நாடு முழுவதும் ஒன்றிணைந்து போராடுவோம்! கேடு தரும் ‘நீட்’ தேர்வை ஒழிப்போம்!

Uncategorized முகப்பு கட்டுரை ஜுன் 16-30 2024

ஆரிய பார்ப்பனர்கள், சமூகநீதியை எப்படியெல்லாம் வளைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, மற்ற மக்களின் உரிமைகளைப் பறிப்பர் என்பதற்கு நீட் தேர்வும், பொருளாதார அடிப்படையில் முற்பட்டோருக்கு இடஒதுக்கீடும் சரியான சான்றுகள் ஆகும். ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதே ஆதிக்கம் செலுத்தியவர்கள், தற்போது பி.ஜே.பி. ஆட்சியில் முழுமையாக தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். நீட் தேர்வைக் கொண்டு வந்த இந்த ஆதிக்கக் கூட்டம், பழியை தி.மு.க.வின்மீது போடும் மோசடியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்த போது அதன் ஆதரவோடுதான் ‘நீட்’ கொண்டு வரப்பட்டது என்று குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், உண்மையில் நடந்தது என்ன?

தி.மு.க. நீட்டை ஆதரித்ததா ?

2.12.2010 அன்று காங்கிரஸ் ஆட்சியில் ‘நீட்’ சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தக் கட்டத்திலேயே தி.மு.க. அதனை எதிர்த்தது. ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு ‘நீட்’டைக் கைவிடுமாறு வலியுறுத்தியதோடு அமைதி காக்கவில்லை தி.மு.க.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையும் தொடுத்தது. நீதிபதி திரு.ஜோதிமணி அவர்கள் ‘நீட்’டுக்குத் தடையும் விதித்தார்.

‘நீட்’டை எதிர்த்து 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எல்லா வழக்குகளையும் ஒன்றிணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.

நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையில் அமைந்த அந்த அமர்வில் நீதிபதிகள் விக்ரமஜித் சென்.ஏ.ஆர்.தவே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஏ.ஆர்.தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மற்ற இரு நீதிபதிகளும் ‘நீட்’ சட்டம் செல்லாது என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 25, 26, 29, 30 பிரிவுகளின்படி மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் உரிமை கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தீர்ப்பு அளித்தனர் (18.7.2013).

அத்தோடு ‘நீட்’ சட்டத்தின் கதை முடிந்து போயிற்று. ஆனால், அதன்பிறகு நடந்தது என்ன?

2014 இல் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் உச்சநீதிமன்றத்தில் அந்தப் பெரும்பான்மைத் தீர்ப்பின்மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தது போல், எந்த நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினாரோ- ‘நீட்’ தேர்வு செல்லும் என்றாரோ – அந்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் அமைந்த அமர்வு பி.ஜே.பி. அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவினை விசாரிக்க அமர்த்தப்பட்டது. எதிர்பார்த்தபடியே ‘நீட்’ செல்லும் என்று அந்த அமர்வு தீர்ப்பு அளித்தது. ஆக, புதைக்கப்பட்ட நீட் தேர்வை, தோண்டி எடுத்து, உயிர்ப்பித்தது, மாணவர்க்கு எதிரான செயலைச் செய்தது பா.ஜ.க. அரசுதான் என்பதை அனைவரும் ஆழமாக உள்ளத்தில் கொள்ள வேண்டும். (16.3.2016).

‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி அ.இ.அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த இரு மசோதாக்களுக்கும் சட்டப்பேரவையில் தி.மு.க. ஆதரவும் அளித்தது.

2021 தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டி ருந்தபடி, ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு தந்த அறிக்கையின்படி ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது (13.9.2021).

முறைப்படி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர்-திரு.ஆர்.என்.ரவி (1.2.2022).

தமிழ்நாட்டுக்கு ‘நீட்’டிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பதில் எப்பொழுதுமே உறுதி யான நிலையில்தான் தி.மு.க. இருந்து வருகிறது.

