சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்? எப்படி? எப்போது?- கி.தளபதிராஜ்

2024 கட்டுரைகள் ஜுன் 1-15 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் கொள்கை விளக்க நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டிருக்கின்றன.

சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் முதலாய் திராவிட இயக்க ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோதோ, அதிலிருந்து வெளியேறியபோதோ ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதாக ஒன்றைத் தொடங்க வேண்டும் என முன்கூட்டித் திட்டமிட்டு (Pre planned) வெளியேறவில்லை. காங்கிரசால் இனி ஒடுக்கப்பட்டோருக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற அவரது மனக்குமுறலின் வெளிப்பாட்டில் காங்கிரசை விட்டு வெளியேறிய பின் தன்னெழுச்சியாக அவரால் தொடங்கப்பட்ட இயக்கம் இது.

“பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்துவரும் கடவுள், மதம், ஜாதித் தத்துவங்களையும் இந்தத் தத்துவத்திற்கு இடமாக இருக்கிற மூடநம்பிக்கையையும், மூடநம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பார்ப்பன சமுதாயத்தை ஒழிப்பது என்ற கொள்கை மீது சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும், தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று அதை நடத்தி வந்தேன்” என்கிறார் பெரியார்.

ஒத்துழையாமை இயக்கத்திற்கு மாறாக தேர்தல் – அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரசில் ஒரு பிரிவினர் 1922ஆம் ஆண்டு சுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தபோதே அதை எதிர்த்தார் பெரியார்.

“சுயராஜ்யக் கட்சி தோன்றிய நாள் தொட்டு இராமசாமி நாயக்கருக்கு அரசியல் உலகில் ஒருவித மருட்சி உண்டாயிற்று. மாறுதல் அவர் நெஞ்சில் படிப்படியே அரும்பியது; வளர்ந்தது. அவருடன் நெருங்கிப் பழகியவனாதலால் மாறுதல் வளர்ச்சி எனக்கு நன்கு விளங்கியே வந்தது. அவர் பணியின் நேர்மையே அவர் நெஞ்சில் மாறுதல் நிகழ்த்தியது என்று கருதலானேன். உண்மை உழைப்புக்கு ஊறு நிகழ்வதால் சிலர் பொறுமை வகிப்பர். சிலர் துறவு மேற்கொள்வர். சிலர் பிற்போக்காளராவர். இவை ஜீவ இயல்புகள். நாயக்கர், சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமை உணர்வையே போக்கிய பட்டம் பதவிக் கட்சியாகும் என்பார். சுயராஜ்யக் கட்சியால் பிராமணர்க்கு ஏற்றமும் மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராமசாமி கூறுவார்.” என்று திரு.வி.க. குறிப்பிடுகிறார்.

1922ஆம் ஆண்டு தொடங்கி 1925 வரை திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என வரிசையாக நடைபெற்ற தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி உரிமை கோரும் தீர்மானத்தை தொடர்ந்து வற்புறுத்தியும் அதை நிறைவேற்ற இயலாமல் போனதுதான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேற முக்கியக் காரணமாக அமைந்தது.

காங்கிரசில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை உணர்ந்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘குடிஅரசு’ ஏட்டில் பார்ப்பனரல்லாதாருக்கென ஓர் அமைப்பு வேண்டும் என்ற நோக்கில் தலையங்கம் எழுதியுள்ளார்.

“பிராமணரை நீக்கிய பொது ஜனங்களுக்கு பிராமணர் அல்லாத என்று பெயர் வழங்கப்படுகிறது. முக்கியமாக இதில் கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் முதலிய இந்துக்கள் அல்லாதவர்களும் பிராமணர் அல்லாதவர்களே. இந்துக்களுக்குள்ளும் பிராமணர் நீங்கிய மற்றவர்களுக்கு பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட பல ஜாதிப் பெயர்கள் சொல்லிக் கொள்ளப்பட்டாலும் அவர்களும் பிராமணர் அல்லாதவர்களே. அல்லாமலும் தீண்டாதார் என்று கூறி தொடக்கூடாதவர்கள்- பார்க்கக் கூடாதவர்கள் என்று தள்ளி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரும் கூட்டத்தாரும் பிராமணர் அல்லாதவர்களே. இவர்கள் யாவரும் நாம் மேற் சொன்ன பிராமணர்களின் மாய வலையில் இருந்து தப்பி சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு வகுப்பு வித்தியாசங்களையும், பொருளற்ற ராஜ்ஜிய அபிப்பிராய வித்தியாசத்தையும் மறந்து விடுவதோடு, தங்கள் சுய நன்மைக்காக பிராமணர்களுக்கு ஒற்றர்களாகவும் காட்டிக் கொடுப்பவர்களாகவும் இருக்கும் சிறுமைக் குணங்களை விட்டு எல்லோரும் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் சூழ்ச்சியின்றியும் துவேஷமின்றியும் மனப்பூர்வமாக ஒன்றுபட்டுப் பாடுபட்டு முன்னேற வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசில் இருந்தவரை அக்கட்சியில் நேர்மையாகப் பணியாற்றினார் பெரியார். காங்கிரசை விட்டு 1925 நவம்பர் 22இல் வெளியேறிய பின்னர் தான் நீதிக்கட்சி மாநாடுகளில் கூட அவர் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து சுயமரியாதைச் சங்கங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

1926ஆம் ஆண்டு இறுதியில் தூத்துக்குடி, தென்காசி, மதுரை ஆகிய பகுதிகளில் சுயமரியாதை சங்க ஸ்தாபனங்களைத் தொடங்கி வைத்து பெரியார் ஆற்றிய உரை ‘குடிஅரசு’ 1926 டிசம்பர் 19 இதழில் ‘சுயமரியாதை சங்க ஸ்தாபனம்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

“இந்த எனது சுற்றுப் பிரயாணத்தின் நோக்கம் இன்னது என்பதை ‘குடிஅரசு’ பத்திரிகையின் மூலம் ஏறக்குறைய ஒரு வருஷ காலமாக தெரியப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். சென்ற வருஷம் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசியல் மகாநாட்டிலிருந்து நமது சுயமரியாதையைக் காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம் வேண்டும் என்பதாக பலமுறை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். அவற்றை நீங்கள் எல்லோரும் ஏக மனதாய் ஒப்புக்கொண்டதாலும் வரவேற்பதாய்த் தெரிவித்துக் கொண்டதாலும் என்னுடைய அபிப்பிராயம் முன்னிலும் அதிகமாகப் பலப்பட்டது. அதை உத்தேசித்தே தான் நான் உங்கள் விருப்பத்திற்கு இணங்கி வந்திருக்கிறேன். இச்சங்கத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் இதற்கு முன் இரண்டொரு சமயங்களில் இவ்விடம் வந்த காலத்திலும் சுருக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கின்றேன்.

இந்தத் தேசத்தில் 22 கோடி மக்களுக்கும் மேலாக உள்ள நாம் வெகு சொற்பமான எண்ணிக்கை உள்ளவர்களால் எவ்வித பொறுப்பாளிகள் அல்லாத, பிறவி காரணமாய் எவ்வளவு இழிவாயும் தாழ்மையாயும் கருதப்பட்டு விலங்கு, பூச்சி, புழுக்களிலும் கேவலமாய் நடத்தப்படுகிறோம் என்பதை ஒவ்வொருவரும் அறிந்தே இருக்கிறோம். இதைப் போக்கிக் கொள்வதற்காக நமது முன்னோர்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாக எவ்வளவோ முயற்சித்து வந்திருக்கிறார்கள். நமது இழிவையும் தாழ்வையும் நீக்கி நமக்கு சுயமரியாதையும் சமத்துவமும் அளிப்பதற்கு என்றே கபிலர், புத்தர், ராமானுஜர் போன்ற எவ்வளவோ பெரியார்கள் அவதாரமும் செய்து இதற்காகவே உயிரையும் விட்டார்கள்.

எவ்வளவு செய்தும் நமது இழிவினாலும் தாழ்மையினாலும் சுயமரியாதையில் லட்சியம் இன்மையாலும் வாழ வேண்டிய இயற்கை நிலை படைத்த நமது எதிரிகள் (பார்ப்பனர்கள்) அவ்வப்போது அதற்குத் தகுந்த சூழ்ச்சிகள் செய்து நம்மில் சிலரையே தங்கள் ஆயுதமாகக் கொண்டு அம் முயற்சிகளை எல்லாம் அழித்துக்கொண்டே வந்திருக்கிறார்கள். எவ்வளவு அழித்தாலும் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் எவ்வளவு தோல்வி ஏற்பட்டாலும் மேலும் மேலும் இவ்விழிந்த தன்மைகளாலான கொடுமையில் இருந்து நீங்க வேண்டும் என்கிற அவா மாத்திரம் நமக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்ததே அல்லாமல் குறையவே இல்லை. அதோடு பொதுஜன அபிப்பிராயமும் ஒன்று போலவே இருந்து வருகிறது. ஆதலால், இவ்விழிவுகளை நீக்கி நமது சுயமரியாதையைப் பெறுவதற்கும் காப்பதற்கும் இதுவே தக்க சமயம். இது விஷயத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் கூடி ஒரே அபிப்பிராயமாக இருந்து தீவிர முயற்சி எடுத்து உழைக்க வேண்டும்…….

நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சுயமரியாதையும் விடுதலையும் ஏற்படவும் நமக்கென்று ஒரு தனி இயக்கம் இருந்து தான் ஆக வேண்டும். அவ்வியக்கத்தில் நாம் எல்லோரும் ஈடுபட்டு ஒற்றுமையாய் உழைக்க வேண்டும்” என்கிறார்.
காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசியல் மகாநாட்டிலிருந்து நமது சுயமரியாதையைக் காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம் வேண்டும் என்பதாக பலமுறை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன் என்கிறார் பெரியார். பார்ப்பனரல்லாதாருக்கான ஒரு தனி இயக்கம் வேண்டும் என்ற உணர்வை அவருக்குள் ஏற்படுத்தியது அந்த மாநாட்டின் கசப்பான நிகழ்வுகளே!

காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு 1925 நவம்பர் 21, 22 தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது நாள் மாநாட்டில் அவரது வகுப்புரிமைத் தீர்மானம் நிராகரிக்கப்படவே “காங்கிரசால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு துளியளவும் நன்மை கிடைக்காது. இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை!” என்று சொல்லி காங்கிரசை விட்டே வெளியேறுகிறார் பெரியார். ஆக, காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறிய அந்த நாளையே சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளாகக் கருதவேண்டியிருக்கிறது !