உலக வரலாற்றில் ஒரு சாதனை நாளிதழ் `விடுதலை.பகுத்தறிவுக் கொள்கை முழக்கமாக ஒலிக்கும் ஒரே நாளிதழாக இருப்பது ஒரு சாதனை என்றால்,அந்த இதழின் 78 ஆண்டுகால வரலாற்றில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒருவரே ஆசிரியராக 50 ஆண்டுகள் தொடர்ந்து இயங்குகிறார் என்பதும் சாதனைதானே!
அந்தச் சாதனையைப் பதிவு செய்யும் விழா 2012 ஆகஸ்ட் 25 ல் சென்னை பெரியார் திடலில் நடந்தது. உலக அளவில் செய்தி ஏடுகள் வரலாற்றில் ஹெரால்டு மேக்மில்லன் என்பவர்தான் அதிகபட்சமாக 27 ஆண்டுகள் ஒரே ஏட்டின் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்று இவ்விழாவில் பங்கேற்ற மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள் தெரிவித்தார். இந்தக் குறிப்பை வைத்துப் பார்த்தால் நிச்சயம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு கின்னஸ் சாதனையாளர்தான்.
அன்று காலையில் நிகழ்ந்த விழாவில்,தங்கள் உள்ளம் திறந்து உண்மை உரைத்த ஒவ்வொரு சான்றோரும் அழுத்தமான கருத்துகளை உதிர்த்தார்கள்.
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா. நன்னன் தனது உரையில்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும்; அவர்தான் நம் ஆசிரியர் வீரமணி அவர்கள்.
விடுதலையை வீரமணியின் ஏக போகத்தில் ஒப்படைக்கிறேன் என்று பெரியார் சொன்னார் என்றால், இது நம் ஆசிரியருக்கு மட்டும்தான். வேறு எவரிடமும் இத்தகைய நம்பிக்கையை பெரியார் வைத்திருந்தார் என்று சொல்ல முடியாது. பெரியாரிடம் செல்லப் பிள்ளையாக வந்து ஏவுகணையாக வளர்ந்தார். நமது ஆசிரியர் அவர்கள் சிறுவராக இருந்த அந்தக் கால கட்டத்தில் நானும் அவருடன் இருந்து பிரச்சாரம் செய்திருக்கின்றேன்.
நமது ஆசிரியர் அவர்களை பெரியார் அவர்கள் தேர்ந்தெடுத்தது. எத்தகைய கூர்த்தமதி? தன் அன்பினாலே ஆசிரியரை தந்தை பெரியார் கட்டிப் போட்டார். ஆசிரியருடைய நலம் என்பது சமுதாய நலமாகும். அவர் உடல் நலனை நன்கு பேண வேண்டும், என்று குறிப்பிட்டார்.
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன்,“ வல்லத்தில் நான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த நாளை மிகப் பெருமையாகக் கருதுவதேன். என் சக நீதிபதிகள்கூட என்னை இதுபற்றிக் கேட் டார்கள். அப்பொழுது அவர் கூட்டத்தில் நான் சொன்னேன். பெரியார் என்ற ஒரு மாமனிதர் இல்லாவிட்டால் நாம் எல்லாம் எங்கே இருந்திருப்போம்?
இந்தப் பதவிகள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்குமா என்று பதில் சொன்னேன். சதா மக்களைச் சந்திப்பது – பேசுவது – படிப்பது – எழுதுவது – கல்வி நிறுவனங்களை நிருவகிப்பது என்று சதா உழைத்துக் கொண்டே இருப்பவர் ஆசிரியர் வீரமணி. அவருக்குத் தூங்க நேரம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
விடுதலை ஆசிரியர்தான் என்றாலும் அவருக்கு மட்டும் விடுதலை இல்லை என்று பாராட்டினார்.
