மும்பை கணேசன்

2024 நேர்காணல் ஜுலை1-15-2024 ஜூலை 1-15

மும்பை கணேசன் எனப் பலராலும் அறியப்பட்டவர்! தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான தளக்காவூர் (சிவகங்கை மாவட்டம்) கிராமத்தில் இருந்து, இன்று மும்பை மாநிலத் திராவிடர் கழகத் தலைவராக உயர்ந்து நிற்பவர்! சற்றொப்ப 40 ஆண்டுகளாக இயக்கத்தில் பணியாற்றி வருகிறார்! உண்மை இதழுக்காக அவரைச் சந்தித்தோம்!

உங்கள் மும்பைப் பயணம் எப்போது தொடங்கியது?

1983 ஜூன் 2ஆம் தேதி காரைக்குடியில் இருந்து மும்பை பயணமானேன். எனது தாயாரின் அண்ணன் ஓ.சிறுவயல்

சி.பொன்னையா அவர்கள்தான் என்னை மும்பைக்கு அழைத்துச் சென்றார். அவர் காரைக்குடி கவிஞர் முடியரசன் அவர்களின் மாணவர். பெரியார் கொள்கையை நன்கு அறிந்த அவர் மூலமே, எனக்கும் அது அறிமுகமானது. மும்பையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நூல்கள் மற்றும் விடுதலை, உண்மை இதழ்களை அவர் படித்து வந்தார். அது எனக்கும் வாய்ப்பாக இருந்தது. பாடப் புத்தகம் போல நினைத்து, வரி விடாமல் படிக்கும் வழக்கம் அப்போது தான் தோன்றியது!
அதுசமயம் மும்பையில் விடுதலை ஏட்டின் முகவராக இருந்த ஏ.பி.நெல்லையா அவர்களின் மகன் ஏ.பி.என். சந்திரன் அவர்களின் நட்பு கிடைத்தது. மேலும் பல தோழர்களையும் இணைத்துக் கொண்டு, 1986ஆம் ஆண்டில், திராவிடர் கழக இளைஞரணி என்கிற அமைப்பை உருவாக்கினோம்! குணசேகரன் தலைவர்,

செயலாளர் நான், துணைச் செயலாளர் அய்.செல்வராஜ், பொருளாளர் பூலாங்குளம்
ஜெ. சுகுமாரன், அமைப்பாளராக ஏ.பி.என்.சந்திரன் ஆகியோர் பணியாற்றினோம்.

மும்பைத் திராவிடர் கழகம் குறித்தும், அதன் ஆணி வேர்கள் குறித்தும் கூறுங்கள்?

மும்பைத் திராவிடர் கழகம் 1948இல் தொடங்கப்பட்டது. பல்வேறு பொறுப்புகளில் மானமிகுவாளர்கள் மோசஸ், பொ.தொல்காப்பியன், பெ.மந்திரமூர்த்தி, ஆர்.ஏ.சுப்பையா, ஜோசப் ஜார்ஜ், என்.ஏ.சோமசுந்தரம், பம்பாய் திராவிடன், எஸ்.நெல்லையப்பா, ஏ.பி.நெல்லையா, எஸ்.எஸ்.அன்பழகன், சி.வேலாயுதம், இராவணன், நடேசன், எஸ்.பெருமாள், மாராசு, இசக்கி, ம.தயாளன், பி.இரத்தினசாமி உள்ளிட்ட பெரியார் பெருந்தொண்டர்கள் உழைத்துள்ளனர்!

மும்பையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நிகழ்ச்சியில், நீங்கள் எப்போது முதன்முதலில் கலந்து கொண்டீர்கள்?

நான் மும்பை சென்ற 1983ஆம் ஆண்டிலே தலைவரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. தாராவி பகுதியில் உள்ள, பெரியார் சதுக்கத்திற்கு அருகில், இராவ்பகதூர் என்.சிவராஜ் பூங்காவில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் பேசினார்கள். அப்போது ஆசிரியர் அவர்களின் பேச்சைக் கேட்டு, முழு உணர்வைப் பெற்றேன்!

அதேபோல அய்யா ம.தயாளன் அவர்கள் தலைவராக இருந்த போது, 1999ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் “உலக நாத்திகர்கள் மனிதநேய மாநாடு” மும்பையில் 3 நாட்கள் நடைபெற்றது. அதில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் கலந்துக் கொண்டார்கள். அதுசமயம் தமிழ்நாட்டுத் தோழர்கள் 50 பேர் பங்கேற்றனர். அந்த 3 நாட்களும் ஆசிரியர் அவர்களுடன் வாகனத்தில் பயணம் செய்ததை, என் வாழ்நாளில் மறக்க முடியாது!

இதுதவிர மும்பை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டுப் பேச்சாளர்கள் யார்?

மும்பையில் திராவிடர் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்து, ஒவ்வோர் ஆண்டும் இயக்கப் பேச்சாளர்கள் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பெரியார் காலத்தில் இருந்து சொல்வதென்றால் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், மாணவராக இருந்த காலத்தில் இருந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், டார்பிடோ ஜனார்த்தனம், கவிஞர் கலி. பூங்குன்றன், துரை.சக்கரவர்த்தி, எம்.ஏ.கிரிதரன், தஞ்சை காமராஜ், புலவர் தமிழ்மாறன், புலவர் கண்மணி தமிழரசன், பூ.சி.இளங்கோவன், மு.சங்கரலிங்கம், அ. இறையன், செல்வேந்திரன், சாமி.திராவிடமணி, சு.அறிவுக்கரசு, கு.வெ.கி.ஆசான், வழக்குரைஞர் அருள்மொழி, இரா.பெரியார்செல்வன், அதிரடி அன்பழகன், வீ.குமரேசன், பூவை.புலிகேசி, என்னாரெசு பிராட்லா, பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல தோழர் வி.சி.வில்வம் 5 முறை மும்பை வந்துள்ளார். மும்பைத் திராவிடர் கழகத்தோடு 25 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.