7.6.2024 அன்று நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் தளப் பதிவில் ‘‘‘நீட்’ தேர்வை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளார்.

2024 மக்களவைக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘நீட்’டிலிருந்து விலக்கு வேண்டும் என்று விரும்பும் மாநிலங்களுக்கு, அந்த உரிமை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.ஆனால் அதற்கான வாய்ப்பு ‘இந்தியா’ கூட்டணிக்குத் தற்போது கிடைக்கவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்வரை பொறுக்க முடியாத அளவிற்கு ‘நீட்’ சீர்கேடுகள் மோசமாகி வருகின்றன.
அண்மையில் நடந்த ‘நீட்’ தேர்வில் அப்பட்டமான முறைகேடுகள்!

‘நீட்’ தேர்வு நேர்மையாக நடக்கிறதா? அதில் முறைகேடு கிடையாதா?

இந்தக் கேள்விக்கு நாடாளுமன்றத்திலேயே அதிகாரப்பூர்வமான பதில் கிடைத்திருக்கிறது.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த மக்க ளவை உறுப்பினர் பூரா நர்சையா கவுட் என்பவர், ‘நீட்’ தொடர்பாக 2.4.2018 அன்று எழுப்பிய வினா –

‘‘மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வினை நடத்தும் புரோமெட்ரிக் எனும் அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வு தொடர்பான மென்பொருளைக் கையாட முடியும் என்று ஒப்புக்கொண்டுள்ளதா?”

இந்தக் கேள்விக்கு மனிதவளத் துறையின் இணையமைச்சர் டாக்டர் சத்யபால் சிங் அளித்த பதில்:

‘‘2017ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வை அமெரிக்க நிறுவனமான புரோமெட்ரிக் நிறுவனத்துடன் நடைபெற்ற தொலைப்பேசி உரையாடலில், தங்களது மென்பொருள் கையாடப்பட்டதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது – இதன் அடிப்படையில் டில்லி உயர்நீதிமன்றத்திலும் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது” என்று ஒன்றிய அமைச்சரே மக்களவையில் ஒப்புக்கொண்டுள்ளாரே!

அப்படியென்றால், அந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தியிருக்கவேண்டாமா? தவறுக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? இந்த முறைகேடுகளுக்கு மோடி அரசின் நடவடிக்கைகள் என்ன? காணப்பட்ட தீர்வுகள் யாவை? பதில் உண்டா?

இவ்வாண்டு மே 5 ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் நடந்தது என்ன? ஏடுகள் எல்லாம் கைகொட்டி நகைக்கின்றன. தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

தேசிய அளவிலான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்தது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’-இளநிலை 2024) முடிவுகளை ஜூன் 4 ஆம் தேதி வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டைச் சோ்ந்த 8 மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் 720–க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனா்.

இந்த நிலையில், ‘நீட்’ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்கள் சந்தேகிக்கின்றனர். ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களைப் பிடித்த மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாலும் குழப்பம் மேலும் நிலவுகிறது. ‘நீட்’ தேர்வில் ஒரு கேள்விக்குத் தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால் கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என சக மாணவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 7.6.2024 அன்று வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப் பதிவில், ‘‘நீட்டிலும், பிற தேர்வுகளிலும் பங்கேற்ற மாணவர்களுக்கு நீதி வேண்டும். எனவே, நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்மட்ட விசாரணை நடத்தவேண்டும்” என்று கோரினார்.

மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மராட்டிய மாநில அரசு சார்பில் தேசிய மருத்துவக் கவுன்சிலிடம் முறையிடுவோம் என்று மராட்டிய மாநில அமைச்சர் அசன் முஷ்ரிப் அறிவித்துள்ளார்.

“நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் மராட்டிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மோசடியாக அரியானா, ராஜஸ்தான் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தேர்வு மய்யங்களில் மோசடியாகத் தேர்வெழுதி அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இது தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், குறிப்பாக தேர்வெழுதிய மராட்டிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தேசிய மருத்துவக் கவுன்சிலிடம் புகார் அளிக்க உள்ளோம்” என்று அமைச்சர் அசன் முஷ்ரிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மற்ற மாநிலங்களிலும் ‘நீட்’டிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

‘‘நீட்” தேர்வு என்பது தகுதி – திறமையை உயர்த்துகிறதா?

நுழைவுத் தேர்வுகளைப்பற்றி நாம் சொல்லுவதைவிட நீதிபதிகள் வாயிலாகக் கேட்பது பொருத்தமானதாக இருக்கும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் கூறியது நுட்பமானது – கவனிக்கத்தக்கது.

‘‘நுழைவுத் தேர்வு நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட, ‘‘கோன் பனேகா குரோர்பதி” தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போல், அனுமானத்தின் அடிப்படையில் விடைகள் ‘டிக்’ செய்யும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்கள்!

இப்பொழுது ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட இரண்டாண்டுகள்வரை காத்திருந்து, பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு, தனிப்பயிற்சியில் சேர்ந்தவர்கள்தானே பெரும்பாலும்? இது எல்லோராலும் ஆகக் கூடிய காரியமா? ‘நீட்’டில் மோசடி நடக்கவில்லையா? மோசடியாக மதிப்பெண் பெற்றவர்கள்தாம் தகுதி – திறமை உள்ளவர்களா?

‘நீட்’டில் முதுகலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 45 டாக்டர்கள் உள்பட 52 பேர்மீது சி.பி.அய். வழக்குத் தொடர்ந்ததே இத்தேர்வின் முறைகேட்டை வெளிப்படுத்துகிறது.
பன்னிரண்டு வகுப்புவரை படித்து – அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டர் ஆனவர்கள் எல்லாம் தகுதி குறைவானவர்களா?

மகாராட்டிரத்தில் லோனி நகர் பிரவாரா மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.அய். என்ற அடிப்படையில், 3,26,385 ஆவது ரேங்கில் இருந்த ஒருவருக்கு இடம் கிடைத்ததே! அது எப்படி?

இதுதான் தகுதியை உயர்த்தும் லட்சணமா?
கோவாவில் சிறீதேவராஜ் மருத்துவக் கல்லூரியில் ரேங்க் வரிசையில் 8,76,357 ஆம் இடத்தில் இருந்த ஒருவருக்கு என்.ஆர்.அய். என்ற அடிப்படையில் (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 27.3.2022) இடம் கிடைத்ததே – இப்படி நடக்கையில் நீட்தேர்வு தகுதியை உயர்த்துகிறது என்று கூறுவது பித்தலாட்டம் அல்லவா?

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் முதல் தலைமுறையாகப் படித்து டாக்டராக வேண்டும் என்று கனவு கண்ட அரியலூர் (குழுமூர்) அனிதா 2017 இல் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200–க்கு 1176 மதிப்பெண் பெற்றாரே! (பத்தாம் வகுப்பில் 500–க்கு 476) இது தகுதி திறமைக்கு அடையாளம் கிடையாதா? அவருக்கு ஏன் மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை? நீட் என்ற அநீதியால்தானே?

இவ்வளவு உயர்தகுதியுள்ள தாழ்த்தப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு நீட்தானே காரணம்?

‘நீட்’ என்பது சமூகநீதியைக் கொலை செய்யும் கண்ணிவெடி என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

‘நீட்’ என்னும் இக்கொடிய தேர்வால், தமிழ்நாட்டில் மட்டும் தற்கொலை செய்துகொண்டவர்கள் 27 இருபால் மாணவர்கள். வட மாநிலங்களிலும் கூட குறிப்பாக ராஜஸ்தானில் 2016 இல் 17, 2017 இல் 7, 2018 இல் 18, 2023 இல் 15, 2024 இல் 15 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரத்தைப் பார்த்த பிறகும் பிரதமர் மோடிக்கும், அவரின் சித்தாந்த தாய்வீடான ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கும்பலுக்கும் இதயம் கனக்கவில்லையே! உயர்ஜாதி ஆணவ ஆதிக்கக்காரர்கள் திட்டமிட்டு நீட்டை நடத்தி வரும் நிலையில், இரக்கம் எப்படி வரும்?

‘நீட்’டினால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

2016 இல் ‘நீட்’ இல்லாதபோது அரசு மேனிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பெற்ற இடங்கள் 30; ‘நீட்’ வந்த பிறகு, வெறும் 5 இடங்கள். ‘நீட்’ இல்லாதபோது, மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 3546. ‘நீட்’ வந்த பிறகு கிடைத்திட்ட இடங்கள் 2314. இழப்பு 1232 இடங்கள்.

‘நீட்’ இல்லாதபோது 2016 இல் சி.பி.எஸ்.இ. மாண வர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 12. ‘நீட்’ வந்த பிறகு, அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220. அதாவது 20 மடங்கு அதிகம்! ‘நீட்’ என்னும் சதித்திட்டத்தைப் புரிந்துகொள்ள இது போதாதா?

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.ஏ.கே.ராஜன் தலைமையிலான ‘நீட்’ தொடர்பான அறிக்கை தரும் புள்ளி விவரத்தைப் பார்த்தால் இது புரியுமே!
இவ்வாண்டு நிலை என்ன? (2022)
மொத்த இடங்கள்: 6,999
அரசு கல்லூரிகள்: 4,349 இடங்கள்
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்: 2650 இடங்கள்.

மாநில படத்திட்டத்தை மண்ணில் புதைக்க வந்ததுதானே நீட்?

மாநிலப் பாடத்திட்டங்களை ஒழித்து, மாநிலக் கல்விக்கூடத்தில் மாணவர்களை சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு இழுக்கும் மறைமுக ஏற்பாடுதானே இந்த நீட் தேர்வு?

சி.பி.எஸ்.இ. மாணவர்களின் ஆதிக்கம் தரவரிசைப் பட்டியல்:

முதல் 10 ரேங்கில்,

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8,

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2,

முதல் 100 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 81,
மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 17,

முதல் 1000 ரேங்கில், மாநில பாடத் திட்டத்தில் படித்த 394 மாணவர்கள் மட்டுமே தேர்வு.

‘நீட்’ தேர்வுக்குமுன், மாநில பாடத் திட்டத்தில் படித்த 98.2 சதவிகித மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடிந்தது. தற்போது அது 59 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

‘நீட்’ தேர்வுக்கு முன், கிட்டத்தட்ட 14.8 சதவிகிதம் தமிழ் வழி மாணவர்கள், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அது 2 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கும், வசதி படைத்த குடும்பத்தினருக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளது.

நீட் தேர்வு முறை கேட்டால், 20.38 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யார் யாருக்கு இடம் கிடைத்துள்ளது?

ஆங்கில ‘இந்து’ பத்திரிகையில் 6.2.2022 அன்று வந்துள்ள ‘நீட்’ தேர்வு குறித்த கட்டுரையிலும், பிளஸ் 2 வில் 1137 மதிப்பெண் பெற்ற நட்சத்திர ப்ரியா, 2017 இல் ‘நீட்’ எழுதத் தொடங்கி, மூன்று ஆண்டுகால முயற்சிக்குப் பின், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் காரணமாக நெல்லை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. மூன்று ஆண்டுகாலம் வீண் அல்லவா? பிளஸ் 2 அடிப்படையிலேயே இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?

