கடந்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், சகோதரத்துவம் காப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும் நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு அரசால், ஓய்வு பெற்ற நீதிபதி திரு. கே.சந்துரு அவர்களைக் கொண்டு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் பலர் முன்னிலையில், நீதிபதி திரு.சந்துரு தனது அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்தார்.
தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் சில:
‘‘கள்ளர் சீரமைப்பு”, ‘‘ஆதிதிராவிடர் நலம்” போன்ற ஜாதிய அடையாளம் கொண்ட சொற்களைப் பள்ளிப் பெயர்களிலிருந்து நீக்கவேண்டும். இந்தப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளுமே ‘‘அரசுப் பள்ளி’’ என்று அழைக்கப்படவேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைகளுக்குக் கீழ் அல்லாமல், அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
பள்ளிகளுக்கு நன்கொடை அளிக்கும் நபர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது.
தலைமை ஆசிரியர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து ஆய்வு செய்து ஆண்டறிக்கை தயாரிக்கவேண்டும்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்கவேண்டும்.
ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது சமூகநீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டைக் கண்டறியவேண்டும்.
சமூகப் பிரச்சினைகள், ஜாதிய பாகுபாடு, பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் தடுப்பு ஆகியவைபற்றி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரவேண்டும்.
வகுப்பறையில் மாணவர்களை அமர வைக்கும்போது, பெயர் வரிசைப்படி மட்டுமே அமர வைக்கவேண்டும் (ஆங்கில எழுத்து வரிசையில்).
மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் ஜாதிப் பெயரோ, குறிப்போ இடம்பெறக் கூடாது.
மாணவர்களின் ஜாதி விவரங்களை ரகசியமாக வைக்கவேண்டும்.
கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கவேண்டும்.
ஆசிரியர்களுக்கு என்ன சொல்லப்பட்டுள்ளது?
உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பணியிடத்தை மாற்ற வேண்டும். மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள் மற்றும் உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும்போது, அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை ஜாதி அல்லாதவரை நியமனம் செய்வது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படவேண்டும்.
எந்தச் சூழலிலும் மாணவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு, ஆசிரியர்கள் அழைக்கவோ, பேசவோ கூடாது.
பள்ளிகளில் என்னென்ன மாற்றங்கள் தேவை?
மாணவர்களின் கல்வி உதவித் தொகை குறித்த விவரங்களைப் பொதுவாக வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்பும் அறிவிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர் குறிப்பிட்ட மாணவரைத் தனது அறைக்குத் தனியாக அழைத்துக் கூறவேண்டும்.
ஆறாம் வகுப்புமுதல் பன்னிரண்டாம் வகுப்புவரையில் ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் மாணவர்களுக்கு இதுகுறித்த புரிதலை ஏற்படுத்தும் வகுப்புகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சங்கங்கள் அமைக்கவும், மாணவர் சங்கத் தேர்தல் நடத்தவும் அனுமதிக்கவேண்டும்.
பள்ளிகளில் புகார் பெட்டிகள்!
பள்ளி நல அலுவலர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு, பாலினத்துக்கு ஒருவர் பணியமர்த்தப்பட வேண்டும்.
பள்ளிகளில் புகார்ப் பெட்டிகள் வைக்கப்பட
வேண்டும். அவை ‘மாணவர் மனசு’ உள்பட எந்தப் பெயரிலும் அழைக்கப்படலாம். அதன் சாவி பள்ளி நல அலுவலரிடம் மட்டுமே இருக்கவேண்டும்.
வாரத்துக்கு ஒருமுறை அதிலுள்ள புகார்களைப் பரிசீலிக்கவேண்டும். எந்த நேரத்திலும் மாணவரின் பெயர் வெளியே தெரியக்கூடாது.
ஆதிதிராவிட மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்களைத் தேர்வு செய்யும் வண்ணம், மேனிலை வகுப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க அரசு வழி வகை செய்யவேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் சமையலறைகள் இருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சமையலறை அமைத்து அங்கிருந்து உணவை விநியோகம் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். மண்டல வாரியாக ஊழியர்களை நியமிக்கும்போது, இட ஒதுக்கீட்டைப் பின்பற்றவேண்டும்.
உரிய பரிசீலனைக்குப் பிறகு, சில பகுதிகளை ‘‘ஜாதி வன்முறைகள் அதிகம் நடைபெறும் பகுதிகள்’’ என வகைப்படுத்த அரசு முடிவு செய்யலாம். சிறப்பு உளவுத் துறைக் குழுவை அமைத்து, ஜாதிப் பாகுபாடுகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அமைப்புகளைக் கண்டறியலாம். கல்வி காவிமயமாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க நிபுணர் குழுவை அமைக்கலாம்.
