பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்களும் பலன்களும்

சிறந்த நூல்களிலிருந்து சில பக்கங்கள் ஜுலை1-15-2024

 

தந்தை பெரியார் எந்தப் பொருளாயினும் அதன் சாதக, பாதகங்கள் என அடிமட்டம் ஆணிவேர் வரை சென்று ஆய்வு செய்தவர். போராட்டங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என நடத்தியவர் அல்லர். தந்தை பெரியார் பங்கு கொண்டு தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் எல்லாம் சமூகநீதிக்கான, ஜாதி ஒழிப்புக்கான, தீண்டாமை ஒழிய, மனித உரிமையை நிலைநாட்ட, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து என நடத்தப்பட்டவை. அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க மானுட சமுதாய சிக்கல்களை ஈரோட்டுக் கண்ணாடி என்பாரே தமிழர் தலைவர் அந்தக் கண் கொண்டு பார்த்து மேற்கொண்டவை.

“மாந்தன் மாந்தனாக இருக்க வேண்டும். மக்களிடையே எந்த உருவத்திலும், வடிவத்திலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவக்கூடாது, மக்களிடத்தில் சமவாய்ப்பும், சமபங்கும், சமஉரிமையும், சம நுகர்ச்சியும் இருக்க வேண்டும்” எனும் குறிக்கோளைக் கைக்கொண்டவர் அவர். அந்தக் குறிக்கோள்களைக் கோட்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதனையும் கொள்ளலாம், தள்ளலாம் என்றவர். இந்த அடிப்படையில் நடத்தப்பட்டவைதான் தந்தை பெரியாரின் போராட்டங்கள்.

தந்தை பெரியாரின் 95 ஆண்டுகாலத்தில் 16 பெரும் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார். அவற்றை மூன்று பிரிவுகளாகப் பகுக்கலாம். காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த 1925 வரையிலான காலம், நீதிக்கட்சித் தலைவராக விளங்கிய 1938-1944 வரையிலான காலம், மூன்றாவது திராவிடர் கழகத் தலைவராக விளங்கிய 1944 முதல் 1973இல் அவர் மறையும் வரையிலான காலம்.

தந்தை பெரியார் 1924ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரை – அதாவது தமது இறப்பு வரை- மனித உரிமைகளுக்காகப் பல்வேறு கிளர்ச்சிகள் செய்தார். குறிப்பாக கல்வி, வேலை, இடஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, தமிழ்மொழி, தனிநாடு, இந்தி எதிர்ப்பு, வழிபாட்டு உரிமை எனச் சமூகநீதிக்காக, மானுட உரிமைக்காகப் போராடினார்.

அதன் விளைவாகப் பல்வேறு நன்மைகளை இன்றும் பெற்று வருகின்றனர் நமது சமூக மக்கள். அவற்றைப் பின்வருமாறு அறிந்துகொள்ளலாம். பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்கள் (காலவரிசையில்) பெரியார் 1920ஆம் ஆண்டு தமது 29 கவுரவப் பதவிகளை விட்டு விலகினார். காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டார். 1920 நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன் வைத்தார்.

1921ஆம் ஆண்டு ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலைத் தலைமைதாங்கி நடத்தினார். காந்தியின் நிர்மாணத் திட்டத்தை மேற்கொண்டு தாதம்பட்டியிலிருந்த தமது தோட்டத்தில் தென்னை மரங்கள் அய்ந்நூறுக்கும் மேற்பட்டவற்றை வெட்டினார். தீவிரக் கதர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாம் கதர் மூட்டையைத் தூக்கிச் சுமந்து விற்றதும் குடும்பத்தினர் அனைவரையும் கதர் உடுத்தச் செய்ததும் குறிப்பிடத்தக்கன. 1921ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு சென்றார்.

