‘‘400-ன்னு சொல்றாங்க, மே கடைசி வரை காத்திருக்க அது 250 ஆகக் குறையும். ஜூன் முதல் வாரம் 175-200 ஆகும்.
நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழ விலையைச் சொன்னேன்.”
இது, மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது ‘எக்ஸ்’ தளத்தில் செய்துள்ள பதிவு.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) அரசின் பத்தாண்டுகால மக்கள் விரோத, ஜனநாயக ஒழிப்பு, இந்திய அரசமைப்புச் சட்ட ஒழிப்பு ஆட்சி முடிவுக்கு வருவதுபற்றி
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் செய்திகளும், உண்மை நிலவரங்களும் கட்டியம் கூறுகின்றன!
உண்மைகளை, எதார்த்த நிலைமைகளை விளக்கி வாக்காளப் பெருமக்களுக்குக் கூறவேண்டியது, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகநலத் தொண்டனின் கட்டாயக் கடமையாகும்.
அந்த அடிப்படையில்தான் மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய்.குரேஷி மேற்கண்ட கருத்தைக் கூறியுள்ளார்.
தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் பரப்பும் திட்டமிட்ட பொய்கள்
பா.ஜ.க அணி 400, 370 இடங்களைப் பெறும் என்று, கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் பொய்யான கருத்தைத் திணித்து மக்களை ஏமாற்ற முயலும் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.
மோடியின் ஒன்றிய அரசு ‘திராவிட மாடல்’போல சாதனை மாடல் அல்ல. அது ஒரு ‘விளம்பர மாடல்’ என்பதை நாடும், வாக்காளர்களும் நன்கு உணர்ந்துள்ள நிலையில், முன்பு ஏமாந்த இணைய தள இளைஞர்களும் இப்போது ஏமாறத் தயாராக இல்லை!
2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, ‘‘குஜராத் ஆட்சி பிம்பம்”, – திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மிக ‘பூதாகரமாக’ ஊதிப் பெருக்கப்பட்டு, வாக்காளர்களை நம்ப வைத்த ஒன்று. தேசியக் கூட்டணி (என்.டி.ஏ.) கட்சிகளும் அம்முயற்சியில் சேர்ந்தே செயல்பட்டன.
ஆனால், 2019இல் இருந்ததைவிட 2024இல், பி.ஜே.பி.யுடன் சேர்ந்திருந்த கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
தேர்தலில் தோற்றாலும், பல மாநிலங்களில் பதவி ஆசையைக் காட்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டி, கட்சித் தாவல்மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்து, – ஆளுநர்கள் துணையுடன் அரசமைப்புச் சட்ட விரோத செயல் மூலம் பா.ஜ.க. காவி ஆட்சிகளை அமைத்தது.
ஆனால், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் தெளிவுடன் உள்ளனர். பி.ஜே.பி. ஒன்றிய ஆட்சிக்கு எதிராய், உலக நாடுகளின் வன்மையான கண்டனங்களும் நாளும் வலுத்து வருகின்றன! முன்பு போலல்லாது – எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணிமூலம் ஒருங்கிணைந்து), ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது” என்ற புரிந்துணர்வுடன் தேர்தலைச் சந்திக்கின்றன.
மிக அதிகமான 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாதிகூட பெற முடியாது என்பதை பா.ஜ.கவே உணர்ந்துள்ளது.
முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டு ஒன்றுபட்டு நிற்கும் நிலை அம்மாநிலத்தில்.
பீகாரிலும் அதேபோன்ற ஒருங்கிணைப்பு.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கூட்டில்லை.
மகாராட்டிரத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு பா.ஜ.கவின் ஆட்சிக் கனவைக் கலைத்து, மோடியின் தூக்கத்தையும் குலைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே மேகாலயா, நாகாலாந்து போன்றவற்றில் பா.ஜ.க.வுக்கு போட்டியிட வேட்பாளர்களே கிடைக்காது, பின்வாங்கிக் கொண்ட நிலை !
டில்லி, பஞ்சாப் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை; கோபம் உண்டு!
அரியானாவில் கூட்டு உடைந்து, பா.ஜ.க. தனித்து விடப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும்விட, குஜராத்தில் ஜாதி ஆணவத்தோடு பா.ஜ.கவின் ஒன்றிய அமைச்சர், வேட்பாளராய்ப் போட்டியிடத் தயாரான, ரூபாலா என்பவரின் வாய்க் கொழுப்புப் பேச்சு, ராஜ்புத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (பல மாநிலங்களிலும்) பகிரங்கமாக பா.ஜ.கவை எதிர்த்து, வெளியே வந்து முழங்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
பட்டிதார் சமூகத்திற்கும், ராஜ்புத்திர சமூகத்திற்கும் ஜாதி அடிப்படைப் பிரிவினையை இவர்களது பொறுப்பற்ற பேச்சால் உருவாக்கியுள்ளனர்.! அதனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் குஜராத்தில் சமரசம் செய்ய மூன்று நாள்கள் முகாமிட்டு முட்டுக் கொடுக்க முயற்சிக்கிறார்.!
மகாராஷ்டிரம், நாக்பூர் பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்திட பிரதமர் மோடி போகமாட்டார்! அங்கே போட்டியிடும் மூத்த அமைச்சர் நிதின்கட்கரியின் ஆதரவாளர்கள் பிரதமர் மோடி படத்தையோ, பெயரையோ பயன்படுத்தவில்லை என்பதால், நிலைமை விபரீதமாக இருக்கிறது. (ஒரே கட்சிக்குள் அரசியல் மோதல்).
பா.ஜ.க.வைக் மோடி அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் – பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டுகள் சிதறுவதைத் தடுக்க, பொது வேட்பாளரை நிறுத்தி தீவிரமாக உழைக்கும் தென்மாநிலங்களில் நிலை!
பா.ஜ.க.வுக்குக் கதவு சாத்திடும் நிலை தமிழ்நாட்டில். இந்த சமூகநீதி மண்ணான பெரியார் மண் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புகழ் – அதன் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் உலகப் புகழ்பெற்றுள்ள நிலையில் திராவிட மாடல் ஆட்சியைப்பற்றிக் குறைகூற எத்தனை முறை மோடி படையெடுத்து – முகாமிட்டு ‘ரோடு ஷோக்களை’ நடத்தினாலும், ‘‘தாமரை, தமிழ்நாடு என்ற உறுதியான பாறையில் முளைக்காது” என்பது உலகறிந்த உண்மை!
பா.ஜ.க. கூட்டணி பலம் இழந்து, மக்கள் வெறுப்பைப் பெருமளவு பெற்றுள்ள நிலையில் பழைய வாக்கு சதவிகிதத்தை இத்தேர்தலில் எட்ட இயலாது.
எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் குரேஷியின் தேர்தல் கணக்கு மக்களின் மனோபாவத்தை அளந்து அறிவித்த ஓர் முக்கிய அறிவிப்பு! ஊடகங்களின் பொய்யைத் தகர்த்த அறிவிப்பு.
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஜனநாயகப் பாதுகாப்பு ஆட்சியை – தி.மு.க. கூட்டணியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி ஆட்சியை – மக்கள் அமைப்பது உறுதி !
– கி.வீரமணி,
ஆசிரியர்