நாகை என்.பி.காளியப்பன்
நூற்றாண்டு விழா!
பேராசிரியர் திருக்குறள் பாஸ்கரன் அவர்களின் மகன் பொறியாளர் கருணாகரன் மறைவையொட்டி, சென்னை அண்ணா நகரில், ‘கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்’ நிறுவப்பட்டது. இந்நூலகத்தை 1.6.2005 அன்று நாம் சென்று பார்வையிட்டு அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த திருக்குறள் நூல்களை வாங்கியதோடு, நூலக வளர்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.1,330/- நன்கொடை வழங்கினோம். இந்நூலகத்தில் திருக்குறள் தொடர்பாக 2500 நூல்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
மனிதநேய நண்பர்கள் குழு சார்பில் 1.6.2005 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் ‘சமூகநீதியும் அரசியல் சட்டமும்.’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம்
சிறப்புரையாற்றினார்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.நடராசன் – யசோதா இணையரின் மகன் சதீஷ்குமார் மற்றும் சென்னை ஆதம்பாக்கம் வி.ராஜகோபால் – விஜயலட்சுமி இணையரின் மகள் லோகநாயகி ஆகியோரின் திருமணத்தை, சென்னை பெரியார் திடலில் 2.6.2005 அன்று வியாழன் தலைமையேற்று நடத்தி வைத்தோம்.
மதுரையில் திராவிடர் கழக வழக்குரைஞர் அணி மாநில மாநாடு மாநில சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் கி.மகேந்திரன் தலைமையில் அழகர்கோவில் சாலையிலுள்ள ஓட்டல் தமிழ்நாடு கூட்ட அரங்கில் 4.6.2005 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
வழக்குரைஞர் பி.கே. இராசேந்திரன் தலைவரை முன்மொழிந்தும் வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் வழிமொழிந்தும் பேசினர்.
அறிமுக உரையாற்றிய மேனாள் நீதிபதி பொ. நடராசனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் ஏ.கே. இராஜன் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தந்தை பெரியார் அவர்களின் இலட்சியங்களையும் சமூக நீதி வரலாற்று வளர்ச்சியையும் மிகச் சிறப்போடு எடுத்துரைத்தார்கள். நாம் நீதியரசரைப் பாராட்டியும், இம்மாநாட்டின் அவசியம் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினோம்.
மாநாட்டின் மதிய அமர்வு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. கருத்தரங்கிற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினரும் வழக்குரைஞருமான அ.தியாகராசன் தலைமை வகித்தார்.
கருத்தரங்கில் “சட்டக் கல்வியில் சமநிலை” எனும் தலைப்பில் மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜி.கே. லட்சுமணராஜும், “குழந்தைகளைத் தொழிலாளர் ஆக்கியது யார் குற்றம்?” எனும் தலைப்பில் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் ஏ.கே. இராமசாமியும் “உயர்நீதிமன்றத்தில் தமிழும் தகுதி மொழி” எனும் தலைப்பில் மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர்
எஸ். முத்துகிருஷ்ணனும், “சங்கர மடமும் சட்டத்தின் முன் சமம்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் எஸ்.ராஜுவும், “ஆணாதிக்க சமுதாயத்தில் மகளிர் நலச் சட்டங்கள்” பற்றி வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினியும், “அனைவரும் அர்ச்சகராவதில் சட்டம் தடையில்லை” எனும் தலைப்பில் வழக்குரைஞர் ஜெ. கணேசனும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன்- “ஏழைகளுக்கு இடஒதுக்கீடு- கேட்பதற்கு இனிக்கிறது” என்றும், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, “நீதியரசர்கள் நியமனம் – சமூக நீதி அவசியம்” என்றும் உரையாற்றினர்.
மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை உரையாற்றியபின், நிறைவுப் பேருரையில் கழகச் செயல்பாட்டில் வழக்குரைஞர்களின் பங்கும் பணியும், கடமையும் பற்றியும் மற்ற பொதுவான வழக்குரைஞர்களின் சமூகப் பொறுப்புகள் பற்றியும் தெளிவுடன் நாம் எடுத்துரைத்து மாநாட்டை நிறைவு செய்தோம்.
