தமிழினத்தைப் பீடித்திருக்கிற அய்ந்து நோய்களுள் ஒன்றாக பத்திரிகைகள் இருக்கின்றன என்றார் பெரியார். அவர் காலம் தொட்டு இன்று வரை அதுதான் உண்மை நிலையாக இருக்கிறது.
பெரியாரின் இந்தக் கூற்றைப் பொய்யாக்க பார்ப்பனப் பத்திரிகைகள் தயாராக இல்லை என்பதே இன்றைய நிலை.மதச்சார்பின்மை என்ற சொல்லுக்கு எப்படித்தவறாப் பொருள் கொள்ளப்படுகிறதோ,அப்படியே நடுநிலை என்ற சொல்லும் படாத பாடுபடுகிறது.
எல்லா மதங்களையும் சமமாகப் பாவித்தல் என்று மதச்சார்பின்மையைத் தவறாக அர்த்தப்படுத்துகிறார்கள். நடுநிலை என்ற பெயரில் பார்ப்பன மனநிலையே இங்கு மனு நிலையாக இருக்கிறது.தமிழின எழுச்சிக்கோ, திராவிட இயக்க வளர்ச்சிக்கோ ஆதரவான மன நிலை மக்களிடம் எழும்போது அதனை ஒடுக்க தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடுவதும், சிறு தவறுகள் நேர்ந்தாலும் அதனை ஊடிப் பெரிதுபடுத்திக் காட்டுவதும் பார்ப்பனப் பத்திரிகைகளின் தர்மமாகத் தொடர்கின்றன.
2ஜி ஸ்பெட்ரம் தொடர்பான கணக்குத் தணிக்கைக் குழுவின் உத்தேச இழப்பு மதிப்பீட்டை, பார்ப்பன ஊடகங்கள் ஊழல் என்று கை கூசாமல் பொய் எழுதின; இன்னும் எழுதி வருகின்றன. குற்றச்சாட்டுக்கு ஆளான தரப்பின் மறுப்பை துளி அளவுகூட வெளியிடும் அடிப்படை நியாய உணர்வு அந்த ஊடகங்களுக்கு அறவே இல்லை.
இந்த வரிசையில் அண்மையில் ஒரு செய்தி. கடந்த மாதம் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி நீச்சல் குளத்தில், 4 ஆம் வகுப்புப் படிக்கும் ரஞ்சன் என்ற சிறுவன் நீச்சல் பயிற்சியின் போது மூழ்கி உயிரிழந்தான். இந்தச் செய்தியை வெளியிட்ட பார்ப்பன பத்திரிகைகள் அப்பள்ளியின் நிர்வாகம்,தாளாளர் பற்றி மூச்சுவிடவில்லை; முதல் நாள் செய்தியில் (17.8.2012) தினமலரும், தினமணியும் பள்ளியின் பெயரை மட்டுமே வெளியிட்டனவே அல்லாமல், நிர்வாகத்தினர் பெயர்களைக் கூட குறிப்பிடவில்லை.“தனியார் பள்ளி நீச்சல் குளத்தில் மாணவன் பரிதாப பலி! கவனக்குறைவால் விபரீதம்-இது தினமலர் தலைப்பு (17.8.2012).தனியார் பள்ளி நீச்சல் குளத்தில் மாணவன் மர்மச் சாவு- 5 பேர் கைது-இது தினமணி தலைப்பு (17.8.2012)
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.அந்தச் செய்தி 18.8.2012 அன்று பத்திரிகைகளில் வெளியானது.தினமலரில் அச்செய்தியின் உள்ளே பெட்டிச் செய்தியில் பள்ளி முதல்வர் கைது என்று தலைப்பிட்டு,`பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் முதல்வர் ஷீலா ராஜேந்திரனை,51 போலீசார் கைது செய்தனர்- என்று குறிப்பிட் டுள்ளது.` தினமணியில் பள்ளி துணை முதல்வர் கைது என்று தலைப்பிட்டு,` கைது செய்யப்பட்ட ஷீலா ராஜேந்திரா நடிகர் ஒய்.ஜி.மஹேந்திராவின் சகோதரர் ஒய்.ஜி.ராஜேந்திராவின் மனைவி ஆவார்என்று குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளிலேயே இந்த பத்மா சேஷாத்ரிப் பள்ளியைத்தான் பெரிய பள்ளி எனப் பார்ப்பனர்கள் பீற்றிக்கொள்வார்கள். அங்கு சீட் கிடைத்துவிட்டால் அது பெரிய சாதனை என்பார்கள். அந்த அளவுக்கு மிகவும் யோக்கியமாக நடப்பதுபோலப் பேசுவார்கள். காரணம் அதனை நடத்துவது திருமதி.