ஜெர்மன் அறிஞர்கள் கலந்துகொண்ட பகுத்தறிவாளர் கருத்தரங்கம்.-கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜுலை1-15-2024

திராவிடர் கழகமும் சமூக நீதி மய்யமும் இணைந்து நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கு சென்னை பெரியார் திடலில் 8.5.2005ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடந்தது.

தேசிய சமூக நீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் தலைமை வகித்தார். நாம் அனைவரையும் வரவேற்றுப் பேசினோம். பகல்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதஞ்சலி, துணைத் தலைவர் எம்.கே. சைனி, கர்நாடக மாநில உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலுமிருந்து திரளான போராளிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சமூகநீதி தேசிய இயக்கத்தின் ( National Movement ) தேசிய செயல்தலைவராக எம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். தனியார் துறை, உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு தேவை என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மண்டல்குழுப் பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்; மற்றும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தனியார் துறையில் இடஒதுக்கீட்டைச் சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி நன்றி கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 25 நீதிபதிகளின் பதவிகளுக்குத் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களைக் கொண்டு நிரப்பவேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் எமது தலைமையில் 10.05.2005 அன்று காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது,

ஆர்ப்பாட்டத் தில் ஆசிரியருடன் கழகத் தோழர்கள்…

‘‘இப்போராட்டம் தொடக்கம்தான்; முடிவல்ல – வெற்றி கிட்டும்வரை போராடுவோம். தேவைப்பட்டால் எங்கள் சமூகநீதிப் போராட்டம் டில்லியிலும் நடக்கும் என்று அறிவித்தோம். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் என்பது இன்றோடு முடிந்துவிடக் கூடியதல்ல. இது தொடரும்!

இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் 28 நீதிபதிகள் பதவி வகிக்கிறார்கள். அதில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் நீதிபதியாக இல்லை. ஒரே ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் உள்ளார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மக்கள் தொலையில் 80 சதவிகிதத்தினர். எனவே, அந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர், பெண்கள் இவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் நீதிபதிகள் நியமனத்திலே இனி வரவேண்டும்,’’ என உரையாற்றினோம்.

இவ்வார்ப்பாட்டத்திற்குத் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, மாநில சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் கி.மகேந்திரன், வட சென்னை மாவட்டக் கழகத் தலைவர் ப. கவுதமன், தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்றைய பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

பாசிசத்திற்கு எதிராய் ருசியா பெற்ற வெற்றியின் 60ஆம் ஆண்டு விழா சென்னை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மய்யத்தில் 10.5.2005ஆம் தேதி மாலை நடைபெற்றது.

ரஷ்ய பண்பாட்டு மய்ய இயக்குநர் அலக்ஸி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ‘ஹிந்து’ பத்திரிகை ஆசிரியர் என். ராம், ’ஜனசக்தி’ ஆசிரியர் ஏ.எம்.கோபு, ரஷ்யன் கான்சுலேட் ஜெனரல் க்ளவ்டேஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதுவை மாநில ஆளுநர் லகோரா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

ருசியாவின் 60ஆம் ஆண்டு வெ ற்றி விழாவில் ஆசிரியர்…

விழாவில் நாம் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,“போர் அற்ற ஒரு புதிய உலகத்தை உருவாக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் போது பாசிச சக்திகளின் கை ஓங்கியிருந்தால் இன்றைக்கு ஜனநாயகம் தழைத்திருக்காது. மக்களாட்சியே மறைந்திருக்கும். 60 ஆண்டுகளுக்கு முன்பு பாசிச சக்திகளை- நாசிச சக்திகளை மற்ற நாடுகளோடு சேர்ந்து முறியடித்த வெற்றி வாய்ப்பைத் தான் இன்றைக்கு விழாவாகக் கொண்டாடுகிறோம்.

ரஷ்ய நாட்டிலே ஆணும் பெண்ணும் சமத்துவமாக வாழ்கிறார்கள்- ஒரு புது உலகை உண்டாக்கியிருக்கிறார்கள் என்ற செய்தியை இந்நாட்டு மக்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

மக்களாட்சி மாண்புகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சர்வாதிகாரி ஹிட்லர் நினைத்ததை ரஷ்யா மாற்றியமைக்கத் துணைபுரிந்தது. இல்லாவிட்டால் இன்று உலகப்படமே மாறியிருக்கும். இன்றைய ஜனநாயக அமைப்புகள் நிச்சயம் இல்லாமல் போயிருக்கும்.

எனவே, எந்த நோக்கத்திற்காக ரஷ்ய மக்கள் உழைத்தார்களோ அதைக் கடைப்பிடித்து போரற்ற ஒரு புதிய உலகத்தை உருவாக்குவோம்” எனச் சூளுரைத்தோம்.

