பெண் விடுதலை

2024 ஜுலை 16-31

பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளதைப் பற்றி ஆண்கள் ஒருநாளும் எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால், பெண்களும் கூட தாங்கள் அடிமையாக வாழ்கிறோம் என்ற எண்ணம் சற்றும் இல்லாமல் தான் இருக்கின்றனர். ஆண்களுக்கு நிபந்தனை இல்லா அடிமைகளாகவும், நிரந்தர அடிமைகளாகவுமே இருந்து பெண்கள் காலம் கழிக்கின்றனர். கவலைக்குரிய ஒன்று என்னவென்றால், தாங்கள் அடிமை வாழ்வு தான் வாழ்கிறோம் என்று ஒவ்வொரு பெண்ணும் அறியாமல் இருப்பது தான்.

குடும்ப வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் பெண்களின் அவல நிலைகள் ஏராளம். ஓர் ஆணும் பெண்ணும் அதாவது, தாயும் தந்தையும் சேர்ந்துதான் பிள்ளையைப் பெறுகின்றனர். அந்தப் பிள்ளையைக் குறிப்பிடும்போது ஆணின் பெயரைச் சொல்லி அவன் மகன் என்றும், அவன் மகள் என்றும் சொல்லுகிறார்கள். ஆனால், கரு உருவானதிலிருந்து பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அந்தத் தாயின் பெயரைக் குறிப்பிட்டு அவள் மகன் என்றோ அவள் மகள் என்றோ சொல்லுவதில்லை.

திருமணத்தின் பெயரால் ஆணுக்கு அடிமைப்படுத்தப்படும் பெண்கள், கணவனுக்கு மட்டுமல்லாது அந்தக் குடும்பத்திற்கே வேலைக்காரியாக மாற்றப்படுகிறாள். ஆணுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தொடங்குவது சம்பளமில்லாமல் வீட்டு வேலைக்கு ஆள் சேர்ப்பது என்று தான் சொல்ல வேண்டும்.

“கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’’ என்னும் வாக்கியம் ஆண்கள் மனதில் பதிந்ததைக் காட்டிலும் பெண்கள் மனதில் தான் அழியாத அளவிற்கு அச்சடிக்கப்பட்டது போல பதிந்திருக்கிறது.

‘‘உயிர் பயத்தைக் கொடுக்கும் பூனைகளிடமிருந்து தன்னுயிரைக் காக்க ஓட்டம் பிடிக்கும் எலிகளுக்கு விடுதலை உண்டாகாது. தாங்கள் மேலானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதாருக்குச் சமநீதி, சம உரிமை ஒரு போதும் கிடைக்காது; கிடைக்கவும் விடமாட்டார்கள். சமத்துவமும் ஏற்படாது. ஒருவேளை எலி பூனையைத் துரத்தினாலும், பார்ப்பான் ஒருவன் பார்ப்பனர் அல்லாதவன் தோள் மீது கை போட்டுத் தோழமை கொண்டாலும், ஆண்மை என்ற ஆணவத்தன்மை கொண்ட ஆண்களால் பாவப்பட்ட வாழ்க்கை வாழும் பெண்களுக்கு ஒரு நாளும் விடுதலை கிடைக்கவே கிடைக்காது’’ என்றார் பெரியார்.

இம்மாதிரியான சமூகச் சூழலையும், ஆண் – பெண் பேதம் என்பது மிகக் கொடுமையானது என்ற உண்மையையும், உணர்ந்த அய்யா தந்தை பெரியார், பெண் விடுதலைக்காகத் தன் வாழ்நாளைக் கணிசமாகச் செலவிட்டார். தீவிரமாகச் சிந்தித்து, பெண்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் தீர்மானங்களை இயற்றினார். அத்தீர்மானங்களின் பலனை அனுபவித்திடாத பெண்கள் ஒருவரும் இருக்க முடியாது.

ஓடி விளையாடும் வயதில் உள்ள சிறு பெண் குழந்தைகளைக் குழந்தைத் திருமணம் செய்து வைத்து ஆணுக்கு அடிமைப்படுத்திய அவல நிலையைப் போக்க, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் கல்யாண வயது 16க்கும் மேற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.. அய்யா அன்று விதைத்த விதை இன்று 18இல் இருந்து 21ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படாமல் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

தாலி கட்டியாயிற்று; திருமணம் முடிந்து விட்டது; என்ற நிர்ப்பந்தத்தில் பிடிக்காத கணவனாக இருந்தாலும் அந்தப் பெண் பொறுத்து வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழல் நிலவப்பட்டு வந்த நிலையில் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் மனைவி, புருஷன் இருவரில் ஒருவருக்கு ஒருவர் ஒத்து வாழ விருப்பம் இல்லாத போது தம்முடைய கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்று தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று இத்தீர்மானத்தின் தாக்கம் மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடக்கிறது. இதன் மூலம் வாழ்க்கையைத் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்றாற்போல மாற்றிக் கொள்ள முடிகிறது.

திருமணம் ஆகி கணவன் இறந்து விட்டான் என்ற நிலையில் மனைவி விதவை ஆகிறாள். அவள் அனுபவிக்காத கொடுமைகளே இல்லை என்பதே உண்மை நிலை. விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாற்றம் வேண்டும் எனில் முதலில் நம்மிடம் அம்மாற்றம் வரவேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்த பெரியார், திருமணமாகி கணவனை இழந்து விதவையாய் இருந்த தன் தங்கை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். தான் அளித்த தீர்மானங்களுக்குத் தானே முன்னோடியாக நடந்து காட்டினார்.

ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்குச் சொத்துரிமைகளும் வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்
டும் என்றும், பெண்களும் ஆண்களைப் போலவே எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்தி வருவதற்கு பெண்களுக்குச் சம உரிமையும் அவகாசமும் கொடுக்கப்பட வேண்டும் என்றும், பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்கு தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஆரம்பக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் வேலைக்குப் பெண்களையே நியமிக்கப்பட வேண்டும் என்றும் செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

1929இல் நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு பெண்களின் வாழ்க்கைக்கு ஏணியாகவே அமைந்துள்ளது. ஒரு தேசத்தின் முன்னேற்றம், அத்தேசப் பெண்மக்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தே இருக்கிறது.

இன்றைய பெண் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொடுத்த பெருமை அய்யா பெரியாரையே சேரும் என்பதில் சிறிதும் அய்யமேதுமில்லை. விதையில் தான் ஆரம்பிக்கும் ஒரு காட்டின் வளர்ச்சி. அய்யா பெரியார் விதைத்த விதை இன்று காடாக விரிந்துள்ளது. மேலும் மேலும் பெண்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க பெரியார் கொள்கைகளை ஏற்றுப் பரப்புவோம்.
வாழ்க பெரியாரியம்! வளர்க பெண்ணியம்!