புதுடெல்லி பெரியார் மய்யத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றிய ஆர்.எஸ். இராசேந்திரன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி, தஞ்சை வல்லம் அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் 8.6.2005ஆம் தேதி புதன்கிழமை காலையில் நடைபெற்றது. நிகழ்வில் நாம் கலந்துகொண்டு மறைந்த ஆர்.எஸ். இராசேந்திரனின் படத்தைத் திறந்து வைத்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும், அவரது சிறப்புகளை எடுத்துரைத்தும் இரங்கலுரையாற்றினோம்.
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மற்றும் மதுக்கூர் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி. காளியப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா 8.6.2005ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
நாகை என்.பி.காளியப்பன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் காங்கிரஸில் இருந்து தொண்டாற்றியவர். சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் பக்கம் நின்றவர். தந்தை பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது அவருடன் வெளியேறி சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்ட சுயமரியாதைப் போராளி ஆவார். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது திருமணம் சுயமரியாதைத் திருமணங்களுக்கு முன்னோட்டமாக நாகையில் பார்ப்பனர் தவிர்த்த திருமணமாக நடைபெற்றது. தந்தை பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தவர். ‘குடிஅரசு’ பத்திரிகைகளை வாங்கி விநியோகம் செய்த தொடக்க கால ஏஜென்ட் ஆவார். அவரிடம் நம்பிக்கை கொண்ட தந்தை பெரியார் அவர்கள் அவரை சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு ‘குடிஅரசு’ பத்திரிகைக்கான தொகைகளைப் பெறுவதற்கு அனுப்பி வைத்தார். மிக வீச்சான பேச்சாளர் ஆவார்.
இவரது நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பான கருத்தரங்கம் நடைபெற்றது. “தன்னகரில்லா தன்மான இயக்கம் – சுயமரியாதை இயக்கம்” எனும் தலைப்பில் நடை
பெற்ற கருத்தரங்கம் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் தலைமையில் செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு தொடக்கவுரையுடன் தொடங்கியது.
“வழிகாட்டுவது எவற்றை?” எனும் தலைப்பில் இராம.அன்பழகனும், “வாழ்விக்கச் சொன்னது எவற்றை? எனும் தலைப்பில் இரா.பெரியார் செல்வனும், “அழிக்கச் சொன்னது எவற்றை?” எனும் தலைப்பில் அதிரடி அன்பழகனும் பேசினர்.
மாலை 5 மணிக்கு மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது.
மாலையில், மதுக்கூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நடந்த விழாவிற்கு மாவட்ட தி.க. தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமை வகித்தார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் இரா. குணசேகரன், கோட்டப் பிரச்சாரக் குழுச் செயலாளர் இரா.கோபால், ஒன்றியத் தலைவர் புலவஞ்சி.இராமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.க. செயலாளர் பெ. வீரையன் வரவேற்புரையாற்றினார்.
கருணாகரன் நினை வு திருக்குறள் நூலகத்தை
பார்வை யிடும் ஆசிரியர்
விழாவில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோது “திராவிடர் கழகம் ஓர் இயக்கம்; கட்சி அல்ல; எக்காலமும் இயங்கிக் கொண்டிருக்கும் சமுதாயப் புரட்சி இயக்கமாகும். அறிவுப் புரட்சி இயக்கமாகும். அறிவையே ஆயுதமாகக் கையில் எடுத்து, மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் இயக்கமாகும். ஜாதி, தீண்டாமையை ஒழித்து, அனைவருக்கும் அனைத்தும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கச் செய்வதாகும்
அண்ணன் என்.பி.காளியப்பன் மிக எளிமையாக இருப்பார். எப்பொழுதும் தொண்டு செய்வதே தன் கடமையாக எண்ணி ஒரு துறவியைப் போல வாழ்வில் நடந்துகொண்டவர். அப்பேர்ப்பட்ட ஒரு தொண்டறச்செம்மலுக்கு விழா என்பதைக் கொள்கை விழா – குடும்ப விழாவாக நடத்துகின்றோம்” என எடுத்துரைத்தேன்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.பெ.வேணுகோபால் அவர்கள் வீட்டில் தவறி விழுந்ததால் எலும்பு முறிவுக்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து 14.6.2005 அன்று காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அவரை நாம் அன்போடு வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பு செய்தோம்.