1922ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போரில் ஈடுபட்டுக் கோவைச் சிறையில் காவல் வைக்கப்பட்டார். ‘குடிஅரசு’ இதழ் தொடங்கச் சிறையிலேயே திட்டமிட்டார். 1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டு சென்றார். அங்கேயே மநுதர்ம சாஸ்திரத்தையும், இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என முழங்கினார். 1923இல் மதுரை, திருச்சி, சேலம் காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்திய நாட்டில் நடந்த முதல் மனித உரிமைப் போராட்டம் என்று குறிப்பிடும் அளவுக்கு மனித உரிமைப் போராட்டத்தின் உச்சமாக 1924இல் நடந்தது வைக்கம் போராட்டம் ஆகும். பெரியார் காங்கிரசு இயக்கத்தில் இருந்தபோதே அவர் இப்போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நாட்டில் எதன் பேராலும் மனித உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதில் பெரியார் குறியாக இருந்தார்.

கேரளாவில் உள்ள வைக்கம் என்னும் ஊரில் வைக்கத்தப்பன் (மகாதேவர் ஆலயம்) கோயிலைச் சுற்றியுள்ள பிரதான நான்கு வீதிகளிலும் ஈழவர், புலையர் எனும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நடமாடக்கூடாது எனும் ஜாதியக் கொடுமை நிலவியது. முக்கிய அரசு அலுவலகங்கள் இருந்தது அவ்வீதிகளில்தான். அங்கே நடமாட உரிமை மறுக்கப்பட்டது. உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து ஜார்ஜ் ஜோசப், கே.பி. கேசவமேனன் முதலிய கேரளத் தலைவர்கள் போராடிச் சிறை சென்ற நிலையில் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. வைக்கம் சென்று போராடி மறுக்கப்பட்ட மனித உரிமையைப் பெற்றுக் கொடுத்தார். ‘வைக்கம் வீரர்’ என்று போற்றவும்பட்டார்.

1924 திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தார். நீதிக்கட்சி ஆட்சியின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்தார்.

2.5.1925இல் ‘குடிஅரசு’ வார இதழை ஈரோட்டில் துவக்கினார். காஞ்சிபுரம் மாநாட்டில் (25.11.1925) வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். அது ஏற்கப்படாததால் மாநாட்டுப் பந்தலிலேயே ‘இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை’ எனச் சூளுரைத்து, காங்கிரசிலிருந்து நண்பர்களுடன் வெளியேறினார். அப்போது பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராக இருந்தார்.

1926ஆம் ஆண்டு பெரியார் இந்திக் கொள்கையைக் கண்டித்து எழுதினார். மதுரையில் பார்ப்பனர் அல்லாத
தார் முதல் மாகாண மாநாட்டைக் கூட்டினார்.

1927ஆம் ஆண்டு காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களைக் கண்டிக்கலானார். பெங்களூரில் காந்தியைச் சந்தித்துத் தம் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையின் (சுயமரியாதைக் கொள்கை) நியாயத்தை விளக்கினார். நாகை இரயில்வே தொழிலாளர் கிளர்ச்சியில் சிறைப்பட்டார். சைமன் கமிஷனை வரவேற்கக் கோரினார். ‘திராவிடன்’ தினசரி இதழின் ஆசிரியரானார். ஜூலையில் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் ஏ. இராமசாமி முதலியாரால் ‘தமிழ்நாட்டின் ரூசோ’ என அழைக்கப்பட்டார்.

திருக்குறள் கொள்கைகளைக் ‘குடிஅரசு’ மூலம் பரப்பினார். 1927இல் தம் பெயருக்குப் பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற ஜாதிப் பெயர் போடுவதைக் கைவிடும்படி தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். 1929இல் செங்கல்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டைக் கூட்டினார். புரட்சிகரத் தீர்மானங்களை நிறைவேற்றினார்.

