தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணையில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இரவுக் காவலரைக் கட்டிப் போட்டுவிட்டு 3 கிலோ வெள்ளி நகைகள், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.
நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி பகுதியில் வசித்த மணிகண்டன், சுசீந்திரத்தை அடுத்த வண்டி குடியிருப்புப் பகுதியிலுள்ள அம்மன் கோவில் விழாவுக்குச் சென்றபோது சாமி வந்து ஆடி அருள்வாக்குக் கூறியுள்ளார்.
அப்போது திடீரென கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்தபோது மரத்தில் கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மீஞ்சூரை அடுத்த நாப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் தங்கசிவம் என்பவரின் மகள் சரண்யா, அவர்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலின் வாசலில் காலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது சாலையில் வந்த லாரி மோதி உயிரிழந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த இடைக்காட்டில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கிருந்த அர்ச்சுனன் சிலை, சகாதேவன் சிலை, தாதி பெண் சிலைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் மேட்டுத் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலிலும், வானகரம் ஆண்டாள் நகர் பகுதியிலுள்ள புற்றுக் கோவிலிலும், திருவேற்காடு கோலடி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலிலும் உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
சென்னை, வளசரவாக்கத்தை அடுத்துள்ள ராமாபுரம் பஜனை கோவில் தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.