய தலித் ஆதரவு இயக்கங்களில் சில அரைவேக்காட்டுத் தனமாக பெரியாரைத் தலித் மக்களின் விரோதியாகச் சித்திரிப்பவர்களுக்குப் பதிலடியாக ஒரு வரலாற்றுச் சான்றை ஆ. இராசா இந்த நூலில் தெளிவாகத் தந்துள்ளார்.

பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘இரட்டை வாக்குரிமை’ அளிக்கத் தயாரான போது, காந்திஜி அதை எதிர்த்தார். அதை எதிர்த்து காந்தி தொடர் உண்ணாவிரதம் இருந்தார். காந்தியைக் காப்பாற்றச் சொல்லி, அம்பேத்கரைப் பலர் வற்புறுத்தினார்கள். காந்தியின் விருப்பத்திற்கிணங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள்!

காந்தியின் துணைவியார் கஸ்தூரிபாய் அம்பேத்கரிடம் காந்தியைக் காப்பாற்றும்படி கேட்டார் .கையொப்பமிட வேண்டினார்! ஆனால் அந்த வேளையில் ஒரே ஒரு தலைவர் … பெரியார் மட்டும் தனியாக, துணிவாக அம்பேத்கருக்கு இப்படியொரு தந்தியை அனுப்பினார்!

‘‘காந்தியினுடைய உயிர் பெரிதா? இந்த நாட்டில் அய்ந்தில் ஒரு பகுதி உள்ள தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை பெரிதா என்றால், காந்தி சாவதானாலும் சாகட்டும்! கையெழுத்துப் போடாதீர்கள்!’’… என்று வேண்டினார் பெரியார்! ஆனால், காந்தியைக் காப்பாற்ற வேண்டும் என்று கருணையோடு கையெழுத்திட்டார் அம்பேத்கர்!

இது போன்று பெரியாரும் அம்பேத்கரும் வேறுபட்டு நின்ற இடங்கள் பற்றியும் ஒற்றுமையாகக் கருத்தை வெளியிட்ட இடங்கள் பற்றியும் சிறந்த முறையில் கருத்துகளைத் தருகின்ற நல்லதொரு படைப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. தி.மு.கவில் பெரியாரின் கொள்கைகளை எப்போதும் கடைப்பிடிக்கும் சில தலைவர்களில் நூலாசிரியர் ஆ.இராசா முதன்மையானவர். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!