தமிழ்ப் பண்டிதர்களே,
வணக்கம்.
இன்று பெரியார் அவர்கள் தொடுத்துள்ளது புராண இதிகாசப் போரைக் கண்டு தமிழ்க்கலை அழியலாமா? தமிழிலக்கியம், மறையலாமா?என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றீர்கள். தமிழ்க் கலையை – தமிழிலக்கியத்தை இழந்துவிட, தமிழர் நலத்திற் கருத்திழந்தாரேயன்றி, மற்றையோர் எப்படி ஒப்ப முடியும்? பெரியார் கூட்டத்தார், தமிழர் நலத்தில் கருத்திழந்தவர் என்று யாராவது சொல்ல முடியுமா?
தமிழர் முன்னேற்றத்திற்கென அல்லும் பகலும் ஓயாது உழைக்கும் ஒரு கூட்டத்தினர், தமிழ்க்கலைகளை ஒழிக்க முனைகின்றனர் என்றால், அது வியப்பாகவன்றோ இருக்கிறது! தமிழ்க்கலைகளை ஒழிக்க எங்களுக்கென்ன பயித்தியமா? தமிழர் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளவைகளைத் தமிழ்க்கலை என்பது எவ்வாறு பொருந்தும்? என்று அவர்கள் கேட்கின்றார்கள். ஆம் உண்மையே. தமிழர்க்குத் தமிழ்க் கலை என்பது சந்தேகமறத் தெரியாவிட்டால், அவற்றைக் காக்கவோ, அவசியம் நேரின் அவற்றிற்கென உயிர் கொடுக்கவோ எப்படி முடியும்? எனக்கும் அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்ததால் இதை எழுத முன்வந்தேன். ஆகையால் கீழ்க்காணும் என் ஐயங்கட்குத் தக்க விடை யளிப்பீரானால், என் போன்ற சந்தேகிகட்கும் தாங்கள் பேருபகாரம் செய்தவராவீர்கள். அதோடு மட்டுமன்று, உங்கள் சிரமம் குறைய, உங்கட்காக நாங்களும் வாதாடுவோம். ஆதலால், இவ் ஐயங்களை அநாவசியமானது! குதர்க்கமானது! என அலட்சியப் படுத்திவிடாமல், பதில் தர வேண்டுகிறேன்.
1. நாம் தமிழர்களென ஒப்புக்கொள்ளுகின்றோம்; தமிழர்க்குரிய கலைகள் யாவை?
2. தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களுந்தான் தமிழ்க் கலைகளா? அல்லது அவற்றிற்குப் பின்தோன்றிய காப்பியங்கள், புராண இதிகாசங்கள் முதலியவைகளும் தமிழ்க்கலைகளா?
3. தமிழ்க்கலைகளின் லட்சணங்கள் என்ன? அவை தமிழர்க்குப் போதிக்கும் நெறி யாவை?
4. தமிழர்க்கு அறிவைப் போதித்துத், தன்மானத்தையூட்டி, முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்கள் என்னென்ன உண்டு?
5. தமிழர்தம் கலைகளில், ஆரியத்தை உயர்வென ஒப்பாத நூல்களோ, அவர்தம் கொள்கைகளைப் புகுத்தாதோ நூல்களோ ஏதேனும் உண்டா? உண்டெனில் அவை யாவை?
6. தொல்காப்பியம் ஓர் ஆரியரால் எழுதப்பட்டதென்று சொல்வதை நீங்கள் ஒப்புகிறீர்களா? அதில் ஆரியத்திற்கு ஆதரவும் உயர்வும் அளிக்கப்பட்டிருக்கிற தென்பதை, நீங்கள் மறுக்க முடியுமா?
7. சங்க இலக்கியங்கள் பலவற்றில், ஆரிய கொள்கைகள் புகுத்தப்பட்டிருக்கவில்லையா? தமிழ்க்கலைகளில் ஆரியத்திற்கு இடமிருக்கலாமா? அவற்றைப்போக்க நீங்கள் ஏதேனும் முயற்சி செய்ததுண்டா? முயல்வீர்களா?
8. தமிழ் எழுத்துடைய நூல்கள் – தமிழரால் எழுதப்பட்ட நூல்கள் யாவும் தமிழ்க்கலைகளாகுமா? ஷேக்ஸ்பியர் நாடகத்தை ஒரு தமிழர் தமிழில் மொழிபெயர்த்தால், அது தமிழ்க்கலையாகுமா? அதேபோல், கிறிஸ்து – இஸ்லாம் ஆகிய பிறமதக் கொள்கைகளைத் தமிழில் மொழிபெயர்த்தால், அவை தமிழர் தம் மதமாகுமா? இலக்கியமாகுமா? இல்லையெனில், ஆரியமதக் கொள்கைகளையும் உணர்த்தக்கூடியதும் அதனோடு தமிழரை இழித்தும் பழித்தும் கூறக்கூடியதுமான புராண இதிகாசங்களைத் தமிழ்க்கலைகள் என்னலாமா? அவை இந்த முறையில் எழுதப்பட்டவையன்று என்பதையாவது நிரூபிக்க முடியுமா?
9. தமிழர்க்குக் கொள்கை என்ன? சைவமும் வைணவமும் சாதியாச்சாரமுந்தானா? அவற்றிற்கு ஆதாரம் என்ன? அவற்றைப் பற்றிய கொள்கைகளை வலியுறுத்தும் நூற்கள், தமிழர்க்குக் கலைகளாகுமா?
10. தமிழரை இழிவுபடுத்தக் கூடியதும், தமிழரின் தன்மதிப்பைப் போக்கக் கூடியதும், தமிழர் தம் அறிவை மாய்க்கக் கூடியதும், தமிழரை மூடநம்பிக்கையில் ஆழ்த்தக் கூடியதும், தமிழர்க்கு அடிமை நிலையே சதமெனப் போதிக்கக் கூடியதும், தமிழரை – தமிழரல்லாத ஒரு வகுப்பினர்க்கு வேசிமகனாய் இருக்க ஒப்ப வைப்பதும் ஆகிய நூற்கள் தமிழ்க் கலைகளா? இல்லை யெனில், அவற்றை ஒழிப்பதில் நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள்?
11. புராண இதிகாசங்கள் மேற்கண்ட இழிவுகளை நமக்கு அளிக்கவில்லையா, இல்லையெனில், தகுந்த ஆதாரத்தோடு கூறுவீர்களா?
12. தமிழர்தம் அறிவை வளர்ப்பதும், அறியாமை மூட நம்பிக்கை, அடிமை இழிவு ஆகியவற்றைப் போக்குவதும், முன்னேற்றத்தைப் போதிப்பதும், தன்மானத்தை ஊட்டுவதும் இன்ப வாழ்வுக்கு வழிகாட்டுவதும், ஆரிய உயர்வை – அதன் விஷத்தை நீக்கக் கூடியதுமாகிய உயர்நெறிகளையே தமிழ்க்கலைகள் கொண்டிருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புகின்றீர்களா? அப்படியானால், இவற்றிற்கு மாறான நெறிகளைக் கொண்டுள்ள நூற்களைத் தமிழ்க்கலைகள் அல்லவென்று சொல்லவும், அவற்றைத் தமிழரிடையே செல்வாக்கற்ற நிலையில் ஆக்கவும் முன் வருவீர்களா?
13. ஆரியர் உயர்வு – தமிழர் தாழ்வு இதனைப் போதிக்க எழுந்தவைகளே புராண இதிகாசங்கள் என்பதை நீங்கள் ஒப்புகின்றீர்களா?
14. புராண இதிகாசங்கள் ஒழியக்கூடாதென்றால், மக்களிடம் அறியாமை, மூடநம்பிக்கை, அடிமை, தன்மானமற்ற செயல், ஆகியவை நிலைத்திருக்க வேண்டுமென்பதை நீங்கள் ஒப்புகின்றீர்கள் என்பதுதானே பொருள்?
15. தமிழர்க்குச் சாதி பேதம் உண்டா? பல தெய்வ வணக்கம் உண்டா? இல்லையெனில் அவற்றைப் போதிக்கின்ற – ஆதரிக்கின்ற நூற்களைக் கலைகளென்று போற்றுவதேன்?