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். மோகன் தனது உரையில்,“இந்த விழா மகிழ்ச்சிக்குரிய விழா! எனது மாணாக்கர்களில் தலைசிறந்த சிறப்பான மாமணி ஆசிரியர் வீரமணி, தமிழ்நாட்டின் சிறந்த பொக்கிஷம்! விடுதலை ஆசிரியர் பொறுப்புக்கு வராவிட்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகக்கூட வீரமணி ஆகி யிருக்கக் கூடும். ஆனால் அதைவிட நாட்டுக்காக, நம் இன மக்களுக்காக நீதியை வழங்கிக் கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
காலையில் சான்றோர்களின் பாராட்டு நிறைந்தது. மாலையில் இதழியல் துறையினர் பங்கேற்ற நிகழ்வு தமிழகத்தின் மூத்த இதழாளர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் தொடங்கியது. இன்றைய முன்னணி ஊடகவியலாளர், கலைஞர் தொலைக்காட்சித் தலைவர் ரமேஷ் பிரபா, 1930 களிலேயே மாதந்தோறும் ரூ 200 நட்டத்தில் இயங்கிவந்த விடுதலையைக் காப்பாற்ற பெரியார் அவர்கள் மேற்கொண்ட முயற்சியையும்,அதற்காக சர் ஆர்.கே.சண்முகம் அவர்களிடம் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை இருந்ததையும் சுட்டிக் காட்டினார். அந்த அளவுக்கு பெரியாராலேயே நடத்த முடியாத விடுதலை நாளேட்டை தான் பொறுப்பேற்ற 50 ஆண்டுகளாக இடைவிடாமல் ஆசிரியர் அவர்கள் விடுதலை நாளேட்டை நடத்துவதே மாபெரும் சாதனை என்றார்.தமிழர்களில் குறிப்பிடத்தக்க ஆங்கில ஊடகவியலாளரான ஏ.எஸ்.பன்னீர் செல்வம், இந்துத்துவாவின் தாக்கம் பற்றியும்,மண்டல் அறிக்கை அமலாக்கமும்,அதன் விளைவுகள் பற்றியும் நல்ல தெளிவைக் கொடுத்தது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான் என்று நன்றியுடன் வெளிப்படுத்தினார். உ.பி.யிலிருந்து வருகை புரிந்திருந்த லக்னோ பல்கலைப் பேராசிரியர் ஜஸ்பால் சிங் வர்மா விடுதலை ஏடு எங்கள் மொழியில் எங்கள் மாநிலத்திற்கும் வேண்டும் என்றும்,பெரியாரின் கருத்துகள் எங்கள் மக்களுக்கும் சொல்லப்படவேண்டும் என்று தனது ஆவலை வெளியிட்டார்.அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன், சுயமரியாதை, மனித நேயம், சமூக நீதிக்குப் போராடும் ஆசிரியரைப் பாராட்டி 1980 களில் அன்றைய பொதுவுடைமை ரஷ்யாவிற்கு ஆசிரியருடன் பயணம் சென்றதை நினைவு கூர்ந்தார்.அங்கு தெருக் கூட்டும் தொழிலாளிகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுங்கள் என்று கேட்டுக்கொண்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மனிதநேய உணர்வினை உள்ளம் சிலிர்க்கக் கூறியபோது அரங்கம் கையொலி எழுப்பியது.
விழாத்தலைமையேற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உரை முத்திரை உரையாக அமைந்தது. “இன்று நடைபெறுகின்ற இந்த விழா உங்களுக்கெல்லாம் என்ன உணர்வை ஊட்டியிருக்கிறதோ; அந்த உணர்வைவிட ஒரு படி மேலாக ஏன் ஆயிரம் படிகள் மேலாக எனக்கு உணர்வை ஊட்டி யிருக்கின்ற விழாவாகும். `விடுதலை, `குடியரசு, `பகுத்தறிவு என்றெல்லாம் ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்த அந்தக் காலம் தொட்டு இன்று அந்த ஏடுகளுடைய பயனை அனுபவித்துக் கொண்டி ருக்கின்ற இந்தக் காலம் வரையில் இந்த ஏடுகள் எவ்வளவு சங்கடங்களுக் கிடையே, இடர்ப்பாடு களுக்கிடையே வெளிவருகின் றன, வெளிவந்தன என்பதை நினைவு கூர்ந்திடுவது தான், யாரை இன்றைக்கு நாம் பாராட்டுகிறோமோ, யாருக்கு வாழ்த்து வழங்குகிறோமோ அதற்கு உரிய பயனை தரக்கூடிய ஒன்றாக அமையும்,என்று குறிப்பிட்ட கலைஞர்,“என் வீடு இது; என் வீட்டிற்குள்ளேயே வந்து என்னுடைய தம்பியை – என்னுடைய ஆருயிர் இளவலை நான் பாராட்டுகிற நேரத்தில், என்ன உணர்வு எனக்கும், பாராட்டப்படுகின்ற வருக்கும் ஏற்படுமோ அந்த உணர்வில் இம்மியும் குறைவில்லாமல் இன்றைய தினம் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை துடிக்கின்ற எங்களது இதயங்களைக் கேட்டால் அது சொல்லும்.
விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்றைக்கு பத்திரிகை உலகத்தில் திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுகின்ற – திராவிட இயக்கத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இரண்டு மாபெரும் சக்திகளாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணருவார்கள். நான் விடுதலையிலே நம்முடைய இளவல் வீரமணி அவர்களைப் போல 50 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தவன் என்று மார்தட்டிக் கொள்கின்ற அந்தப் பெருமையை பெறாவிட்டாலும்கூட, விடுதலை பத்திரிகையை தினந்தோறும் படிக்கின்ற ஒருவன் நான்.அதைப் படித்த பிறகு தான் அடுத்த பத்திரிகையை எடுப்பது என்கின்ற வழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவன் நான் என்று பெருமிதம் பொங்க தன் மன உணர்வுகளை வெளிப்படுத்திய கலைஞர் அவர்கள், “நம்முடைய சமுதாயத்தை சீரழிக்கின்ற உயர் ஜாதியின ருடைய ஆணவங்கள், அட்டகா சங்கள், அவர்களுடைய நிதானமற்றப் போக்குகள், அவர்களுடைய நெறியை நம்முடைய நெறியோடு கலப்பதற்கு நடத்துகின்ற நரித் தந்திரங்கள் இவை களையும், அதே நேரத்தில் நம்முடைய ஏடுகளின் மூலமாகச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின் றோம். அதை முரசொலி முடிந்த வரை செய்யும்.விடுதலை நிச்சயமாக எப்போதும் செய்யும்.எடுத்த எடுப்பிலேயே சனாதனத்தை, மதத்தை, மதவெறியை, மடாதிபதிகளின் கொட் டத்தை இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி, அவைகளையெல்லாம் அடையாளம் காட்டி எச்சரித்த, எச்சரித்துக் கொண்டிருக்கின்ற புரட்சி ஏடுதான் விடுதலை இதழ் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
இந்தப் பேரியக்கம் இன்றைக்கும் மற்றவர்கள் பார்த்து அஞ்சுகின்ற அளவிற்கு நடை போடுகிறது என்றால், காட்சி அளிக்கிறது என்றால், பெரியார் இல்லா விட்டாலும் என்னுடைய இளவல் வீரமணியைப் போன்றவர்கள் (கைதட்டல்) இருக்கின்ற காரணத் தினாலேதான். பெரியார் விட்டுச் சென்ற எந்த உடை மைகளையும், கொள்கை உட்பட எதையும் காப் பாற்றுவதற்கு திறன் உடையவர் யார்? யார்? யார்? என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில் வீரமணியார்! வீரமணியார்! வீரமணியார்! என்பது தான்,என்று உணர்வு மேலிட பாராட்டிய கலைஞரின் கருத்தை கூடியிருந்த பல்லாயிரவரும் கையொலி எழுப்பி ஆமோதித்தனர்.
நிறைவாக ஏற்புரையாற்றிய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,“தமிழகத்தில் விடுதலை, முரசொலி ஆகிய இரண்டு ஏடுகள் எதிர்நீச்சலில் வளர்ந்தவை. இவை செய்தித்தாள்கள் அல்ல. விழுந்த இனத்தை எழுந்து நிற்க கூடிய துணிச்சலை கொடுக்கக்கூடிய ஏடுகள்.
பத்திரிகை மூலம் மிகப்பெரிய புரட்சி செய்தார் தந்தை பெரியார். எனக்கு அவர் கிடைத்தார். அவரது கொள்கைகள் கிடைத்தன. அவரது தத்துவத்தால் நான் மனிதன் ஆனேன். என்னைப் போல மற்றவர்களும் ஆக வேண்டும் என்று பாடுபடுகிறேன். பத்திரிகை சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும், உண்மையை எடுத்துச்சொல்வ தாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார். தந்தை பெரியார் ஒப்படைத்த பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எங்களுக்கு அன்று பெரியார் இருந்தார். இன்று எங்கள் மூத்த சகோதரராக கலைஞர்இருக்கிறார்.
நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை பத்திரிகை. சமுதாய எழுச்சிக்கு எங்கள் பயணம் தொடரும். தந்தை பெரியாரின் கொள்கைகள், லட்சியங்கள், திராவிட இயக்கத்தின் வெற்றி தொடரும். ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், இனத்தின் மீட்சிக்கு விடுதலை பத்திரிகை போர் வாளாகவும், கேடயமாகவும் எப்போதும் துணை நிற்கும், எனச் சூளுரைத்தார். உலகப் பத்திரிகை வரலாறு இதுவரை கண்டிராத இந்தச் சாதனைக்கு மகுடம் சூட்டிய விழாவாக மட்டுமல்லாமல், பெரியாரின் கொள்கை வெற்றியில் இன்னுமொரு மைல் கல்லாகவும் ஆகஸ்ட் 25 அமைந்து வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுவிட்டது.
தொகுப்பு: பெரியாரிடி