மும்பை திராவிடர் கழகத்தில் . என்னென்ன பொறுப்புகள் வகித்துள்ளீர்கள்?

1986இல் திராவிடர் கழக இளைஞரணி செயலாளர், 1993 – திராவிடர் கழகத் துணைச் செயலாளர், 1997 – திராவிடர் கழகச் செயலாளர், 2009 முதல் மும்பை மாநிலத் திராவிடர் கழகத் தலைவராக இருக்கிறேன்.

மும்பை இயக்க வரலாற்றில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் அவர்களின் ஒத்துழைப்போடு, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது! நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், பேராளர்களும் கலந்து கொண்டனர். மிகுந்த கொள்கை வெற்றியாகவும், மகிழ்ச்சிக்கு உரியதாகவும் அமைந்தது! இயக்கம் மற்றும் உணர்வாளர்கள் குடும்பத்தில் இருந்து அவர்களின் பிள்ளைகளை ஒருங்கிணைக்க இது ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது!
மும்பைத் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அறிவிக்கிற அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்துவிடும். பெரியார் நூற்றாண்டு விழா, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாக்கள் கூட சிறப்பாக நடந்தன. ஒவ்வோர் ஆண்டும் பெரியார் பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்! பகுத்தறிவாளர் கழக மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. மும்பையில் அனைத்து இயக்கம் மற்றும் கட்சிகளுடன் ஒற்றுமையாகச் செயல்படுவோம்!

தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விவரங்களைக் கூறவும்?

முக்கியமான மாநாடுகள், பெரியார் திடலில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளில் மும்பைத் தோழர்கள் பங்கேற்போம். 1992, பிப்ரவரி 14, 15 தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி பவளவிழா மாநாட்டில், “மும்பை திராவிடர் கழகம்” என்கிற பதாகையோடு கலந்து கொண்டோம். 5 கிலோமீட்டர் தூரம் வந்த ஊர்வலத்தில் முழக்கமிட்டு வந்தது மும்பைத் தோழர்களுக்கு எழுச்சியாக இருந்தது.

மும்பை வருவதற்கு முன்பே, எங்கள் ஊரில் நடைபெற்ற சிவபெருமாள் என்பவரின் சுயமரியாதைத் திருமணத்தில் கலந்து கொண்டேன். காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் நடத்தி வைத்தார்கள். வழக்குரைஞர் ச.இன்பலாதன், சாமி.திராவிடமணி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு அங்கு கிட்டியது.

இயக்க நாளேடு விடுதலை, உண்மை வாசிக்கிறீர்களா?

மும்பை வந்து 41 ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலை, உண்மை ஏடுகளை நான் வாசிக்காமல் இருந்ததே இல்லை. 41 ஆண்டு கால வாசகர் நான்! இன்னும் சொன்னால் விடுதலை இதழ் முகவராக இருந்த ஏ.பி.நெல்லையா அவர்கள் மூலமாக, மும்பையில் உள்ள தமிழர் இல்லங்களுக்கு உண்மை மற்றும் விடுதலை நாளிதழை விநியோகம் செய்திருக்கிறேன்.‌

அதுமட்டுமின்றி உண்மை இதழ் மற்றும் விடுதலை ஞாயிறு மலரை ‘பைண்டிங்’ செய்து பாதுகாத்து வருகிறேன். பேச்சுக்கும், எழுத்துக்கும் அதுதான் ஆதாரமாக இருந்து வருகிறது!

தங்களின் முன்னோடியாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?

மும்பை மாநிலத்தில் இயக்கம் நடத்துவது என்பது பெரிய விசயம். அனைவரின் ஒத்துழைப்போடும், மக்களின் ஆதரவோடும் செயல்பட வேண்டும். அந்த வகையில் இங்கு வாழ்ந்த அத்தனை பெரியவர்களுமே போற்றுதலுக்கு உரியவர்கள்.

மானமிகுவாளர்கள் ஆர்.ஏ.சுப்பையா, பொ.தொல்காப்பியன், பெ.மந்திரமூர்த்தி, என்.ஏ.சோமசுந்தரம், சி.என்.கிருஷ்ணன்,
மா.ராசு, இசக்கி, சி.வேலாயுதம், இராவணன், சு.நெல்லையப்பா, ஏ.பி.நெல்லையா, ம.தயாளன், பி.இரத்தினசாமி ஆகியோர் என்னை ஊக்கப்படுத்தி, எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்!

அதேபோல மும்பை நிகழ்ச்சிகளில் மாநிலச் செயலாளர் இ.அந்தோணி, துணைச் செயலாளர் ஜே. வில்சன், பொருளாளர் அ.கண்ணன், மும்பை மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், ஆய்.செல்வராஜ், பெரியார் பாலாஜி, சோ.ஆசைத்தம்பி, சோ.சவுந்திரபாண்டியன், ம.இராசசேகர், தொ.காமராஜ் உள்ளிட்ட தோழர்களின் பெரும் ஒத்துழைப்புடன் இயக்கத்தைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறோம்”, என்று மும்பை கணேசன் கூறினார்!