கலைஞரின் பேனா வரைந்த திரைச் சித்திரங்கள்… – குமரன்தாஸ்

2024 கட்டுரைகள் ஜுன் 1-15 2024

கலைஞரின் பேனா தொட்டு எழுதாத கருத்துகளே இல்லை என்பது உலகறிந்த ஒன்று. ஆம் தமிழ்ச் சமூகம்,அரசியல்,பொருளாதாரம், பண்பாடு, கலை இலக்கியங்கள் ஆகியவை பற்றி பல ஆயிரம் பக்கங்கள் அவர் எழுதியுள்ளார். அவற்றில் இருந்து அவரது பேனா படைத்திட்ட திரைக் காவியங்கள் பற்றி மட்டும் சுருக்கமாக இங்குக் காணலாம்.

தலைவர் கலைஞர் 1924 ஜூன் 3ஆம் தேதி திருக்குவளையில் அஞ்சுகம்-முத்துவேலர் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நாம் அறிவோம். அவர் தனது 23 ஆம் வயதில் அதாவது 1947 ஆம் ஆண்டு ‘ராஜகுமாரி’ என்ற தமிழ் சினிமாவுக்கு முதல் திரைக்கதை வசனத்தை எழுதினார். ஆனால் அதற்கு முன்பே தனது 14 ஆம் வயதிலேயே ”மாணவ நேசன்”(1939) என்னும் கையெழுத்து இதழைத் துவங்கி அதில் தனது திராவிடச் சிந்தனைகளை கட்டுரைகளாக எழுதத் துவங்கி விட்டார் என்பதும் மேலும் பல நாடகங்களை எழுதியும் அதில் நடித்தும் தமது திராவிட இயக்கப் பிரச்சாரப் பணியினை செய்து வந்தார் என்பதும் வரலாறு ஆகும். அதாவது கலைஞரின் பேனா திரைப்படத்திற்காகவே திறக்கப்பட்ட ஒன்றல்ல! மாறாக அது அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்கக் கொள்கையை இம் மண்ணில் விதைப்பதற்காக ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், எம்ஜிஆரைப்போல் அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவரில்லை! மாறாக திராவிட இயக்கச் சமூக, அரசியல் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக கலை இலக்கியத்தை, சினிமாவை மிகத்திறமையாகப் பயன்படுத்தியவர்களில் அவரே முதன்மையானவர். அவரது எழுத்துத் திறமையைக் கண்டு தமிழ் திரை உலகம் அவரைத் தேடி வந்தது என்பதே உண்மை. ஆம், தலைவர் கலைஞர் ஈரோட்டில் தந்தை பெரியாருடைய ‘குடிஅரசு’ அலுவலகத்தில் அவரது மாணவராகத் தங்கி இருந்து திராவிடர் கழகப் பணி செய்துகொண்டிருந்த போது தான் திரைப் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. கலைஞர் அவர்களும் தனது ஆசான் பெரியாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட ‘ராஜகுமாரி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதச் சென்றார். அப்போது அவரை அழைத்த ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கலைஞர் குறிப்பிட்ட செய்தி மிக முக்கியமானது. தனது கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாமலிருந்தால் மட்டுமே திரைப்படத்திற்கு தம்மால் திரைக்கதை வசனம் எழுத இயலும் என்று குறிப்பிட்டுள்ளார் (நெஞ்சுக்கு நீதி பாகம்-1,பக்கம்-94-95) ஆகவே ,கலைஞரின் பேனாவுக்குள் நிரப்பப்பட்டிருந்தது முழுக்க முழுக்க திராவிடச் சித்தாந்தமே அன்றி வேறில்லை என்பதை அறியமுடிகிறது.

அடுத்து கலைஞர் 1947இல்தனது 23ஆம் வயது துவங்கி 2011இல் 87ஆவது வயது வரை கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் தமிழ்த்திரை உலகில் இயங்கினார்.மொத்தம் சுமார் 70 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு என ஏதாவது ஒன்றையோ அல்லது இவற்றில் சிலவற்றையோ செய்துள்ளார். அதாவது நான்கு தலைமுறை திரைத்துறையினருடன் சேர்ந்து இயங்கிய தனித்திறனும் சிறப்பும் தலைவர் கலைஞருக்கு உண்டு.

அதாவது, தனது தந்தை வயதுடைய உடுமலை நாராயணகவி(1899-1981) பாடல் எழுதிய (பூம்புகார், பராசக்தி…..) திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். தனது வயதொத்த எம்ஜிஆர், சிவாஜி போன்றோர் நடித்த திரைப்படங்களுக்கும் வசனம் எழுதி அவர்களை மிகப்பெரும் புகழின் உச்சத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளார். மூன்றாவதாக தனது மகன் வயதுடைய சத்தியராஜ்(பாலைவனரோஜாக்கள், மண்ணின் மைந்தன்), பிரபு(காவலுக்கு கெட்டிக்காரன்), விஜயகாந்த்(சட்டம் ஒரு விளையாட்டு), சந்திரசேகர் (தூக்குமேடை) போன்றோருக்கும் கதைவசனம் எழுதியவர் தனது பேரன் வயதுடைய கவிஞர் பா..விஜய் (இளைஞன்), பிரசாந்த்(பொன்னர் சங்கர்), வினீத்(உளியின் ஓசை) போன்றோருக்கும் வசனம் எழுதினார்.

இவ்வாறு நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இயங்கினார் என்பது மட்டுமல்ல; இந்த 65 ஆண்டுகள் முழுதும் தான் கொண்ட திராவிட இயக்கக் கொள்கையில் ஒரு சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் தனது முதல் படத்தில் எவ்வாறு தமது பகுத்தறிவுக் கொள்கையைப் பிரச்சாரம் செய்திருந்தாரோ அவ்வாறே தனது கடைசிப் படமான ‘இளைஞன்’(2011) திரைப் படம் வரையிலும் கொள்கைப் பிரச்சாரத்தைச் செய்தார் என்பதோடு, தனது வாழ்விலும் அதனை நடைமுறைப்படுத்தினார் என்பதுதான் கலைஞரின் தனிச்சிறப்பும் பெருமையுமாகும். ஏனென்றால் அவரது சமகால நண்பர்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கண்ணதாசன் போன்றோரெல்லாம் திரையில்ஆரம்ப காலத்தில் அவர்கள் பேசிய முற்போக்கு கருத்துகளுக்கு மாறாக பிற்காலத்தில் ஜாதி, மத, கடவுள் மூடத்தனங் களுக்குப் பலியாகித் தடம்புரண்டனர் என்பது அவலமான உண்மையாகும்.

ஆனால், கலைஞர் தனது முதற்படம் துவங்கி இறுதிப் படம் வரை ஜாதி மறுப்புத் திருமண ஆதரவு, ஜாதி,தீண்டாமை ஒழிப்பு (தாயில்லாப்பிள்ளை, குறவஞ்சி, வண்டிக்காரன் மகன், ஒரே ரத்தம்…) பெண்விடுதலை, ஆண் பெண் சமத்துவம், விதவை மறுமணம், குழந்தைத் திருமணம் எதிர்ப்பு (ராஜாராணி,ரங்கோன் ராதா,பூமாலை,பெண்சிங்கம்….) தொழிலாளர் நலன்,சமதர்மக் கொள்கைப் பிரச்சாரம் (பணம், அவன்பித்தனா?, இளைஞன்……), பார்ப்பனிய எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம், மூட நம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் (பராசக்தி,புதையல், மந்திரிகுமாரி, ராஜகுமாரி….) அரசு நிர்வாக துஷ்ப்பிரயோகம், காவல்துறை அடாவடித்தனம்(நீதிக்குத் தண்டனை, சட்டம் ஒரு விளையாட்டு…..) கிராமப்புற ஆதிக்க எதிர்ப்பு
(புதிய பராசக்தி, மண்ணின் மைந்தன்….) திராவிடக் கொள்கையைப் பேசியதற்கு ஆதாரமாக இன்னும் எத்தனையோ திரைப்படங்களைச் சொல்லலாம்.

அதே போல திருக்குறளைப் போற்றுவதற்கும், திருவள்ளுவர் புகழ்பாடுவதற்கென்றே கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படம் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’(1960) ஆகும். இந்தப் படத்திற்கு வசனம் எழுதியபோதே தலைவரின் உள்ளத்தில் வள்ளுவர் கோட்டமும், அய்யன் திருவள்ளுவர் சிலையும் எழுந்துவிட்டதை நம்மால் உணரமுடிகிறது. பிற்காலத்தில் ஆட்சி அதிகாரம் கிடைத்தபோது அதை நிறைவேற்றினார்.

இவ்வாறே ‘ராஜாராணி’(1956) திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய போது விதவை மறுமணத்தை வலியுறுத்தி எழுதிய அவர் தான் பிற்காலத்தில் டாக்டர் தர்மாம்பாள் விதவை மறுமணத் திட்டத்தை (1975) அறிமுகப்படுத்தினார். மேலும் விதவை என்ற சொல்லில் கூட பொட்டில்லையே என்று கேட்டவர்களுக்கு கைம்பெண் என்று சொல்லிப் பாருங்கள் ஒன்றுக்கு இரண்டாக பொட்டு வைக்க முடியும் என்று சொன்னார். இதே போலத்தான் 1981 இல் குங்குமம் வார இதழில் தொடர்கதையாக எழுதிய ஒரே ரத்தம் கதைக்கு 1987 இல் திரைக்கதை வசனம் எழுதிய போதே தன் உள்ளத்தில் சமத்துவபுரம் திட்டத்திற்கான(1998) விதை ஊன்றப்பட்டுவிட்டதாக கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில்(பாகம்-5 பக்கம்-554 ) குறிப்பிடுகிறார்.

ஆகவே, கலைஞரின் பேனா திரைப் படங்களுக்கு எழுதிய கதைவசனம் என்பது வெறும் இலக்கிய ரசனை நோக்கிலானவையோ பொழுது போக்குக்கிற்கானவையோ அல்ல! மாறாக அவை முழுமையும் தமிழ் சமூக, அரசியல் விடுதலைக்கான, மக்கள் முன்னேற்றத் திற்கான திட்டங்களைப் பேசுபவையாகவும் அமைந்துள்ளன. அதாவது பிற்பாடு நிறைவேற்றவேண்டியவற்றை முன்கூட்டியே அவர் தன்னளவில் எழுதிப் பார்த்துக்கொண்ட கொள்கை அறிக்கை(manifesto) என்றே சொல்லத் தோன்றுகிறது அல்லவா!