ஈரோட்டார் எரிமலையின் உரைக்கு ழம்பில்
எழுத்துளிகள் எடுத்தாண்டுத் தன்மா னத்தைச்
சீராட்டும் தமிழர்க்காய்ச் சிலைவ டித்த
சிந்தனையின் உச்சிவானம்! கவிதை யென்னும்
பேரேட்டின் தனிமுதல்வன்! பாட்டுச் சிற்பி!
பாவேந்தன்! தமிழர்க்காய் உதித்த தாய்மை!
கூராட்டிப் பாப்பெய்து இனந லத்தால்
கோலோச்சும் அடித்தளத்தை அமைத்த தோழன்!
நிமிர்மலையின் வீழருவி தனில்கு ளித்து
நெடுங்கணக்குத் தமிழ்மனத்தில் தென்றல் தூவி
உமிகளையும் நெல்லாக்கி உயிர்க்க வைக்க
உழுவயலில் வீரத்தை விதைத்து வைத்துத்
துமியளவும் விலகாத நேர்க்கோ டாக்கும்
தொண்டறத்தைப் பெரியார்போல் இவர்தான் செய்தார்!
இமியளவும் விலகாத தோலெ ழுத்தால்
என்றைக்கும் கவிப்பெரியார்! பாவேந் தன்தான்!
செக்கர்வான் நாணத்தில் இமைகள் மூடும்!
செழுமிருளில் இவர்காதல் கவிதை பாடும்!
சிக்கல்கள் சிணுங்கல்கள் இலாக்கு றிப்பில்
செழுமையாய் முதியோரின் காதல் பேசும்!
அக்களைக்கும் இக்களைக்கும் தாவும் வால்கள்
அழகின்சி ரிப்பெழுதி வியக்க வைக்கும்!
எக்காளப் பாண்டியனைப் பரிசாய் நீட்டி
என்றைக்கும் சஞ்சீவிச் சாரல் போர்த்தும்!
தொக்கிநிற்கும் கவிஞனல்லன்! களத்து வீரன்!
தொலையாத தன்மான எழுச்சிக் காரன்!
சொக்கவைக்கும் செம்மொழியின் வேரி னின்றும்
சேவேந்து நிமிர்கவிஞன்! பிறரின் காலை
எக்காலும் பணியாத எழுத்துக் காரன்!
என்றைக்கும் இன்தமிழ்க்காய் வாய்த்தி ருக்கும்
முக்காலக் கவிஞனிவன்! பாவேந் தன்தான்!
விதிக்கபாலம் உதைத்துவிளை யாட வேண்டும்!
விழல்சாதி வேரறுத்து வீச வேண்டும்!
சதிமுகத்துச் சாணக்ய சூழ்ச்சி வென்றே
சரித்திரத்தைத் திசை மாற்றிச் சமைக்க வேண்டும்!
நதிமுகத்துக் கரைவளங்கள் தமிழ்நி லத்தில்
நாள்தோறும் பெருகவேண்டும்!யார்தான் வேண்டும்?
அதிலென்ன சந்தேகம்? பெரியார் வேண்டும்!
அவர்தடியாய்ப் பாவேந்தர் வரவு வேண்டும்!
ஊழல்களின் ஊற்றுக்கண் ஒன்றி யத்தின்
உயிர்நரம்புச் சனாதனத்தின் வேர்பி டுங்க
வேழமெனப் பெரியார்தான் வரவும் வேண்டும்!
வெற்றிக்குப் பாவேந்தன் வரவு வேண்டும்!
கூழைகளின் முதுகுவயல் முத்து றிஞ்சும்
குலக்கல்வித் தொப்பைகளைக் கரைக்க வைக்க
ஏழைகளின் மருத்துவராய்ப் பெரியார் வேண்டும்!
எடுத்தளிக்கப் பாவேந்தன் கைகள் வேண்டும்!
விழுதுகளின் வேர்க்கிடங்கு! கதிர்ப்பி ழம்பு
வெளிச்சத்தின் பன்மடங்கு! கவிதைத் தோப்பு!
எழுதுகோலோ எரிமலையின் கருக்கி டங்கு!
எழுகவிதை தீப்பிழம்பின் மழைச்சு ரங்கம்!
நழுவலிலா நங்கூர நிமிர ரங்கு!
நாளுமிவன் தமிழர்க்கு வாழ்த்த ரங்கு!
பழுதில்லாத் தன்மானப் பேர ரங்கு!
பாவேந்தன் எனச் சொல்லும் உலக ரங்கு!
உச்சரிக்கும் நாவுக்குள் தேன்கி டங்கு!
உள்வைத்தால் உயிர்நரம்பில் கவிய ரங்கு!
அச்சங்கள் அண்டாது விலக்கி வைக்கும்
ஆண்மைகளின் உயிர்க்கூட்டு வீற ரங்கை
மிச்சமின்றித் தருகின்றான்! மூச்சுக் காற்றாய்
முந்திவந்து நிற்கின்ற பெரியார் போல
பச்சோந்தித் தனமில்லா வாழ்வ ரங்கு
பாவேந்தன் தருகின்றான்! நீயி யங்கு! ♦