ஆசிரியர் பயிற்சிக்கான பாடத் திட்டம் சமூகநீதிப் பண்புகளை உள்ளடக்கியதாக மாற்றப்படவேண்டும்.
மாணவர்களின் பாடத் திட்டங்களில் ஜாதிய பாகுபாடுகளைத் தூண்டும் வகையில் இல்லாததைக் கண்காணிக்க சமூகநீதிக் குழு அமைக்கப்படவேண்டும். கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொண்ட அந்தக் குழு கூறும் பரிந்துரைகளை ஏற்று, பாடப் புத்தகங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.”
இவைபோன்ற ஆக்கரீதியான ஆலோசனைகள், கருத்துருக்கள் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.
‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டதாகும். சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் – மாணவர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு விதைகளை ஊன்றி வளர்த்தெடுப்பது ஆக்கப்பூர்வமான செயல்பாடாகும்.
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற குறள் வரிகளைத் தேர்வுக்காகப் படிக்காமல், வாழ்க்கையில் பின்பற்றத்தக்க வகையில் பள்ளிப் பருவத்திலேயே பயிர் செய்ய வேண்டியது மிகமிக அவசியமாகும்.
நீதிபதி திரு.சந்துரு அவர்களின் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளில் சிலருக்கோ, அமைப்புகளுக்கோ மாறுபாடான கருத்துகள்கூட இருக்கலாம்.
உரிய வகையில் விளக்கினால், இதன் நோக்கத்தைப் புரிந்துகொள்வார்கள்.
யார் என்ன ஜாதி? யார் என்ன மதம்? என்று மாணவப் பருவத்திலேயே வேற்றுமை விஷ விதைகளை விதைக்கக்கூடாது என்பதை மனித சமத்துவம் விரும்பும் அனைவரும் ஒப்புக்கொள்ளவே செய்வர்!
எப்படி இராணுவத்தில் மத, ஜாதிப் பிரிவுகள், பிளவுகள் இருக்க முடியாதோ, அதுபோன்றே வளரும் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே நீதிபதி திரு.சந்துரு அவர்களின் தலைமையிலான குழு பரிந்துரைகளைத் தந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்கள் அறவே தொலைந்துவிட்டன.
1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் ஜாதிப் பட்டங்கள் அறவே நீக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, அந்த மாநாட்டு மேடையிலேயே ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன் நாடார், தனது நாடார் பட்டத்தைத் துறந்தார். இராமச்சந்திர சேர்வை, தனது சேர்வைப் பட்டத்தைத் தூக்கி எறிந்தார்.
நாயக்கர் எ்னறு அடையாளப்படுத்தப்பட்ட தந்தை பெரியார் 1927 ஆம் ஆண்டிலேயே நாயக்கர் பட்டத்தை வெட்டி எறிந்தார். காமராஜ் நாடார் என்பது காமராஜர் ஆனதையும் நாடு அறியும். அத்தகைய வரலாறு படைத்த தமிழ்நாட்டில், பிஞ்சு உள்ளங்களில் ஜாதி அடையாளத்தைத் திணிப்பது – அவர்களது எதிர்காலத்தை இருள் குகையில் தள்ளுவதாகும்.
கையில் ஜாதியை அடையாளப்படுத்தும் வண்ணக் கயிறுகளா?
கைகளில் ஜாதிக்கென்று தனித்தனி வண்ணத்தில் கயிறு கட்டும் வழக்கம் தென் மாவட்டங்களில் அறிமுகமானபோது, அது குறித்து திராவிடர் கழகம் தன் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தியது. தமிழ்நாடு அரசின் கல்வித் துறையும் அவ்வாறு வண்ணக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு இருபால் மாணவர்களும் வரக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியது.
இளம் வயதில் ஜாதி உணர்வை ஊட்டி, பிறகு வெறியாக மாற்றும் நிலை உருவாக்கப்படும் ஆபத்தான போக்கு மட்டுமல்ல; மருத்துவ ரீதியிலும், விஞ்ஞான ரீதியாகக் கைகளில் கயிறுகளைக் கட்டுவது கேடு விளைவிப்பதாகும்.
