புதுப்பாக்கள்

செப்டம்பர் 01-15

நிச்சயிக்கப்படாத மரணம்

பக்தனிடம்
வரும் வெள்ளிக்கிழமைக்கு
சேவற் கோழியை
காவுகேட்ட
இசக்கியம்மன் சாமியாடி
அந்த வெள்ளிக்கிழமையில் மரித்தான்.

– கு.ப.விசுனுகுமாரன்,சென்னை -78

பைரவர் அபிஷேகம்

உயிர் இல்லா பைரவருக்கு
உயிர் உள்ள பைரவர்
அபிஷேகம்.
நாய் மூத்திரம் பெய்தது.

– பொ.கணேசன், புளியம்பட்டி

மர நேயம்

ஓசியில் ஏசி தரும்
உன்னதக் கொடையாளிகள்
மரங்கள்
மின்சாரம் இல்லை
தடையில்லா ஏசி
மரங்கள் தலையாட்டுவதால்… மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூயகாற்று
என்னே மரநேயம்!!!!!!
மனிதநேயம் இல்லா ஊரிலும்
இன்னமும் உயிர்வாழ்கிறது
மரநேயம்     – முனைவென்றி  நா சுரேஷ்குமார்

தீர்ந்தது பிரச்சினை!

கொலை செய்யத்
துடித்தவன்
ஆயுதம் தேடியபோது
கண்ணில் பட்டது
கடவுள் சிலை ஒன்று!
விதவிதமான ஆயுதங்கள்
ஒவ்வொரு கையிலும்!
தீர்ந்தது பிரச்சினை!

அவன் அப்படித்தான்…

கண் முன்னே
நிகழ்ந்த
சாலை விபத்தில்
உயிரிழப்பை
பார்த்துப் பதறிய
பின்னும்
கையிலிருந்த
கடைத்தேங்காயை
உடைக்கத் தவறவில்லை வழிப் பிள்ளையாருக்கு
பக்தன்!

சாதனையாளன்:

ரயில் ஏறியபோதும்
புலம்பவில்லை…
மேற்குத் தொடர்ச்சி
மலை ஏறியபோதும்
உளறவில்லை…
முல்லைப் பெரியாறு
சாதனையாளன்
பென்னி குக்…
கல்லும் முள்ளும்
காலுக்கு
மெத்தை என்று…!

– சிவகாசி மணியம்

கழுதை

நான்கு வர்ணங்கள்
பிரிக்கப்பட்டு,
கலைத்துப் போடுவதில்
களைகட்டுகிறது ஆட்டம் !
ஒரே வர்ணம்
ஒன்றாய்க்
கூடிக் கொள்ள
வெவ்வேறு வர்ணங்கள்
வெட்டிக்கொள்வதற்கே
களமிறக்கப்படுகிறது
வெட்டுவதும் வெட்டப்படுவதுமாய்த்
தொடருகிறது ஆட்டம்
இன்றுவரை.
எல்லா வர்ணங்களையும்
ஒன்றாய்க் கூட்டிப்
பிடிக்கத் துடிப்பவருக்கு
எப்போதும் கிடைக்கிறது
கழுதைப் பட்டம்!

– பாண்டூ (orukavithai.com இணையத்திலிருந்து…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *