மனமின்றி அமையாது உலகு!- மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

2024 Uncategorized மருத்துவம் ஜுலை 16-31

நலம் என்றாலே நாம் உடல் நலத்தைப் பற்றியே நினைக்கிறோம். உடல் நலமும், மனநலமும் இணைந்தது தான் நல்வாழ்க்கை. ஆனால், உடல் நலத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்திற்குக் கொடுப்பதில்லை. ஏனென்றால், மனதைப் பற்றியும் மனநலன் பற்றியும் பெரும்பாலும் எதிர்மறையான பார்வையையே நாம் கொண்டிருக்கிறோம். மனநலச் சீர்கேடுகளை இழிசொல்லாகப் பயன்படுத்தும் அளவிற்கு அந்தப் பிரச்சினைகளை நாம் அவலமான ஒன்றாகக் கருதுகிறோம். உடலின் வேறு எந்தப் பாகத்தையும் விட மனதைப் பற்றியே ஏராளமான போலிக் கருத்துகளும், பிற்போக்கான பார்வைகளும் இங்கிருக்கின்றன.

இன்றைய காலத்தில் மனதை நலமாக வைத்திருக்காமல் உடல் நலம் சாத்தியமில்லை. மேலும் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கும், நோய்களுக்கும் மனநலச் சீர்கேடுகளே காரணமாக இருக்கின்றன. அதனால் மனநலத்தின் மீது நமக்கிருக்கும் தவறான நம்பிக்கைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கும், தேவைப்பட்டால் அதற்கான ஆலோசனைகளை பெறுவதற்கும் நாம் தயங்கக்கூடாது, அப்போது தான் நாம் நமது மனநலத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். மனநலம் மேம்பட்டால் தான் நம் வாழ்க்கைத் தரமும் ஆளுமைத் திறனும் மேம்படும்.

இந்தத் தொடரில் நாம் மனம் பற்றியும், அதனை நலமாக வைத்திருக்கும் வழிமுறைகள் பற்றியும், மன நோய்கள் குறித்தும், அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் பேசப்போகிறோம். வாசகர்கள் தங்களின் சந்தேகங்களைத் தயங்காமல் கேட்கலாம், உங்கள் கேள்விகளுக்கான விளக்கம் அடுத்தடுத்த இதழ்களில் வெளியாகும்.

மனதைப் பற்றி பல்வேறு குழப்பங்கள் நம்மிடம் இருக்கின்றன. உடலின் வேறு எந்தப் பாகத்தைப் பற்றியும் இத்தனை குழப்பம் நம்மிடம் இல்லை. மனதைப் பற்றியான இந்தத் தெளிவற்ற நிலைக்குக் காரணம், மனதின் “உருவமில்லாத தன்மை” தான். உடலின் மற்ற பாகங்களுக்கு இருப்பது போல மனதிற்கும் உருவமிருந்தால் அதை இத்தனை தூரம் நாம் ஆராயத் தேவை இருந்திருக்காது, அதற்கு உருவம் என ஒன்று இல்லாததால் தான் நம்மால் தெளிவாக எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மனம் ஒன்று இருக்கிறதா என்பதையே நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

மனம் என்பது என்ன? உண்மையில் மனம் என்று ஒன்று இருக்கிறதா? எங்கிருக்கிறது? மனம் என்பது ஒரு செயல்பாட்டு அலகு (Functional Unit). அது என்ன செயல்பாட்டு அலகு? கணினியை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

அதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று, வன்பொருள்; மற்றொன்று மென்பொருள். வன்பொருட்களை நம்மால் காண முடியும், ஆனால், மென்பொருளைக் காண முடியாது. ஆனால், வன்பொருள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை மென்பொருளே முடிவு செய்யும். அந்தக் கணினியின் செயல்பாட்டிற்கு வன்பொருள், மென்பொருள் இரண்டுமே காரணம். மூளை என்ற வன்பொருளில் பதிவேற்றப்பட்ட மென்பொருள்தான் நமது மனம். மூளை என்ற வன்பொருளின் செயல்பாட்டிற்கு மனம் என்ற மென்பொருளே காரணம். அனைத்து மனிதர்களுக்கும் அவர்களது வன்பொருட்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதரும் பிற மனிதர்களிலிருந்து வேறுபடுவது அவர்களது மென்பொருளினால் தான், அதாவது நமது மனம்தான் பிற மனிதர்களிலிருந்து நம்மை வேறுபடுத்துகிறது, நாம் தனித்துவமான ஒருவராக இருப்பதற்கு நமது மனமே காரணம்.