கைகளில் கட்டப்படும் கயிறுகளை சோதனைச் சாலையில் மருத்துவ ரீதியாகச் சோதித்தபோது, ஸ்டைபைலோகாகஸ் அல்பஸ் (Staphylococcus albus), ஸ்டைபைலோகாகஸ் ஆரியஸ் (Staphylococcus aureus), எஸ்செரிச்சியா கோலி (Escherichia coli (E.coli)) போன்ற தீமை விளைவிக்கும் பாக்டீரியங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்நோய்க் கிருமிகளால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற குடல் சார்ந்த உபாதைகள் மற்றும் சீழ்கட்டி, சிறுநீர் பாதைத் தொற்று போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்பது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51–ஏ(எச்) வலியுறுத்தும் நிலையில், அறிவை வளர்க்கவேண்டிய கல்விக் கூடங்களில் விஞ்ஞானத்துக்கு மாறான – தீமையை விளைவிக்கும் செயலை அனுமதிக்கலாமா?
கயிறு கட்டுவதும் தவறு – கயிறு திரிப்பதும் தவறே!
இட ஒதுக்கீட்டுக்காக ஜாதி அளவுகோல் என்பது வேறு – ஜாதி உணர்வை வளர்க்கக் கூடாது என்ற கருத்து வேறு. கல்வி வாய்ப்புக்கும், ஜாதிக்கும் தொடர்பு இருக்கும் காரணத்தால், மருந்தில் சிறிது நஞ்சைக் கலப்பதுபோல ஜாதியை அளவுகோலாகப் பயன்படுத்துவதை ஒன்றோடு ஒன்றாகப் போட்டுக் குழப்பக் கூடாது.
நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் ‘ஆதி திராவிடர்கள்’ என்று அழைக்கப்படும் என ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது (நீதிக்கட்சி – பானகல் அரசர் ஆட்சியில், GO No.817, 1922 மார்ச் 25 ஆம் தேதியன்று).
நீதிக்கட்சி ஆட்சியில் தொழிலாளர் துறை என்பது என்ன?
அதேநேரத்தில், ஆதிதிராவிட மக்கள் வளர்ச்சிக்காக தொழிலாளர் துறை (Labour Dept.) என்றுதான் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது என்பதைக் கவனிக்கவேண்டும்!
அனைத்துப் பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இணைக்கப்பட்டாலும், ஏற்கெனவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த சிறப்பு நிதி உதவியோ, வாய்ப்புகளோ குறைக்கப்படக்கூடாது என்ற வகையில், வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.
ஜாதி விவகாரங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடம் ஆசிரியர்கள் காட்டும் அணுகுமுறை குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படவேண்டும் என்ற பரிந்துரையில் ஆண்டு இரகசிய அறிக்கை (Annual Confidencial Report) உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பழைய ‘இரகசியக் குறிப்பு முறையைப்’ புதுப்பித்து விடாமல் எச்சரிக்கையாக அணுகப்படவேண்டியதாகும்.
ஜாதி, பாலியல் உள்ளிட்ட பிரச்சினைகளில் பெயர் வெளிப்படுத்த அவசியமில்லாத புகார் வழங்கும் முறைகளும் வெளிப்படையான விசாரணையும் அவசியமாகும்.
குறிப்பிட்ட ஜாதிப் பெயரில் கல்வி நிறுவனங்களை விளம்பரப்படுத்தினால், ஜாதிப் பெயரைச் சொல்லி, ‘அந்தப் பள்ளி’ என்று பொதுவாகக் கூறப்படும் நிலை உருவாவது நல்லதாக, சரியானதாக இருக்க முடியாது.
தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தனிக் கிணறு உரு வாக்கப்பட்டபோது, தந்தை பெரியார் அதனை வன்மையாகக் கண்டித்தார்.
காரணம், அத்தகைய கிணற்றையே ஜாதிப் பெயர் சொல்லி அழைக்கும் ஒரு நிலையை – நிரந்தரக் குறிப்பையல்லவா உண்டாக்கும் என்று கண்டித்தார்.
மனிதன் அறிவு வளர்ச்சி பெற்று வருகிறான்; விஞ்ஞானம் நம்மை மேலே கொண்டு வந்து நிறுத்துகிறது என்று பெருமைப்படும் நிலையில், எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாம் பின்னோக்கிப் பயணிக்கலாமா என்பது அர்த்தமுள்ள கேள்வியாகும்.
அந்த வகையில், நீதிபதி திரு.சந்துரு அவர்களின் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை. அவற்றை நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்துவாராக!
சமூகநீதிக்கான சரி்த்திர நாயகர் ‘திராவிட மாடல்’ அரசின் தலைவர் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அறிக்கையைப் பரிசீலித்து செயல்படுத்த முன்வரவேண்டும் என்று வேண்டுகிறோம்.