திராவிடர் கழகத்தின் உறுப்பினராக தாத்தா கருப்பன் அவர்கள், அப்பா முனியாண்டி அவர்கள், இப்போது சின்னத்துரை அவர்கள்!
காலம் காலமாக இந்த இயக்கத்தில், குடும்பத்தோடு பணி செய்கிறார்களே, என்ன காரணம்? தனிப்பட்ட பயன்கள் எதுவும் இருக்கிறதா இல்லை
பணம் எதுவும் கிடைக்கிறதா?
மெழுகுவத்தியின் நிறம் கருப்பு !
எதுவுமில்லை! மாறாக நான்கு பேர் பாராட்டினால், அதே அளவு விமர்சனமும் செய்வார்கள்.
எதிராளிகளுக்கும் சேர்த்து, பாடுபடுவதே இந்த இயக்கத்தினர் பணி! மெழுகுவத்திகள் தன்னையே உருக்கிக் கொள்ளும்! இவர்கள் கருப்பு நிற மெழுகுவத்திகள்! இறக்கும் வரையிலும், அறியாமை இருட்டை விரட்டும் பணியில் எரிந்து கொண்டே இருப்பார்கள்!
சின்னத்துரை (80) அவர்களைப் பெரியார் திடலில் இயல்பாகச் சந்தித்தோம். எல்லோரும் போக, வர இருக்கும் இடத்தில் “விடுதலை” நாளிதழை உன்னிப்பாகப் படித்துக் கொண்டிருந்தார். மூக்குக் கண்ணாடி கூட இல்லை. “அய்யா வணக்கம்!” என்றோம். அப்போது தான் நிமிர்ந்து பார்க்கிறார்.
பெயர் என்ன, ஊர் எது? என விசாரிக்க, இயக்கச்செயல்பாடுகள் செய்திக் குவியலாக வந்து விழுகிறது!
பிறகுதான் இதை “உண்மை” இதழுக்குப் பயன்படுத்தலாமே எனக் குறிப்பே எடுக்கத் தொடங்கினோம்!
மூன்று வகை உணவுகள்!
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், விற்குடி குலமாணிக்கம் இவருடைய ஊர்! கிராமத்தில் இருந்து கொண்டே 8ஆம் வகுப்பு வரை முடித்துள்ளார்.
இளம் வயதிலிருந்து இயக்கத்தில் இருக்கும் நிலையில், தம் 17ஆம் வயதில் வட்டாரச் செயலாளர் பொறுப்பிற்கு வருகிறார். அன்றைய தினமே அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று கைதாகிறார் !
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று பள்ளி மாணவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட மூன்று வகையான சோறு வகைகளை இவர் ஏற்பாடு செய்வாராம். பெரும்பாலும் தம் சொந்த செலவில் இதனை அவர் செய்து வருகிறார். “எதையும் தொடங்குவது வெற்றியல்ல; அதைத் தொடர்வதிலே வெற்றி இருக்கிறது” என்பார்கள். அந்த வகையில் பெரியார் பெருந்தொண்டர் சின்னத்துரை அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக இதனைச் செய்து வருகிறார் !
நாட்டைக் காப்பாற்றும் நாலணா!
“சுற்று வட்டாரக் கிராமங்களுக்குப் பெரியார் அடிக்கடி வருவாராம். அப்போது பெயர் வைக்க நாலணா வாங்குவார். அந்த நாலணா தான் இன்று நாட்டையே காப்பாற்றுகிறது என்கிறார் சின்னத்துரை. பெரியார் பேசிய அனைத்துக் கொள்கைகளுமே இன்று வெற்றி பெற்றுவிட்டன என மகிழ்ச்சியாகக் கூறுகிறார் அவர்! ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோதே மாவட்ட அமைப்பாளராகவும், ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்! அருகில் உள்ள வாழ்குடி கிராமத்தில் பெரியார் ஒருமுறை பேசியுள்ளார். அது சுற்று வட்டாரக் கிராமங்களில் நல்ல விளைவை ஏற்படுத்தியுள்ளது! நன்னிலம் பகுதியில் ஒருமுறை மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அதில் கம்பு சுற்றுவது, சுருள் சுற்றுவது, மடுவு சுற்றுவது போன்றவை இடம்பெறுமாம். பெரியார் உன்னிப்பாக அவற்றைக் கவனிப்பாராம்!
ஒரு ரூபாய் தண்டனை!
பின்னாளில் விற்குடி கிராமத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஊர்வலத்தில் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று, சிறப்புரை ஆற்றியுள்ளார்கள்! அதுசமயம் ஒன்றியத் தலைவராக இருந்த திருவேங்கடம் அவர்கள், நிகழ்ச்சிக்கு வெள்ளைச் சட்டை அணிந்து வந்துள்ளார். பலரும் வித்தியாசமாகப் பார்த்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் அவர்கள் கருப்புச் சட்டை எங்கே எனக் கேட்டு, அடையாளத்திற்காக ஒரு ரூபாய் தண்டனை விதித்துள்ளார். உடனடியாக ஒரு ரூபாய் வழங்கிய திருவேங்கடம் அவர்கள், பிறகு எங்கும், எப்போதும் கருப்புச் சட்டையில் தான் இருப்பாராம்!
வாசிப்பே சுவாசிப்பு!
நாளிதழ் மற்றும் நூல்கள் வாசிப்பதில் சின்னத்துரை அவர்கள் இன்றும் மிக ஆர்வமாக இருக்கிறார். பெரியார் நூல்களை நிறைய வாசித்த அதே வேளையில், ஆசிரியரின் நூல்களையும் வரி விடாமல் படிக்கிறார். தஞ்சாவூரில் வெளியிடப்பட்ட “தாய் வீட்டில் கலைஞர்” நூலில் 368 பக்கங்கள் முடித்துவிட்டதாகக் கூறுகிறார். மீதத்தை சிறிது நாட்களில் நிறைவு செய்வேன் என்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை சந்தாதாரர் எனவும் பெருமைப்படுகிறார்! 1970ஆம் ஆண்டு தோழர் முருகப்பா தலைமையில், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். வாழ்விணையர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார். 3 மகன்களும், 1 மகளும் இவருக்கு உள்ளனர்.
கொள்கை அணுகுமுறை!
வாழ்குடி கிராமத்தில் பெரியார் சிலை வைத்து பிறந்த நாள், நினைவு நாள் என துடிப்போடு இயங்குகிறார் அய்யா சின்னத்துரை! மாநில முழுவதும் நடைபெறும் மாநாடுகள், பிற முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வதோடு, திருச்சி, சிறுகனூர், பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று, தன்னால் இயன்ற ரூ. 2 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்!
தன்னுடைய தாயார் இறந்த நிலையில், உடன்பிறந்த 3 சகோதரர்களும், அண்ணன் சின்னத்துரை கொள்கைப்படியே அடக்கம் செய்வோம் என
ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். அந்தளவிற்கு அனைவரிடமும் சிறந்த அணுகுமுறையைப் பேணுபவராக இருக்கிறார்! மண்ணுக்கு இரையாகும் தம் உடல் மருத்துவக் கல்லூரிக்குப் பயன்படட்டும் என, உடற்கொடை பதிவு செய்துள்ளார்! இன்றைக்கும்
விற்குடி குலமாணிக்கம் கிராமத்தில் 4 கழகக் கொடிகள் பறக்க, கம்பீரமாய் வலம் வருகிறார் நம் சின்னத்துரை!
இதுதான் வளர்ச்சி!
கக்கலாஞ்சேரி தொடங்கி நாகூர் வரை, சற்றொப்ப
15 கிலோ மீட்டர் தொலைவிற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமே இருந்தனர் என்பதையும் நினைவு
கூர்கிறார். பிறகு தமிழ்நாடு கல்வி வளர்ச்சி பெற்று, வேலை வாய்ப்புகள் பெருக, தொழில் துறையும் அதிகரித்தது. இவையெல்லாம் கிராம மக்களின் இடம் பெயர்வுக்கு முக்கியக் காரணங்கள் ஆகின!
