கூண்டுக்குள் முழிக்கும்
சிறுத்தைப் போல
அழகானது கிரிக்கெட்
எங்கள் உழைப்பிற்குள் மட்டும்
பந்து வீசுபவர்களைவிட
திறமையாக வீசினோம்
கரையில் குவிந்தது
கடல்மீன் கூட்டம்
சதம் அடிப்பவர்களைவிட
திறமையாக அடித்தோம்
வண்ண ஆடைகளைக் கட்டிக்கொண்டு
உலகம் வெட்கப்பட்டது
பந்தை விழுந்து பிடிப்பவர்களைவிட
திறமையாகப் பிடித்தோம்
செங்கல் கூட்டமும்
தட்டு சிமெண்ட்டும்
கட்டடங்களாக மின்னின
உங்கள் கிரிக்கெட் ரவுடி
மக்கள் மூளைக்குள்
கஞ்சா கசக்குகிறது
எங்கள் பையிலிருந்து
லட்சங்களையும் கோடிகளையும்
திருடுகிறது
எங்கள் தலையில்
சந்து பொந்து சண்டைகளை
வாந்தி எடுக்கிறது
எங்கள் வாழ்விற்காக
ஏமாற்றங்களைத் தவிற
ஏதேனும் சாதித்ததா! உழைக்கும் மலர்களுக்கு வண்ணமாகுமா?
கற்பனை மனங்களுக்கு காவியமாகுமா?
மண்ணின் வியர்வைக்கு பசுமையாகுமா?
உள்ளன்போடு ஒரே ஒரு முத்தமிடுமா?…
விளையாட்டு எங்களுக்கு விருந்தல்ல
விருந்தும்! மருந்தும்!
உங்கள் வெளுத்துப்போன அழகில்
புளுத்துப் போனது எங்கள் மூளை!
உள்ளே நிரம்புகிறது
உண்மைப் பேரொளி
அணையை உடைத்து
வெள்ளம் போல வெளிவரும்!
நேரம் நெருங்கிவிட்டது
விளம்பரக் குப்பைகளே
மூலதனப் பொறுக்கிகளே
உங்கள் சவக்குழிகளை
தயார் செய்யுங்கள்.
– புதியவன்