1930ஆம் ஆண்டு மலேயா சுற்றுப்பயணம் முடித்து ஜனவரி 11ஆம் தேதி புறப்பட்டு, 16ஆம் தேதி நாகை சேர்ந்தார். அப்பயண நாள்களில் தாடி வளர்க்க நேர்ந்தது. நாடெங்கும் உண்மை நாடுவோர் சங்கம், தாராள சிந்தனையாளர் கழகம், பகுத்தறிவாளர் சங்கம் எனத் துவக்கினார்.

1930இல் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடத்தினார். காந்தியின் நிர்மாணத் திட்டங்களைப் புறக்கணித்தார். சமதர்ம அறிக்கையை (Communist Manifesto) ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.

1931ஆம் ஆண்டு விருதுநகரில் மாகாண மூன்றாவது சுயமரியாதை மாநாடு நடத்தினார். நாடெங்கும் சமதர்மச் சங்கங்கள் நிறுவத் தலைப்பட்டார்.

1932ஆம் ஆண்டு எகிப்து, ரஷ்யா, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுகல், இங்கிலாந்து, இலங்கை முதலான அயல்நாடுகளில் பதினொரு மாதங்கள் பயணம் செய்து, நவம்பர் 11ஆம் தேதி ஈரோடு திரும்பி, ‘தோழர்’ என அழையுங்கள் என வேண்டி. டிசம்பரில் ‘சமதர்மத் திட்டம்’ தீட்டினார். வேறுபாடற்ற சமுதாயம் காண முனைந்து பிரச்சாரம் செய்யலானார்.

1933ஆம் ஆண்டில் ‘புரட்சி’ வார ஏட்டைத் துவக்கித் தீவிர சமதர்மப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதற்காக டிசம்பரில் தண்டிக்கப் பட்டுச் சிறை வைக்கப்பட்டார்.

1934ஆம் ஆண்டு சமதர்ம வேலைத் திட்டத்தைக் காங்கிரசுக்கும் நீதிக்கட்சிக்கும் அனுப்பினார். கடனுக்குச் சிறை பிடிக்கும் சட்டத்தை எதிர்த்துச் சிறை சென்றார்.

இந்தி எதிர்ப்பு

1938ஆம் ஆண்டு இரயில்வே நிலையங்களிலுள்ள உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ ’இதராள்’ சாப்பிடுமிடம் என்றிருந்த இழிவை ஒழித்தார். ஆச்சாரியார் திணித்த கட்டாய இந்தியை எதிர்த்தார். காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டி கிளர்ச்சித் திட்டம் வகுத்தார். கிளர்ச்சியில் 1269 பேர் சிறை சென்றனர். இந்தியை எதிர்த்து, ஆகஸ்டில் தமிழர் பெரும்படை சென்னை நோக்கி அணிவகுத்துச் சென்று, 11.9.1938இல் திருவல்லிக்கேணிக் கடற்கரையை அடைந்தது. அங்கு முதன்முதலாக, ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ எனக் குரல் கொடுத்தார் பெரியார்.

‘பெரியார்’ என்ற சொல்லால் எப்போதும் அவரைக் குறிப்பிட வேண்டுமெனத் ‘தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு’ அறிவித்தது. கிளர்ச்சியின் விளைவாக இரண்டு ஆண்டு தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போதே 29.12.1938இல் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பார்ப்பனர் (பிராமணர்) சூத்திரர் எனும் பேதநிலையையும் தமிழ் நீசமொழி எனும் இழிதகைமையையும் ஒழித்து மொழி உரிமை பேணப்படவும், இனநலம் பாதுகாக்கப்படவும் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய பங்கு பணி மனித உரிமை எனும் தடத்தில் மகத்தான பங்களிப்பு எனலாம்.

1939ஆம் ஆண்டு சிறையிலிருந்து பெரியார் மீண்டார். ஸ்டாபோர்ட் கிரிப்ஸைச் சந்தித்து திராவிட நாடு பிரிவினையை விளக்கி வலியுறுத்தினார்.