“தமிழ்நாட்டு இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிட்டனர், அதனால்தான் வட மாநில இளைஞர்கள் இங்கு
வந்து வேலையைப் பிடித்து விட்டனர்”, எனத் தவறாகச் சிலர் சொல்கின்றனர். ஆனால் உண்மை நிலை வேறு. குறைந்தபட்சம் ஒரு கல்லூரிப் படிப்போ, தொழில் நுட்பமோ இல்லாமல் எந்த இளைஞரும் தமிழ்நாட்டில் இல்லை. எனவே அவரவருக்கு ஏற்ற அதிகபட்ச வேலை, அதிகபட்ச ஊதியத்திற்கு மாறிக் கொண்டே இருக்கிறார்கள்! தாத்தா கொத்தனாராக இருந்திருப்பார், அப்பா மேஸ்திரியாக மாறியிருப்பார், பிள்ளை “சிவில் இன்ஜினியராக” உயர்ந்திருப்பார்! இதுதான் வளர்ச்சி! இதுதான் திராவிடத் தத்துவம்!!
ஒளி ஏற்றிய கருஞ்சட்டை!
இந்தத் தத்துவத்தை உயர்த்தும் பொருட்டே ஆயிரமாயிரம் சின்னத்துரைகள், விளம்பரமின்றி உழைத்து வருகிறார்கள். கொள்கையில் மட்டுமின்றி, பொது வேலைகளிலும் இவர் கெட்டிக்காரர் எனச் சக தோழர்கள் கூறுகின்றனர்! அண்மையில் கூட குல மாணிக்கம், அகரத்திறப்பு ஆகிய கிராமத்திற்குப் புதிய “டிரான்ஸ்பார்மர்” கிடைக்க இவர் வழிவகை செய்துள்ளார்! மின் பற்றாக்குறை இருக்கிறதே என எல்லோரும் கவலைப்பட, 80 வயதான இந்த இளைஞர் தான் செயலில் இறங்கியுள்ளார். காரண, காரியங்களை விண்ணப்பமாக எழுதி மாவட்ட ஆட்சியர், மின்வாரியத் துறை உள்ளிட்ட பல இடங்களுக்கும் அலைந்து, திரிந்து ஒளி ஏற்றி வைத்துள்ளார். இந்தப் புதிய “டிரான்ஸ்பார்மரை” நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் திறந்து வைத்துள்ளார்!
ஆசிரியரின் சாதனைகள்!
இயக்க அனுபவம் 60 ஆண்டுகளைக் கடந்தும், சலிப்பின்றி இயங்கி வருகிறார் சின்னத்துரை அவர்கள்! திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியரின் செயல்பாடுகள், திட்டங்கள் அனைத்தும் மிகப் பெரிய சாதனைகள் எனக் கூறுகிறார். பெரியாருக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் கூட, இவ்வளவு செய்திருக்க முடியாது என உணர்ச்சிவசப்படுகிறார்!
தமிழ்நாடு முழுக்கப் பெரியார் பெருந் தொண்டர்களின் நூற்றாண்டுகளைக் கொண்டாடுவது எவ்வளவு பெரிய வரலாறு! அந்தக் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்து, இளைய தலைமுறைக்கும் அவர்களை அறிமுகம் செய்வது ஒப்பற்ற செயல்! அதேபோன்று வட நாட்டுத் தலைவர்களை எல்லாம் பெரியார் திடலுக்கு வரவழைத்து, அவர்களை நமக்கு அறிமுகம் செய்வதிலும், ஆசிரியருக்கு நிகர் ஆசிரியரே!
தற்போது திருமருகல் ஒன்றியத்தின் செயலாளராக இருக்கும் இவர், வயது 80 ஆனாலும், ‘விடுதலை’யைத் தொடர்ந்து வாசிப்பதால், 20 வயது சுறுசுறுப்புடன்
தம் சிந்தனையைப் பொலிவோடு வைத்திருக்கிறார்!
வாழ்க அய்யா சின்னத்துரை!