சிறுகதை

பிப்ரவரி 16-28

டெல்லிக்குப் போன பழனிச்சாமி

இவன் எப்படிச் சமாளித்தான்?  டெல்லிக்குப் போய்த் திரும்பிய பழனிச்சாமியைச் சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.  மார்கழிக் குளிரில் தமிழ்நாட்டிலேயே உடம்பெல்லாம் தந்தி அடிக்கும்போது, டெல்லி குளிரை வேட்டி, சட்டையில் பழனிச்சாமி எப்படிச் சமாளித்தான் என்றா ஆச்சரியப்பட்டார்கள்?  அது இல்லை.  இந்தி தெரியாத இவன் எப்படி டெல்லிக்குப் போய்ச் சமாளித்தான் என்பதுதான் அவர்களின் ஆச்சரியத்திற்கான காரணம்.

ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் படித்துவிட்டு, பக்கத்து ஊரில் மேல்படிப்புக்குச் சென்று முக்கி முக்கிப் பத்தாம் வகுப்புத் தேறியவன் பழனிச்சாமி.  ஆப்பிளுக்கு ஸ்பெல்லிங் தெரியவில்லை என்று முட்டி போட வைத்த அந்தப் பள்ளிக்கூடத்து ஆங்கில வாத்தியாரை அவன் இன்னும் மறக்கவில்லை.  இப்போது ஒன்றிரண்டு வார்த்தைகளில் பீட்டர் விடுவான்.  ஆனால், அன்றைக்கு மாணவிகள் முன்பாக அதுவும் அவன் ஒருதலையாய் உருகிய மல்லிகா பார்க்கும்படி முட்டி போட்டதை அவனால் மறக்கவே முடியவில்லை.

என்றாவது ஒரு நாள் வாத்தியாருக்கும் மல்லிகாவுக்கும் முன்னால் ஆப்பிள், பலூன், கேட், டாங்க்கி எல்லாவற்றுக்கும் ஸ்பெல்லிங் சொல்லிவிடவேண்டும் என்று இப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான்.  வாத்தியார் போன மாதம்தான் ரிடையர்டானார்.  மல்லிகா இரண்டு மாதத்திற்கு முன்தான் இரண்டாவது குழந்தைக்குத் தாயானாள் என்ற தகவல் அவனுக்குக் கிடைத்திருந்தது. ம்…. அதெல்லாம் அவன் பெருமூச்சுவிடும் சமாச்சாரம். அவனைப் பார்த்து ஊர்மக்கள் பெருமூச்சுவிடுகிற சமாச்சாரத்திற்கு வருவோம்.  முரட்டுக் கதரில் பழம் போல நின்றுகொண்டிருந்த பெருசு ரொம்பவும் அக்கறையாக, பழனிச்சாமி பக்கம் வந்தார். இந்தி படிக்காதே…படிக்காதேன்னு சொல்லியே 40 வருசமா நம்மை ஒண்ணும் தெரியாதபடி ஆக்கிட்டானுங்க.  மெட்ராஸைத் தாண்டி எங்கேயும் போக முடியலை.  நான் ஒரு முறை பம்பாய்க்குப் போயிட்டுப் பட்ட அவஸ்தை இருக்குதே! போதும் பெருசு…ஆரம்பிச்சிடாதே வரலாற்றுப் புராணத்தை… நீ எப்ப மும்பைக்குப் போனே?

ஆங்…. என்ன கேட்டே?

எப்ப பம்பாய்க்குப் போனேன்னு கேட்டேன்

ஒரு பத்து, இருவது வருசம் இருக்கும்.

சுமங்கலியா ஆத்தா போய் சேர்ந்துச்சே…. அப்ப காரியமெல்லாம் முடிச்சதும் கௌம்பிப்போனியே… அதுதானே…

ஆமாண்டா…

அப்ப நீ எதுக்குப் பம்பாய்க்குப் போனேன்னு புரிஞ்சிடிச்சி. நீ போன இடத்துலதான் எந்த பாஷையா இருந்தாலும் பிரச்சினை இருந்திருக்காதே… காசு ஒண்ணுதானே அங்கே தேசிய மொழி

இவன் ஒரு குறும்புக்காரப் பய… இப்படித்தான் பேசுவான். சரி… இந்தி தெரியாம நீ எப்படி டெல்லியிலே சமாளிச்சே, அதைச் சொல்லு

டெல்லியிலே சமாளிக்க முடியாம இருந்தது பனியும் குளிரும்தான்.  நல்ல விலைக்கு ஒரு ஸ்வெட்டரும், தடிச்ச கம்பளியும் வாங்கி அதைச் சமாளிச்சிட்டேன்.  அது இருக்கட்டும்… நீ இங்கே போஸ்ட் ஆபீசு, பேங்க்குன்னு போய் பணம் போடுறியே… அதுக்கெல்லாம் எப்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்றே?

