‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதிக்காகப் போராடிய புரட்சித் துறவி!- கி.வீரமணி

2024 ஜுலை 16-31

11.7.2024 அன்று மஹாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது நூற்றாண்டு தொடங்குகிறது.
அவர் குன்றக்குடி திருமடத்தின் ஆதீனகர்த்தர்!

தனித்தன்மையுடன் குன்றக்குடி ஆதீனத்தின் பொற்காலத்தை உருவாக்கிய புதுமைப் புரட்சியாளர்!
மதம், சொர்க்கம் போகும் மார்க்கமல்ல; மாறாக, மனிதகுலத்தைச் சீர் செய்ய, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியை வற்புறுத்த ஒரு வழி என்பது புரட்சித் துறவியான அவரது தத்துவம்!

துறவுத் துறையில் இருட்டை வெளிச்சமாக்கி, எல்லோரையும் இன்ப வாழ்வு வாழ தனது இறுதி மூச்சுவரை உழைத்த போற்றுதலுக்குரிய எம்பெருமான்!

தந்தை பெரியார் அவர்களுக்கு சமயத் துறையில் கிடைத்த ஒரு பகுத்தறிவு – சமதர்மப் புதையல்!
பெரியார் என்ற கலங்கரை வெளிச்சத்தின்படியே தனது கடல் பயணத்தை, சுழன்றடித்த சூறாவளிக்கும் இடையே – சுயமரியாதையுடன் தனது மதக் கப்பலை ஓட்டிய அறிவின் ஊற்று!
‘‘சொலன் வல்லார்; சோர்விலாத” தொண்டறம் புரிந்து சாதனைச் சிகரமேறிய சீரார் அவர்!
அய்யா, அம்மாவிடம் அவர் காட்டிய மரியாதை கலந்த அன்பு அடைக்கும்தாழ் இல்லாதது!

குன்றக்குடி அடிகளாரின் பெட்டிச் செய்தி!

1971 தேர்தலில் அரசியல் குழப்பப்பட்டது- திட்டமிட்டே. அப்போது நான்கு வரிகளில் தி.மு.க.வை வெற்றி பெற வைக்கவேண்டிய அவசியம்பற்றி ஒரு பெட்டிச் செய்தி அறிக்கை:

‘‘எது வேண்டும்?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
– இது உண்மைச் சமயம்
இன்று ‘‘ஆஸ்திகம்” என்பது உயர் ஜாதியினரின் நலம்.
இன்று ‘‘நாஸ்திகம்” என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.
உங்களுக்கு இதில் எது வேண்டும்?”

– ‘விடுதலை’, 18.2.1971

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும், மார்க்சியத்தின் பொதுவுடைமை இயக்கத்திற்கும் துணை நின்று மேடைகளில் முழங்கிய பெருஞ்சொற்கோ அவர்!

அறிஞர் அண்ணா, செம்மொழிச் சிற்பி கலைஞர் மற்றும் அனைத்து முற்போக்கு இயக்கத் தலைவர்களையும் வற்றாத அன்பினால் வளைத்தவர்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு ஆதரவு தந்தவர்; மதக்கலவரம், ஜாதி ஒழிப்பு, ஹிந்தித் திணிப்பு சமரில் களங்கண்ட அறப்போர் தளபதி!

நம்மை ஒரு ‘செல்லப்பிள்ளை’யாகவே வரித்து
வாழ்ந்து, கட்டி அணைத்த ஒரு மூத்த முதிர்ச்சியாளர்!

சென்னை பெரியார் திடலில் ‘விடுதலை‘ப் பணிமனையைத் திறந்து வைத்தவர் (31.10.1965).
‘தமிழர் இல்லம்‘ என்பதற்கு அடையாளம் ‘விடுதலை‘ ஏடே என்ற முத்தான இனமான முத்திரை வரிகளை ‘விடுதலை‘ப் பணிமனை திறப்பு விழாவில் பொறித்தவர்!

தமக்குப் பிறகு தமது தொண்டறம், தமிழ்த் தொண்டு தனித்தன்மையுடன் நடக்க தவத்திரு பொன்னம்பல அடிகளார் என்ற தமிழ் நாற்றை நற்பயிராக்கிச் செழிக்க வைத்த செம்மையும், செறிவும், முன்னோக்கும் படைத்தவர்!
காரைக்குடியில் நூற்றாண்டு விழா!

அவரது நூற்றாண்டினை திராவிடர் கழகம் தனியே ஒரு பெருவிழாவாக – திருவிழாவாக – காரைக்குடி மாநகரில் ஆகஸ்டில் நடத்தி நன்றி தெரிவிக்கும்!

வாழ்க நம் மஹாசந்நிதானம் தவத்திரு அடிகளார்!
எழுக அவர் காண விரும்பிய புதுமைச் சமுதாயம்!!

-‘விடுதலை’, 11.7.2024