1. கே : ஓர் ஆணை ஒரு பெண், திருமணம் செய்துகொள்ள மறுத்தால் அவள் கொலை செய்யப்படுவாள் என்பதை கர்நாடகாவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகள் உறுதி செய்கின்ற நடப்பை “இந்து தமிழ்திசை” (17.05.2024) தலையங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
– சு.சாந்தி, ஆவடி.
ப : மிகவும் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிய தறுதலைத்தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. அனைவரும் கண்டிக்கவேண்டும். எந்த யுகத்தில் நாம் வாழுகிறோம் என்பதே புரியவில்லை!
2. கே : கஞ்சாப் போதையும், ஆன்லைன் சூதாட்டமும் இளைய தலைமுறையை மிகக் கடுமையாகச் சீரழிக்கும் நிலையில் தாங்கள் பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் எவை?
– எம். வேலவன், குடியாத்தம்.
ப : ஒரு முனையில் கடுமையான சட்ட நடவடிக்கையும் மற்றொரு முனையில் தீவிர அறிவுறுத்தல் பிரச்சாரமும் அடைமழை போலப் பெய்ய வேண்டும்.
3. கே : “கார்ப்பரேட்டுகளுக்கு நான் முறைகேடாக உதவியிருந்தால் என்னைத் தூக்கிலிடுங்கள்” என்று மோடி கூறியுள்ளதை வாக்காளர்கள் நம்புவார்களா?
– கோ. ராம், மந்தைவெளி.
ப : கார்ப்பரேட்டுகளான அதானி, அம்பானி போன்றவர்களுக்காக சட்டங்களையே திருத்தி, அவர்களுக்கு அடி மாட்டு விலையில் பல ஒப்பந்தங்கள், ஏலங்கள் இவைகளை மோடி அரசு செய்துள்ள நிலையில், முழுப்பூசணியையே இப்படி சோற்றில் மறைக்க முயலுகிறாரே! முறைகேடு என்பதற்கு பிரதமர் மோடி அகராதியில் என்ன பொருளோ, விளங்கவில்லை!
4. கே : வாக்களித்தவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண் கூடுலாக வழங்கப்படும் என்று
ஒரு பள்ளி நிருவாகம் உத்தரப் பிரதேசத்தில் அறிவித்துள்ளது சரியா?
– பா. கோபால், அம்பத்தூர்.
ப : கடைந்தெடுத்த சட்டமீறல். தேர்தல் கமிஷன் இதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? மவுனமா? சலுகையா?
5. கே : இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சியை பா.ஜ.க. தோல்விக்கான முன்னறிவிப்பாகக் கொள்வது சரிதானே?
– இ. சிவக்குமார், வேலூர்.
ப : நூற்றுக்கு நூறு சரியானது.
6. கே : பதிவான வாக்கு விழுக்காடு குறித்த இரண்டாம் அறிவிப்பில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் கூடியுள்ளது ஏற்புடையதா? இது முறை கேடுகளின் முன்னோட்டமா?
– கு. சின்ன அம்மாள், கோபாலபுரம்.
ப : முந்தைய கேள்விகளுக்குரிய பதிலே இதற்கும்!
7. கே : தேர்தல் ஆணையம், பி.ஜே.பி. கட்சிக்கு ஆதரவு நிலைப் பாட்டில் இருப் பது வெளிப் படையாகத் தெரியும்போது உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள முடியாதா?
– சி. கவிதா, தூத்துக்குடி.
ப : நிச்சயம். நிலைமை மோசமாகி வருகிறபோது தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை பாயும் வகையில் உச்சநீதிமன்றம் விரும்பினால் தலையிட முடியும்.
8. கே : ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை இடிப்பார்கள் என்ற மோடியின் உச்சக்கட்டப் பிதற்றல் எதைக் காட்டுகிறது?
– எஸ்.கோவிந்தன், திருவள்ளூர்.
ப : பி.ஜே.பி. மோடி அரசின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
9. கே : கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்வது அடிப்படை உரிமை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதே! இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வீர்களா?
– மு.கீதா, அருப்புக்கோட்டை.
ப : செல்லும் வாய்ப்பு உண்டு.