– பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்
தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்
உலகின்வா யிசைக்குமுன் சீரை யென்றும்!
உலவுங்கால் வியக்குமுன் உழைப்பின் வன்னம்!
செலவென்றால் சிறகிருந்தும் பறவை அஞ்சும்!
சோர்வின்றிச் செல்லுமுன் காலும் நெஞ்சும்!
இலவுமுன் மென்நெஞ்சை வியந்து விம்மும்!
இரவுமுன் விழிகண்டு பகலென் றெண்ணும்!
பலருமுன் வரலாற்றில் பகையாய் வந்தும்
பகல்வந்த நிலவானார் உன்றன் முன்னே!
முன்னேராய் நீசென்றாய் கல்லின் முள்ளின்
முனையுணராத் தாள்கொண்டோம் பின்னே வந்தே!
மின்னேராய் மதியுற்றே வெல்லுஞ் சொல்லை
விண்ணேராய்ப் பொழிந்தாய்நீ! வியர்வை அற்றோம்!
என்னேர்ந்தும் இடிதாங்கி இயல்பைக் கொண்டே
இடர்செரித்தே இயல்பாக இயங்கி வென்றாய்!
தன்னேரில் தலைவாநின் தோள மர்ந்தே
தவிப்பற்றோம்! தகையுற்றோம்! மேன்மை கொண்டோம்!
கொண்டதெல்லாம் கூன்களைந்து நிமிர்ந்த தெல்லாம்
கொடிதாங்கிக் கொள்கைவழி நடந்த தெல்லாம்
மண்டல்வரம் பொய்க்காது பலித்த தெல்லாம்
மதவெறியும் தமிழ்நிலத்தில் பொய்த்த தெல்லாம்
சுண்டலுக்கும் பொங்கலுக்கும் பிறந்த தெல்லாம்
சூத்திரராய் நமையிழிக்க வெகுண்ட தெல்லாம்
கிண்டிவந்த குதிரையாளக் கற்ற தெல்லாம்
கிழக்காட்சி முறைகண்ட கலைஞ ராலே!
ஆலமென வெயில்குடித்து நிழல்சு ரந்தான்!
ஆறுதலைப் பிறர்க்களித்துத் தனைவ தைத்தான்!
கூலவணிகன் பாத்திரம்போல் வற்றா தென்றும்
குறைதீர்க்கும் நலத்திட்டம் படைத்த ளித்தான்!
ஏலமென மணம்பரப்பும் புகழு டைத்தும்
ஏழைகளின் தோழனெனத் தரைந டந்தான்!
காலத்தின் கடுகிநடை போட்ட தாலே
கையுற்றான் இருவாழ்வை ஒருபி றப்பில்|
பிறந்திட்டால் குவளையிலே பிறக்க வேண்டும்
பிரியாதே தமிழோடு ஒன்ற வேண்டும்!
உரத்தோடே உரிமைவெல்லும் உள்ளம் வேண்டும்!
உடன்பிறப்பாய்த் தொண்டர்படை கொள்ள வேண்டும்!
இரவலாக அண்ணாவின் இதயம் பெற்றே
ஈற்றினிலே அவர்தாளில் சேர்க்க வேண்டும்!
இறந்தாலும் கலைஞர்போல் இறக்க வேண்டும்!
இலக்கெய்தி வென்றேகண் துஞ்ச வேண்டும்!
வேண்டிநின்று கையேந்திப் பார்த்த தில்லை!
வீணர்தாள் தரைதவழ்ந்து தொட்ட தில்லை!
ஆண்டவன்நீ அருள்வாக்குத் தந்த தில்லை!
ஆனாலும் அற்றார்கை விட்ட தில்லை!
தாண்டிவந்த பாதையிலே தென்றல் இல்லை!
தணற்காற்றே சுட்டதுன்னை தளர்ந்தா யில்லை!
தீண்டாத துயரேதும் மீதி யில்லை!
சிரிப்பும்நின் னிதழ்நீங்கிச் சென்ற தில்லை!
இல்லையிறை என்றதிர்ந்த இங்கர் சாலாய்
ஏதென்சு நகரத்துச் சாக்ரட் டீசாய்த்
தொல்லைபல கொண்டாலும் துவளா தென்றும்
துணிவோடு பகுத்தறிவைத் துடுப்பா யேந்தி
எல்லையில்லா மடக்கடலை எளிதாய் வென்றாய்!
ஏற்றகொள்கை இழந்துழலா இதயம் கொண்டாய்!
மல்லையென நிலைத்திருப்பாய் காலம் நீண்டு
மானமிகு சுமரியா தைக்கா ரன்நீ !
நீர்மைதனை நெஞ்சிலுற்றாய் கண்ணி லற்றாய்!
நெகிழ்ந்திரங்கும் நெஞ்சமுற்றாய்! வன்ம மற்றாய்!
நேர்த்தியினை செயலிலுற்றாய் ஒறுப்பி லற்றாய்!
நெம்புகோலாய் நிமிர்த்தலுற்றாய்! கூன லற்றாய்!
நேர்மைதனை பகையிலுற்றாய்! வஞ்ச மற்றாய்!
நீள்புகழால் உயர்வையுற்றாய்! செருக்கை யற்றாய்!
கார்முகிலாய்க் கருணையுற்றாய்! கயமை யற்றாய்!
காப்பெனவே உன்னையுற்றோம் கவலை யற்றோம்!
கவலாத கலங்காத திண்மை கண்டும்
கைப்பில்லா கார்ப்பில்லா சொன்மை கண்டும்
தவழாத தேங்காத சிந்தை கண்டும்
தாழாத தன்மானத் தலைமை கண்டும்
குவளைப்பூங் கொடிபூத்த சிறுபூ மொட்டுக்
கொத்தளத்தில் கொடியேற்றுஞ் சிறப்பைக் கண்டும்
உவகைப்பூ உளம்பூக்க உலகும் நோக்கும்
உள்ளொளியை ஏற்றிவைக்கும் கலைஞர் தாக்கம்!
தாக்குதலைத் தாங்கிவெல்லும் தகையி ருந்தும்
தாளாதே அரற்றுகின்றோம் தலைவ னின்றி!
ஆக்கமளி ஆதவனும் அணைய லாமோ?
அல்லிருளில் எமைவிட்டு விலக லாமோ?
ஊக்கமெலாம் உன்னுருவே கலைஞர் கோவே!
ஊனமுற்றோம் உனையிழந்தே! உணர்ந்து வாயேன்!
நீக்கமற நிறைந்தாயெம் நெஞ்ச மன்றம்
நீயின்றி எமக்கேது தனித்தே எண்ணம்?