மனித நேய நண்பர்கள் குழு சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றும் ஆசிரியர்…

மனித நேய நண்பர்கள் குழு சார்பில் “ஜனநாயகமும் தேர்தல் அமைப்புகளும்” என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் 19.5.2005 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது. மனிதநேய நண்பர்கள் குழுச் செயலாளர் கா. ஜெகவீரபாண்டியன் வரவேற்றுப் பேசினார். மனித நேய நண்பர்கள் குழுத் தலைவர் மேனாள் எம்.பி. இரா.செழியன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

இறுதியாக நாம் உரையாற்றுகையில், “மனிதநேய நண்பர்கள் குழு என்பது மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஓர் அமைப்பாகும். மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்கினால் அதை மக்களாட்சியில் ஜனநாயகத் தத்துவத்திற்குப் பயனுள்ளதாக ஆக்க முடியும். தேர்தல் நடைமுறையில் இனிமேல் மாற்றம் வரவேண்டும். நமது நாட்டில் ஓட்டுப் போடுவதைக் கட்டாயமாக்க வேண்டும்“ என எடுத்துரைத்தோம். இறுதியில் மனித நேய நண்பர்கள் குழுப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை நன்றி கூறினார்.

குறிஞ்சிப்பாடி அண்ணா கிராமம் புதிய பகுதி விரிவாக்கத்தில் கொடையுள்ளம் கொண்டவரும் சமூகநலத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும் தொண்டறச் செம்மலுமான வடலூர் நல்ல.கிருட்டினமூர்த்தி அவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு நிலத்தை அன்பளிப்பாக வழங்கி அதில் தந்தை பெரியார் படிப்பகமும் மற்றும் எமது பெயரில் (கி. வீரமணி) நூலகமும் அமைத்துக் கொடுத்தார்.

இவற்றின் திறப்பு விழா 21.5.2005ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு நடந்தது. பண்ருட்டி தொகுதி சட்டமன்ற பா.ம.க. உறுப்பினர் தி. வேல்முருகன் எமது பெயரில் (கி. வீரமணி) அமைந்த நூலகத்தைத் திறந்து வைத்தார். தந்தை பெரியார் படிப்பகத்தை நாம் திறந்து வைத்து உரையாற்றினோம். அப்போது, “கோயில்களை போட்டி போட்டுக்கொண்டு கட்டுவதால் அறிவு பாழாக்கப்படும். இந்தப் படிப்பகம் – நூலகம் கிடைத்திருப்பது இப்பகுதி மக்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. சட்டமன்ற உறுப்பினர்கள் இனிமேல் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து கிராமங்களில் பெரியார் படிப்பகங்களைக் கட்ட வேண்டும்; இளைஞர்களையும் பெண்களையும் படிக்க வைக்க வேண்டும். மேலும் தொண்டறச் செம்மல் நல்ல. கிருட்டினமூர்த்தி அவர்கள் இப்பகுதியில் தனக்குச் சொந்தமான 22 சென்ட் நிலத்தை கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அந்த இடத்தில் ஒரு நிறுவனத்தை அமைக்க கழக அறக்கட்டளை மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும்” என எடுத்துரைத்தோம்.

அடுத்து நண்பகல் 12 மணிக்கு குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் நல்ல. கிருட்டினமூர்த்தியின் தாயார் காமாட்சி அம்மாள் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார். வடலூர் ஊரன் அடிகளார் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

தொண்டறச் செம்மல் நல்ல. கிருட்டினமூர்த்தியைப் பாராட்டி நாம் அவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினோம். முடிவில் வடலூர் புலவர் க.இராவணன் நன்றி கூற விழா சிறப்பாக நிறைவுற்றது.

சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 22.5.2005ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அன்று மாலை 6 மணிக்கு ஜெர்மனி அறிஞர்கள் பெரியார் திடலுக்கு வந்தனர். அவர்களை நாம் வரவேற்று தந்தை பெரியார் அருங்காட்சியகத்தை அவர்களுக்குச் சுற்றிக் காண்பித்தோம்.

அதேபோல அய்யா அவர்களுடைய நினைவிடங்களில் உள்ள தந்தை பெரியாரின் அறிவார்ந்த பொன்மொழிகள் குறித்து விளக்கிக் கூறினோம். பின்னர் அய்யா-அம்மா நினைவிடங்களில் ஜெர்மனி அறிஞர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட
ஜெர்ம னி அறிஞர்களுடன் ஆசிரியர்…

பின்னர் பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கருத்தரங்க நிகழ்ச்சி தொடங்கியது. தமிழக மூதறிஞர்கள் குழுத் தலைவர் பேராசிரியர் ஞான. அய்யாசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்து நாம் ஆங்கிலத்தில் தலைமை உரையாற்றினோம்.