ஒய்.ஜி. பார்த்தசாரதி என்ற பார்ப்பன அம்மையார்.இவர் சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழக அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றவர். சமச்சீர் கல்விக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்.தனியார்மயக் கல்விக்கு ஆதரவான சிந்தனையாளர்.தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லாத இவருக்குத்தான் இந்த ஆண்டில் தமிழக அரசின் அவ்வையார் விருதை முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.இவரது மருமகள்தான் சிறுவன் ரஞ்சன் இறந்த பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர்.இவ்வளவு தகவல்களையும் தினமலர், தினமணி, விகடன், குமுதம், கல்கி, துக்ளக் போன்ற பார்ப்பனக் குழும ஏடுகள் மறைத்துவிட்டு வெட்கமில்லாமல் தம்மை நடுநிலை ஏடுகள் என்று இன்னும் கூறிக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி 20.8.2012 அன்றைய தினமணியில் தலையங்கம் தீட்டிய வைத்தியநாத அய்யர்வாள், அந்தத் தலையங்கத்தில் ஒரு வரிகூட பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கவில்லை. இந்தச் செய்தியோடு இன்னொன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் ஏன் பார்ப்பன ஊடகங்களைக் கண்டிக்கிறோம் என்பது விளங்கும். கடந்த ஜூலை மாதம் சென்னை தாம்பரம் சேலையூரில் சீயோன் மெட்ரிக் பள்ளியின் பேருந்தின் ஓட்டையின் வழியே விழுந்து 2 ஆம் வகுப்பு படித்த ஸ்ருதி என்ற சிறுமி உயிரிழந்தாள். இச்செய்தியை வெளியிட்ட மேற்சொன்ன பார்ப்பன ஊடகங்கள் அப்பள்ளியின் தாளாளர் விஜயனின் படத்தைப் போட்டுப் பக்கம் பக்கமாக எழுதின. இச்சம்பவத்தை தொடர்ந்து ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் அச்செய்தியை வெளியிடும்போதும் ஜெப்பியாரின் படத்தைப் போட்டு எழுதின. ஆனால், பத்மா சேஷாத்ரி பள்ளித் தாளாளர் ஷீலா ராஜேந்திரனின் படத்தை இதுவரை இந்தப் பார்ப்பன ஊடகங்கள் காட்டவேயில்லை. ஏன் இந்த நிலை? அவர் பார்ப்பனர் என்பதால் தானே? சூத்திரர்களான விஜயன், ஜேப்பியார் படங்களைப் போடும் பார்ப்பன ஏடுகள் பார்ப்பன அம்மையாரின் படத்தைப் போடவில்லையே ஏன்? மனுநீதி-ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பெரியார் சொன்னதும், சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்று பாரதியார் சொன்னதும் இதைத்தானே. நடந்த செய்திகளைக் கூட உள்ளது உள்ளபடி எழுதாத இந்தப் பார்ப்பன ஏடுகள்,எப்படி நடுநிலையோடு கருத்துச் சொல்லும் ஏடுகளாக இருக்கமுடியும்?
எல்லாவற்றிலும் தன்னுடைய மனுதர்மப் பார்வையை இன்னும் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு உதாரணம்தான் வேண்டுமா? அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிந்த செய்திகளைச் சொல்வதிலேயே பேதம் பார்த்து உண்மையை மறைக்கும் இந்த பார்ப்பன ஏடுகளின் புளுகுச் செய்திகளை புலனாய்வுச் செய்திகள் என்று நம்பத்தான் முடியுமா?
– அன்பன்