மனிதநேய நண்பர்கள் குழு சார்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றுகிறார் ஆசிரியர்…
“உடல்நலம் பாதிக்கப்பட்ட நான் முதன்முதலில் தாய் வீடான பெரியார் திடலுக்கு வரவேண்டும் என்கிற உணர்வோடு வந்திருக்கிறேன்,” என்று உணர்ச்சி ததும்பக் கூறினார். ‘விடுதலை’ வளர்ச்சிக்காக 1000/- ரூபாயை எம்மிடம்
அளித்தார்.
பின்பு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பெரியார் களஞ்சியம் 10ஆம் தொகுதியை (ஜாதி- தீண்டாமை என்ற தலைப்பில் 4ஆம் தொகுதி) நீதியரசர் வேணுகோபால் வெளியிட அதை நாம் அன்புடன் பெற்றுக் கொண்டோம்.
தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூத்த சகோதரி பெரியநாயகி அம்மாள் (வயது 94) அவர்கள் 14.6.2005ஆம் தேதி மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அன்று (14.6.2005) மாலை 6 மணியளவில் நேரில் சென்று மறைந்த அம்மையாரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம்.
கழகப் பொருளாளர் வழக்குரைஞர்
கோ. சாமிதுரை, கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
மலேசியாவில் 17, 18, 19.6.2005ஆம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மறை திருக்குறள் ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள விழாக்குழுவினர் எம்மை நேரில் அழைத்தனர். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 17.6.2005 வெள்ளிக்கிழமை மலேசியா சென்றடைந்த நாம் அங்கு பத்தாங் பெர்சுந்தை என்னும் ஊரில் வாழ்ந்து, சில மாதங்களுக்கு முன் மறைந்த மலேசிய திராவிடர் கழகப் பிரமுகரும் பெரியார் பெருந்தொண்டருமான கு.கந்தசாமி அவர்கள் இல்லத்திற்கு இரவு 9 மணிக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். மலேசியாவில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து 100 பேராளர்கள், தமிழறிஞர்கள், மலேசிய அமைச்சர்கள், உலகத்தமிழ் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
வழக்குரைஞர் அணி மாநில மாநாட்டில் உரையாற்றுகிறார் ஆசிரியர்
கருத்தரங்கம், கண்காட்சி, மலர்வெளியீடு, திருவள்ளுவர் சிலை திறப்பு போன்ற முதன்மை நிகழ்வுகளுடன் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சி மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக துங்குவேந்தர் மண்டபத்தில் காலை 11 மணியளவில் தொடங்கியது.
மலேசிய அரசின் பயனீட்டாளர் விவகாரத் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எஸ்.வீரசிங்கம் அவர்கள் தலைமையேற்றார்.
ஆய்வுக் கருத்தரங்கின் இயக்குநர் பேராசிரியர் ந.கந்தசாமி வந்திருந்த பேராளர்கள், அறிஞர்கள் உட்பட அனைவரையும் வரவேற்று ஆய்வுக் கருத்தரங்கின் விழுமிய நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
நீதியரசர் ஏ.கே . ராஜனுக்கு சிறப்புச் செய்கிறார்
தமிழ்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் மணவை முஸ்தபா, சிலம்பொலி செல்லப்பன், பேராசிரியர் க.ப. அறவாணன், தாயம்மாள் அறவாணன், அமெரிக்கத் தமிழ் அறிஞரும், குறள் பரப்பும் செம்மலுமான முனைவர் ராம்மோகன் (சிகாகோ), சென்னை மாநகர மேனாள் மேயர் சா.கணேசன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், கவிஞர் முத்துலிங்கம், தி.மு.க., இலக்கிய அணிச் செயலாளர் திருவில்லிப்புத்தூர் சா.அமுதன், மூவேந்தர் முத்து, வா.மு.சே. திருவள்ளுவன், கவிஞர் பூங்கொடி பாலு போன்ற பலரும் பங்கேற்றனர்.
