களத்தில் வென்றோம் ; போர் தொடரும் ! -வழக்குரைஞர் சே .மெ . மதிவதனி

கட்டுரைகள் ஜுன் 16-30 2024

சர்வாதிகாரம் தனது எல்லைக்குச் சென்று மக்களைத் துன்பப்படுத்தும்போது, மக்களின் விழிப்புணர்வால் ஜனநாயகம் உயிர்பெற்று சர்வாதிகாரத்தை வீழ்த்தும். உலகம் முழுவதும், சர்வாதிகாரம் வீழ்ந்த வரலாற்றுப் பாதையை சற்றுக் கூர்ந்து கவனித்தால் அங்கே, மக்கள் ஜனநாயகம் தோன்றியதன் சுவடுகள் தெரியும். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எல்லா நேரங்களிலும் கொடுங்கோன்மை என்பது, ஆயுதம் தாங்கி மக்களை அடக்குவதாக மட்டுமே இருப்பது இல்லை. சில நேரங்களில் அதன் வடிவம் மாறும். கடந்த பத்தாண்டுகளில் அப்படி மாறுபட்ட வடிவத்தில் சர்வாதிகார, கொடுங்கோன்மை ஆட்சியைத்தான் பா.ஜ.க. இந்தியாவில் செயல்படுத்தியது. அவர்கள் கையில் ஏந்தி நிற்கின்ற முதன்மை ஆயுதம் மதவாதம்!

மதம் என்ற கருவியைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தி, பிளவுபட்டு நிற்கும் மக்களை குழுக்களாக மாற்றி, தங்கள் பாசிச அரசியலை நிலைநிறுத்துவதற்காகப் பெரும் முயற்சி செய்தது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், அயோத்தியில் இராமர் கோவில் என்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றதாய் எண்ணி அடுத்த பாய்ச்சலுக்கு பா.ஜ.க. தயாரான நிலையில், மக்கள் தங்கள் கைகளில் இருந்த ஜனநாயக முறையிலான தேர்தலைப் பயன்படுத்தி சர்வாதிகாரச் சிந்தனைக்குக் கடிவாளம் இட்டு, பல திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

இது பெரியார் மண்ணா? பெரியார் மண் எங்கே இருக்கு? என்று வெறுப்பின் உச்சத்தில் கொக்கரித்த கூட்டங்கள் அனைத்தும் இன்று தங்கள் மனதிற்குள்ளே, ஆம்! இது பெரியார் மண் தான் என்று வெதும்பிப் புலம்பும் நிலை. காரணம், இந்தியா முழுமைக்கும் மதவாதத்தை பரப்ப முடிந்த பா.ஜ.க.வினரால், காலடி எடுத்து வைக்க முடியாத தனிப் பகுதியாகத் “தமிழ்நாடு” தலை நிமிர்ந்து நிற்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதைத் தங்கள் வாழ்நாள் சாதனையாகப் பரப்புரை செய்தவர்களுக்கு அந்தத் தொகுதி மக்கள் 2024 தேர்தலில் சிறப்புப் பரிசு (தோல்வி) கொடுத்து அனுப்பி உள்ளனர். ராமரே கைவிட்ட பின், பெரியார் ராமசாமி மண் அவர்களை விட்டு வைக்குமா? 40 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி; பா.ஜ.க நின்ற அனைத்து இடங்களிலும் தோல்வி; 11 இடங்களில் வைப்புத் தொகை இழப்பு!

மேற்சொன்ன அனைத்தும் ஒரு செய்தியை நினைவுபடுத்துகின்றன. தந்தை பெரியார் ஓர் எதிர்நீச்சல்காரர். கொண்ட கொள்கையில் வெற்றி பெற, அனைத்து வகை முயற்சிகளையும் மேற்கொள்ளத் துணிந்தவர். அவ்வகையில் தனது கொள்கை பரப்பும் ஏடான ‘குடிஅரசு’க்குத் தடை விதிக்கப்பட்டபோது சற்றும் தளராமல் “புரட்சி” எனும் வார இதழை வெளியிட்டார். அந்த இதழ் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தை பெரியார் இப்படியாக எழுதுகிறார்:

“மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி.
மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி.
மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி.
மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி.
மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை.
மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்.
மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.
மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி, என்கின்ற முடிவின் பேரிலேயே ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம்
வேண்டாம்

“(‘புரட்சி’ – 26.11.1933)

பெரியார் மேலும் “ஏன் ஒரு குறிப்பிட்ட மதம், கடவுள், அரசாங்கம் இவற்றை நீங்கள் ஆதரிக்கக்கூடாது என்று உங்களிலே பலர் கேட்கலாம். இந்தப்படியான மதம், கடவுள், அரசாங்கம் முதலியவை அவரவர் கட்சிக்குப் பயன்படுகிறதே தவிர, மக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அறிவுள்ளவர்களாக்கி, மக்களுக்குள்ளே இருக்கும் உயர்வு தாழ்வுகளை ஒழித்து எந்தவிதமான சமத்துவத்தையோ, ஒழுங்கையோ, ஒழுக்கத்தையோ நிலைநாட்ட வில்லை என்பதால்தான்!

எந்த மதம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அந்த மதம் மனித சமுதாயத்தைப் பிரித்து வைக்கிறது – வைத்திருக்கிறது. நம்முடைய மதம் இன்னது என்று கூறிக் கொள்ளத்தான் முடிகிறதே யொழிய, வேறென்ன இவற்றால் லாபம்?” – எனக் கேட்கிறார்.

மதம் என்பது மனிதனின் சுயமரியாதை, சமத்துவம், சமூக சமதர்மம் ஆகிய அனைத் திற்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதை மட்டும் பெரியார் விளக்கவில்லை. மாறாக, மதம் யாருக்கு லாபம் ஈட்டும் கருவி என்பதையும் விளக்கியுள்ளார். உலக அளவில், கொடுங்கோன்மைச் சிந்தனை படைத்தவர்களின் உற்ற துணையாக மதம் தான் நின்று இருக்கிறது. அவ்வழியே இந்தியாவில் பா.ஜ.க.வின் கொடுங்கோலாட்சிக்கும் உற்ற துணையாக மதம் தான் நிற்கின்றது என்பது எத்துணை பொருத்தமான செய்தி! அப்படியான கொடுங்கோலாட்சியை நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு உற்ற துணையாக நிற்கின்ற மதவாதம், இன்று மக்களின் சுயமரியாதை உணர்வால், சமூக, சமத்துவ சிந்தனையால் ஜனநாயகத்தின் முன் மண்டியிட்டுள்ளது. பெரியார் வென்று நிற்கிறார்.
காலங்களும் காட்சிகளும் மாறி வருவதன் விளைவாக, பிரதமராகப் பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வணங்குகிறார்; அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்கிறார்.

எந்த மதத்திலும் நமக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும், மதத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்களைக் காத்து நிற்கும் சமூகப் பொறுப்பு பெரியாரின் மாணவர்களாகிய நமக்கு உண்டு. இந்தப் புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்தும் விதத்தில் ஜனநாயகத்தைக் காக்க, பாசிசத்தை வீழ்த்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரப் பெரும் பயணம் மேற்கொண்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

91 வயதில் 16 நாட்கள் தொடர் பயணம்; 27 பரப்புரைக் கூட்டங்கள்; 24 நாடாளுமன்றத் தொகுதிகள்; 3600 கி.மீ பயணம்; 1250 நிமிட உரை; 225 கி.மீ தூரம் நாளொன்றுக்கு பயணம் செய்வது என்பது எளிதான காரியமா? கருப்புச் சட்டை தான் இந்த இனத்தின் காவல் சட்டை என்பதை வரலாற்றில் மீண்டும் ஒரு முறை நிரூபித்த பயணம்; மதவாதம் மனிதத்திற்கு எதிரி என்பதை விளக்கிப் பரப்புரை செய்வதற்காக மேற்கொண்ட பயணம்; எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிடத் தத்துவத்திற்கு எதிரானது ஆரியம். அதன் வடிவம் தான் பா.ஜ.க. என்பதை மக்களுக்கு எடுத்துரைத்த பயணம்; சர்வாதிகாரத்தை வீழ்த்த நம் கையில் உள்ள ஆயுதம் தான் உங்கள் வாக்கு என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் உரக்கச் சொன்ன பயணம்; இனம் காக்கும் போரில், சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம் காக்கும் களத்தில் ஆசிரியரின் பரப்புரைப் பயணம் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாடு வழக்கம்போல் இந்தியாவுக்கே வழிகாட்டி நிற்கிறது !
களத்தில் வென்றோம்; போர் தொடரும் ! 