சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

கட்டுரைகள் ஜுன் 16-30 2024

வரலாற்றில் புகழோடு வாழு கின்ற
வல்லவராம் நல்லவராம் வி.பி.சிங்கோ
அரசரது குடும்பத்தில் பிறந்த போதும்
அன்பாலும் பண்பாலும் உயர்ந்து நின்றார்!
உரத்தநறுஞ் சிந்தனையால் சமூக நீதி
உயிர்காக்கும் மாண்பினராய் உலகே போற்றும்
அரசியலில் திருப்புமுனை நல்கி நாட்டின்
ஆட்சியில்ஏ ழாம்தலைமை அமைச்சர் ஆனார்!

தலைமைக்கோர் சரியான எடுத்துக் காட்டாய்த்
தாம்திகழ்ந்து மக்களது மதிப்பைப் பெற்றார்!
விலைபோகும் இழிந்தோரை விலைக்கு வாங்கும்
வெறிகொண்டே அலையாமல் எல்லா ருக்கும்
நிலையாகப் பயன்யாவும் நிறைவாய்க் கிட்ட
நெகிழ்வுறவே நாட்டோரின் நெஞ்சில் நின்றார்!
வலைக்குள்ளே சிக்குண்ட மீன்கள் போலும்
வாழ்கின்ற பேரவலம் தவிர்த்தார் அந்நாள்!

எழமாட்டாப் பிற்படுத்தப் பட்டோர் எல்லாம்
இன்புறவும் வளம்பெறவும் இருபத் தேழு
விழுக்காட்டை இடஒதுக்கீட் டாலே எய்தும்
வீறார்ந்த பொன்விடியல் மலரச் செய்தார்!
அழியாத புகழாளர் கலைஞர் தோழர்;
ஆயகல்விப் பட்டங்கள் பெற்றார்! மக்கள்
தொழுகின்ற தூயவராய் ஒளிர்ந்து வாழ்வில்
தொண்டறத்தை எந்நாளும் உயிராய்க் காத்தார்!

அருந்திறலால் நல்லாட்சி புரிந்தார்! மண்டல்
ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்றார்; எல்லாப்
பெருமைக்கும் உரியோராய்ப் பொறுப்பை ஏற்றுப்
பீடுறவே மக்கள்நலத் திட்டம் மூலம்
சிறப்பான செயலாண்மை மிக்கோர் ஆகிச்
சீர்திருத்த உணர்வோடு மக்கள் வேண்டும்
உரிமைகளை ஒப்பரிய சமத்து வத்தை
ஓங்கிடவே செய்தாரைப் போற்று வோமே! 