நமது எண்ணங்கள், உணர்வுகள், அறிவு என மூன்றும் சேர்ந்ததே மனம். இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று பிணைந்தும், சார்ந்துமே இருக்கின்றன. இந்த மூன்றில் வரக்கூடிய பிரச்சினைகள் காரணமாக நாமோ மற்றவர்களோ பாதிக்கப்பட நேரிடுமானால் அதை மனநலக் கேடு எனச் சொல்கிறோம். அந்தக் கேடுகளை, சரியாகப் பகுத்தறிந்து எதில் பாதிப்பு இருக்கிறதோ அதைச் சரி செய்தால் அந்தக் கேடுகள் குறைந்து மனநலம் மேம்படும். மனநலம் மேம்படும்போது உடல் நலமும் மேம்படும். உடல்நலனும், மன நலனும் மேம்பட்ட வாழ்வே நல்வாழ்வு !

கேள்வி-பதில்

கே : வணக்கம் டாக்டர்.

நான் தனியாக இருக்கும் போது ஏதேதோ எதிர்மறை எண்ணங் களாகவே தோன்றுகின்றன. எப்போதோ நடந்தவை, தேவை
யில்லாத நிகழ்வுகள் நினைவுகளாய் வந்து என்னைத் தொந்தரவு செய்கின்றன. இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்
களிலிருந்து எப்படி வெளியே வருவது?

– தர்மராஜன், சென்னை

ப : வணக்கம் திரு. தர்மராஜன். பொதுவாக நமக்கு வரக்கூடிய எண்ணங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, இலக்கு நோக்கிய எண்ணங்கள்; மற்றொன்று இலக்குகளற்ற எண்ணங்கள். ஒரு வேலையில் நாம் ஈடுபடும்போது அது நிமித்தமாக வரக்கூடிய எண்ணத் தொடர்ச்சிகள் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டவை, ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அந்த வேலையை நாம் முடித்தவுடன் அந்த எண்ணங்களும் நின்றுவிடும். நம் பணி, இலக்கு சாராது மனதில் தன்னிச்சையாக வரக்கூடிய எண்ணங்கள் இலக்குகளற்ற எண்ணங்கள், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக இந்த எண்ணங்கள் இருக்கும். திடீரென மனம் வேறொன்றில் கவனத்தைக் குவிக்கும்போது இந்த எண்ணங்கள் சட்டென அறுந்துபோய் மனம் எதைக் கவனிக்கிறதோ அது தொடர்பான எண்ணங்கள் வரத்தொடங்கிவிடும். தானே உங்களுக்கு வரக்கூடிய எண்ணங்களெல்லாம் இலக்குகளற்ற எண்ணங்கள், அது நேர்மறையானதாகவும் இருக்கும் அல்லது எதிர்மறையானதாகவும் இருக்கும். அது அந்தந்த நேரத்து மனநிலையைப் பொறுத்தது.

இப்படிப்பட்ட எண்ணங்கள் வருவது இயல்பானது, அதை நீங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. மாறாக இப்படி வருகிறதே எனக் கவலைப்பட்டால் அப்படிப்பட்ட எண்ணங்கள் அதிகமாக வரும். மனதில் இந்த எண்ணங்கள் தான் வர வேண்டும் என நம்மால் முடிவு செய்ய முடியாது.

பணியின்றி, தனியாக இருக்கக்கூடிய நேரங்களில் வரும் இலக்குகளற்ற எண்ணங்களை நினைத்து வருத்தப்படாமல் அது மனதின் இயல்பு என அதை நீங்கள் பொருட்படுத்துவதைக் குறைக்கும்போது, அந்த எண்ணங்கள்
வருவது நாளடைவில் குறைந்துவிடும். இப்படி வருகிறதே என வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் வரையில் அது தொடர்ச்சியாக வந்துகொண்டேதான் இருக்கும். ஆக்கப்பூர்வமான செயல்களில் – சிந்தனை
களில் நம்மை ஈடுபடுத்துவதன் மூலம் இது விலகும்.

குறிப்பு : உளவியல் சார்ந்து மருத்துவரிடம் கேள்வி கேட்க விரும்புவோர், தங்கள் கேள்விகளை உண்மை முகவரிக்கு அஞ்சல் அட்டை மூலமாகவோ அல்லது viduthalaidtp@gmail.com என்ற இமெயில் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.