நாகை என்.பி.காளியப்பன்
தொடக்கம் முதலே இந்த ஏற்பாடுகளை மாநாட்டுத் தலைவர் முனைவர் தமிழ்மணி, துணைத் தலைவர் பழநிச்சாமி மற்றும் மாநாட்டு நிதிக்குழு இயக்குநர் சின்னச்சாமி ஆகியோரும் மலேசியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும், வரவேற்புக் குழுவினரும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
முதல் நாள் மாநாட்டில், காலையில் ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாலையில் கண்காட்சித் தொடக்க விழாவை, கோலாலம்பூர் தேசிய அருங்காட்சியகத்தில் (மியூசியம் நெகரா), மலேசியப் பல்கலைக் கழகத்தின் இணைத் துணைவேந்தர் தொடங்கி வைத்தார்.
கண்காட்சிக் குழு இயக்குநர் வி.எம். பஞ்சமூர்த்தி, அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இரவு 8.30 மணிக்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் மண்டபத்தில் திருவள்ளுவர் பற்றிய மேடை நாடகம் நடைபெற்றது. மாநாட்டுத் துணைத் தலைவர் கலைப்பகுதி இயக்குநர் க. பழநிச்சாமி வரவேற்புரையாற்றினார். 18.6.2005 சனிக்கிழமையன்று காலை 8.30 மணிக்கு,
கோலாலம்பூர் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகை வளாகத்தின் முன்பகுதியில் சுமார் ஆறரை அடி உயர
முள்ள (குமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் கருங் கல்லில் செதுக்கப்பட்டது) திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
டான் சிறீ டாக்டர் ச.சாமிவேலு
மலேசிய அரசின் பொதுப் பணித்துறை அமைச்சரும், மலேசிய இண்டியன் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவரும், மலேசியத் தமிழர்களின் தனிப்பெரும் தலைவராகவும் விளங்கும் டான் சிறீ டாக்டர் ச.சாமிவேலு அவர்கள் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
டான்சிறீ கே.ஆர்.சோமசுந்தரம்
மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் செயல் தலைவர் டான்சிறீ கே.ஆர்.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாநாட் டுத் தலைவர் முனைவர் பெரு அ.தமிழ்மணி முன்னிலை வகித்தார். சிலையைத் தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக
வழங்கிய உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் தொழிலதிபருமான டாக்டர் வி.ஜி. சந்தோஷம் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டு இணைச் செயலாளர் மு. சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.
திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பெருமையைக் கூறும் இசை பாட்டு நாட்டியத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விழாவைச் சிறப்புடன் நடத்தினர்.
தமிழ்நாட்டிலிருந்து மாநாட்டிற்கு வந்து பங்கேற்ற தலைவர்கள், கோ.க. மணி (பா.ம.க.), இல. கணேசன் (பா.ஜ.க.) ஆகியோர் பேசிய பின் 1000 பக்கங்களில் மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட “தமிழ் மறைக்களஞ்சியம்” என்ற அழகிய மாநாட்டுச் சிறப்பு மலரை டான்சிறீ கே.ஆர். சோமசுந்தரம் வெளியிட்டார்.
