தங்கள் மகன் அழகிரியின் திருமணத்தை விரைவில் நடத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பணியில் தீவிரமாக இறங்கினர் வேங்கடபதி- மதியழகி இணையர்.
வேங்கடபதி நான்கு ஆண்டுகளுக்குமுன் பணி ஓய்வு பெற்றார். வருமானத்துக்கென்றில்லாமல் தான் பெற்ற கல்வியை மேலும் பலருக்குப் பயன்படச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். இரண்டாண்டுகள் பணி செய்த நிலையில் தனது மகன் அழகிரியின் திருமணத்தை நடத்திவிட முடிவு செய்தார். உடனே அதற்கான பணிகளில் இறங்கினர் நண்பர்கள். பலரிடம் இதுபற்றிச் சொல்லி வைத்தார். நண்பர்கள் சொன்னால் சரியான இடமாக இருக்கும் என நம்பினார்.
ஆனால், அவர் நினைத்தபடி உடனே எதுவும் நடக்கவில்லை. தன் மகனுக்கு உடனே பெண் கிடைக்கும்; திருமணத்தை நடத்திவிடலாம் என்றுதான் நினைத்தார். ஆனால், பெண் தேடும் பணியை ஆரம்பித்த பிறகுதான் அது மிகவும் கடுமையான பணி என்பது தெரிந்தது. அவர் எதிர்பார்த்தபடி அவரின் நண்பர்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. சில நண்பர்கள் தெரிவித்த இடங்களும் அழகிரிக்குப் பிடிக்கவில்லை. தனக்கும் அவை ஏதுவாக இல்லை என்பதை உணர்ந்தார்.
இதனால் வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் பெண் தேடும் பணியில் ஈடுபடலானார்.
“நண்பர்களிடம் மட்டும் சொன்னால் போதாது. கல்யாணப் புரோக்கர்களிடம் சொல்லவும் வேணும். அப்பதான் சீக்கிரம் முடியும்” என்றார் மதியழகி ஒரு நாள்.
ஆனால், வேங்கடபதிக்கு அதில் அதிக ஆர்வம் இல்லை. திருமணத் தரகர்களிடம் சொல்லாமலேயே பெண் பார்த்து, திருமணத்தை நடத்திவிட விரும்பினார். பணத்திற்காகத் தரகர்கள் தேவையில்லாமல் அலையவிடுவார்கள் என்பது அவரது எண்ணம்.
“இப்படியே இருந்தால் அவனுக்கு வயசான பிறகா கல்யாணம் செய்யறது? முப்பது வயதுக்கு முன்னாடியே கல்யாணத்தை முடிக்க வேண்டாமா?” என அடிக்கடி வேங்கடபதியை முடுக்கி விட்டுக்கொண்டிருந்தார் மதியழகி.
இதனால் வேறு வழியில்லாமல் வேங்கடபதி சில திருமண அமைப்பு நிறுவனங்களுக்குச் சென்று அழகிரியின் விவரங்களைப் பதிவு செய்தார். இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்தார்.
அழைப்புகள் ஏதேனும் வந்தால் அதை அழகிரியின் முடிவிற்கே விட்டுவிட வேண்டும் என முடிவு செய்தார். அவர் எதிர்பார்த்தபடி சில இடங்களிலிருந்து அழைப்புகள் வந்தன. அவை பற்றி மதியழகியிடம் தெரிவித்து விவாதித்தார்.
குறிப்பிட்ட ஒரு பெண், அவள் குடும்பம் இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அதுபற்றி அழகிரியிடம் தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
ஆனால், அதுபற்றி அழகிரியிடம் தெரிவித்தபோது அவன் அதை காது கொடுத்துக் கேட்கவே இல்லை. தாங்கள் விரும்பிய இடம் அவனுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கு என அவர்கள் எண்ணினர். ஆனால், அடுத்தடுத்து அவர்கள் தெரிவித்த பல இடங்களையும் அவன் ஆர்வமுடன் கேட்கவில்லை. எதற்கும் பிடி கொடுக்காமல் எல்லா இடங்களையும் நிராகரித்துக் கொண்டே வந்தான் அழகிரி.
இதனால் மதியழகிக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. எதற்காக இவன் எல்லா இடங்களையும் நிராகரிக்கிறான் என எண்ணிக் குழம்பினார். இதுபற்றி அவனிடம் கேட்க வேண்டும் என முடிவு செய்தார். ஒருநாள் அழகிரி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான். அப்போது அவனைப் பார்த்து சற்று கடுமையாகவே கேட்டார் மதியழகி.
“அழகிரி, உன் மனசில என்னதான் நெனைச்சி
கிட்டு இருக்கே?”
அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த அழகிரி அம்மாவின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
”ஏம்மா, என்னாச்சு?” என்று கேட்டான்.
“அப்பா உனக்காக ஓடியாடி பெண் பார்த்துக்கிட்டு இருக்காரு. நீ என்னடான்னா எதுக்கும் பிடி கொடுக்காம அவர் பார்க்கிற இடங்களையெல்லாம் வேண்டாம் வேண்டாம் என சொல்லிக்கிட்டு இருக்கியே. அதனாலதான் கேட்கிறேன். உன் மனசில என்னதான் நெனைச்சிகிட்டு இருக்க, வயசான காலத்தில் அவரை ஏன் கஷ்டப்படுத்துறே,” என்றார்.
ஆனால், அழகிரி ஏதும் பதில் சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.
“ஏதாவது பதில் சொல்லேன்”, என்று கடுமையாகக் கேட்டார் மதியழகி.
சற்று தயங்கியபடியே பதில் சொன்னான் அழகிரி
“அம்மா, அப்பாவை யாரும்மா அலையச் சொன்னது?” இப்பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் மதியழகி.
“என்னடா சொல்றே நீ?”
“அம்மா, நீங்க ரெண்டு பேருமே என்கிட்ட எதுவும் கேட்காம உங்க பாட்டுக்கு ஏதேதோ செய்ஞ்சிகிட்டு இருந்தா அதுக்கு நானா பொறுப்பு?” என்று அழகிரி பதில் சொன்னதும்ம திடுக்கிட்டு நின்றார் மதியழகி.
“நீ என்னதான்டா சொல்ல வர்ற?”
“அம்மா, நீங்க யாரும் பொண்ணு பார்க்க வேணாம். அலையவும் வேணாம்”
“சொல்றதைப் புரியும்படியா சொல்லித் தொலையேன்டா!”
“அம்மா, எனக்குப் பிடித்த பெண்ணை நானே தேர்ந்தெடுத்துட்டேன். அவள் பெயர் ரேவதி. அவளைத்தான் கல்யாணம் செய்ஞ்சுக்க விரும்புகிறேன்.”
நிதானமாகப் பதில் சொன்ன அழகிரியைப் பார்த்துப் பதறினார் மதியழகி.
“இதெல்லாம் தேவையில்லாத வேலை. அப்பாவுக்குத் தெரிஞ்சா ரொம்பவும் சத்தம் போடுவார். யாருடா அந்தப் பொண்ணு?”
“அம்மா, அவ ஒரு டீச்சர். அரசுப் பள்ளியில் வேலை செய்கிறாள். ரொம்பப் படிச்சும் இருக்கா. அப்பாகிட்ட நீதான் சொல்லணும்.”
“இதையெல்லாம் முன்கூட்டியே சொல்லித் தொலைச்சிருந்தா என்ன? உங்கப்பா ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்காரே. இப்போ போய்ச் சொன்னா சத்தம் போடுவாரே! ஏண்டா இப்படிப் பண்றே?”
“நீதான் எடுத்துச் சொல்லணும். நீ சொன்னா அப்பா கேட்காம எங்கே போயிடுவாரு,” என்று சொல்லியபடியே புறப்பட்டுச் செல்ல முயன்றான் அழகிரி.
அவனைத் தடுத்து நிறுத்திய மதியழகி,
“அவள் வீடு எங்கே இருக்கு?”, என்று கேட்டார்.
“அவள் இந்த ஊரில் இல்லை. திருச்சியில் இருக்கா. அதுதான் அவள் சொந்த ஊர்”, என்றான் அழகிரி.
“அவள் எப்படி உனக்கு அறிமுகமானாள்?”
“என் நண்பன் வீட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு அவள் கடலூருக்கு வந்தபோது பார்த்தேன். அவள் அப்பா திருச்சியில் ஜவுளித் தொழில் செய்து வருகிறார்“, என்று பதில் சொன்ன அழகிரி அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் உடனே புறப்பட்டுச் சென்றான்.
அடுத்த நாள் செய்தியறிந்தவுடன் பதறிப்போனார் வேங்கடபதி.
“சின்ன வயசிலேயே அவன் நல்லது எது கெட்டது எது என்பதை அறியாமலேயே இருந்தான். ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது? என்று மதியழகியிடம் கேட்டார்.
“அவனுக்கு நிறையவே நண்பர்கள் இருக்காங்க. அவங்க கூட நம்மிடம் இதுபற்றிச் சொல்லாமல் மறைச்சுட்டாங்களே”, என்று வருந்தினார் மதியழகி.
“ஏதாவது செய்து நம்மை வம்பில் மாட்டிவிடப் போகிறான்” என்று பயந்தார் வேங்கடபதி.
“உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் அந்தப் பெண் யாரென்று விசாரியுங்கள். முடிந்தவரை தடுத்துப் பார்க்கலாம்”, என்றார் மதியழகி.