தொடர்ந்து இந்திய நாத்திகர் கழக நிறுவனர் ஆந்திராவைச் சேர்ந்த ஜெயகோபால், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மனநிலை பகுப்பாய்வாளர் வால்டர், மும்பையைச் சேர்ந்த நீலேஷ், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஏ.சைமோனி மோச்சி ஆகியோர் உரையாற்றினர்.

ஜெர்மனி அறிஞர்களின் உரையை கழகத் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் மொழி பெயர்த்து விளக்கினர்.ஜெர்மனி அறிஞர்களுக்கு தந்தை பெரியார் பற்றிய ஆங்கில நூல்களை நாம் வழங்கி சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்தோம்.

முன்னதாக ஆந்திர கலைக்குழுவினரின் பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி நடந்தது. மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.அண்ணாவி இணைப்புரை வழங்கினார். இறுதியாக பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தி. ராசப்பா நன்றி கூறினார்.

தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் சுதந்திரப் போராட்ட வீரரும் திராவிடர் கழக பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் எம்.எஸ். முத்துக்குமாரசாமியின் தந்தையுமான வி.சி.எம். சுப்புக்கண்ணுவின் முதலாம் ஆண்டு நினைவு கல்வெட்டை 23.5.2005 அன்று நண்பகல் 11 மணிக்கு திறந்து வைத்து உரையாற்றினோம்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் நகரில் ஒன்றிய திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ஜாதி – தீண்டாமை ஒழிப்பு பகுத்தறிவுச் சிந்தனைப் பொதுக் கூட்டம் 23.5.2005 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் பாபநாசம் கீழவீதியில் பிரமாண்டமான ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழா மேடையில் ஜாதி – மத மறுப்பு, விதவைத் திருமணங்கள் செய்துகொண்ட 52 பேரைப் பாராட்டி சிறப்பு விருதுகளை வழங்கினோம். விழாவில் ஜெர்மனி அறிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பாபநாசம் நகரில் கீழவீதியில் பொதுக்கூட்டம் நடந்த சாலை இருபுறமும் தந்தை பெரியார் வாழ்க்கையில் சாதித்த போராட்டங்கள், கழகத்தின் வெற்றி பெற்ற களங்கள், வாழ்க்கையில் தந்தை பெரியாரின் சாதனைகள் இவற்றை விளக்கிய ஒளிப்படங்களைத் தொகுத்து மிகவும் சிறப்பான வகையில் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்த்துத் தெளிவு பெற்றனர்.

வில்லிவாக்கம் அ.குணசீலன்- கு. தங்கமணி இணையரின் மகள் கு.அறிவுமணி மற்றும் சூளைமேடு பாலன்- சரோஜா இணையரின் மகன் பார்த்திபன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு 22.5.2005 அன்று ஞாயிறு காலை 7 மணிக்கு சென்னை அரும்பாக்கம் ஏ.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் நடந்தது. 25.5.2005 புதன்கிழமை காலை 9.45 மணிக்கு, எமது இணையர் மோகனா அம்மாள் அவர்களுடன் மணமக்களின் இல்லத்திற்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆ.பழமலை – தனம் இணையரின் மகன் புகழேந்தி மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகரை இளவரசன்- அலமேலு இணையரின் மகள் சிந்தனைச் செல்வி ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள முத்துவள்ளல் நவநீதம் திருமண மண்டபத்தில் 26.5.2005 அன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தலைமையேற்று நடத்தி வைத்தோம். கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

டில்லி பெரியார் மய்யத்தில் பொறுப்பாளராகப் பணிபுரிந்த ஆர்.எஸ். இராஜேந்திரன் (வயது 51) 25.5.2005ஆம் தேதியன்று மறைந்த செய்தியறிந்து வருந்தினோம். 27.5.2005ஆம் தேதி காலை 8 மணிக்கு தஞ்சை வல்லம் பிள்ளையார்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, மறைந்த இராஜேந்திரன் உடல்மீது மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் 28.5.2005 அன்று காலை 9 மணிக்கு ’பெரியார் புத்தக நிலையம்’ அறிமுக விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப.ரத்தினசாமி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மாவட்ட தி.க. அமைப்பாளர் கு.சிற்றரசு வரவேற்றுப் பேசினார். அ.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் கோ.வெ. சிதம்பரம், ஈரோடு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு மற்றும் நாம் உரையாற்றினோம். தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி. ராமசாமி புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

புத்தக விற்பனையைத் தொடங்கி வைக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி

வரலாற்றுச் சிறப்புமிக்க தாராபுரம் திராவிடர் எழுச்சி மாநாடு 28.05.2005 அன்று காலை பேரெழுச்சியுடன் உற்சாகத்துடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலுள்ள இராசா விசுவநாத் மகாலில் ஈரோடு அக்ரகாரம் ‘சுயமரியாதைச் சுடரொளி’ இல. பெருமாள் நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கியது.
மாநாட்டையொட்டி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள், இளைஞர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்திருந்தனர்.

மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் நகர தி.க. செயலாளர் தா.சா. பாலு வரவேற்றுப் பேசினார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசினார்.

திராவிடர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார் ஆசிரியர்…

கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி ‘எரியட்டும் மனுதர்மம்’, கோபி ந.கருப்பண்ணன் ‘ஒழியட்டும் இராமாயணம்’, தஞ்சை இரா. பெரியார்செல்வன் ‘மடியட்டும் மகாபாரதம்’, அ. அண்ணாதுரை ‘புதையட்டும் புராணங்கள்’ சு.சிந்தனைச்செல்வன் ‘அழியட்டும் இந்துத்துவா’ ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கத்தில் மிகச் சிறப்பாக உரையாற்றினர்.
அடுத்து பிற்பகல் 1 மணிக்கு நாம் தொடக்க உரையாற்றினோம். அப்போது ‘‘இன்றைக்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. ராக்கெட்டைத் தயாரிக்கிறார்கள். அது எல்லையில்லாத தூரத்திற்குச் செல்கின்றது. அங்கு அறிவுக்கும் தடையில்லை. எல்லைக்கும் தடையில்லை. தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் அங்கு விஞ்ஞானிகளாகப் பணியாற்றுகிறார்கள். நமது நாடு ராக்கெட்டை அனுப்புவதிலே மகிழ்ச்சி இருக்கிறது.

அதே நேரத்தில் தமிழன் கட்டிய கோவிலுக் குள்ளே தமிழனுடைய பணத்தாலே தமிழனுடைய பக்தி உணர்வினாலே கட்டப்பட்டிருக்கின்ற கோவிலுக்குள்ளே என்னுடைய சகோதரன் தாழ்த்தப்பட்டவன் என்று முத்திரை குத்தப்பட்ட ஒரே காரணத்தால் என்னுடைய இன்னொரு சகோதரன் நீ இங்கே நில், அவனை அங்கே நில் என்று சொல்லிவிட்டு இந்த நாட்டுக்கே சம்பந்தம் இல்லாத பார்ப்பான் கருவறைக்குள் இவர் மட்டும் சென்று நான் தான் சாமியைக் குளிப்பாட்டுவேன் என்று சொன்னால், அந்தப் பார்ப்பன ஆதிக்க ஆணவத்தின் முதுகெலும்பை முறிக்கின்ற வரையிலே எங்களுக்கு வேலை இருக்கிறது; சமத்துவத்தை உருவாக்கியாக வேண்டும் எனக் குறிப்பிட்டு உரையாற்றினோம்.

திராவிடர் எழுச்சி மாநாட்டையொட்டி எற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி மாலை 5 மணிக்கு காமராசபுரத்தில் (வடதாரை) அணி வகுத்து நின்று புறப்பட்டது. பேரணியை அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் தொடங்கி வைத்தார். கோவை திராவிடர் கழக இளைஞரணிப் பொறுப்பாளர் தமிழ்முரசு அவர்களின் மகன் சித்தார்த்தன், கூரிய அரிவாள் மீது ஏறி நின்று கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கினான்.

பளபளக்கும் அந்தக் கூரிய அரிவாள் மீது ஏறி நின்றதோடு மட்டுமல்லாமல் சிறுவன் எழுப்பிய முழக்கம் அனைவரின் சிந்தனைகளைக் கிளறிவிட்டது.

டெம்போ டிராவலரை ஈரோடு தோழர்கள் ராஜா, திருமுருகன் ஆகியோரும், மாருதிக் காரை ஈரோடு இராசன், குன்னூர் ராமன் ஆகியோரும் முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர்.

காமராசபுரத்தில் தொடங்கியப் பேரணி சின்னக் கடைவீதி, ஜவுளிக்கடைவீதி, உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வழியாக மாலை 6 மணிக்கு மாநாடு நடைபெறும் சீரணி அரங்கினை வந்தடைந்தது. விழா இறுதியில் நாம் நிறைவுரையாற்றினோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை, காவிரி நதி நீர் பங்கீடு, சமூக நீதி உள்ளிட்ட 8 முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் திராவிடர் கழக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் க. யோகானந்தம் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
(நினைவுகள் நீளும்)