அதன்பின் நடைபெற்ற வாழ்த்தரங்க நிகழ்வில் செஞ்சி இராமச்சந்திரன் (மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்), சென்னை மேனாள் மேயர் சா.கணேசன் (தி.மு.க.), விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் அன்றைய துணைப் பொதுச் செயலாளர் கு.செல்வப்பெருந்தகை, கவிஞர் முத்துலிங்கம், ‘கல்கண்டு’ ஆசிரியர் லேனா. தமிழ்வாணன், ‘புதிய பார்வை’ ஆசிரியர் முனைவர் ம. நடராசன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் நாம் சிறப்புரை வழங்கினோம். அப்போது, தந்தை பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி; அவர்கள் எதையும் சுலபமாக ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை. அறிவுடைமை என்ற தலைப்பில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவை முன்னிலைப்படுத்தி அதை அடையாளம் காட்டி அறிவுக்கு மரியாதை கொடுத்து இன்றைக்கு
முருகு சீனிவாசன் குடும்பத்தினருடன் தமிழர் தலைவர்
அறிவுலகம் ஏற்றுக்கொள்ளச் செய்த பெருமை தமிழனுக்கு உண்டு. அந்தத் தமிழினத்தில் அப்படி முகிழ்த்துக் கிளம்பியதுதான் வள்ளுவருடைய திருக்குறள். உலகத்திலே ஈடு இணை இல்லாத மிகச் சிறந்த நூல் வள்ளுவருடைய திருக்குறள் என்பது பெருமைக்குரியதாகும். ஜாதி உள்ளே நுழைந்த நேரத்திலே அதை எதிர்த்துக் குரல் கொடுத்த நூல் திருக்குறள்” என திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்தோம்.
நிகழ்வில் கலந்துகொண்ட ‘ஒவ்வொருவருக்கும் விழாக்குழுவின் சார்பில் மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் மறைந்த முருகு சீனிவாசன்- குஞ்சம்மாள் இணையரின் இளைய மகள் குறிஞ்சிச் செல்வி மற்றும் சிங்கப்பூர் வாழ் மானமிகு கண்ணன்- வீரம்மாள் இணையரின் மகன் ராமச்சந்திரன் ஆகியோரது இணையேற்பு நிகழ்வை சிங்கப்பூரின் புகழ்பெற்ற கல்சா மண்டப அரங்கில் 25.6.2005 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தலைமையேற்று நடத்தி வைத்தோம்.
மணமக்களை வாழ்த்தி நாம் சிறப்புரையாற்று கையில், இந்த மணமுறையை தந்தை பெரியார் அவர்கள் 1928ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தி அது எப்படி இன்று உலகளாவிய நிலையில் பரவி விட்டது என்பதை விளக்கிக்கூறி, பழந்தமிழர் திருமண முறையில் கூட காணப்பட்ட மூடத்தனங்கள், சடங்குகள் குறித்தும் விளக்கினோம். இறுதியில் மலையரசி கலைச்செல்வம் நன்றி கூற மணவிழா இனிதே நிறைவுற்றது.
கிருட்டினகிரி மாவட்டம் பையூரைச் சேர்ந்த ப. பெரியசாமி – பெ. சின்னபாப்பா இணையரின் மகன் பெ. செல்வேந்திரன் மற்றும் ஆத்தோரத்தான் கொட்டாய் க.வேடியப்பன் – வே.சுந்தரம்மாள் இணையரின் மகள் ஆ.வே. கவிதா ஆகியோரின் இணையேற்பு விழா காவேரிப்பட்டணம் சிறீராமுலு நகர் நியூ ரமேஷ் மகாலில் 27.6.2005 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
விழாவில் நாம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறி, ஏற்கச்செய்து மணவிழாவை நடத்தி வைத்து உரையாற்றினோம். அப்போது சுயமரியாதைத்
திருமணம் ஏன் நடைபெற வேண்டும் என்பதை விளக்கி, இன்றைக்கு உலகளவில் பல்வேறு நாடுகளில் சுயமரியாதைத் திருமணம் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினோம்.
திராவிடர் கழக ஆத்தூர் நகரத் தலைவர் வெ.அண்ணாதுரை அவர்கள் தென்னங்குடி பாளையத்தில் புதிதாகக் கட்டியுள்ள இல்லத் திறப்பு விழா 27.6.2005 அன்று மாலை நடைபெற்றது. சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் அன்புராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் நாம் கலந்துகொண்டு வெ. அண்ணாதுரை அவர்களின் புதிய இல்லமான ‘அறிவகம்’ இல்லத்தையும் ‘பெரியார் நினைவகம்’ கல்வெட்டினையும் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றி
னோம். முடிவில் டாக்டர் வெ.கதிரவன் நன்றி கூறினார்.
அன்று மாலை நடைபெற்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.