சுயமரியாதை வெற்றி உலா – இதோ ! வாருங்கள் தோழர்களே! வாருங்கள்!!

2024 தலையங்கம் மே16-31,2024
‘‘1. உத்தமமான தலைவர்களையும்,  
2. உண்மையான தொண்டர்களையும்,  
3. உறுதியான கொள்கையையும்,
4. யோக்கியமான பிரச்சாரங்களையும்,     
கொண்டு சரியானபடி ஒரு வருஷத்திற்கு  வேலை செய்தால், நமது சமூகம்
சுயமரியாதையும்
சுதந்திரத்தையும்
அடைந்து விடலாம்’’                                                  _ தந்தை பெரியார் எழுதிய 
26.12.1926 ‘குடிஅரசு’ 
தலையங்கம்.
தோழர்களே,
நூற்றாண்டு விழா துவக்கம் பிரச்சாரம் மூலம் கொள்கை மழையாய்ப் பெய்ய ஆரம்பித்துவிட்டது !
அறிவு ஆசான் தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை’ உலகம், தாகத்திற்காக அலைந்த மனிதனுக்கு தூய்மையான தண்ணீர் கிட்டியது போல, அதனால் பயனடைந்த – பயன்பெறவேண்டிய கோடானு கோடி மக்கள் ஆவலோடு அள்ளிப் பருக ஆசையோடு காத்திருக்கிறார்கள்!
மனித சுயமரியாதையையே முதன்மைப்படுத்தி, நூறு ஆண்டுகளுக்கு முன் உலகில் நிறுவப்பட்ட ஓர் மக்கள் இயக்கம் – உலகில் இன்றளவும்கூட எங்காவது இருந்தால் நமக்குக் காட்டுங்கள்!
‘சுயமரியாதை’ என்பது தனிப்பட்ட எவருக்குமான தனியுடைமை – தனி உரிமை அல்ல. மனித குலம் என்பதற்கான மகத்தான, மாறாத, மாற்றப்படக்கூடாத மாபெரும் அடையாளம்!
சமத்துவமும் சகோதரத்துவமும், அறிவுச் சுதந்திரமும் அதன் இலக்குகள்!
அதனால்தான் அதன் நிறுவனர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற சுய சிந்தனையாளர் தந்தை பெரியார் சில வரிகளில் –
‘‘மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு’’
என்றார்!
மனித குலம் அழகைத் தேடி ஓடிக்கொண்டே உள்ளது !
‘‘எது அழகு? எது அறிவு?’ உண்மையே !
– இதை இன்னமும் படித்த பாமரர்கள் உட்பட, உயர் பதவியை இவ்வியக்கத்தினை களமாட்டத்தால் பெற்ற பதவியாலும் சுயநலத்தாலும் உயர்ந்த மனிதர்களாய் உலாவரும் மனித ஜென்மங்களையும் உணர மறுத்தவர்களுக்கு அடிமேல் அடி அடித்து நகரவைக்கும் அம்மிக் கற்களையும் மாற்றிக் காண உறுதி ஏற்று, நம்பிக்கையுடன் நாம் ஒருங்கிணைந்து,
மானம் பாராது
காலம் பாராது
நன்றியை எதிர் பாராது
எதிர்நீச்சலையே வாழ்வாக்கிக் கொண்டு
போராட, புதிய நூற்றாண்டுகளில் 
புதுச் சூளுரை ஏற்போம்!
தோழர்களே,
பெரும் எண்ணிக்கைகளால் பெரு வெற்றி குவிந்ததில்லை!
கட்டுப்பாடான அர்ப்பணிப்பாளர்களால்
அவை வெற்றியைப் பெற்றுள்ளன.
நமது வீர உலா, வெற்றி உலா
துவங்கிவிட்டது!
-கி.வீரமணி,
ஆசிரியர்