… திருப்பத்தூர் ம.கவிதா …
மனநலம் எவ்வழியோ அவ்வழியே உடல்நலம் என்பதை ஊரில் எத்தனை பேர் உணர்ந்தோம் என்பது விளங்கவில்லை! தலை வலி, வயிறு வலி என்று தனித்தனியே அந்தந்த மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்க ஓடும் நாம், “எனக்கென்ன பைத்தியமா?” என்று வீம்பு காட்டாமல் மனநல மருத்துவர்களிடம் சென்று மனம் விட்டுப் பேசி தீர்வு காணுதலையும் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்.
நிற்க, இப்போது சொல்ல வருவது இன்னொன்று!
அதிகமாகப் படம் பார்க்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது அண்மையில் வெளிவந்த J.பேபி என்னும்
திரைப்படம்.
பெரும்பாலான பெற்றோர்கள் முதுமையில் அன்புக்கு ஏங்கியவர்களாக, அடைக்கலம் எங்கே புகுவது எனத் தெரியாமல் அல்லாடுவதைப் பார்க்க முடிகிறது. அதிலும் தன் பிள்ளைகளெல்லாம் வளர்ந்து அவர்களுக்கென்று குடும்பம் ஆகிவிட்டபின் தன் துணையிழந்து தனித்து நிற்கும் தாயின் நிலையோ அந்தோ பரிதாபம்! அதுவும் வசதியற்ற கடைநிலையில் இருக்கக்கூடிய குடும்பங்களில் இருப்போருக்குப் பெரும்
திண்டாட்டமே மிஞ்சும்!
ஆக, உளவியல் சிக்கல்கள் உணர்வுகளை உருக்குலைக்கும்; சிறு தன்முனைப்பும் உறவுகளைப் பிரித்து வைத்து குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்துவிடும்; நாள்பட்ட மன அழுத்தம் மனிதனைச் சுயநினைவு இழக்கச் செய்யும் வரை இட்டுச்செல்லும் என்ற மெய்ம்மைகளை அன்றாட அல்லல்களில் தங்க நேரமின்றி ஓடும் விரைவோட்ட வாழ்க்கையாளர்களுக்கு விளங்க வைக்கும் படம்.
அன்புக்குரிய இணையரின் இழப்பு, தன் பிள்ளைகளாலேயே ஒதுக்கப்படுகிறோம் என்கிற தவிப்பு, குடும்பம் குடும்பம் என்றே பின்னிப் பிணைந்து வாழ்ந்து விட்டு மூப்பின் விளிம்பில் அன்பிற்கு ஏங்கும் வெறுமை நிலையும், அலை போன்ற முற்றுப்பெறாச் சிக்கல்கள் தொடர்தலும், தன் குடும்பத்திற்குத் தானே ராணி என வாழ்ந்த காலம் மாறி எல்லாம் கைமீறிப் போனதாகத் தாக்கும் அழுத்த உணர்வும் கொண்ட ஒரு தாயின் நிலை என்னவாக உருமாறும் என்கிற உண்மையை வெளிச்சம் போடுகிறது J.பேபி திரைப்படம்.
நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார் ஊர்வசி!
ஆசையாய்த் தன் துணைவர் கட்டிய வீடு அடகில் அடித்துக் கொண்டு போகும் போதும், தம் மகன்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு பிரிந்து வாழும் நிலை காணும் போதும் “எனக்கே தெரியலையே என்ன செய்கிறேன்னு” என்று உருக்கமாகச் சொல்லும் போதும், மனநிலை சற்று மாறும் போது உள்ளே ஆள்களை விட்டு அறையைப் பூட்டும் போதும், எவரைக் கண்டாலும் வாயடியாய் வம்படி செய்யும் போதும், ஏழை எளிய துப்புரவுப் பணியாளருக்குத் தன் கையில் இருக்கும் காசைக் கொடுப்பது, தெருவில் பசியோடு இருப்பவருக்கு உணவு வாங்கிக் கொடுப்பதென தன்னுள் உறைந்து கிடக்கும் மனிதநேயத்தை வெளிக்காட்டும் போதும், மனநலக் காப்பகத்திற்குச் சென்றாலும் எல்லாரிடத்தும் தாய்ப் பாசம் கொட்டும் போதும் கலவையான உணர்வுகளையும் உண்மைக் காட்சியாகவே கண்களின் முன் நிறுத்துகிறார்.
