அறிவியல் வளர்ச்சி :அயலார் – தமிழர் பங்களிப்பு – ஓர் ஒப்பிட்டு ஆய்வு

செப்டம்பர் 01-15

அறிவியலின் ஆற்றல்: இன்றைய மாந்த இனம், வாழ்க்கை வளம் பெறவும், நலமுறவும், வசதிகள் எய்தவும் உதவக் கூடியது அறிவியல்.

 

புவியியல், இயற்பியல், வேதியியல், வானியல், உயிரியல், பயிரியல் முதலான பலதுறைகளை உள்ளடக்கியது அறிவியல்.

இத்தகைய, அறிவியல் கருவாக, உருவாக, அரும்பிட, மலர, வளர உலகின் பல பகுதிகளில் நாட்டவர் ஈடுபட்டனர்; பாடுபட்டனர்; பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நோக்கும் போக்கும் : இவ்வகையில் தொன்மையும், முன்மையும் வாய்ந்த தமிழ்நாடு எவ்வகையில் தன் பங்களிப்பைச் செய்துள்ளது; செய்கின்றது என்னும் உண்மையை வரலாற்று ஒப்பீட்டு ஆய்வு (Historical Comparative Study) முறையில் எடுத்துரைப்பதே எமது நோக்கம்.

மெய்யாகவே, அறிவியல் வளர்ச்சியை மட்டுமே ஆய்வுப் பொருளாகக் கொண்டுள்ளோம். பிறதுறை வளர்ச்சி பற்றிய ஆய்வு எம் நோக்கம் அன்று.

வேண்டுதல் வேண்டாமை இலாமை: இந்த ஆய்வு நோக்கிலும் போக்கிலும் எந்த உள்நோக்கமும் (Motive)  கிடையாது, விருப்பு  _ வெறுப்பும் இல்லை.

இலக்கியம் முதலான துறைகள் நாம் விரும்புகிற கருத்துகளை விரும்புகிற நெறியில் கூறலாம்; வலியுறுத்தலாம். வரலாறு, குறிப்பாக, அறிவியல் வரலாறு அப்படி அன்று. என்ன நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்பதை மட்டுமே எடுத்துரைக்கும். மற்றபடி, ஒன்றை உயர்த்தியோ, தாழ்த்தியோ கூறுதல் இயலாது; முடியாது; கூடாது!

உண்மைகளின் ஒருங்கிணைந்த பதிவு: இவ்வகையில், அறிவியல் வளர்ச்சியில் உலகின் பிறநாடுகள், தமிழ்நாடு இவற்றின் பங்களிப்பு பற்றி, காய்தல் _ உவத்தல் அகற்றி நடுவு நிலைமையில் ஆய்வு செய்த தகவல்களை _ உண்மைகளையே பதிவு செய்ய இருக்கிறோம்.

இந்த ஆய்வினை I ஒப்பீடு, II ஒப்பீட்டாய்வு என்ற இரு பகுதிகளாக அமைத்துக்கொண்டு, பல காலகட்டங்களாக வகுத்துக்கொண்டு ஒப்பீட்டினை முதலில் பதிவு செய்ய இருக்கிறோம்.

I ஒப்பீடு:

காலகட்டம்: கி.மு.50ஆம் நூற்றாண்டு _ 3ஆம் நூற்றாண்டு அயல் நாட்டவர்களின் பங்களிப்பு

கி.மு. 50ஆம் நூற்றாண்டு

30 நாள் கொண்டது மாதம்; 12 மாதங்கள் கொண்டது ஆண்டு என்று கண்டறிந்து ஆண்டுக் காலக் குறிப்பேடு  (Calender) உருவாக்கியர்கள் எகிப்தியர்கள். இவர்கள், பாப்பிரஸ் என்னும் கோரைப்புல்லிலிருந்து எழுதுதாள் (Paper)உருவாக்கினர்.

கி.மு. 50ஆம் நூற்றாண்டுக்குப் பின்:

உருளை (Wheel) உருவாக்கியும், சூரிய கிரகணம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிவித்தும் அறிவியல் பங்கினை ஆற்றியவர் பாபிலோனியர்.

கி.மு.40ஆம் நூற்றாண்டுக்கு முன் கிரேக்கர்களின் பங்களிப்பு: டெமாக்ரட்டீஸ் என்னும் கிரேக்கர், பேரண்டத்திற்கு அணுவே அடிப்படை மூலம் என்றார். தேலீ1 என்பார், கதிரவனுக்கும் புவிக்கும் இடையே நிலவு புகுவதே சூரிய கிரகணம் (Solar Eclipse) ) என்றார்.

கி.மு.5ஆம் நூற்றாண்டு_3ஆம் நூற்றாண்டு

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே புவி வருவதால் ஏற்படுவதே சந்திரகிரகணம் (Lunar Eclipse)  என்றார் ஆனக்காரஸ் என்னும் கிரேக்க அறிஞர். ஹிப்பாகிரட்டீஸ் (கி.மு.460_370) என்பார், நோய்கள் தேவதைகளால் உருவாவதில்லை; உடற்கோளாறுகளே காரணம் என்று அறிவித்தார்.

கி.மு.4ஆம் நூற்றாண்டு – 3ஆம் நூற்றாண்டு

அரிஸ்டார்கஸ் என்பார், புவியும் பிறகோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்றார். இவர், சூரிய குடும்பத் தந்தை எனப்பட்டார்.

ஆர்க்கிமிடீஸ் (கி.மு.287_212) என்பார், மிதப்பு விதி, நெம்புகோல் விதி முதலியவற்றை உருவாக்கினார். மேற்கொள்ளப்பட்ட அனைவரும் கிரேக்கர்களே!

தமிழர்களின் பங்களிப்பு

இந்தக் காலகட்டத்தில் எந்த அறிவியல் வளர்ச்சி _ கண்டுபிடிப்பு இவற்றில் தமிழர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை.

கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை இந்நிலையே. கி.மு.3 _ கி.பி.3ஆம் நூற்றாண்டுவரை சங்ககால மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போர் செயதுவந்தனர். காதல்(அகம்), மோதல்(புறம்) இவையே வாழ்க்கைப் போக்கு.

இடைவேளை:

கி.மு. 100 முதல் கி.பி.4ஆம் நூற்றாண்டு வரை மேலைநாட்டில் அறிவியல் வளர்ச்சிக்கு இடைவேளை. கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை, மேலை நாட்டு அறிவியலில் தேக்கநிலைதான். இக்கால கட்டத்தில் தமிழர்களின் பங்கு பற்றிப் பார்ப்போம். கி.பி.9ஆம் நூற்றாண்டில், பிற்காலச் சோழப் பேரரசு விஜயாலயனால் உருவாகியது.

கி.பி.10ஆம் நூற்றாண்டு

பராந்தக சோழன் மி தில்லை(சிதம்பரம்)க் கோவிலுக்குப் பொன்வேய்ந்தான். (கி.பி.907_953). இராஜராஜன் (985_1014) தஞ்சைப் பெரிய கோயில் கட்டி, பெரிய நந்தி ஒன்றை நிறுவினான்.

கி.பி.11ஆம் நூற்றாண்டு

இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரக் கோயில் நிறுவினான்.

இல்லை; இல்லை; இல்லவே இல்லை!

கி.பி.10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 13ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை, வேதநெறி, மனுதர்ம நெறி, வர்ண, ஜாதி ஒழுக்கம், வேள்விகள் நடத்தல், வேதியர்களுக்கு கொடை _இவைதாம் பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றன. பொதுமக்களுக்குக் கல்வி, வாய்ப்பு (உயர்வர்ணத்தார் தவிர) இல்லை; அறிவியல் அறிவும் இல்லை; அதனால், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லவே, இல்லை! அதேசமயம், மேலை நாடுகளின் நிலையப் பார்ப்போமா?

கி.பி.13ஆம் நூற்றாண்டு

ரோஜர் பேக்கன் என்பார், வானவில் என்பது, முகில் நீர்த்துளிகள் சூரிய ஒளியைக் கண்ணுக்கு நேராக எதிரொளிக்கும் ஒன்று என்று, வானவில் தோன்றும் காரணத்தை அறிந்து கூறினார். இங்கோ, இந்திரதனுசு(வில்)தான் வானவில் என்றனர்.

கி.பி.15_16ஆம் நூற்றாண்டு

அயலவர்கள்

லியார்னடோ டாவின்சி என்னும் இத்தாலியர் (மோனலிசா ஓவியம் தீட்டியவர்) கொள்கை அளவில் பின் வருவனவற்றைக் கண்டறிந்தார். மனித உடல் எங்கும் குருதி ஓடிவருகிறது. சூரியனைக் கோள்கள் சுற்றி வருகின்றன. நிலவு சூரிய ஒளியை எதிரொளிக்கின்றது. புவியும் அப்படியே! என்றார். நிக்கலோயஸ் கோப்பர்நிகஸ் (கி.பி.1473_1543) என்னும் போலந்து நாட்டு அறிஞர், புவி,மற்றும் கோள்கள் சூரியனை வட்டப்பாதையில் சுற்றுகின்றன; என எடுத்துரைத்தார். சைமன் ஸ்டேவன் (கி.1586) என்னும் டச்சுக்காரர், ஆழத்தைப் பொறுத்து நீரின் அழுத்தம் இருக்கும் என்றார். மைக்கேல் செர்வீடஸ் (கி.பி.1511_1553) குருதி இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் முறையைக் கண்டுபிடித்தார்.

கி.பி.16-_17ஆம் நூற்றாண்டு

கலீலியோ கலீலி என்னும் இத்தாலிய அறிவியலார், பின்வருவனவற்றைக் கண்டுபிடித்தார்.

  • தனிஊசல்(Simple Pendulam) தத்துவம்,
  • இருவேறு எடையுள்ள வெவ்வேறு பொருள்களை ஒரே உயரத்திலிருந்து கீழே எறிந்தால் இரண்டும் ஒரே நேரத்தில் விழும்  ஸீ    வியாழனைச் சுற்றித் துணைக்கோள்கள் (Satelities – Moons)  சுற்றுகின்றன.
  • புவி, தன் அச்சில் சுழல்கிறது.
  • நிலவில்,மேடுபள்ளங்கள், மலைகள் உள்ளன.

யோஃகான் கெப்ளர் என்னும் டென்மார்க் நாட்டவர் (கி.பி.1601இல்) பின்வரும் கொள்கையைக் கண்டுபிடித்துரைத்தார்.

எல்லாக் கோள்களும் சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் (Eliptical orbit) செல்கின்றன.

வில்லியம் ஹார்வி என்னும் ஆங்கிலேய மருத்துவர், (1578-_1657)

  • இதயம் ஒரு கைப்பிடி அளவுள்ள தசைப்பிண்டம்.
  • குழாய்கள் வழி குருதியை உடல் எங்கும் இது ஓடச்செய்கிறது. என்றார்.

ஆண்டன் லேவன் ஹூக் என்னும் ஹாலந்து நாட்டறிஞர், நுண்பெருக்காடி(Microscope)யைக் கண்டுபிடித்தார்.

தமிழ்நாட்டவரின் பங்களிப்பு
கி.பி.15_16ஆம் நூற்றாண்டு:

1525ல் தமிழகம் முழுவதும் விஜயநகர அரசர்கள் பிடியில் சிக்கியது. மதுரை நாயக்கர் ஆட்சியில் மதுரையில் பார்ப்பனர்க்கு மட்டுமே கல்வி அளிக்கப்பட்டது. அது, வேத, ஆகம, இதிகாச, புராணக் கல்வியாகும். அறிவியல் மனப்பான்மையே (Scientififc Attitude) தலைகாட்டவில்லை. கி.பி.16_17ஆம் நூற்றாண்டுகளிலும் இதே நிலையே!

கி.பி.17_18ஆம் நூற்றாண்டு அயல்நாட்டவர் பங்களிப்பு:

அய்சக் நியூட்டன் (கி.பி.1642_1727) என்னும் இங்கிலாந்து நாட்டறிவியலாளர் ஒளியின் நிறமாலை  (Spectram); ஈர்ப்பு விசைக்கோட்பாடு, வெற்றிடத்தில் ஈதர் (Ether); ஒளி_துகள் திரள் கோட்பாடு முதலியவற்றைக் கண்டுபிடித்தார்.

ஜோசப் பிரிஸ்ட்டிலி என்னும் இங்கிலாந்து நாட்டவர், உயிரிய வளி (Oxygen); கார்பன் டை ஆக்சைடு இவற்றைக் கண்டுபிடித்தார். லவாஷியர் என்னும் பிரான்சு நாட்டவர் காற்று ஒரு தனிமம் அன்று கலவை என்றார். பென்ஜமின் பிராங்ளின் (கி.பி.1706_1739) என்பார் (அமெரிக்கர்) மின்னலில் மின்சாரம் உள்ளது என மெய்ப்பித்தார்.

மைக்கேல் பாரடே என்னும் இங்கிலாந்துக்கார அறிஞர், காந்தப்புலம் ஊடே மின்சாரம் உருவாக்கலாம் என்றார். ஜேம்ஸ் வாட் என்னும் இங்கிலாந்துக்காரர் (1730_1775) நீராவியின் இயக்கம் பற்றிக் கண்டறிந்தார். எட்வர்ட் ஜென்னர் என்னும் இங்கிலாந்து நாட்டவர் அம்மைத் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார்.

தமிழ்நாட்டவரின் பங்களிப்பு

எதுவும் இல்லை!

கி.பி.19ஆம் நூற்றாண்டு _அயலவர் பங்கு

ஜார்ஜ் ஸ்டீவன்சன் (கி.பி.1830ல்) நீராவி இரயில் பொறி கண்டுபிடித்தார். ஜே.சி.மாக்ஸ்வெல் (1831-_1879) என்பார். மின்துகள் படுத்திருந்தால் மின்புலம் உருவாகும்; எழுந்தோடினால் காந்தப் புலம் வரும், மின்காந்த அலை வேகமே ஒளியலையின் திசைவேகம் என்றார். சார்லஸ் டார்வின் என்னும் ஆங்கிலேயர் (கி.பி.1809_1882) உயிரின உருமலர்ச்சிக் கோட்பாட்டை (Theory of Evolution) வெளியிட்டார். ஜார்ஜஸ் லெமயட்டர் என்னும் பெல்ஜியம் அறிவியலார் பெருவெடிக் கோட்பாட்டினை (Theory of Big Bang)வெளியிட்டார்.

லாப்லேஸ் என்னும் பிரான்சு நாட்டறிஞர் ஆவிமுகில் கோட்பாட்டினை (Nebulae Theory) வெளியிட்டார்.

தமிழ்நாட்டவர் பங்கு

எதுவும் இல்லை!

கி.பி.19_20ஆம் நூற்றாண்டு: அயல்நாட்டவர் பங்களிப்பு

ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் என்னும் அமெரிக்க அறிவியல் வித்தகர் (கி.பி.1879_1955) பின்வரும் அறிவியல் கோட்பாடுகளை வெளியிட்டார்.

  • சார்புக் கோட்பாடு (Theory of Relativity) இதில் அணுஆற்றல் கோட்பாடும் (E=mc2) அடங்கும்.
  • ஈர்ப்புப் புலக் கொள்கை
  • காலவெளிக் கோட்போடு
  • ஒளி மின் விளைவு (Photo Electric Effect)

அய்ன்ஸ்டீன் வரையிலான குறிப்பிடத்தக்க சில அறிவியலாளர்களின் பணிகளை மட்டும் வசதிக்காக எடுத்துக்காட்டியுள்ளோம்.

தமிழ்நாட்டவர் பங்களிப்பு:

எதுவும்இல்லை!

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

– இன்னும் உண்டு அடுத்த இதழில்

“அறிவியல் வளர்ச்சி : அயலவர் – தமிழர் பங்களிப்பு” (பகுதி 2)

(Historical Comparative Study)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *