1. கே: ‘நீட்’ தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், ஜூன் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், நீட்டை விரும்பாத மாநிலங்கள் இத்தேர்வு முடிவை ஏற்காமல் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புண்டா?
– காந்தி, ஓட்டேரி.
ப : கொள்கை முடிவை புதிய அரசு எடுத்து அறிவித்து ஆணை பிறப்பித்தால்தான் சட்டப்படி ‘நீட்’ தேர்வு நடைமுறை மாற வாய்ப்பு உண்டு. அவசரமாக தனி முயற்சிகள் செய்தால் ஒரு வாய்ப்பாக வெற்றி பெறலாம். இந்த அனுமானத்திற்கு இதற்குமேல் பதில் கூற இயலாது.
2. கே: தேர்வு முடிவுகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சாதிப்பதும், உயர்ஜாதியினரைவிட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிதும் சாதிப்பதும் தகுதி திறமை மோசடிக்கு சம்மட்டியடியல்லவா?
– மகாலட்சுமி, வாணியம்பாடி.
ப: உண்மை; முற்றிலும் அப்பட்டமான உண்மை! வாய்ப்பு வந்தால் உண்மைத் திறமை வெளிப்படும். இப்போது இடஒதுக்கீட்டினாலும், இயக்கம் தந்த தன்னம்பிக்கை ஊக்கத்தாலும் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் விளைவு – வெற்றி இது!
3. கே: எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தவிப்பவர் போல, நித்தம் நிறைய பொய்களைச் சத்தமாய்ச் சொல்லி மோடி சாதிக்க முயல்வது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– பிரபு, சூளைமேடு.
ப: பித்தம் தெளிய மருந்தொன்று உள்ளது – அதுதான் ஜூன் 4இல் மக்கள் தரவிருக்கும் தோல்வி – பித்தலாட்டம் இல்லாவிட்டால் – புரிகிறதா?
4. கே: தேர்தல் முடிந்த மாநிலங்களில் நடத்தை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை உச்சநீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது?
– ராம்குமார், தஞ்சாவூர்.
ப: உச்சநீதிமன்றத்திற்கு வழக்காடிகள் இதுவரை செல்லவில்லை என்பதால்தான்! அவர்களே வலிய வந்து நடவடிக்கை எடுக்க இயலாது – இதுபோன்ற விஷயங்களில்!
5. கே: தரமற்ற, போலி மருந்து தயாரிப்புக் குற்றச்சாட்டுக்குள்ளான மருந்து நிறுவனங்களிடமே பா.ஜ.க. பணம் வாங்கியுள்ள நிலையில் இவர்கள் ஊழலைப் பற்றி பேசலாமா?
– சுருளிராஜன், ஆரணி.
ப: பாபா ராம்தேவ் என்ற காவி மோசடி பேர்வழி ஓர் உதாரணம்- உச்சநீதிமன்றத்தின் வன்மையான கண்டனம், அபராதம். உண்மையில் யார் மீது? பாபா மீது _ அவருக்குத் துணை நின்றவர்களுக்கும்தானே!
6. கே: தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் விஸ்வகர்மா தினத்தை எதிர்த்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ள பிரச்சாரத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– வெங்கட், பவனிசாகர்.
ப: வரவேற்க வேண்டும். விஸ்வகர்மா என்ற கற்பனைப் பாத்திரம் – புராணம் உண்மையாகிவிடுமா? அட அறிவுக்கொழுந்துகளான காவிகளே!
7. கே: பத்து ஆண்டுகள் சாதனைகளாக எதையும் கூறாமல், எதிர்க்கட்சியின் வாக்குறுதிகளைத் திரிக்கும் மோடி, உலகின் மிகச் சிறந்த ஆளுமை என்று தம்பட்டம் தட்டுவது நகைப்பிற்குரியது அல்லவா?
– நீலவேணி, கோயம்புத்தூர்.
ப: சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள், கிராமப்புறத்திலே! அப்பழமொழிதான் பதில்!
8. கே: பா.ஜ.க. தலைவர்களை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் வாங்கச் செய்யும் செயல் எதைக் காட்டுகிறது?
– இளங்கோ, திருவொற்றியூர்.
ப: முறையாக ஓட்டு வாங்கி வெற்றி பெறும் நம்பிக்கையை பா.ஜ.க. வேட்பாளர்கள் இழந்துவிட்டார்கள்; எனவேதான் இப்படிப்பட்ட குறுக்குவழிகள்!
9. கே: 2014 தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்றாத பா.ஜ.க. மோடி அரசு எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது எடுபடுமா? 2024 தேர்தல் வாக்குறுதிகள் பற்றி மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
– ரவி, திருச்சி.
ப: நாளுக்கு நாள் (ஏழு கட்ட தேர்தல்களில்) மோடி அரசின் தோல்வி வளர்பிறையாகி வருவதை அவர்களே உணருவதால்தான் உளறுதல்- அக்கப்போர்- பொய் மூட்டைகள் தொடர்கின்றன!
10. கே: மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தங்களை முதன்மையாகக் கவர்ந்த சாதனை எது?
– செல்வம், வேப்பேரி.
ப: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் அமலாக்கம் – பெண்கள் உட்பட- என்பதுதான்! இந்தச் சமுதாயப் புரட்சிதான் இன்னமும் இன எதிரிகளைப் பாடாய்ப் படுத்துகிறது. விடாமல் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி ஏறி இறங்கி ‘நெருப்பில் நிற்பவன் துடிப்பது போல்’ ஆரியம் அலறுகிறது. திராவிட மாடல் ஆட்சி நாயகருக்கு இதற்காகவே ஒரு கூடுதல் பாராட்டு- வாழ்த்து!