“உளவு வேலை பார்ப்பதெல்லாம் கேவலம். ஆனால், அழகிரி அந்த வேலையைப் பார்க்க வைச்சுட்டானே”, என்று சொன்னபடியே நாற்காலியில் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்தார்.
அடுத்த சில நாட்களில் நண்பர்கள் உதவியுடன் அழகிரி சொன்ன ரேவதி குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். நடுத்தரக் குடும்பம். ஆனால், அவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதைக் கேட்டால் மதியழகி பதறித் துடிப்பார் என நினைத்தார். மேலும் இந்தத் திருமணம் நடந்தால் நம் உறவினர்களும் நண்பர்களும் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்து வருந்தினார்.
இதையெல்லாம் அவர் மதியழகியிடம் சொன்னபோது அவர் உடல் வெடவெடுத்தது. வியர்த்துக் கொட்டியது. எப்படியாவது இந்தத் திருமணத்தைத் தடுத்துவிடுங்கள் எனக் கெஞ்சினார்.
வேங்கடபதி ஒரு முடிவுக்கு வந்தார். நேரிடையாக ரேவதி வீட்டுக்குச் சென்று அவள் பெற்றோரிடம் பேசி இருவரையும் பிரித்துவிடலாம் என நினைத்தார்.
அந்த முடிவின்படி ஒருநாள் ரேவதியின் வீட்டுக்குச் சென்றார். திருமணம் பற்றிப் பேச வந்திருப்பதாக நினைத்து அவரை ரேவதியின் பெற்றோர்கள் அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு விருப்பம் இருந்தது. ஆனால், வேங்கடபதி தன் முடிவைச் சொன்னவுடன் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் வேங்கடபதியின் விருப்பப்படி ரேவதியிடம் சொல்லி சமாதானப்படுத்திவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
வெளியே சென்றிருந்த ரேவதி அப்போது வீட்டுக்கு வந்தாள். அவளைப் பார்த்தவுடன் சற்றே அதிர்ந்தார் வேங்கடபதி. அழகிரி தனக்குப் பொருத்தமான பெண்ணைத்தான் தேர்வு செய்திருக்கிறான் என மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் அவளிடம் எதுவும் பேசாமல் கிளம்பினார்.
அடுத்த நாள் அழகிரியை அழைத்தார் வேங்கடபதி.
“அழகிரி, நான் சொல்றதைக் கேளு. அந்தக் குடும்பம் நமக்கு ஒத்து வராது. நான் எல்லா ஏற்பாடும் செய்ஞ்சுட்டேன். நமக்குச் சொந்தக்காரங்க வழியில் நல்ல பெண்ணா பார்க்கலாம்” என்றார்.
“எந்த வகையில் ரேவதி குடும்பத்தை உங்களுக்குப் பிடிக்கல?”, என்று எதிர்க் கேள்வி கேட்டான் அழகிரி.
“நமக்குத் தெரியாத குடும்பம். சரிப்பட்டு வராது” என்று மறைமுகமாகவே பேசினார் வேங்கடபதி.
“அதாவது உங்களுக்கு அவர்கள் நம்ம ஜாதி இல்லை என்பதுதான் பிரச்னையா? என்று நேரிடையாகக் கேட்டான் அழகிரி.
“நமக்கு நெருக்கம் இல்லாத குடும்பம் என்றுதான் சொன்னேன். நீ சொன்னதும் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். கலப்புத் திருமணம் என்பதெல்லாம் சரிப்பட்டு வராது.”
“கலப்புத் திருமணமா? நான் ஒரு ஆண். ஒரு பெண்ணைத்தானே திருமணம் செய்ய விரும்புறேன்? கழுதைக்கும் குதிரைக்குமா கல்யாணம் நடக்கப்போகிறது அல்லது ஆணுக்கும் குதிரைக்குமா கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது கலப்புத் திருமணம் இல்லை. அது ஜாதி மறுப்புத் திருமணம்”
இவ்வாறு அழகிரி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் வேங்கடபதி. இப்படிப் பேசுவான் என்று அவர் நினைக்கவே இல்லை.
“ஓகோ. நிறையவே பேச ஆரம்பிச்சுட்ட போல… இப்படிப் பேச உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது என்று தெரியல“, என்றார்.
“அப்பா, இதை எனக்கு சொல்லிக் கொடுத்தது நீங்கதான். நீங்க சொன்னதுதான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது”
அவன் பேசியதைக் கேட்டு சற்றே அதிர்ந்தார் வேங்கடபதி.
“நீ என்ன சொல்றே” என்று கேட்டார்.
“அப்பா, பதினைந்து வருஷத்துக்கு முன்பு நீங்க ஒரு கருத்தரங்கில் பேசுனீங்க. அங்கு என்னையும் அழைச்சிகிட்டுப் போனீங்க. அப்போ நான் பள்ளி மாணவன். அந்தக் கருத்தரங்கில் நீங்க பேசும்போது ஜாதிகளை ஒழிக்கவேண்டும் என்று ஆவேசமாகப் பேசுனீங்க. ஞாபகம் இருக்கா? அதெல்லாம் சும்மா வெத்துப்பேச்சா? பேசுவது ஒன்றாகவும் நடக்கிறது ஒன்றாகவும் இருக்கலாமா? அப்போது நீங்க பேசிய கருத்துகள் எல்லாம் என் மனசில் ஆழமாப் பதிஞ்சு போச்சு. இப்போ நீங்கதான் மாத்திப் பேசுறீங்க. நீங்களும் ஜாதியவாதிதானா?”, என்று அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பிய அழகிரியைப் பார்த்து அதிர்ந்து போனார் வேங்கடபதி.
அன்று இரவு அவன் கேட்ட கேள்விகளை நினைவுபடுத்திப் பார்த்தார். அழகிரி சொன்னது உண்மைதான். ஜாதியை அதிகம் விரும்பாதவர்தான் அவர். ஆனால், எதிலும் தீவிரம் அதிகம் காட்டாதவர். ஜாதி ஒழிப்புப் பற்றி ஒரு கருத்தரங்கில் பேச வாய்ப்புக் கிடைத்தபோது அதற்காகப் பல புத்தகங்களைப் படித்துக் குறிப்புகள் எடுத்தார். தலைவர்கள் கருத்துகளையெல்லாம் படித்துப் பார்த்தார். படிக்கப் படிக்க அவருக்கு ஜாதிய சிந்தனை அகன்று கொண்டே வந்தது. ஆனால், தொடர்ந்து படிக்காமல் விட்டுவிட்டார்.
கருத்தரங்கில் பேசுவதற்காகப் படித்த புத்தகங்களையும் ஜாதி ஒழிப்புப் போராளிகளையும் நினைத்துப் பார்த்தார். ஜாதியையும் மதத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தார்.
சிறு வயதில் படித்த அவ்வையார் பாடல் அவர் நினைவுக்கு வந்தது.
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”
இந்தச் செய்யுளை அவர் வாய் முணுமுணுத்தது.
அடுத்து திருவள்ளுவர் அவர் நினைவுக்கு வந்தார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்“
குறளை முணுமுணுத்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார்.
“ஜாதிகள் இல்லையென்று பேசியதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுதானா? பேசுவது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கலாமா?” என்று அழகிரி கேட்டது அவர் மனதை நெருடியது.
“அரசுப் பணியினைச் சிறப்பாகச் செய்தேன். ஆனால், அது மட்டும் போதாது. அதையும் தாண்டி சமூகத்திறகுப் பயன்படும் செயல்களையும் செய்ய வேண்டும். சமூக சிந்தனைக் கருத்துகளை ஆழமாகப் படித்து அறிந்திருக்க வேண்டும்.” என்று நினைத்த அவர் மீண்டும் கருத்தரங்கில் பேசுவதற்குத் தயாரித்த உரையை நினைத்துப் பார்த்தார்.
அப்போது அவர் மனத்திரை
யில் தந்தை பெரியார் நிழலாடினார்.
“ஒரு சிறு கூட்டம் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தச் செய்த ஏற்பாடே ஜாதி” என்ற பெரியாரின் கருத்தை நினைவுபடுத்திக் கொண்டார்.
அதோடு மட்டுமல்லாமல் ’ஜாதி ஒழிப்புப் புரட்சி’ என்ற புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்துப் படிக்கவும் ஆரம்பித்தார். டாக்டர் கி.வீரமணி டி.லிட்., அவர்களால் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புச்
சிந்தனைகள் தொகுக்கப்பட்ட புத்தகம் அது.
“ஜாதி எனும் வார்த்தையே வடமொழி. தமிழில்
‘ஜாதி’ என்ற வார்த்தையே இல்லை. என்ன இனம்? என்ன வகுப்பு? என்று மட்டும் சொல்லுவார்கள். பிறக்கும்போது ஜாதி வித்தியாசத்தை, அடை
யாளத்தைக் கொண்டு பிறப்பதில்லை. மனிதரில் ஜாதி இல்லை. ஒரு நாட்டில் பிறந்த நமக்குள் ஜாதி சொல்லுதல் குறும்புத்தனம். அயோக்கியத்தனம்”
தந்தை பெரியாரின் இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் படித்த வேங்கடபதி ஒரு முடிவுக்கு வந்தார்.
அழகிரியின் விருப்பப்படி ரேவதியுடன் அவனது திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதே அந்த முடிவு.