‘மெரிட் – கோட்டா ’ நூல் அளவு வித்தியாசம் ! -…- வழக்குரைஞர் சே .மெ.மதிவதனி -…-

2024 கட்டுரைகள் மே16-31,2024

நீங்க எல்லாம் படிக்கக் கூடாது; உனக்கெல்லாம் படிப்பு வராது;
நீ படிச்சு என்னத்த சாதிக்கப் போற? சூத்திரர்களுக்கு எதுக்கு படிப்பு? போன்ற நூற்றாண்டுகளுக்கு முந்தைய கேள்விகளின் தற்போதைய நவீன வடிவம் தான் எல்லாரும் quota-ல வராங்க; ரிசர்வேசன் வந்ததனால மார்க் எடுத்தும் சீட் கிடைக்கல; மெரிட் மட்டும் தான் தகுதியானது போன்ற சொல்லாடல்கள். அன்று பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத அனைத்து மக்களையும் கல்வி கற்க விடாமல் தடுக்கப் பயன்படுத்திய சொற்களை, இன்று பார்ப்பனரல்லாத மக்களே பயன்படுத்தும் வகையில், நமது இடஒதுக்கீட்டு முறையை, நம்மவர்களைக் கொண்டே கேள்வி கேட்க வைக்கும் சூழ்ச்சியைச் செய்தது, பார்ப்பனியம்.

பல நூற்றாண்டுகளாக அடிமை நிலையில் கிடந்த மக்களுக்குச் சுயமரியாதை உணர்வும் பகுத்தறிவும் வளர கல்விதான் முதன்மை வழி என்பதைப் பெரியார் உணர்ந்தார். அதன் விளைவாக காங்கிரசில் இருந்த காலத்தில் தொடங்கி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெற்றுத் தர பெரும் முயற்சி எடுத்தார். அதற்குத் தடையாக நின்ற காங்கிரசில் இருந்து வெளியேறினார்.
பள்ளிக்கூடங்களில் வாய்ப்புகள் கொடுத்தால் தகுதியும் திறமையும் தானாக வளரும் என்று பெரியார் தொடர்ந்து முழங்கினார். தகுதி, திறமை என்று பயம் காட்டும் பார்ப்பனக் கூட்டத்தின் தலையில் குட்டும் வகையில் பெரியார் கேட்ட கேள்விகள் இதோ:

“பள்ளிக்கூடங்கள், காலேஜ்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது போலவே தான் பார்ப்பனர்கள், கிறித்துவர்கள் நிருவாகத்தில் இன்றும் இருந்து வருகிறார்கள். ஆசிரியர்கள், ஹெட்மாஸ்டர்கள் (Headmasters), புரஃபசர்கள் (Professors), செனட்டர்கள் (senators), சிண்டிகேட்டர்கள் (syndicates), வைஸ் சான்ஸ்லர்கள் (vice Chancellors), பரீட்சை செய்பவர்கள் (Examiners), டெக்ஸ்ட்புக் எழுதுபவர்கள் (Text Book Writers) பலர் 100க்கு 50 க்கு மேற்பட்டவர்கள் ‘தகுதி. திறமை’ பெற்ற, பழைய காலப் படிப்பு பட்டம் பெற்ற பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள்.
மற்றும் கல்வி ‘தரமாய்’ இருந்த காலத்தில் கல்வி அளிப்பதற்கு அரசாங்கம் செய்து வந்த ஏற்பாடுகளில் எதில் மாறுதல் ஏற்பட்டுவிட்டது?
ஆசிரியர் தகுதியைக் குறைத்து விட்டார்களா? பாடத்திட்டத்தை மாற்றிவிட்டார்களா? பரீட்சையாளர்களை மாற்றிவிட்டார்களா? பரீட்சைக் கேள்விகளின் தன்மையை மாற்றி விட்டார்களா? அல்லது பரீட்சையில் தேற வேண்டிய அளவு மார்க் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்களா?