16. காதல் மணம் இன்பவாழ்வையளிக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? பழந்தமிழர் திருமண முறை காதலோடியைந்தது என்று நீங்கள்தானே சொல்கிறீர்கள். அந்த முறை, இன்று சமுதாயத்தில் இகழப்படுவானேன்? அப்படி இகழப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில், விதியின்மேல் பழிபோட்டு விளையாட்டுத் திருமணம் நடைபெற்று வருவதைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? அத்தகைய திருமணத்தைச் சிறந்ததென்று நடத்திக் காட்டிப் போதிக்கின்ற நூற்களை நீங்கள் போற்றுவதில்லையா?
17. பெண்கள், ஆண்களின் அடிமைகள் – போகக் கருவிகள் என்பதுதான் உங்கள் எண்ணமா? இல்லையெனில், அத்தகைய நிலையைச் சமுதாயத்தில் மேலும் மேலும் வளர்த்து வரக்கூடிய நூற்களை நீங்கள் ஆதரிப்பானேன்? பழந்தமிழர் காலத்தில் இன்றைய நிலைதான் பெண்கட்கு இருந்ததா?
18. ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் புலவர்களே காரணம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? அப்படியானால், நம் நாடு எந்த நிலையிலிருக்கிறது? ஏன்? அந் நிலையை மாற்ற நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? செய்யப் போவரென்ன?
19. தமிழர்கள் 100க்கு 93 பேர் தற்குறிகளாக இருப்பதேன்? தமிழர் தம் அறியாமையைப் போக்குவது தமிழ்ப் பண்டிதர்களின் கடமையல்லவா? அல்லது, அவர்கள் அந்நிலையிலேயே இருக்கவேண்டுமென்பதை நீங்கள் ஒப்புகிறீர்களா?
20. முன்னேற்றம், பகுத்தறிவு, தன்மானம் இவை உமக்கு வேம்பா? இல்லையெனில், அவற்றை மக்களிடம் புகுத்தாதிருப்பதேன்? புகுத்துவோரையாவது முணு முணுக்காதிருக்கின்றீரா?
21. ஆரியக் கோட்பாடுகள் தமிழர்க்கு அவசியமா? இல்லை யென்றால் அதை இந்நாட்டினின்றும் அகற்ற நீங்கள் செய்த காரியமென்ன? இனியாவது செய்யப் போவதென்ன?
22. பழந்தமிழர் வாழ்வு – அவர் தம் புகழ் ஆகியவை சீரழிந்து போவதற்குத் துணையாக இருந்தவர்கள், பண்டிதர்களும் அரசர்களுந்தானே? இன்று தமிழரசர் துணை உங்கட்கிருந்தால், பெரியாரையும் அவர் தம் கூட்டத்தாரையும் – சமணரைச் சைவர்கள் செய்தது போல் – தண்டிக்காமல் விட்டு வைக்கச் சம்மதப்படுவீர்களா?
23. ஆரியப் பாம்புக்குப் பால் வார்த்து, அதனைக் காபந்தோடு வளர்ப்பவர்கள் பண்டிதர்களல்லவா? இல்லையெனில், இத்தனை புராணேதிகாசங்கள் எப்படித் தோன்றின? யாரால் தோன்றின?
24. பழந்தமிழரைக் குறிப்பிடும் போது மறத்தமிழ் வீரர்கள் என்ற பெருமையோடு பேசுகிறீர்கள். இன்று அந்த நிலை உண்டா? இல்லையெனில், அதனைப் போக்கியது எது? ஆரியமெனில், அதன் போக்க நீங்கள் செய்ததென்ன? அதைப் புகுத்தியுள்ள நூற்களைக் கலைகள் என்று போற்றுவானேன்?
இன்னும் எவ்வளவோ சந்தேகங்கள் எழுகின்றன. விரிவு கண்டால் உங்கட்கு வெறுப்பேற்படும் என்றஞ்சியே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இவற்றிற்கு உங்களின் நேர்மையான பதில் கிடைக்குமானால், அதனால் எனக்கு மட்டுமன்று, தமிழ் நாட்டுக்கே நல்ல பலன் விளையும் என்பதை வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(தமிழ்ப் பண்டிதர்கட்கு! எனும் தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியது – 8.8.1943)