தகுதிப் பட்டியலில் 9,976 பேர் மட்டுமே இவ்வாண்டு தேர்வெழுதியோர். 14,973 பேர் திரும்ப எழுதியவர்கள் (ரிப்பீட்டர்ஸ்). அதாவது 2, 3, 4 ஆண்டுகள் கோச்சிங் சென்று விடாது படையெடுப்போர். வசதி, வாய்ப்பு உள்ளவர்களால் மட்டுமே பல லட்சங்கள் செலவு செய்து, ஒரே தேர்வை ஈராண்டு, மூவாண்டு எழுத செலவிடவும் முடியும். குடும்பச் சூழலும் அதை அனுமதிக்கும். சேர்க்கை முடிவில் இன்னும் தெளிவு பிறக்கும். மறுமுறை தேர்வு எழுதுவோரும், நடப்பாண்டு படிப்பை முடித்துவரும் புதியவர்களும், ஒரே தேர்வை எழுதினால், யாருக்குச் சாதகமாக அத்தேர்வு அமையும் என்பது வெளிப்படை. அதுதான் ‘நீட்’ தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘நீட்’ தேர்வு, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தேர்வை பலமுறை எழுதவும், கோச்சிங் மூலம் பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. நடப்பு ஆண்டிலும் அதே நிலைதான்.

மாநில அரசுக்கு உரிமை உண்டு!

ஆகவேதான், மக்கள் நலன் சார்ந்த அரசு என்கிற முறையில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்ற முயல்கிறது. அரசமைப்புச் சட்டப்படியும் அத்தகைய சட்டம் கொண்டுவர எந்தத் தடையும் இல்லை என்கிற நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்தபடி, மீண்டும் ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது நியாயமான, சமூகநீதியின்படியான நடவடிக்கையே!

‘‘தேர்வு மார்க்குகள் – திறனறிவின் உண்மை அளவு கோல் ஆகாது” என்ற உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பில் இரு நீதிபதிகளின் தீர்ப்பின்படியேகூட, நீட் தேர்வு ஏற்கத்தக்கதா?

என்.ஆர்.அய். (வெளிநாட்டில் வாழும் இந்தியர்) என்ற பெயரில் 158 பேர் ஒரே இரவில் என்.ஆர்.அய். ஆகி, எம்.பி.பி.எஸ். இடங்களைப் பிடித்தனர். டாக்டர் ஆவதற்கு ஒரு கோடி ரூபாய்க்குமேல் கட்டணம் செலுத்தக் கூடியவர்கள் இவர்கள்.

உண்மையில் ‘நீட்’ மருத்துவக் கல்வியை விலை உயர்ந்த படிப்பாகவும், ஏழை மக்களை வெளியேற்றும் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது என்று பேராசிரியர் திலீப் மண்டல் குறிப்பிடுவது எவ்வளவு பெரிய உண்மை என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் எதிர்த்த மோடி
இப்போது ஆதரிப்பது ஏன்?

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது, ‘நீட்’டைப்பற்றிய நிலைப்பாடு என்ன?

குஜராத் மாநில அரசு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ‘நீட்’ தேர்வு குறித்து, தமது மாநில நிலைப்பாடு என்ன என்பது குறித்து குஜராத் மாநில சுகாதார அமைச்சர் ஜெயநாராயணன் வியாஸ் எழுதியது என்ன?

‘‘எங்கள் மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்பது எங்கள் மாநில உரிமையாகும்.

இந்திய மருத்துவக் கவுன்சில் எங்களை ‘நீட்’டுக்காகத் தயாராகுமாறு கூறியிருந்தது. ஆனால், எங்களால் ‘நீட்’ தேர்வை ஏற்க முடியாது. எங்கள் மாநிலத்திற்கென்று சிறந்த கல்வி அமைப்பு உள்ளது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் எங்கள் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ‘நீட்’பற்றி ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்தோம். அந்தக் குழு மாநில அரசின் பாடத் திட்டத்தின்படி படிக்கும் மாணவர்களுக்கு ‘‘நீட்” தேர்வு சுமையை ஏற்படுத்தும் என்று அந்தக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆகவே, நாங்கள் ‘நீட்’டை ஏற்றுக்கொள்ள முடியாது.”

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி சொன்ன அதே கருத்தையே நாங்கள் சொல்லுகிறோம். பிரதமரான பிறகு அந்தர்பல்டி அடிப்பது ஏன்? மாணவர்களுக்கு மோடி செய்யும் மகா துரோகமல்லவா இது?

திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் சமூக நீதியை தன் விழியென உயிர்மூச்சாகக் கொண்ட இயக்கம். தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டதே சமூக நீதிக்காகத்தான்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தது – தந்தை பெரியாரும், இந்த இயக்கமும்தான்!

இந்தியாவிலேயே 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்ட 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு தமிழ்நாட்டில் நிலைக்கிறது என்றால், அதற்கு அடித்தளமும், ஆணிவேரும் திராவிடர் கழகமே!

அகில இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்ற இயக்கமும் திராவிடர் கழகமே!

‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு திராவிடர் கழகத்தின் மாநாடுகள், போராட்டங்கள், பேரணிகள் எத்தனை எத்தனை!

எடுத்துக்காட்டாக அரக்கோணத்தில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பு மாநாடு (19.11.2016), திருச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அடங்கிய முத்தரப்பு மாநாட்டை நடத்தியதும் திராவிடர் கழகம்! (19.12.2016).

2017 மார்ச் 18 முதல் மார்ச் 21 வரை ‘நீட்’டை எதிர்த்து

திராவிடர் கழக மாணவர் கழகத் தோழர்களின் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம்- தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டது.

3.4.2022 முதல் 25.4.2022 வரை நாகர்கோவில் முதல் சென்னை வரை, நீட் மற்றும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து தலைமையில் தொடர் பிரச்சாரப் பயணம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாய் இருந்தாலும் நீட்டிற்கு எதிரான போரில் முன்னணியில் நின்று வருகிறது. சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘நீட்’டை ஒழிப்பதில் தொடர்ந்து இடைவிடாது போராடி வருகிறார். ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும், ஆளுநரையும் வலியுறுத்தி வருகிறார். தமது அரசின் முதன்மை இலக்காக ‘நீட்’ ஒழிப்பை அவர் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பி.ஜே.பி.யைத் தவிர அனைத்துக் கட்சிகளும் நீட்டை எதிர்க்கக் கூடியவைதான்.
காரணம், இது பெரியார் மண் – திராவிட பூமி!

‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவி சாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்? என்ற வினாவை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியும் ‘நீட்’டை எதிர்த்துக் கருத்துக் கூறியுள்ளார்.

தேர்வுக்குமுன் மனஉளச்சல்
ஏற்படுத்தும் சோதனைகள்

தேர்விற்கு வரும்போதே திட்டமிட்டு, உளவியல் ரீதியாகத் தாக்குதல் நடத்தி. மாணவர்களுக்குப் பதற்ற சூழலை உருவாக்கினர். இத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வெழுத வந்த மாணவர்களை தீவிரவாதிகளைப் போன்று தேர்வுத் துறையினர் நடத்திய கொடுமைகள் அரங்கேறின.

’நீட்‘ தேர்வு எழுத வந்த மாணவியரின் கம்மல், மூக்குத்தி, கொலுசு ஆகியவற்றை அகற்றியதுடன் தலை முடியையும் கலைத்தனர். இதனால் மாணவியர் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் தேர்வு மய்யத்துக்கு வந்தவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டரால் பரிசோதிக்கப்பட்டனர்.

தேர்வுக்குச் சென்ற மாணவர்களுக்குக் கடுமையான சோதனைகள் செய்யப்பட்டதால் தேர்வு எழுதச் சென்ற மாணவ- மாணவிகள் கடுமையான இன்னல்களுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாயினர்.

இது தங்கள் எதிர்கால வாழ்வுக்கான தேர்வு என்ற எண்ணத்தோடு தேர்வு எழுதச் செல்பவர்களை, கடுமையான உளவியல் நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைப்பதும் திட்டமிட்ட நடவடிக்கைகள் அல்லாமல் வேறு என்ன?

’நீட்’ தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன?

தாழ்த்தப்பட்டவர்கள் 20,009 பேர்களும், பிற்படுத்தப்பட்டவர்களில் 63,479 பேர்களும், உயர்ஜாதியினரில் 7,04,335 பேர்களும் தகுதி பெற்றுள்ளனர் என்கிற இந்தப் புள்ளி விவரம் போதாதா?- ‘நீட்’டால் பாதிக்கப்படுவோர் யார்? பலன் பெறுவோர் யார் என்பதற்கு?

உத்தரப்பிரதேசத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றோர் 72.6 விழுக்காடு; தமிழ்நாட்டிலோ 92.54 விழுக்காடு.
ஆனால், “நீட்” தேர்விலோ அந்த மாநிலம் முதலிட மாநிலங்களில் இடம் பெற்றுவிட்டது. பன்னிரண்டு ஆண்டுகள் படித்த படிப்பில் வாங்கப்படும் மதிப்பெண்கள் மலந்துடைக்கும் காகிதமாகவும், மேல்தட்டுக் கல்வி முறையில் படிப்பவர்களுக்கு மலர்ச்செண்டும் கொடுத்து வாழ்த்தும்; இந்தச் சமூக அநீதிக்கு முடிவு கட்டப்பட வேண்டாமா?

சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசு, எப்படியும் உயர்ஜாதியினரின் ஆதிக்கம் மீண்டும் மருத்துவத் துறையில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் “நீட்” என்ற ஒன்றை சூழ்ச்சியாகத் திணிப்பதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள், சமூகநீதியாளர்கள் கிளர்ந்து எழவேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை – தமிழ் நாட்டுக்கு “நீட்” தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கதி என்ன? எந்தக் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டுள்ளது? .
மக்கள் மத்தியிலும் இதனை வேகமாகக் கொண்டு செல்லுவோம். பெற்றோர்களும் யாருக்கோ வந்த
விருந்தென்று கருதி, நாம் களம் காணும்பொழுதெல்லாம் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, களத்திற்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதும் நமது முக்கிய வேண்டுகோளாகும்.

நெஞ்சைப் பிழியும் ‘நீட்’ தற்கொலைகள்

1. செப். 1, 2017: அனிதா

அனிதா

பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் தனது மருத்துவராகும் கனவு தகர்ந்த நிலையில், அனிதா 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2. ஜூன் 5, 2018: பிரதீபா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்தவர். இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதிய பிரதீபா தேர்ச்சி பெற முடியவில்லை. இதனை மனமுடைந்த பிரதீபா எலி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

3. செப்டம்பர் 7, 2018: ஏஞ்சலின் ஸ்ருதி

சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் ஏஞ்சலின் ஸ்ருதி. ’நீட்’ தேர்வு எழுதி சீட் கிடைக்காத சோகத்தில் தூக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

4. ஜூன் 6, 2018: வைசியா(17)

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். மருத்துவக் கனவோடு ‘நீட்’ தேர்வு எழுதினார். இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார்.

5. ஜூன் 7, 2018: சுபஸ்ரீ(17)

திருச்சி அருகே திருவள்ளுவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த இவர் ‘நீட்’ தேர்வு எழுதி இடம் கிடைக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

6. ஜூன் 6, 2019: மோனிஷா(18)

மரக்காணம் அருகே கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்த இவர் நீட் தேர்வு எழுதி தகுதி பெறாததால் தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

7. ஜூன் 15, 2019: பாரதபிரியன்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

8. ஆகஸ்டு 2, 2019: தனலட்சுமி(18)

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர். ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இதனால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

9. செப்டம்பர் 10, 2020: விக்னேஷ்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்.
இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய நிலையிலும் எம்.பி.பி.எஸ். படிக்க சீட் கிடைக்கவில்லை. தேர்வுக்கு 3 நாள் முன்னதாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

10. செப்டம்பர் 12, 2020: ஜோதி ஸ்ரீ துர்கா(19)

மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர். தேர்வுக்கு முந்தைய நாள் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஜோதி துர்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

11. செப்டம்பர் 12, 2020: ஆதித்யா(வயது 20)

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியை அடுத்த செவத்தான்கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர். தேர்வுக்கு முந்தைய நாள் ஏற்பட்ட அச்சத்தில் வீட்டில் யாருமில்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

12. செப்டம்பர் 9, 2021: தனுஷ்

சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது மகன் தனுஷ். மூன்றாவது முறையாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு இந்த முறையும் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

13. செப்டம்பர் 14, 2021: கனிமொழி (17)

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

14. செப்டம்பர் 8, 2022: லக்ஷனா ஸ்வேதா

சென்னை அடுத்த திருமுல்லைவாயி
லைச் சேர்ந்தவர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

15. மார்ச் 27, 2023: சந்துரு(19)

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்த நிலையில், திடீரென விடுதியின் அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

16. ஏப்ரல் 5, 2023: நிஷா

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்தவர். வடலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

17. மே 7, 2023: ஹேமசந்திரன் (18)

புதுச்சேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர். தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

18. மே 16, 2023: பரமேஸ்வரன் (17)

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தேர்வு நடைபெற்ற 10 நாட்களுக்குப் பிறகு வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

19. ஆகஸ்டு 13, 2023: ஜெகதீஸ்வரன் (19)

சென்னை, குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சோந்தவர். 2 முறை நீட் தேர்வு எழுதியும் அவரால் சீட் பெற முடியவில்லை. விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அதுமட்டுமல்ல, மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த தந்தை செல்வம் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் இத்தனை மரணங்கள் என்றில்லை. ‘ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டி தேர்வுக்கு என்றே உருவாகியுள்ள கோட்டா நகரம் மாணவர்களின் தற்கொலை நகரமாகவே மாறி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான கோச்சிங் சென்டர்கள் இருக்கின்றன. இங்கு அய்.அய்.டி., ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் இந்தியா
முழுவதிலுமிருந்து வந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர்.

இந்த மாணவர்களுக்குப் படிப்பில் அதிக மனஅழுத்தம் ஏற்படுவதாக, அண்மைக் காலமாகவே குற்றம்சாட்டப்படுகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால், அங்கு தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.

‘நீட்’ அமலுக்கு வந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் கோட்டா நகரில் 17 பேர் தற்கொலை செய்தி
ருக்கின்றனர். 2017ஆம் ஆண்டு 7 பேரும், 2018ஆம் ஆண்டில் 18 பேரும் தற்கொலை செய்துகொண்டனர்.

அதேபோன்று கடந்த ஆண்டில் 15 மாணவர்களும் இந்த ஆண்டில் இதுவரை 15 மாணவர்களும் கோச்சிங் நிறுவனங்கள் கொடுக்கும் மனஅழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இப்படி நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வும் அதற்குப் பயிற்சி அளிக்கும் கோச்சிங் சென்டர்களும் மாணவர்களின் உயிர்களைக் கொத்து கொத்தாகப் பலி வாங்கிக்கொண்டு இருக்கின்றன.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, ‘நீட்’ தேர்வை ஒழிப்பதும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுமேயாகும். மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மாநிலப் பொறுப்பில் இருக்கும்போது, அதில் மாணவர்கள் சேர்வதை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு தீர்மானிப்பது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. எனவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும். எனவே, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களும் இதில் ஒருங்கிணைந்து போராடி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும். ‘நீட்’ போன்ற தேர்வுகளை அறவே ஒழிக்க வேண்டும்.

அப்போதுதான் மாநில உரிமைகளும் காக்கப்படும்;உயர்கல்வியும் அடித்தட்டு மாணவர்களுக்கும் உரியதாக ஆகும் என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.