பரீட்சை பேப்பர்களைத் திருத்தும் நபர்களின் யோக்கியதையையோ அல்லது அவர்களது நாணயத்தையோ குறைத்து விட்டார்களா? கல்வி அதிகாரிகளின் யோக்கியதாம்சத்தைக் குறைத்து விட்டார்களா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து,
“நமக்கு – எனக்கு, நம் மக்களுக்குக் கல்வி வேண்டும் என்பதல்லாமல், கல்வியில் தகுதி, திறமை, வெங்காயம் என்பது எனது இலட்சியம் அல்ல! தகுதி, திறமைக்காகப் பொதுக் கல்வி அல்ல. எனக்கு வேண்டியது நம் மக்கள் 100க்கு 100 வீதம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் பார்ப்பனர்கள், அவர்கள் எண்ணிக்கையில் 100க்கு எத்தனை வீதம் பட்டம் பெற்றிருக்கிறார்களோ அத்தனை வீதம் நம் மக்கள் பரீட்சையில் பாஸ் முத்திரை பெற்றிருக்க வேண்டும். “தகுதி- திறமைக் குறைவு” என்று பேசுவதாலும் , “கண்டுபிடிப்பதாலும்” பொதுவான உத்தியோகங்களுக்கு அதனால் எந்தவிதமான குறைவோ, குற்றமோ ஏற்பட்டு விடாது-ஏற்பட்டு விடுவதுமில்லை, ஒழுக்கத்துக்
கும் நாணயத்திற்கும் தகுதி – திறமை சம்பந்தமில்லை” என்று தகுதி, திறமை பற்றிப் பேசும் புரட்டர்களின் பொய்களை அம்பலப்படுத்தினார்.

(பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர் : கி.வீரமணி பக் : 145, 151) நூறாண்டுக்கு முன்னர் தந்தை பெரியார் வலியுறுத்திய கொள்கையை, அரை நூற்றாண்டாக அக்கொள்கை வெற்றி பெற அவர் விதைத்த உழைப்பின் விளைச்சல் இன்று இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கிறது. அதுவே ராகுல் காந்தியின் குரலாக ஒலித்து இருக்கிறது. நாங்கள் எல்லாம் மெரிட் என்ற ஆதிக்கத் திமிரின் குரலை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார் ராகுல் காந்தி.’இந்தியாவில் இருக்கும் IIT க்களை போன்று அமெரிக்காவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வு SAT என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலாக SAT தேர்வுகள் நடைபெற்ற நேரத்தில் வெள்ளை இன அமெரிக்க மாணவர்கள் மட்டுமே அதில் அதிக மதிப்பெண் பெற்றார்கள். கருப்பின அமெரிக்க மாணவர்களாலும், லத்தீன் அமெரிக்க மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.

அதிக மதிப்பெண்கள் பெற இயலாத அவர்களுக்கு தகுதி, சாமர்த்தியம் இல்லை; கடினமான பாடங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது என்றனர். ஆதிக்க உணர்வால் அனைவரையும் இக்கருத்தை ஏற்கச் செய்தனர் வெள்ளை இன அமெரிக்கர்கள். பின் ஒரு நாள் அங்கு வந்த அறிவார்ந்த பேராசிரியர் ஒருவர் ஒரு சோதனை செய்தார். ஆப்பிரிக்க கருப்பின மாணவர்கள் தேர்வு எழுதிய ஒரு கேள்வித்தாளை, வெள்ளை அமெரிக்க மாணவர்களிடம் வழங்கி விடை எழுதச் சொன்னார். விடை எழுதிய வெள்ளை இன அமெரிக்க மாணவர்கள் அனைவரும் fail ஆகி விட்டனர்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, தேர்வு முறையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் மெரிட்டை முடிவு செய்கிறார்கள். அதுபோல் தான் நமது நாட்டில் IIT தேர்வுக்கான வினாத்தாளை வடிவமைப்பவர்கள் அனைவரும் உயர் ஜாதியினர். அதனால்தான் தலித் மாணவர்கள் அதிக அளவில் தோல்வியடையும் சூழல் உள்ளது. இப்போது நாம் ஒரு மாற்றம் செய்து பார்க்க வேண்டும்; IIT தேர்வுக்கான வினாத்தாளை தலித்களால் வடிவமைக்கச் செய்ய வேண்டும்.இதை நாம் நிச்சயமாக முயற்சி செய்து பார்ப்போம்’ என்றார். மேலும் இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று, தான் பேசுவதே இந்தச் சமூக நீதிக்காகத்தான் என்று விளக்கியிருக்கிறார்.

மேற்சொன்ன அனைத்தும் நமக்கு உணர்த்துவது ஒன்று தான் : மெரிட் – கோட்டா இரண்டுக்கும் “நூல்” அளவு தான் வித்தியாசம்.
‘சமூகநீதி’ என்ற உயரிய கொள்கைக்காக பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். அவ்வியக்கத்தின் நூற்றாண்டு தொடக்கத்தில் அதே காங்கிரஸ் சமூகநீதி குறித்து உரக்கப் பேசுகிறது என்றால், பெரியார் வென்று இருக்கிறார்; அவர் கண்ட இயக்கம் வென்று இருக்கிறது; அவரின் கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது கண்கூடாகத் தெரிகிறது அல்லவா?