1.கே: குறைந்த பட்ச செயல் திட்டங்களைக் கூட வரையறுக் காமல் பா.ஜ.க.வை அய்ந்து ஆண்டுகள் ஆள, நிதீஷ் அவர்களும் சந்திரபாபு நாயுடு அவர்களும் துணை நிற்பது அவர்களுக்கே கூட கேடாக முடியும் அல்லவா?
– எல். வேலாயுதம், குடியாத்தம்.
ப : அதை உணரவேண்டியவர்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. வெகு விரைவிலேயே உணரும் நிலை ஏற்பட்டால் அது வியப்புக்குரியதாகாது!
2. கே: பா.ஜ.க.வை கட்டுக்குள் வைக்காமல், அய்ந்து ஆண்டுகள் முழுமையாக ஆளவிட்டால் மற்ற கட்சிகளை உடைத்து, குதிரை பேரம் நடத்தி தன்னை முழு வலிமையுடன் பா.ஜ.க. ஆக்கிக்கொள்ளும் ஆபத்து இருப்பதால் இப்போதே மாற்றுத் தீர்வை தங்களைப் போன்றவர்கள் காணவேண்டியது கட்டாயம் என்ற மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
– ப. சாமிகண்ணன், வேலூர்
ப : காலம் சில கடமைகளை நிறைவேற்றும். நம்பணி எப்போதும் போல அடக்கமான பணி. நம்மை முன்னிலைப்படுத்திப் பழக்கப்பட்டவர்கள் அல்ல நாம்!
3. கே: தேர்தலிலே நிற்காத உயர்ஜாதியினருக்கே முதன்மைத் துறைகள்; இஸ்லாமியருக்கு அமைச்சர் அவையில் இடமில்லை; பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடம் இல்லை என்ற நிலை, பி.ஜே.பி. தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்பதைத்தானே காட்டுகிறது?
– இராஜகோபால், பட்டுக்கோட்டை
ப : ஆம் என்க! சான்றுகள் அப்படித்தான் இதுவரை என்று கூறும் நிலை. ஓநாய் எப்போது சைவமாகும்?
4. கே: “மதத்தைவிட மக்கள் பிரச்சினைகளே முதன்மையானது என்பதை உத்தரப்பிரதேச மக்கள் உணர்த்திவிட்டனர்” என்று பிரியங்கா காந்தி கணிப்பு பற்றி தங்கள் கருத்து என்ன?
– சாமுவேல், ஆரணி.
ப : நூற்றுக்கு நூறு சரியானது. மறுக்க முடியாத உண்மையும்கூட!
5. கே: ‘நீட்’ தேர்வுக்கான எதிர்ப்பு இந்தியா முழுவதும் இப்போது எழுச்சி பெற்றுள்ளதால், நாடு தழுவிய போராட்டமாக ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்வீர்களா?
– காந்திமதி, புரசைவாக்கம்.
ப : நமது பணி வழமைபோல. மேற்சொன்ன பதிலே இதற்கும்!
6. கே: பா.ஜ.க.வுடன் முரண்பட்ட கொள்கை உள்ள நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு இருவரும் எப்படி அய்ந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட முடியும்? கிடைத்தற்கரிய வாய்ப்பை இருவரும் சரியாகப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
– சுஜாதா, வண்டலூர்.
ப : பழைய அனுபவங்களை நினைவூட்டிக் கொண்டு, விழித்துக்கொள்ள வேண்டும்; தவறினால் கடும் விலை தரவேண்டியிருக்கும்.
7. கே: அரசியல் சாசனத்தை மோடி வணங்குவது மனமாற்றத்தின் அடையாளமா? ஏமாற்று வேலையின் தொடர்ச்சியா?
– எல். வேலப்பன், ஆர்க்காடு.
ப : பின்னதே சரியானது.
8. கே: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ‘நீட்’ தேர்வு வழக்கை உடனடியாக முடிக்க, மக்கள் போராட்டத்தின்போது அழுத்தம் கொடுப்பது சரியாக இருக்குமா?
– சாந்தி, தாம்பரம்.
ப : உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான புதிய வழக்குகளும் போடப்பட்டு வருகின்றன-‘நீட்’டின் ஊழல் மலைமலையாக வருவதால்.
இறுதியில் விடியல் மக்கள் மன்றத்தால் மட்டுமே முடியும். மக்கள் கைகளில்தான் இருக்கிறது தீர்வு!