“மரணத்தை வரவேற்கத் தெரிந்திருக்க வேண்டும்”, எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம் வாழ்வியல் சிந்தனைகள் தொடரில் ஒருமுறை எழுதியிருந்தார்கள்! இப்படியெல்லாம் எழுதுவதற்கு எவ்வளவு மோலோங்கிய எண்ணமும், ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும்!
ஏனெனில், மனிதனின் முதல் பயமும், கடைசி பயமும் மரணம் தான்! அறிவியல் வளராத அந்தக் காலத்தில் மரணங்கள் அதிகளவில் அடிக்கடி நிகழ்ந்தன! அறிவியல் வளர்ந்து அவற்றை அடக்கின! அதேநேரம் மனிதரின் பகுத்தறிவுச் சிந்தனை மரண எண்ணத்தைக் கொஞ்சம் லேசாக்கி இருக்கிறது!
மரணம் கண்டு அஞ்ச வேண்டாம்! மரணத்தை வென்றிடுவோம்! வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை! வாழ்வது முக்கியமல்ல; வாழ்க்கைக்கு அப்பால் நமது பெயர் பொறிக்கப்பட வேண்டும்! சவப்பெட்டி செய்பவர் கூட நம் மரணத்திற்காய் துன்பப்பட வேண்டும்! என நூற்றுக்கணக்கான “மரணப் பொன்மொழிகள்” நடைமுறைக்கு வந்துவிட்டன!
ஆக, மரணத்தையே நினைத்துக் கொண்டிருக்காமல் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்; இருக்கும் பொழுதில் மகிழ்ந்திருங்கள்! எனத் தன்னம்பிக்கைக் கொடுக்கும் வரிகள் ஏராளம் உருவாகிவிட்டன! அதேபோல இறக்கும் முன்பு மனிதர்களைக் கொண்டாடுங்கள்! இறந்த பின் அவர்கள் திறமைகளைப் பாராட்டுவது, பூஜை போடுவது, கருமாதி செய்வது, விருந்து வைப்பதெல்லாம் வீண் வேலை என்கிற சிந்தனைகளும் பெருகிவிட்டன!
ஆக மரணத்தை எப்படி அணுக வேண்டும், மரணம் ஏற்படாமல் எப்படித் தள்ளிப் போட வேண்டும், மரணத்திற்கு முன்னால் ஒரு மனிதரை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதெல்லாம் மனிதப் பரிணாமத்தின் வளர்ச்சிகள்!
பக்தியைப் பரப்புவதற்காக, கோயில் ஒன்றில் கடுமையாய் வேலை பார்ப்பதை விட, ஒரு மனிதனின் இறப்பில், அவரின் இறுதிப் பயணத்தில் பங்கு பெற்று, அதன் பணிகளைச் செய்வது உயர்ந்த மனிதநேயப் பணியாகும்! திருமண வீடுகளில் வேலை செய்வதை விடவும், மரண வீடுகளில் வேலை செய்வது நல்ல குணாதிசயம்! சமூக ஆர்வலர்கள் இந்தப் பணியை இடைவிடாது செய்கிறார்கள்! குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட ஜாதி தான் செய்ய வேண்டும் என்கிற மரபையும், இவர்கள் ஆழக் குழிதோண்டி, அதில் புதைக்கிறார்கள்!
சமூக ஆர்வலர்கள் எனப் பொதுவாகக் கூறினாலும் திராவிடர் கழகத் தோழர்கள் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதும், தோழர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலாக இருப்பதும் தொடர்ச்சியாக நடந்து வரும் செயல்கள் ஆகும்! இயக்கத் தோழர்களின் இறப்புகளை ஒட்டி, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அதிகம் பெரும்பாலும் நேரில் சென்று விசாரித்து விடுவார்கள்! இரங்கல் அறிக்கை என்பது, தோழர்களின் செயல்களை நினைவு கூர்ந்து விடுதலையில் வெளிவந்துவிடும்!
ஆக, மரணம் என்கிற மனிதநேயப் பணிகளில் பெரியாரிஸ்ட் தோழர்களின் பணி சிறப்பு வாய்ந்தது. இன்னும் அதிகபட்ச உதாரணம் கூட ஒன்று சொல்லலாம்!
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் நகராட்சி சார்பில் எரிவாயு மயானம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதை எடுத்துச் செய்ய பொறுப்பான மற்றும் சிறப்பான நபர்கள் நகராட்சி அலுவலகத்திற்குக் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் மரணத்தில் ஜாதி பார்ப்பது, பிணங்களை ஏற்றத் தாழ்வாய் நடத்துவது, அதனால் ஏற்படும் கலவரங்கள், அமைதியின்மை, சட்டம் ஒழுங்குச் சீர்கேடு என மரணத்திற்குப் பின்னும் வலிகள் அதிகம் இருந்தன!
இந்நிலையில் தான் தேனி மாவட்டத் தலைவர் இரகுநாகநாதன் அவர்கள் இந்தப் பொதுச் சேவையை எடுத்து நடத்த முன் வருகிறார். பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் வருவதை அறிந்த நகராட்சி நிருவாகம், முழுமையாக அவர்களிடம் ஒப்படைக்கிறது! ஏனெனில் அவர்கள் தான் மனிதன் இருக்கும் போதும், இறந்த பிறகும் ஜாதி பார்ப்பதில்லை! மனிதனின் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரையும் தீ வைத்துக் கொளுத்தியவர்கள் அவர்கள்!
இந்நிலையில் போடிநாயக்கனூர் மயான நிலையத்தை “பெரியார் சமத்துவ எரிவாயு தகன மயானம்” என்கிற பெயரில் நடத்தத் தொடங்குகிறார்கள்! முறையாகப் பராமரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு, திறம்பட நடத்திய சூழலில் தேனி மாவட்ட மக்கள் அனைவரும் இந்த மின்மயான இடுகாட்டைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்!
குறிப்பாக கொரோனா காலத்தில் எல்லோரும் மரணப் பயத்தில் இருந்த வேளையில், இந்த இடுகாட்டுத் தோழர்கள் இரவு, பகலாகப் பணியாற்றி இறந்தவர்களைப் புதைக்கவும் எரிக்கவும் துணைநின்றார்கள்!
மின்மயானம் நடை
முறைக்கு வந்த பிறகு, ஜாதிக்கொரு இடுகாடு எனும் சங்கடம் முடிவுக்கு வந்தது. இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) மற்றும் குளிர்பதனப் பெட்டி (Freezer Box) போன்றவை கூட ஜாதி பார்க்கத் தொடங்கி இருந்தன. இந்நிலையில் தான் அனைத்து வேறுபாடுகளையும் ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டு, செத்த பிறகாவது ஒரே இடத்தில் சமத்துவமாகச் சங்கமமாகுங்கள் எனப் பெரியார் சமத்துவ எரிவாயு தகன மயானம் வழி செய்து கொடுத்துள்ளது!
இதுமட்டுமின்றி பெரியார் பெயரில் அவசர ஊர்தி, குளிர்பதனப் பெட்டி என எல்லாமும் ஏற்பாடு செய்துவிட்டார்கள்! “பெரியார்” என்கிற பெயரை எழுதிவிட்டாலே, அங்கு எந்த ஜாதிக்கும் இடமில்லைதானே? அது மனிதர்களுக்கானது என மாறிவிடுகிறது! ஆக 12 ஆண்டுகளுக்கு மேலாக மரணத்திற்கான மனிதநேயப் பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள்!
மதத்தின் காரணமாக பிறப்பு முதல் இறப்பு வரை அவமானங்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறான் மனிதன்! குறிப்பாக ஹிந்து மதம் ஹிந்துக்களுக்கு இந்தக் கொடுமைகளைச் செய்து கொண்டே வருகிறது.
மரணம் என்பது தான் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பு! அதற்கு முன்பு கூட மாறவில்லை என்றால், வாழ்ந்து தான் என்ன பயன்?