இறகென இருத்தலழகு!

கவிதைகள் ஜுலை1-15-2024

அலையலையாய்
அழகுக் குறிப்புகள்
அடித்து வரும்
வெள்ளமாக
வலையொளியில்!

ஆற்று நீரில் கலக்கும்
சேற்று நீர் போல
கூடவே அழகுக் குழப்பங்களும்!

சதா பெரும் கவலை
பெண்களுக்கு இதே!
உப்போ சர்க்கரையோ
உறைக்கும் வரை தானே!

மீறிச் சேர்த்தால்
கரிக்கும் சரி தானே?
கைப்பிடிக் கழுத்துக்கு
கை கொள்ளா நகைகளா?

பட்டுப் புடவை விலையைக் கேட்டால்
பத்துக் குடும்பங்கள் வாழலாம்
ஆட்டி வைக்கும்
அந்தஸ்து மோகம்!

தலையென்ன பூக்கூடையா
சுமந்து கொண்டே திரிய?
பின்னலைக் குறைக்காமல் வேலை
பின்னிக் கொள்கிறதே!

இன்னுமின்னும்
அலங்கரித்த மணப்பெண்ணுக்கு
அய்ந்தாறு கிலோ கூடியும் விடும்!
வாய் என்பது வயிற்றின் வாயில்

உதட்டுச் சாயம் எப்போதுமென்றால்
ஊடுருவுமே உள்ளுக்குள்ளும்!
கையில் உண்ணும் பழக்கம் நமக்கு;

நீட்டி நகம் வளர்த்தலும்
தீட்டிக் கொள்ளும் வண்ணமும்
கூட்டி விடுமே தொற்றை!
உடல் எடை தாங்கும் பாதம்
வடிவிழந்து குலைந்து போகும்!

ஏணி வைத்த காலணி ஏனோ?
உடுப்புகளில் மிடுக்கு வேண்டும் தான்
இருப்பதெல்லாம் பூட்டிக் கொண்டு
இறுக்கத்திலேயே நாமிருந்தால்…

உறுப்புகளன்றோ வதைபடும்?
என்னரும் பெண்ணினமே,
சிறகடித்து நாம் பறக்க
இறகென இருத்தல் அழகு!