திருந்துகிற அண்ணன் கதாபாத்திரமாகத்தான் நிஜ வாழ்வில் பலர் இருக்கிறார்கள் என்பது திண்ணம்…
செயற்கை சினிமாத்தனங்களற்ற காட்சிகளில் இயல்பான நீரோட்டம் போல் நகைச்சுவையும் கலந்து ஒன்றி வருகிறார். படம் அங்கே இங்கே என்று திரும்பாமல் நேர்கோட்டுப் பாதையில் எந்த இடைச் செருகலும் இன்றி கதையை மட்டுமே முன்னிறுத்திக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடைசியில் நான் தான் ‘ரியல் ஹீரோ’ என்று சொல்லாமல் சொல்கிறார் இராணுவ வீரர்! அதுமட்டுமல்ல பின்னால் நமக்கோர் இன்ப அதிர்ச்சியும் அவரால் காத்துக் கிடக்கிறது.
சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டதோ என்று நினைக்க விடாமல் உண்மைக் கதை என்று உள்ளத்தைத் தொட்டுப் பின் படத்தை நிறைவு செய்கிறார்கள்!
அன்றாடங் காய்ச்சிகள் வீட்டில் நடக்கும் அப்பட்டமான நிகழ்வுகள்- சொல்லாடல்கள் மிக நுணுக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முதலில் இருந்து இறுதி வரை அனைவரும் விரும்புகிற தம்பி கதாபாத்திரமாக இணைந்து வருபவர் தினேஷ்.
பல்லாண்டு காலச் சிக்கல்களும் 10 நிமிடங்கள் மனம் விட்டு பேசினால் – மனதில் இருப்பவற்றைக் கொட்டினால் மறைந்து போகும் என்றறியாமல் வீம்பிற்கு வாழ்வை வீணடிப்போருக்கும் சிந்தனையைத் தூண்டுகிறது இப்படம்.
சில இடங்களில் சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி தாயின் மனப்புழுக்கங்களை அன்பின் தயவோடு மாற்ற வேண்டும் என்று பாடம் எடுக்கும் படம்.
மதுவுக்கு அடிமையானவர்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் அதே எண்ணத்தோடு சதா அதைத் தேடியே ஓடிக்கொண்டிருப்பதோடு தன் உடலையும் கெடுத்துக்கொண்டு சூழலையே பொருட்படுத்தாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் எப்படிக் கெடுக்கிறார்கள், தன் உடைமைகளைக் கூட இழக்கிறார்கள் என்பதை மாறன் அவர்களின் நடிப்பு சிறப்பாக உணர்த்துகிறது. காவல்துறையின் அக்கறையான செயல்கள், இராணுவ வீரரின் அர்ப்பணிப்பு என மக்களுக்கு அவர்களிடமான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது இந்தப் படம்.
திரைப்படம் என்பது மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி விடும் வலிமையான ஓர் ஆயுதமாகும். மக்கள் விரும்புவதைத் தராமல் மக்களுக்கு எது தேவையோ அதைச் சொல்ல வேண்டும் என்று சமூக அக்கறையுடன் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து நேர்த்தியாகத் தந்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் மாரி அவர்கள். இந்தப் படத்தைப் பார்த்து பலரும் பாசமாக தங்கள் தாய்களுக்கு அவர்கள் விரும்புவதை வாங்கிக் கொடுத்தார்கள், தங்கள் உடன்பிறப்புகளிடம் பேசாமல் இருந்தவர்களும் கூட பேசினார்கள், அவற்றையெல்லாம் தன்னிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்று பெருமகிழ்ச்சி அடைகிறார். மாறன் அவர்களும் சமூகத்தைப் புரட்டிப் போடும் படங்களை முன்னெடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிறார் என்பதை அவர் பேச்சிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதுதான் இன்றைய தேவையுமாக இருக்கிறது. அந்த வகையில் குடும்பத்திற்கு ஆணிவேராக இருக்கும் தாய்களின் மனக்குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பும் கடமையும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இருக்கிறது என்ற கருத்தைப் பதிய வைக்கிறது இப்படம். ஆகவே, மனிதம் பேணுவதை நம் வீட்டில் நமக்காக இருக்கிற, நம்மை உலகிற்கு ஈந்த அன்னையிடமிருந்தே முதலில் தொடங்குவோம். அந்தத் தாயின் மனப் புழுக்கத்தை அன்பும் பாசமும் பொழிந்து தணிய வைப்போம். மனநலம் உடல்நலத்திலும் மிகப்பெரியது என்பதை உணர முயல்வோம்!