செய்திக்கீற்று

ஜூன் 16-30

சிக்கனம் வேண்டும்…எதில்?

தன் சொந்தப்பணத்தைச் செலவழிப்பதில் காட்டும் சிக்கனத்தைவிட பொதுப்பணத்தைக் கையாளுவதில்தான் கூடுதல் பொறுப்பு வேண்டும்.குறிப்பாக மக்களின் வரிப்பணத்தை நிருவகிக்கும் அரசுகளுக்கும், அரசு அதிகாரிகள் மற்றும் அரசில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் பொதுப்பணம் என்பதில் கவனம் வேண்டும்.நம் நாட்டில் இங்கேதான் சிக்கலே.

கிஞ்சிற்றும் கவலைப் படாமல் மக்கள் பணத்தை தண்ணீராய்ச் செலவழிக்கின்றனர். இந்த ஆண்டுகூட தனது முதலாண்டு நிறைவைக் கொண்டாடிய அ.தி.மு.க. அரசு 50 கோடி ரூபாய்க்கு சாதனை விளம்பரங்களை பத்திரிகைகளுக்கு அளித்து சாதனை படைத்துள்ளது.

ஊருக்கெல்லாம் நியாயம் பேசும் பத்திரிகைகளும் வெட்கமில்லாமல் பணத்தை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு தமது பேனாக்களை மூடிவைத்துவிட்டன.அரசின் சார்பில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க விளம்பரங்களை அளிப்பது ஏற்கத்தக்கது. ஆனால், அரசு விழாக்களுக்கும், சாதனைகளுக்கும் முழுப்பக்க அளவில் விளம்பரங்கள் தேவைதானா?இந்த விளம்பரங்களால் பயன் பெறுவோர் பத்திரிகைகளே தவிர வேறு யாருமல்ல.

இந்த வெட்டிச் செலவை தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் மட்டுமல்லாமல் மத்திய அரசுமே செய்கிறது.இச்சூழலில் அண்மையில் மத்திய நிதி அமைச்சகம் நட்சத்திர உணவகங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

புதிய வாகனங்கள் வாங்க கட்டுப்பாடு, வெளிநாடுகளில் கண்காட்சிகள் நடத்தத் தடை என சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இது வரவேற்கத்தக் கதுதான். ஆனால், இதை விட வீண் ஆடம்பர விலம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதே உண்மையான சிக்கன நடவடிக்கையாக இருக்கமுடியும்.

யானைகளை விட்டு வைக்காத மதம்

பாரத புண்ணிய பூமியின் இந்து மதத்தில்தான் மனிதனை மட்டுமல்லாது விலங்கிகளையும் துன்புறுத்தும் வழகம் உண்டு. காடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் யானைகளைப் பிடித்துவந்து சங்கிலி போட்டு கோவில்களில் கட்டிவைக்கும் வழக்கம் இன்னமும் இருந்துவருகிறது. சர்க்கஸில் மிருகங்களை வைத்திருக்கக்கூடாது என்று ஆணையிட்ட அரசுகள் கோவில் யானைகள் மீது கருணை காட்டவில்லை.

தங்களில் இயல்பான வசிப்பிடங்களை விட்டுவிட்டு ஊருக்குள் சிறை வாழ்க்கை வாழும் யானைகள் பல நேரங்களில் மதம் பிடித்து ஓடுவதும், மனிதர்களைத்தாக்குவது அண்மைக்காலமாக அடிக்கடி நிகழுகின்றன. ஏனோ யானைகளில் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மதவாதிகளுக்கு உணர்வில்லை.

கேரளாவின் திருச்சூர் இருஞாலகுடா கூடல் மாணிக்கம் கோவில் விழாவில் யானைகளைக் கொண்டு வந்து ஆறாட்டு நடத்தியிருக்கிறார்கள்.

இங்கு நடந்த காவல்துறை அணிவகுப்பில் துப்பாக்கிச் சுடும் நிகழ்வும் ஒன்றாம். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்ட யானைகள் மிரண்டு ஓடின.பக்தர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். 2 வயது குழந்தை ஒன்று நெரிசலில் பரிதாமாக உயிரிழந்தது.

இந்நிகழ்வு  கேரள உயர்நீதிமன்ற கவனம் பெற விசாரித்த நீதிபதிகள் கோவில் விழாக்களில் யானைகளை பயன்படுத்துவது அவசியம்தானா? என கேள்வி எழுப்பி அரசுக்கும் தேவாம் போர்டுக்கும் அறிவிக்கை அனுப்பியுள்ளனர்.“மத நம்பிக்கைகளை மதிக்கவேண்டிய அதே வேளையில் மிருகங்களின் நலனுக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எதிரான நிகழ்வுகளை ஏற்க முடியாது. காலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் மக்களுக்குத் தேவையில்லாத ஆடம்பர விழாக்களில் ஆடம்பரம் அதிகரித்துவருகிறது என்ற கவலையை நீதிபதிகள் ராதாகிருஷ்னன், வினோத் சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கோவில் விழாக்களில் மட்டுமல்ல, கோவில்களிலேயே யானைகள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை இருக்கவேண்டிய இடம் காடுகள்தான்; நாட்டுக்குள் அல்ல.

வித்தியாசக் கட்சியின் ச.ம.உ., சிறைக்குள்

நாங்கள் வித்தியாசமான கட்சிக்காரர்கள் என்று களத்திற்கு வந்த இந்துத்துவ பா.ஜ.க.வினர் ஒவ்வொருவராக ஊழல் குற்றச்சாட்டுகளில் மூழ்கிவருகிறார்கள்.

கர்நாடகாவில் எடியூரப்பா மீது ஊழல் வழக்குகள் நடந்துகொண்டிருக்க, அக்கட்சியில் சட்டமன்ற உறுப்பினர் சம்பங்கி என்பவருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் சிறை தண்டனை அளித்துள்ளது.ஒரு நிலப்பிரச்சினை தொடர்பாக 5 இலட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார்.

இது தொடர்பான வழக்கில்தான் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுள்ளது.பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் அடைக்கப்பட்டார்.லஞ்ச வழக்கில் ஒரு ச.ம.உ. சிறைத் தண்டனை பெறுவது இதுதான் முதல் முறையாம். உள்ளபடியே பா.ஜ.க. வித்தியாசமான கட்சிதான் என்கிறீர்களா…?

இந்த  மூதாட்டியோடு…

இந்த மூதாட்டியின் பெயர் கியானி மையி சென். நேபாளத்தைச் சேர்ந்த இவருக்கு வயது 75.இவரோடு ஒரு மொழியும் அழியப்போகிறது. குசுண்டா என அழைக்கப்படும் நேபாள நாட்டின் ஒரு பகுதியில் பேசப்படும் மொழியப் பேசும் ஒரே ஒருவர் இந்த மூதாட்டிதானாம்.

அறிவியலிலும் பேதம் வளர்க்கும் பார்ப்பனீயம்

ஆரியனே உலகில் உயர்ந்தவன் என்றான் நாசிசம் போதித்த ஹிட்லர். அவனது வாரிசுகளான இந்துத்துவாக்கள் இந்த நவீன காலத்திலும் அந்த சிந்தனையைக் காப்பாற்றிவருகிறார்கள்.கடந்த சில இதழ்களுக்கு முன் ஆரிய விந்து தேடி காஷ்மீருக்கு ஜெர்ம்னியர்கள் வருகிறார்கள் என்ற செய்தியைத் தந்தோம்.இப்போது ஈனொரு செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா தந்துள்ளது.

கடந்த 13.5.2012 அன்று வெளிவந்த செய்தி இது:  மனித விந்துக்கள் சேமிப்பு வங்கிக்கு வந்து, பணம் கொடுத்து, விந்துக்களை வாங்கி, குழந்த பெற்றுக்கொள்ள விரும்பும் வாழ்க்கை இணையர்களில் பெரும்பாலோர் ஒரு கேள்வியை கேட்கிறார்கள். இந்த விந்தைத் தந்தவர் எந்த ஜாதி? என்பதே அந்தக் கேள்வி.

பீகாரைச் சேர்ந்த முன்னணி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கவுரவ் குமார், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டி,அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விந்துக்களை வாங்க விரும்பும் இணையர்,தங்களுக்கு குறிப்பிட்ட ஜாதிக்காரர்களின் விந்து மட்டுமே வேண்டும் என்று வற்புறுத்துவதாக கூறியிருந்தார்.

பீகார்,டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த நிலை அதிகம் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.மும்பையில், டிரிவெக்டர் என்ற விந்து சேமிப்பு வங்கி நடத்தும் திலிப் பட்டீல் என்பவர், பிராமணர் விந்து வேண்டும், எவ்வளவு பணம் தரவும் தயார் என்று கேட்பவர்களே அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்.

முஸ்லீம்களில் சிலரும் சன்னி விந்து, ஷியா விந்து வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்பதாகவும் கூறுகிறார்.அறிவியல் உலக மனித இனத்தை பல வழிகளிலும் ஒன்றுபடுத்திவருகிறது. ஆனால்,இந்த மனிதர்மச் சிந்தனை மட்டும் இன்னும் மாறவே இல்லை.

அறிவியலில் புகுந்தும் கூட மனிதனைப் பிரிக்கப்பார்க்கிறது.இன பேதத்தைவிட,மத பேதத்தைவிட, இந்தி மதத்தின் ஜாதி பேத எவ்வளவு கொடுமையானது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? பெரியாரும், அம்பேத்கரும் ஜாதி ஒழிப்புக்கு ஏன் முன்னுரிமை கொடுத்தார்கள் என்பது இப்போது விளங்குகிறதா?

இதுதான் மாற்றம்

கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாரதி பாடிய காலத்தில் பெரும்பாலோர்க்கு கல்வி கிடைக்கவில்லை. பெரியாரின் உழைப்பால், காமராஜரின் கருணையால் கல்வி கிடைத்தது.

திராவிட இயக்க நூற்றாண்டுக் காலத்தில் ஒரு இனிக்கும் செய்தி இது. ஓர் இடத்தில் தங்காமல் ஊர்ஊராய் அலையும் நரிக்குறவர் சமுதாயத்தில் பிறந்த ஒரு மாணவன் இந்த ஆண்டு +2 தேர்வில் 1167 மதிப்பெண் பெற்றுள்ளான்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி வள்ளிமலைப் பகுதியைச் சேர்ந்த முகராசி என்பவரது மகன் ராசபாண்டி தனது பெரியப்பா உதவியால் பள்ளி சென்று படித்து இந்த நிலையை எட்டிப் பிடித்திருக்கிறார். வறுமையில் இருக்கும் ராசபாண்டி மருத்துவராக ஆசை. ஆனால் அதற்கு வசதி இல்லாத நிலையில் பிறரின் உதவியை நாடியிருக்கிறார்.

கல்வி வாடையே அறியாத ஒரு நாடோடி சமூகத்திலிருந்து இந்த அளவுக்கு முன்னேறியிருப்பதுதான் உண்மையான மாற்றம். வாய்ப்புள்ளவர்கள் ராசபாண்டிக்கு உதவலாம்.

செல்பேசி: 9578461385

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *