வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே பொங்கல் வைத்து விடுகிறான். தனது பிறந்த ஊரை தான் மறந்ததோடு மட்டுமல்லாமல், தன் பிள்ளைகளுக்கும் அதனைக் காட்டுவதில்லை.
இந்தச் சூழலில்தான் திராவிடர் கழகம் சென்னை பெரியார் திடலுக்குள் ஒரு தமிழ்நாட்டு சிற்றூரைக் கொண்டு வந்தது.
அதுவும் என்று தெரியுமா? தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் நாளன்று. திடலில் நுழைந்ததும் ஒரு சிறு குடிசை வீடுதான் அனைவரையும் வரவேற்றது. வாசலில் ஒரு மாடும் கன்றும் நின்றிருந்தன. நமது பண்பாட்டு உடை அணிந்த இளைஞர்களும், இளம்பெண்களும் சர்க்கரைப் பொங்கல் அளித்து வரவேற்றனர். உரல், உலக்கை, திருகாணி, அரிக்கன் விளக்கு என அச்சு அசல் கிராமத்து வீடே அலங்கரித்தது. இதில் நின்று போட்டோ எடுக்காதவர்கள் இல்லை. அந்த அளவு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பறை அடித்தது, உறி ஓங்கியது, தீப்பந்தம் சுடர்விட்டது, இசை மெய்சிலிர்த்தது – இப்படியாக தமிழக திராவிட மக்களின் பழங்கால நினைவுகளை நிகழ்வுகளாக நம் கண்ணுக்கு முன் காட்டிக் கொண்டிருந்தனர் திராவிடர் கழகத் தோழர்கள்.
இதெற்கெல்லாம் இசைவு கொடுத்து தொடங்குக உங்கள் பணியை அதற்கு என்ன தேவையோ அதை மட்டும் கூறுங்கள். நான் உங்களுக்காக இருக்கிறேன் என்று மூன்று நாட்களும் உடன் இருந்து பணிகள் நடப்பதையும், நிகழ்ச்சியையும் கண்டு பங்கேற்று கொடுப்பதிலேயேயும், ஒரு ரசிகராகவும் அய்யா வீரமணி அவர்கள் செய்த பணிகள் ஏராளம்.
முதல்நாள் நிகழ்ச்சி பொங்கல் அன்று மதியம் மூன்று மணிக்கு ஆரம்பித்தது பெரியார் திடலில் ஒரு சங்கமம். கறுப்பு நிறத்தில் உடை அணிந்து காணப்படும் திராவிடர் கழகத் தோழர்கள் அன்று வண்ண உடையில் பொங்கல் புத்தாடையில் காட்சி அளித்தனர். பள்ளிக்கூடத்தில் விழா முடிந்து மறுநாள் செல்லும்போது புது ஆடை அணிந்து செல்வோமே… மனம் ஏனோ சட்டென அதை நினைவுறுத்தியது. ஆனால் உடையில்தான் மாற்றமே ஒழிய அவர்கள் மனதில் இல்லை என்பதைத் தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்திலும் நினைவுறுத்தினர்.
கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பறை, தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், மாடாட்டம் என பல கலைகளையும் ஒன்றாகச் சேர்த்து இணைந்து ஆடிக்கொண்டு வந்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் தன் கால்கள் தன்னிலை கொள்ளாமல் ஆடியதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இளைஞர்களும் இளம்பெண்களும் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர்.
அடுத்ததாக உறியடித்தல் நிகழ்வு. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். உறி அடித்தவர்களைவிட அதைக் கண்டு ரசித்தவர்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவே கிடையாது. இதற்கிடையில் நமது தேசிய விளையாட்டான சடுகுடு என்னும் கபடிப் போட்டி நடைபெற்றது. அதில் மனம் நாடியது. அருமையான விளையாட்டு. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் தருவதை வெல்லப் போகிறவர்கள் கபடி விளையாடுவதைப் போலவே ஆடினார்கள். ஒவ்வொரு குழுவிற்குள்ளும் அவ்வளவு தீவிர ஆர்வங்கள்.
பெரியார் மய்யத்தின் வாயிலில் ஓங்கி வளந்த பனைமரம்.அதில் குலைகுலையாக பனங்காய்கள், சில கள்ளு முட்டிகள் தொங்கின. அதனைச் சுற்றியபடியே சைக்கிளில் ஒருவர் உலகத்தைச் சுற்றிவருபவர்போல் வந்தார். அதுவும் அடுத்தவர்களைக் கவரும்வண்ணம் சாகசம் செய்து கொண்டு. அவருக்கு விழுந்த கைத்தட்டுகளில் அவரது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அதனால் இன்னும் அதிகமான சாகசங்களைச் செய்து அனைவரது உள்ளங்களையும் மகிழ்வித்தார்.
சிலம்பாட்டத்தை சில இளைஞர்கள் ஆடிக் கொண்டிருக்க, எங்களிடமும் கம்பைக் கொடுங்கள் என்று கேட்டு சுடிதார் அணிந்த இளம்பெண்கள் சிலம்பு சுற்றத் தொடங்கிவிட்டார்கள்.
பழங்கால இசைக்குப் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் ஒரு கிடிலில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதை இந்தக் கால இளவட்டங்கள் ஆர்வத்துடன் அங்கு விளக்கமளிப்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
மண் பானை செய்வது எப்படி என ஒரு விளக்கம், அதில், ஒரு வயதானவரைக் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்தனர் சிறுசுகள். அருகில் உள்ளவரின் குழந்தை தன் தந்தையிடம் ஏன்பா இந்தப் பெரியவர் மண்ணை இப்படிப் பிசைகிறார் எனக் கேட்டதற்கு, இது களிமண். இதை நன்றாகப் பிசையப் பிசையத்தான் பிசிறு இல்லாமல் பானை செய்ய வரும் எனக் கூறினார் அந்தப் பெரியவர். அதற்குள் அந்தக் குழந்தையின் அப்பா நீ வைத்து இருக்காயே கிலேய். அதுதான் இந்தக் களிமண் எனக் கூறியதும் அக்குழந்தை, அய்… கிலேய்யா! இது இவ்வளவு பெரிய கிலேய்ல தாத்தா பானை செய்கிறார். ரொம்ப நல்லா இருக்குப்பா எனக் கூறி குதூகளித்தாள் அக்குழந்தை. அக்குழந்தையின் மகிழ்ச்சிதான் பானை செய்யும் பெரியவர் தனக்குக் கிடைத்த பாராட்டாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் விதவிதமாகப் பானைகளைச் செய்து காட்டினார்.
பார்வைக்கும், செவிக்கும் மட்டும் உணவளிக்கவில்லை திராவிடர் கழகம், வயிற்றுக்கும் உணவளித்தார்கள். அங்கு உள்ள சிறு சிறு குடில்கள் அமைத்து அதில் மணப்பாறை முறுக்கு, திண்டுக்கல் மலைவாழை, விருதுநகர் வீச்சு புரோட்டா, திருவில்லிப்புத்தூர் பால்கோவா, திருநெல்வேலி அல்வா, தலப்பாக்கட்டு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, கோவில்பட்டி (சாத்தூர்)சேவு என ஊரில் உள்ள பிரபல கடைகளிலிருந்து பிரபலமான உணவு வகைகளை பெரியார் திடலுக்கே கொண்டுவந்து அசத்தினார்கள் தோழர்கள். விருதுநகர் வீச்சு புரோட்டாவுக்கு ரசிகர்கள் ஏராளம் உருவாகிவிட, சார்… இந்த புரோட்டா சென்னையில் எங்க சார் கிடைக்கும் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இரவு ஆறு மணிக்கு ஒளிப்பந்தம் கொண்டு வந்து வெளிச்சம் ஏற்றப்பட்டது. நடிகவேள் எம்.ஆர்.ராதா அரங்கில் பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறிஞர்கள், இளம் வயது சாதனையாளர்கள், சாதித்த திராவிடர் கழகத் தொண்டர்கள் எனப் பலருக்கும் விருது கொடுத்து சிறப்பித்தார் அய்யா கீ.வீரமணி அவர்கள். அய்யா அவர்களின் பேச்சு பறைக்கு அடுத்தபடியாக ஒலித்தது.
அடுத்தநாளும் இந்நிகழ்ச்சிகள் களைகட்டின. முதல் நாளைவிட கூட்டம் அதிகரித்தன. அசத்தப்போவது யாரு குழுவினர்களின் அசத்தல் நிகழ்ச்சி எல்லோரையும் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தது. ஆட்டம் பாட்டம் என ஒரு திருவிழாக்கோலம் கண்டது திடல்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, உருமி மேளம் எனப் பல கருவிகள் கொண்டு ஆடிய ஆட்டம் கண்டு அனைவரும் மெய்மறந்து அமர்ந்து இருந்தனர். கலைவிழா நிகழ்ச்சியில் சிறப்பாக பெரியாரால் வாழ்கிறோம் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று நடத்திய பேச்சுப் போட்டியில் சளைக்காமல் பேசி, முதலாவது,
இரண்டாவது, மூன்றாவது வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு கொடுக்கும் விழா நடந்தது. முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும், இரண்டாவது பரிசாக அய்ம்பதாயிரமும், மூன்றாவது பரிசாக இருபத்து அய்ந்தாயிரம் ரூபாயும் ஆறு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கி.வீரமணி வழங்கினார். பெரியார் விருது மூன்றாவது நாளும் சிலருக்கு வழங்கப்பட்டன. இறுதியாக, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பத்து மணிக்கு முடிவுறும் வரை இந்நிகழ்ச்சியிலிருந்து யாரும் எழுந்து செல்லாதவண்ணம் இருக்கையில் கட்டிப்போட்டது.
நமது மூலிகைகள் அதனைப் பற்றிய விளக்கம், பயறு வகைகள், பசுஞ் செடிகள், அதன் பெயர்கள் இடம்பெற்ற பலகைகள், தமிழறிஞர்களின் படங்களுடன் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என எதை விடுவது எதைக் கூறுவது என்றே தெரியாதவண்ணம் சிறந்த நிகழ்ச்சி நிரல். திராவிட நாட்டின் பாரம்பரியம் அழியாமல் இருக்க இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஒரு தாக்கம் நிறைந்த பெண்ணாக திடலைவிட்டு வெளிவந்தேன்.
படங்கள் : சிவக்குமார்