சில பாரத்துல தமிழிலே அச்சடிச்சிருப்பாங்க.  இல்லேன்னா, இங்கிலீசுல இருக்கிறதை எழுத்துக்கூட்டிப் படிச்சித் தெரிஞ்சுக்குவேன்.  நான் அந்தக் காலத்துலேயே நாலாவது பாரம் படிச்சவன்டா பழனிச்சாமி

எதுக்கு இந்த பீலா…. நாலாவது பாரம்னா ஒம்பதாம் வகுப்பு.  நீ எந்தப் பள்ளிக்கூடத்துல ஒம்பதாம் வகுப்புப் படிச்சியோ, அதே பள்ளிக்கூடத்தில்தான் நான் பத்தாம் வகுப்புப் படிச்சேன்.  நான் மட்டும் எழுத்துக்கூட்டிப் படிக்க மாட்டேனா?  ஆப்பிளிலிருந்து ஜீப்ரா வரைக்கும் எதுக்கு வேணும்னாலும் ஸ்பெல்லிங் கேளு…சொல்றேன் என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான்.  கூட்டத்தில் எங்காவது மல்லிகாவும் வாத்தியாரும் தெரிகிறார்களா என்று அவன் மனம் தேடியது.  ஊகும்…..

ஸ்பெல்லிங் எல்லாம் இருக்கட்டும்… இந்தி தெரியாம இந்தியாவோட தலைநகரத்துல எப்படிச் சமாளிச்சே?  அதைச் சொல்லு – கூடப் படித்த குமரவேலு நோண்டினான்.  வாத்தியாரிடம்  பழனிச்சாமி சிக்கிக்கொண்டு தவித்த பொழுதுகளில் அதை ரொம்பவும் ரசித்தவன்தான் குமரவேலு.  இப்பவும் அந்த ரசனைக்காகத்தான் சொல்லு… சொல்லு என்றான்.

சொல்றேன்டா குமரவேலு… நீ போன மாசம் கொச்சின் போனியே… எதுக்குப் போனேன்னு நான் கேட்கலை.  ஆனா, மலையாளம் கத்துக்கிட்டா அங்கே போனே?  இல்லையே நீ பார்த்த மலையாள ஷகிலா படத்தைவிட, நான் பார்த்த ஷாருக்கானோட இந்திப் படங்கள் அதிகம்.  ஆனா, உனக்கு எப்படி மலையாளம் தெரியாதோ, அது மாதிரி எனக்கும் இந்தி தெரியாது.  ரயிலிலே டெல்லிக்குப் போறப்ப, என்னோட கம்பார்ட்மென்ட்டில் கூட வந்த தமிழ்நாட்டுக்காரங்க பலரும் விஜயவாடா தாண்டியதுமே, இந்தப் பெருசு மாதிரிதான், நம்மையெல்லாம் இந்தி படிக்காம வீணாக்கிட்டாங்கன்னு புலம்புனாங்க.  யாராவது உங்க சட்டைக் காலரைப் புடிச்சு இழுத்து, படிக்கக்கூடாதுன்னு சொன்னாங்களா?  விருப்பமிருந்தா படிச்சிருக்க வேண்டியதுதானே?

பள்ளிக்கூடத்திலேயே இந்தியைச் சொல்லிக்கொடுத்திருந்தா, நாங்க ஏன் வெளியிலே போய்ப் படிக்கணும்?

பள்ளிக்கூடத்துல இங்கிலீஷூ சொல்லிக்கொடுத்தாங்களே குமரவேலு.  நீயும்தானே படிச்சே…  இப்ப இங்கிலீஷிலே ஷேக்ஸ்பியருக்குத் தம்பி லெவலிலா இருக்கே… நானாவது ஸ்பெல்லிங் சொல்லுவேன்.  உனக்கு இன்னும் அது தெரியாது.  வாத்தியாருக்கு மாங்காயும் தேங்காயும் கொண்டுவந்து கொடுத்து மார்க் வாங்கியவன்தானே நீ

விதண்டாவாதம் பேசாதடா… இந்தி தெரியாம எப்படிச் சமாளிச்சே அதைச் சொல்லு நீ எப்படி கொச்சின்ல சமாளிச்சியோ, அப்படித்தான் சமாளிச்சேன்.

ரயிலில் டி.டி. ஆர்கிட்டே டிக்கெட்டை நீட்டினேன்.  அவர் சரிபார்த்துக் கொடுத்தார்.

என் சீட் எதுங்கிறதையும் காட்டினார்.  நம்பர் போட்டிருந்தது.  ஒண்ணு, ரெண்டு மூனுதான் எல்லோருக்கும் பொதுவானதாச்சே… அப்புறம், ரயிலுக்குள்ளே காபி, டீ, சப்பாத்தி, பிரியாணின்னு வித்துக்கிட்டு வந்தாங்க.  அவங்க சொல்றதை வச்சே அதைக் கொடு இதைக் கொடுன்னு கேட்டு வாங்கிட்டேன்.  100 ரூபாய் நோட்டை நீட்டினேன்.  மீதிப் பணத்தைக் கொடுத்தாங்க.  இந்தியா முழுக்க 100 ரூபாயோட மதிப்பு 100 ரூபாய்தானே… இந்தி பேசுற இடத்தில் மட்டும் அதுக்கு 150 ரூபாய் மதிப்பா என்ன?  டீக்குப் பதிலா சாயான்னு சொல்லுவாங்க.  ஆனா, கப்பில் பிடிக்கும்போது என்னன்னு தெரிஞ்சிடுதே… அடுத்தவங்க வாங்கும்போது அதைப் பார்த்துட்டு நானும் கேட்டு வாங்கிட்டேன்.

ஃபாஸ்ட் புட் கடைக்கு முதன் முதலில் உன்னை அழைச்சிட்டுப்போனப்ப, பக்கத்து டேபிள்காரன் நூடுல்ஸ் சாப்பிட்டதை, புழு நெளியிற மாதிரிப் பார்த்துட்டு, அதற்கப்புறம் எனக்கும் அதைக் கொடுங்கன்னு ஆர்டர் பண்ணினயே, அதே மாதிரிதான். உன்கிட்டே விளக்கம் கேட்டது தப்புதான்டா…

கேட்டுட்டே… மிச்சத்தையும் சொல்லிடுறேன்…ரயிலை விட்டு இறங்கினா ஆட்டோ இருந்தது.  நம்ம ஊர் மாதிரியே, ஆட்டோ…ன்னு கூப்பிட்டேன்.  வந்தது.  என் மூஞ்சியைப் பார்த்ததுமே இந்தி தெரியாதுங்கிறதைப் புரிஞ்சிக்கிட்டு இங்கிலீஷில் பேசினார் ஆட்டோக்காரர்.  ரேட்டைக் கேட்டுக்கிட்டு, ஏறினேன்.  நேரா ஒரு லாட்ஜூக்குப் போனேன்.

ரூம்னு மட்டும்தான் சொன்னேன்.  சிங்கிளா, டபுளா, ஏ.சியா, நான் ஏ.சியான்னு நம்ம ஊர் மாதிரிதான் கேட்டாங்க.  எனக்குத் தேவையான ரூமைச் சொன்னேன்.  கொடுத்தாங்க, பெயரிலிருந்து அட்ரஸ் வரைக்கும் எல்லாமே இங்கிலீஷில்தான் எழுதணும்.  எனக்குத்தான் இப்ப ஸ்பெல்லிங் தெரியுமே… எழுதிட்டேன்.

ஹோட்டலில் சாப்பிடப் போனாலும், மார்க்கெட்டில் பொருள் வாங்கினாலும் நம்ம இங்கிலீஷே போதும்.  சாப்பாடு இருக்கான்னு கேட்கிறவனைவிட, மீல்ஸ் ரெடியான்னு கேட்கிறவனை நம்ம ஊரு ஹோட்டல்காரன் கூடுதலா மதிக்கிறான்ல… அது மாதிரித்தான் அங்கேயும்.  இந்தியாவுல எல்லா மாநிலத்திலேயும் இங்கிலீஷிலே பீட்டர்வுட்டா மதிப்பு ஜாஸ்திதான் மாப்ளே…
போர்டெல்லாம் இந்தியிலேதான எழுதியிருக்கும்?

போர்டுக்கு மொழி இருக்கும்.  பொருளுக்கு ஏது மொழி.  கண்ணாடியில் அடுக்கி வச்சிருக்கிற பொருளைப் பார்த்தே என்ன விக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.  திரும்பி வருவதற்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணுவதற்காக ரயில்வே ஸ்டேஷன் போனேன்.  விண்ணப்பத்தில் இந்தியிலும் இங்கிலீஷிலும் எழுதியிருந்தது.  நமக்குத்தான் இங்கிலீஷில் ஸ்பெல்லிங் தெரியுமே, எழுதிட்டேன்.  ரெண்டு, மூனு நாளு டெல்லிக்குப் போயிட்டு வரணும்னா இந்த அரைகுறை இங்கிலீஷ் போதும்.

அந்த ஊர் ஜனங்ககிட்டே பேசி, அவங்களைப் பற்றித் தெரிஞ்சுக்குறதுக்கெல்லாம் இந்தி அவசியம்தானே…  -ஜப்பானுக்குப் போய் அந்த நாட்டு மக்களைத் தெரிஞ்சுக்கணும்னா ஜப்பான் மொழி கத்துக்கணும்.  ஜெர்மனியர்களைப்பற்றித் தெரிஞ்சுக்கணும்னா ஜெர்மன் மொழியைக் கத்துக்கணும்.  அப்படிப்பார்த்தா இந்தி மட்டுமில்லே.. எல்லா மொழியும் முக்கியம்தான்.  சும்மா போறவங்களும் சுத்திப் பார்க்குறதுக்குப் போறவங்களும் இந்தி தெரியலையேன்னு அழுவுறதும், இந்தி படிக்கவிடாமப் பண்ணிட்டாங்கன்னு குற்றம்சாட்டுறதும், பாரதியாரோட வார்த்தையில் சொன்னால் பெட்டைப் புலம்பல்.

ஹய்… நம்ம பழனிச்சாமிக்குப் பாரதியார் பாட்டெல்லாம் தெரியுமாம்… வேலைக்காக டெல்லி, மும்பைன்னு போனா இந்தி தெரிஞ்சிருக்கணுமா வேணாமா?

பிழைப்புன்னு வந்துட்டா, அதுக்குத் தேவையானதைக் கத்துக்கிட்டுத்தான் ஆகணும்.  வெள்ளைக்காரன் நம்மையெல்லாம் இங்கிலீசு படிக்க வச்சது எதுக்கு?  அவன்கிட்டே வேலை பார்க்குறதுக்குத்தானே… தமிழ்நாட்டில் சோன்பப்டி விக்கிற இந்திக்காரனெல்லாம் தமிழ் கத்துக்கிட்டா இங்கே வந்தான்?  பிழைப்புன்னு வந்ததும் தமிழைத் தெரிஞ்சுக்கலையா?

நேபாளி கூர்கா பள்ளிக்கூடத்திலேயா தமிழ் படிச்சாரு.  இங்கே பிழைப்புன்னு வந்ததும் கத்துக்கலையா?  அதனால நாமும் வடநாட்டில் வேலைக்குப் போகணும்னா இந்தி கத்துக்க முடியும்.  அதை முன்கூட்டியே இங்கேயும் கத்துக்கலாம்.  அங்கே போயும் தெரிஞ்சுக்கலாம்.  அதற்காக இந்தி தெரியலைங்கிறது பாவமும் இல்லை.  தமிழ்தான் பேசத் தெரியும்கிறது கேவலமும் இல்லை.  தெரிந்ததைக் கொண்டு எங்கேயும் போகமுடியும்.  சமாளிக்க முடியும். பழனிச்சாமி பேசி முடித்தபோது, ஒரு இளைஞன் முன்னே வந்து நின்றான்.

இவ்வளவு நேரம் என்ன பேசுனீங்க என்பதுபோல சைகையாலேயே கேட்டான்.  அவனால் பேசவோ கேட்கவோ முடியாது.  அவனைக் காட்டி, இவனுக்கு மொழியும் தெரியாது.  மொழிப் பிரச்சினையும் கிடையாது.  இவனும் இத்தனை வருசமா வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கான்.

தேவையானதைச் சைகையாலேயே கேட்டு வாங்கிக்கிறானே என்றான் பழனிச்சாமி.

சரிதாம்பா… பழனிச்சாமி சொல்றமாதிரி, நமக்குத் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தா, நாம பேசுற மொழியை வச்சுக்கிட்டு எங்கேயும் போகலாம்.  நமக்குத் தேவையான மொழியை எப்ப வேணும்னாலும் கத்துக்கலாம் என்ற பெருசு, பேசிப் பேசி களைச்சுப் போயிட்டோம்.  நாயர் கடையிலே டீ சொல்லு என்றார்.

காசு?

மோதிரத்தை மார்வாடி கடையிலே அடகு வைடா வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *