– மகிழ்நன்
மறக்கப்பட்ட கடவுளர்களும்…
இறக்கப்போகும் கடவுளர்களும்
பார்ப்பனிய இந்துமதத்தை சனாதன தர்மம் என்பார்கள், அதாவது என்றும் மாறாத் தன்மையுடையது என்பார்கள். இதையேதான் இன்று வழக்கில் இருக்கும் மதங்களின் நம்பிக்கையாளர்களும் நம்பிக் கொண்டிருக் கிறார்கள். அறிவியல் யுகம் மாற, மாற தம் நம்பிக்கையும் தாமும் மாறிக் கொண்டிருப்பதை ஒப்புக் கொள்ளாமல் மதங்களின் நிலைத்த தன்மைக்கு வக்காலத்து வாங்குவார்கள். இன்றைய மதங்கள் அனைத்தும் பண்டைய மத நிறுவனங்கள் காலாவதியான பின்பு தோன்றியவைதான்.
மறக்கப்படும் கடவுளர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் மாறிக் கொண்டே வருகிறது, என்றும் நிலைத்த தன்மையில்லாத கடவுளர்களை பட்டியலிட்டு பார்த்தாலே கடவுள் என்பது கற்பனை என்பதை விளங்கிக் கொள்வதில் சிக்கல் ஏதும் இருக்காது, அதையும் மீறி யாருக்கேனும் சிக்கல் ஏதும் இருக்குமென்றால் அவர்தம் பகுத்தாய்ந்து சிந்திக்கும் திறனில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது மட்டும் உறுதி.
பார்ப்பனிய மதம் ஒழிய மறதி என்னும் நன்மருந்து
பார்ப்பனிய இந்து மதத்தை பொறுத்தவரை வேத காலங்களில் வழக்கில் இருந்த கடவுள்களில் பெரும்பாலானவை இன்று வழக்கில் இல்லை.
புதிய புராணக் கதைகளோடு, புதிய வடிவத்தில் இருக்கின்றனவே அன்றி அதே தோற்றத்தில் இன்னும் நீடிக்கவில்லை. மறதியை வசதியாய் கொண்டு புது, புது கடவுளர் கற்பனைகளை தரவிறக்கிக் கொண்டே இருப்பதில் பார்ப்பனியம் காலம், காலமாக சிரத்தையோடு நடந்து வருகிறது.
வேத காலத்திய கடவுள்கள் நிலையை ஆராய்ந்தால் அந்தோ பரிதாபம்.அனைவரும் இன்று அழிந்து காணாமல் தடயமின்றி போய்விட்டனர். கவுதம முனிவரின் மனைவியிடம் கள்ளத்தனமாக சல்லாபித்து, உடலெல்லாம் பெண் குறியை தண்டனையாய் கவுதம முனிவரின் சாபத்தின் வழி பெற்றதாக கூறப்படும் ஆபாச புழுகின் கதை நாயகன் இந்திரன், வேத காலத்தில் எப்படி உயர்வாக போற்றப்பட்டான் தெரியுமா? வேதங்கள் அவனை எப்படியெல்லாம் போற்றுகின்றன தெரியுமா?
“வகை முறை தப்பிய வன்மப் பகைவனின்
படைத்திறங் கண்டு பணிந்ததும் இல்லை
ஓங்குயர் மலையும் வீழ்த்திடும் இந்திரன்முன்
ஆழ் நீர் நிலையிலும் அமுதுண்டு வாழ்வானே.”
(ரி.வே: ஸ்வீ.24.8)
வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுளர்களில் அதிக சக்தி வாய்ந்த கடவுள் இந்திரன், வேதங்களின்படி அவன் பெரும் வீரன். அவனே அனைத்துலகிற்கும் முதல்வன். அவனது வலிமையை ரிக்வேதம் இவ்வாறு வருணிக்கிறது. இன்று அவன் நிலை?
வேதங்களில் கூறப்படும் வேறு முக்கியமான தேவர்கள் பிருதிவி, அக்கினி, சோமன், பிரகஸ்பதி, ருத்திரன், வாயு, அபகன், பாரிண்யன், மித்திரன், வருணன், சூரியன், சாவித்திரி, பூசன், ஆதித்தியன், உஷா, அசுவினி போன்றவர்கள். இயற்கையின் ஐம்பூதங்களும், வேறு சக்திகளும் இந்தக் கடவுளர்களாகப் பண்புருவகப்படுத்தப் (Personified) பட்டிருக்கிறார்கள்.
இவற்றில் எவை, எவையெல்லாம் வழக்கில் இருக்கின்றன? இந்த கடவுளர்கள் ஏன் காலாவதி ஆனார்கள்? எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் என்று நம்பப்பட்ட கற்பனைகள் இன்று மக்களின் நினைவில்கூட நிறைந்திருக்கவில்லையே ஏன்?
கடவுள் இறந்துவிட்டார் என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டதைப் போல, இந்த கடவுளர்கள் மக்களின் நினைவுகளிலிருந்து இறந்துவிட்டனரே ஏன்? பிறப்புமில்லா இறப்புமில்லா இறைவன் எங்கள் இறைவனென்று நம்பும் மக்கள், தம் கடவுளர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து கொண்டே இருப்பதை பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து தம் கற்பனையின் மூலம் பிள்ளை போல பெற்றுக் கொண்டே இருக்கின்றார்களே….
எ.கா:
தமிழர்களின் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் கூறப்படும் கடவுளர்களான மாயோன், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை போன்றவை இன்று காணப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இல்லாத பிள்ளையார், நவீன மார்க்கெட்டிங் உத்தியால் இன்று முழுமுதற்கடவுள் என்று மக்கள் வணங்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.
மேற்கத்திய/அராபிய மதங்களுக்கும் மறதி உண்டு, கவலை வேண்டாம்!
கிறித்துவ மதம் பரப்பட்ட அல்லது பரவிய எல்லா நாடுகளிலும் அதற்கு முன்பு அங்கே நிலவி வந்த பழமையான மதங்கள் எல்லாம் , அழிந்து போனதை காணலாம். ஒரு காலத்தில் முதன்மை யான மதங்களாக ரோமன் மதமும், கிரேக்க மதமும், எகிப்திய மதமும் கருதப்பட்டு வந்தன.
கிறித்துவ மதம் அம்மதங்களையெல்லாம் அழித்தொழித்தது. அம்மதங்களை அழித்தொழித்தது என்று மட்டும் கூறுவதைவிட அம்மதத்தின் பெயரால் நம்பப்பட்டுவந்த கடவுளர்களை அது அழித்தது. அழிக்கப்பட்ட கடவுளர்கள் அனைவரும் இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் கிருஷ்ணன், பிள்ளையார் போன்றே அக்காலத்தில் பிரபலமாக இருந்தவர்கள்.
இன்று யாருக்காவது ஜூயஸ்,எரோஸ், ஹெஸ்டியா என்ற கடவுளர்களை தெரியுமா? இவை கிரேக்க கடவுளர்கள். இந்த கடவுளர்களை மறந்துதான் புதிய கடவுளர்களை மக்கள் சுவீகரித்திருக்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்பதுபோல் இந்த கடவுளர்களும் அழிந்து போவார்கள். இதில் இஸ்லாமும் விதிவிலக்கல்ல என்பதையும் கவனித்தில் கொள்க!
கிறித்துவன் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று மூன்றையும் நம்புகிறான், வணங்குகிறான். அதிலும் கோஷ்டி சண்டைகள் உண்டு என்பது கவனிக்கத்தக்கது.
இந்த மும்மை தத்துவத்தை நம்புபவர்கள் முதலில் எந்த கடவுள் வந்தார், அவருக்கு துணையாக மற்றவர்கள் வந்தார்களா? யார் யாரை படைத்தது? கடவுளுக்கு எதற்கு துணை என்றெல்லாம் கேட்டுவிடக்கூடாது.
கடவுள்தான் காலாவதி ஆகிறாரென்றால், கடவுளர் நம்பிக்கைகளும், அவர்தம் பிறப்பு பற்றிய மோசடித் தகவல்களும் இன்று நம்பிக்கையற்றதாக ஆகியிருக்கிறது.
இந்து மதத்தில் கடவுள் மிருகங்களுக்கு பிறந்ததாக, மிருகமாக பிறந்ததாக நம்பப்பட்ட கடவுளர் கதைகளை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் முயற்சியால் இடஒதுக்கீடு பலனை அனுபவித்து வருபவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருந்தாலும், ஆபாச கதைகளை தவிர்த்து கடவுளை நம்புவது இன்று வழக்காகி இருக்கிறது.
கடவுளர்கள் தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் ஆபாசக் கதைகளை நாம் அவர்களுக்கு அறியத் தந்தால் அவர்கள் நெளிவதை நம்மால் உணர முடிகிறது. இந்த நெளிவு சில காலத்தில் இன்று வழக்கில் இருக்கும் கடவுளர்களையும் கொன்றொழிக்கும், காணாமல் போகச் செய்யும் இதில் மாற்று நம்பிக்கை வேண்டாம்.
சிந்திக்க:
1) நீங்கள் நம்பும் கடவுளருக்கு பிறப்புண்டா? அவர்கள் இறப்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
2) இராமனுக்கு இறப்புண்டா? ஆம், என்றால் எப்போது எப்படி இறந்தான்?
3) கிருஷ்ணனுக்கு இறப்புண்டா? ஆம், என்றால் எப்போது எப்படி இறந்தான்?
4) பல்லிக்குகூட வால் துண்டிக்கப்பட்டால் வளர்கிறதே, பிரம்மாவின் தலை துண்டிக்கப் பட்டதே, ஏன் துண்டிக்கப்பட்டது? ஏன் இன்னும் அந்த பிரம்மனுக்கு தலை இன்னும் வளரவில்லை, பல்லிக்கு இருக்கும் சக்தி கூடவா உங்கள் கடவுளுக்கு இல்லை.
5) இயேசு கிறித்து மரணித்தாரா? உயிர்த்தெழுந்தாரா?