1940ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி மும்பையில் முகமதலி ஜின்னாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்து, தமது தனிநாடு பிரிவினைத் தத்துவத்தை விளக்கினார். அப்போது அம்பேத்கரும் உடனிருந்தார். திருவாரூர் மாநாட்டில் திராவிட நாடு பிரிவினையை விளக்கினார். ஏப்ரலில் தலைமை ஆளுநரும், ராஜாஜியும் நேரில் வேண்டியும் முதல் மந்திரி பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

1944ஆம் ஆண்டு சேலத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி கூடிய நீதிக்கட்சி மாநாட்டுக்குத் தலைமையேற்று ‘ஜஸ்டிஸ் கட்சி தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற பெயரை அண்ணாவின் மூலமாக அதற்குரிய தீர்மானம் கொண்டுவரச் செய்து ‘திராவிடர் கழகம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றினார்.

திருச்சியில் இந்து மகாசபைத் தலைவர் மூஞ்சேயைச் சந்தித்தார். டிசம்பர் 27ஆம் தேதி கலகத்தாவில் எம்.என்.ராயின் ரேடிகல் டெமாக்ரடிக் கட்சி மாநாட்டுக்கும் 29-31 தேதிகளில் கான்பூரில் நடைபெற்ற ’பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோர்’ மாநாடுகளுக்கும் சென்று அறிவுரை வழங்கினார். இது வடபுலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வழியமைத்தது.
1946ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாடு நடந்தது. பார்ப்பனர் தூண்டுதலால் மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டு, தோழர்கள் தாக்கப்பட்டனர். கொதித்தெழுந்த கருஞ்சட்டையினரைப் பெரியார் அமைதிப்படுத்தினார். திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்ததால் அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்ட முறையை வன்மையாக எதிர்த்தார்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய தேசத்தின் சுதந்திர நாள் என உலகமே கூறியபோது’ ‘ஆகஸ்ட் 15ஆம் தேதி திராவிடருக்குத் துக்கநாள்’ எனத் தெளிவாக அறிவித்தார். வடநாட்டார் ஆளுநராக நியமிக்கப்படுவதை எதிர்த்துக் கருப்புக் கொடி காட்டச் செய்தார்.

கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாடு கூட்டி, அனைத்து திராவிடருக்கும் நாட்டுப் பிரிவினை உணர்ச்சியை ஊட்டினார். ‘ஜூலை 1ஆம் தேதி திராவிட நாடு பிரிவினை நாள்’ என நாடெங்கும் கொண்டாடச் செய்தார். வடபுலத்தாரால் தென்னாட்டவர் ஒடுக்கப்படுவதை எதிர்த்தே இந்த நிலையினைப் பெரியார் மேற்கொண்டார்.

1948ஆம் ஆண்டு கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து அனைத்துத் தலைவர்களையும் அழைத்து ஜூலை மாதம் 17ஆம் தேதி சென்னையில் மாநாடு நடத்தினார். இந்தியை எதிர்த்துப் பேச்சுரிமையை நிலைநாட்ட 144 தடையை மீறிக் குடந்தையில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். தலைமை ஆளுநராக சி. ராஜகோபாலாச்சாரியார் சென்னைக்கு வந்தபோது அவரைக்

கண்டித்தமைக்காகக் கழக தோழர்களுடன் சிறைப்பட்டார். மே 8, 9ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் மாபெரும் மாகாண திராவிடர் கழக மாநாடு நடத்தினார்.

1949ஆம் ஆண்டு திருக்குறள் மாநாடு நடத்திப் பாமரர்க்கும் அந்நூலை அறிமுகப்படுத்தினார். அண்ணா கழகத்திலிருந்து பிரிந்து ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற தனி அமைப்பை ஏற்படுத்தினார். அரசியல் சட்டம்நிறைவேற்றப்பட்டதனை வன்மையாக எதிர்த்தார்.பெரியார் உடுமலைப்பேட்டையில் 144 தடையுத் தரவை மீறிக் கைதானார்.
1950ஆம் ஆண்டு 26ஆம் தேதி குடியரசுநாள் என்பதைத் துக்க நாளாகக் கொண்டாடக் கோரினார்.

‘பொன் மொழிகள்’ என்ற நூலுக்காக 6 மாதம் சிறைத் தண்டனை ஏற்றார். வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்க்கவும், கைத்தறியாளர் துயர் துடைக்கவும், வடநாட்டார் துணிக்கடை, உணவுக்கடை முன் மறியல் நடத்தி இன உணர்வூட்டினார். வகுப்புரிமை ஆணை செல்லாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதி மன்றமும் அளித்த தீர்ப்புகளை எதிர்த்துப் பார்ப்பனரல்லாத தலைவர்களை அழைத்துத் திருச்சியில் 1950 டிசம்பர் 3ஆம் தேதி ‘வகுப்புரிமை மாநாடு’ நடத்தினார். ‘அரசியல் சட்டம் ஒழிக!’ என நாடெங்கும் முழங்கச் செய்தார். மத்திய அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி பிடித்து எதிர்ப்பைத் தெரிவிக்கத் தீர்மானித்தார்.

1951ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தை வகுப்புரிமை வழங்கும் வகையில் திருத்தக் கோரினார். அச்சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டில் 1951ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதன் 15ஆவது விதியில் புதிதாக 4ஆவது உட்பிரிவு சேர்க்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வகுப்புரிமைப் பாதுகாப்புக் கிடைத்திட மூலகாரணமானார்.

முதல் பொதுத்தேர்தலில் பெரியாரின் பங்கு

1952ஆம் ஆண்டு வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்து முதலாவதாக நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைய மூலகாரணமாக விளங்கினார். ‘திராவிட ஸ்தாபனங்களே வேண்டும்’ என அறிவித்து, திராவிட விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தென்பகுதி இரயில்வே மென் யூனியன் ஆகியவற்றைத் தொடங்கினார். தொழிலாளர் தம் துயர் துடைக்கப் பெரியார் மேற்கொண்ட முயற்சிகளில் இவை அடங்கும்.

1953ஆம் ஆண்டு ‘விநாயகர் உருவ பொம்மை உடைப்புக் கிளர்ச்சி நடைபெறச் செய்து உருவ வணக்கப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தினார். ஆகஸ்ட் 1ஆம் தேதி இரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் இந்தியை அழிக்கும் கிளர்ச்சியை மீண்டும் நடத்தினார். மக்களை வாட்டும் கடவுள், மத மயக்கத்தை வீழ்த்திடப் பெரியார் நடத்திய கிளர்ச்சியே பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்.

குலக்கல்வி எதிர்ப்பு

1954ஆம் ஆண்டு ஈரோட்டில் புத்தர் கொள்கை மாநாடு, குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு ஆகியவற்றை நடத்தினார்.

ராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து மக்களை நாடு முழுவதும் கொதித்தெழச் செய்தார். 1925ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வந்த காங்கிரஸ் எதிர்ப்பைத் தளர்த்தி, ஏப்ரல் 13ஆம் தேதி முதல் காமராசரை ஆதரித்தார். நாகையில் 76ஆவது பிறந்த நாளில் 76 பவுன் அளிக்கப் பெற்றார். மணியம்மையாருடன் பர்மாவிற்குச் சென்று அங்கு உலக பவுத்த மாநாட்டில் டிசம்பர் 3ஆம் தேதியில் கலந்துகொண்டார்.

மலேசியாவில் இரண்டாம் தடவையாகச் சுயமரியாதைப் பிரச்சாரம் மேற்கொண்டார். மலைநாட்டு மக்களின் வாழ்க்கைப் போக்கில் பெரும் மாற்றத்தை இப்பயணம் ஏற்படுத்தியது.

தொடரும்….