கல்விக்கண் திறந்தவரே காமராசர்!
கற்காத மேதையிவர்; கரும வீரர்;
எல்லார்க்கும் இலவசமாய்க் கல்வி தந்தார்!
இந்நாட்டின் மேன்மைக்கே உழைத்து வந்தார்!
பண்பாளர் மூன்றுமுறை முதல்வர் ஆனார்!
பகலுணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்!
ஒன்பதாண்டுச் சிறையினிலே கழித்தார்! நாட்டின்
ஒப்பற்ற விடுதலைக்கே பாடு பட்டார்!
அணைக்கட்டுப் பற்பலவும் அமைக்க லானார்
அனைவரது பாராட்டும் புகழும் பெற்றார்
இணக்கமுற வேளாண்மைத் தொழிலுக் காக
ஏற்புடைய நீர்வளத்தைப் பெருக்க லானார்!
எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக் காட்டாய்
என்றென்றும் திகழ்ந்தவரே காம ராசர்!
ஒளிமிகவே இந்நாட்டைக் கட்ட மைக்க
ஒப்புவித்தார் வாழ்நாளை! உணர்வோம் நாமே!