இயக்க வரலாறான தன் வரலாறு ( 339 ) புதுக்கோட்டையில் தந்தை பெரியார் சிலை திறப்பு

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மே16-31,2024

… கி. வீரமணி …

தஞ்சாவூர் – வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் இணையர்களான இராசேந்திரன்- பகுத்தறிவு ஆகியோரால் பிள்ளையார்பட்டி டாக்டர் எம்.ஜி.ஆர். நகரில் கட்டப்பட்ட புதிய இல்லத்தை 16.2.2005ஆம் தேதி புதன்கிழமை மாலை 5:30 மணியளவில் மோகனா வீரமணி அவர்கள் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் நல். இராமச்சந்திரன், டாக்டர்
ச.இராசசேகரன் ஆகியோர் முன்னிலையில் நாம் திறந்து வைத்தோம். உரிமையாளர்களின் விருப்பப்படி இல்லத்திற்கு “மோகனா இல்லம்“ என்று பெயர் சூட்டப்பட்டது.

காஞ்சிபுரம் தந்தை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி டி.ஏ.கோபாலன் அவர்களின் பேத்தியும் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகனின் சகோதரர்
டி.ஏ.ஜி.பொய்யாமொழி – மகேஸ்வரி ஆகியோரின் மகளுமான தேன்மொழி (எ) அனுவுக்கும் சென்னை வழக்குரைஞர் எம். சந்திரசேகரன்- வசந்தமாலா ஆகியோரின் மகன்

சி.தயாசங்கருக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவைக் காஞ்சிபுரம் ரயில்வே சாலையிலுள்ள அன்னை அஞ்சுகம் திருமண மாளிகையில் 18.2.2005 அன்று வெள்ளிக்கிழமை காலை 8:35 மணிக்கு நாம் தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம். நகரப் பிரமுகர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மணமக்களை வாழ்த்திப் பேசினர். டி.ஏ.ஜி. அன்பழகன் நன்றி கூறினார்.
திராவிடர் கழக மாநில இளைஞரணி முன்னாள் செயலாளர் இரா,. செயக்குமார் தம்பியும் உரத்தநாடு கண்ணன்தங்குடி கீழையூர் மா.இராமசாமி – கவுசல்யா ஆகியோரின் மகனுமான இரா. சிவக்குமாருக்கும் நாகை மாவட்டம் சிக்கவலம் தலைமை ஆசிரியர்
ஆர்.கோதண்டபாணி – தேவகி ஆகியோரின் மகள் கோ.செந்தமிழ்செல்விக்கும் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவைத் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி விழா அரங்கில் 18.2.2005 வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நாம் தலைமையேற்று நடத்தி வைத்தோம். தஞ்சை கோட்டம் பிரச்சாரக் குழுத் தலைவர் எஸ்.எஸ். மணியம், திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் ப. சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடந்தை வட்டம் நாச்சியார் கோவில் கழகத் தோழரும் ஒன்றியத் தலைவர் இர. வீரமணியின் மருமகனுமான ப. இரவி – சாந்தி இணையரால் நாச்சியார் கோவில் பாரதி நகரில் கட்டப்பட்ட ‘வள்ளியம்மாள் – பக்கிரிசாமி’ புதிய இல்லத்தை 19.2.2005 அன்று சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு நாம் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினோம். இயக்கப் பணியில் ஈடில்லாத் தொண்டு புரிந்த பெரியார் பெருந்தொண்டர் ஆர். தனுஷ்கோடியைப் பாராட்டி நாம் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தோம்.
திருவாரூர் பானகல் சாலை ஏ.கே.எம். மைதானத்தில் 19.2.2005ஆம் தேதி திராவிடர் விவசாய நலன் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு தலைமை தாங்கினார். வி.எஸ்.டி. அழகப்பன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ. மோகன் அறிமுகவுரையாற்றினார்.
மாநாட்டையொட்டி நடந்த பிரமாண்டமான பேரணி திருவாரூர் நகரைக் குலுக்கியது.
சுவர் எல்லாம் மாநாட்டு விளம்பரங்கள்! திரும்பிய பக்கமெல்லாம் வண்ண வண்ண விளம்பரத் தட்டிகள்! காணும் இடமெல்லாம் சுவரொட்டிகள்!

மாநாட்டின் சிறப்பு அம்சமாக பேரணி அமைந்திருந்தது. பவித்திர மாணிக்கம் தந்தை பெரியார் சிலையிலிருந்து பேரணி புறப்பட்டது. தஞ்சைக் கோட்டப் பிரச்சார அமைப்புக் குழுத் தலைவர் எஸ்.எஸ். மணியம் பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கழகப் பொதுக் குழு உறுப்பினர் கா. கணபதி, மாவட்ட விவசாய அணி செயலாளர் இரா. சேதுராமன், நாகை மாவட்ட விவசாய அணி செயலாளர் என். பாலகிருஷ்ணன் ஆகியோர் பேரணிக்குத் தலைமை வகித்தனர்.
இருவர் இருவராக இராணுவக் கட்டுப்பாட்டுடன் கழகக் கொடியேந்தி கழகத் தோழர்களும் மகளிரும் கொள்கை முழக்கமிட்டுச் சென்றனர்.விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை உள்ளடக்கியும், மூடநம்பிக்கைகளைச் சுட்டெரித்தும், சமூகநீதியை உயர்த்தியும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் பேரணியில் இடம் பெற்றன. இந்தப் பேரணியில் மூன்று தோழர்கள் முதுகில் அலகுகுத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்தனர்.
மார்க்கெட் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தனி மேடையிலிருந்து பேரணியை நாம் பார்வையிட்டோம். வழி நெடுக இருமருங்கிலும் ஏராளமான பொது மக்களும், இளைஞர்களும் பேரணிக் காட்சியைக் கண்டு களித்தனர். குறிப்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு செயல் விளக்கக் காட்சிகள் அவர்களைப் பெரிதும் ஈர்த்தன.

பேரணி வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் மாநாட்டு மேடையில் பாப்பா நாடு எஸ்.பி. பாஸ்கரின் பல்சுவை நிகழ்ச்சி நடந்துகொண்டே இருந்தது.

பேரணி மாநாட்டுப் பந்தலை அடைவதற்கு முன்பாகவே பொது மக்கள் கூட்டம் மாநாட்டுத் திடலில் அலை மோதியது.
மாநாட்டில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயம், விவசாயத் தொழிலாளர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாகத் தீர்மானங்கள் அமைந்திருந்தன.
திராவிடர் விவசாய சங்கம் ஏன்? என்ற தலைப்பில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் சுப்புலக்குமிபதி உரையாற்றினார். ஏர் உழுத பார்ப்பனர்கள் இருவர் அளித்த தட்சணையை அன்றைய காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஏற்க மறுத்ததைச் சுட்டிக் காட்டி விவசாயத்தைப் பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு இழிவாக நினைக்கின்றனர் என்பதை விளக்கினார்.
பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியின் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகத் தலைமை ஆலோசகர் டாக்டர் ஏ.ரா.ர. சதாசிவம் அவர்கள் மாநாட்டின் முக்கிய உரையை நிகழ்த்தினார்.
விவசாயத்தில் பயிர்கள் மட்டுமல்ல; மரங்கள் எந்த அளவுக்கு வருவாய் தரக்கூடியவை என்பது குறித்தும் விவசாயத்தைப் பலனுள்ள வகையில் வளர்த்து எடுப்பதற்கான கருத்துகள் குறித்தும் ஆய்வுரை தந்தார்.

இறுதியில் நமது நிறைவுரையில் வெள்ளாமை என்றாலே இல்லாமை, இயலாமை என்று ஆகிவிட்ட அவலத்தையும் சுட்டிக்காட்டினோம்.
திராவிடர் விவசாய சங்கத்தின் நோக்கம் குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்துகளுக்கு விளக்கம் தந்தோம். 1956ஆம் ஆண்டிலேயே நாகையில் நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி தந்தை பெரியார் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்த தொலை நோக்குத் தீர்மானங்களை எடுத்துக் காட்டினோம்.

மாநாட்டு மேடையில் நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வெண்மணல் சேரி துரைசாமி – பூசவள்ளி இணையரின் மகள் வசந்தி மற்றும் கீழ்வேளூர் நேரு நகர் பெரியார் பெருந்தொண்டர் (மறைந்த) மு.மணி – சந்திரா இணையரின் மகன் முத்துராஜா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை நாம் நடத்தி வைத்தோம்.

தந்தை பெரியார்மீது நீங்காத பற்றுள்ளவரும் சிறந்த பகுத்தறிவுவாதியுமான திருச்சி பிரபல வழக்குரைஞர் கு.அ. குஞ்சிதபாதம் (வயது 82) அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தினோம். 20.2.2005 ஞாயிறன்று மாலையில் நாம் திருச்சி அண்ணா நகரிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அவரது இணையர் ஈசுவரி அம்மாள், மகள் மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினோம்.

மறைந்த வழக்குரைஞர் கு.அ. குஞ்சிதபாதம் அவர்களின் விருப்பத்தின்படி டில்லி பெரியார் மய்யத்தின் வளர்ச்சிக்காக ரூ.10,000/- தொகையை நன்கொடையாக அவரது மகன் டாக்டர் இராஜசேகர் எம்மிடம் வழங்கினார்.

பழம்பெரும் சுயமரியாதை இயக்க வீரரும் லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும் பொதுக்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவருமான பெரியார் பெருந்தொண்டர் செம்பறை கு. நடராசன் 17.2.2005ஆம் நாளன்று இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்தினோம்.
20.2.2005ஆம் தேதி ஞாயிறு மாலை செம்பறை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். அன்றைய கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு, துணைப் பொதுச் செயலாளர்
இரா.குணசேகரன் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி விழா 23.2.2005 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் நாம் கலந்துகொண்டு “திருவள்ளுவரின் பொருளாதாரக் கொள்கைகள்” எனும் தலைப்பில் உரையாற்றினோம்.
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தி.ப. பெரியாரடியான்- சிவகாமி சுந்தரி இணையரின் மகள் வை. மணிமொழிக்கும் குமரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.சங்கரநாராயணன்- அருணா இணையரின் மகன் ச.அழகரசுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவை 27.2.2005 காலை 10:45 மணியளவில் தூத்துக்குடி அழகர் மகால் திருமண அரங்கில் நாம் தலைமையேற்று நடத்தி வைத்தோம். தி.மு.க. மாநில சட்டத்துறை செயலாளர் அ.பெ. சுப்பிரமணியம், தூத்துக்குடி வ.உ.சி. கல்விக்கழக கவுரவச் செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பெரியார் பெருந்தொண்டரும் மாவட்டக் காப்பாளருமான டாக்டர் கு.நம்பிநாராயணன் 6.1.2005 அன்று காலமானார். 27.2.2005 ஞாயிறன்று மாலை 4:15 மணியளவில் வள்ளியூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். பின்னர் மாலை 4:30 மணியளவில் கிருஷ்ண கல்யாண மகாலில் மறைந்த கு. நம்பிநாராயணன் படத்தைத் திறந்து வைத்து நினைவுரையாற்றினோம். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை அவரது குடும்பத்தினர் எம்மிடம் வழங்கினர்.

புதுக்கோட்டை நகரின் பிரபல கண் மருத்துவ நிபுணரும் தந்தை பெரியார் மீதும் எம்மீதும் நீங்காத அன்பு கொண்டவரும் சிறந்த பகுத்தறிவாளருமான டாக்டர் எஸ். சண்முகம் – வசந்தகுமாரி இணையோரால் புதுக்கோட்டை நகர் வடக்கு வீதி இல்லத்தில் நிறுவப்பட்ட எம்.ஜே. பார்வை பாதுகாப்பு அறக்கட்டளையை 28.2.2005ஆம் தேதி மாலை நாம் திறந்து வைத்தோம். அவரது குடும்பத்தினர் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடையை டாக்டர் எஸ். சண்முகம் எம்மிடம் வழங்கினார்.

புதுக்கோட்டை நகரின் மய்யப்பகுதியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்குச் சொந்தமான மாவட்ட திராவிடர் கழக அலுவலக வளாகத்தின் முன்புறம் தந்தை பெரியார் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டு, திறக்கப்படவிருந்த நிலையில், அந்தச் சிலையினை மாவட்ட ஆட்சியராக இருந்த பார்ப்பனர் ஒருவர் மூடி சீல் வைத்தார். தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு தேவையற்ற ஆவணங்களைக் கேட்டு சட்டவிரோதமாக அரசு செயல்பட்டதை எடுத்துக்காட்டி நீதிமன்றம் சென்றோம். அனுமதி பெற்றபின், 28.02.2005 திங்கட்கிழமை மாலை 6.10 மணியளவில் ஆயக்காரன் புலம் பெரியார் பெருந்தொண்டர் 92 வயதை அடைந்த சுயமரியாதை வீரர் க.சுந்தரம் தலைமையில், தஞ்சை கோட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் எஸ்.எஸ். மணியம், பொதுக்குழு உறுப்பினர்கள் இரெ.புட்பநாதன், பெ. இராவணன் ஆகியோர் முன்னிலையில் கழகத் தோழர்கள், தோழியர்கள் ஆயிரக்கணக்கில் புடைசூழ பெரியார் வாழ்க முழக்கம் விண்ணதிர ஒலிக்கத் திறந்து வைத்தோம்.

தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவினை-யொட்டி அன்று மாலை 5 மணியளவில் மத்திய செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு தலைமையில், புதுக்கோட்டை கோட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் சா.இராமன், செயலாளர் சி.செந்தமிழரசி முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் க.மாரிமுத்து ஊர்வலத்தினைத் தொடங்கி வைத்தார். அவ்வூர்வலத்தில் கழக இளைஞரணியினர் மூன்று பேர் முதுகில் அலகுகுத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்ததை பொது மக்கள் பார்த்து வியப்படைந்தனர். மேலும் செடில் காவடி எடுத்து தாரை தப்பட்டை முழங்கிட ஆட்டம் போட்டு ஆடிக் காட்டினர்.

கழக மகளிரணி தீச்சட்டி ஏந்தி வந்தனர். கரம்பக்குடி முத்து குழுவினர் சுருள் கத்தி வீச்சு, தீட்டிய அரிவாள்மீது ஏறி நிற்பது, வாயில் சூடம் கொளுத்திக் காட்டியும், வீரக்காட்சிகள் செய்து காட்டி வந்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து கழகத் தொண்டர்கள் இரண்டு இரண்டு பேராக வரிசையாக கொடியுடன் அணிவகுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுக்கூட்ட மேடையான திலகர் திடலை அடைந்தனர்.

ஊர்வலம் முடிந்ததும் மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாகத் தொடங்கியது. கும்பகோணம் நாகப்பன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தினார். புதுக்கோட்டை மாவட்ட தலைவர் கரு.காளிமுத்து அனைவரையும் வரவேற்று
உரையாற்றினார். தொடர்ந்து காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா, திருவாரூர்
எஸ்.எஸ்.மணியம், ராசகிரி கோ. தங்கராசு, பெரியார் பெருந்தொண்டர் க. சுந்தரம், கழக சட்டத்துறை அமைப்பாளர் கி. மகேந்திரன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் இரா. குணசேகரன், கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு ஆகியோர் உரையாற்றிய பின்னர், நிறைவாக, சிலை திறப்பு பற்றிய தெளிவான விளக்கத்தையும், திராவிடர் கழகம் ஆற்றிவரும் செயல்பாட்டையும், கழகத் தோழர்களின் கட்டுப்பாட்டையும் சட்டத்துக்குள்பட்ட பணிகளையும் விளக்கி உரையாற்றினோம்.

விழாவில் புதுக்கோட்டை நகரில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையைத் திறக்கவிடாமல் உருவாக்கப்பட்ட பார்ப்பனர்களின் சதித் திட்டத்தை நீதிமன்றம் மூலம் சரியானபடி வாதம் செய்து தடைகளைச் சுக்கு நூறாக்கி தரை மட்டமாக்கிய கழக வழக்குரைஞர்களான மதுரை கி. மகேந்திரன், இராசேந்திரன், கணேசன், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ப. சுப்பிரமணியன் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவித்து சிறப்பு செய்தோம். அத்துடன் சிலை அமைய அரும்பாடுபட்ட கழக நிருவாகிகள் கரு.காளிமுத்து, க.மாரிமுத்து, இரெ.புட்பநாதன், பெ.இராவணன், சு.ரெகுநாதன், அறந்தாங்கி, மு.கண்ணுச்சாமி ஆகியோரைப் பாராட்டி நாம் சால்வை அணிவித்தோம்.
கழகப் பொறுப்பாளர்கள் சால்வைக்குப் பதில் சந்தாவும், நன்கொடைகளும் நீண்ட வரிசையில் வந்து வழங்கினர். மக்கள் கூட்டம் திலகர் திடல் முழுவதும் நிரம்பியிருந்தது. நகர தி.க. தலைவர் சு. கண்ணன் நன்றி கூறினார். இரவு 9.45 மணிக்கு நிகழ்வு நிறைவு பெற்றது.
நினைவுகள் நீளும்…