சாய்பாபாவை சவாலுக்கு அழைத்தார்… ஆனால் சாய்பாபா…? – ஆப்ரகாம் கோவூர் – 2

பிப்ரவரி 01-15

– சு.அறிவுக்கரசு

கிறித்துவ மதப்பற்று மிகக்கொண்ட குடும்பத்தில் பிறந்த கோவூர் ஒரு மெத்ரான் (மதபோதகர்) ஆவார் என்றே உறவினர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அவரோ பகுத்தறிவுவாதம் பேசி, நாத்திகர் ஆனார்.

கேரளாவின் சிரியன் கிறித்துவர்களின் மதச்சடங்குகளை ஈராக் நாட்டு பாக்தாத் நகரத்திலிருந்து வந்த மதத்தலைவர்கள்தான் நடத்தி வந்தனர். அய்ரோப்பிய நாடுகளின் கிறித்துவ மதச் சடங்குகளுக்கும் இவர்களின் சடங்குகளுக்கும் வேறுபாடு உண்டு. இந்தப் பிரிவு கிறித்துவர்கள் இரண்டாகப் பிரிந்தனர். அவர்களின் ஒரு பிரிவினர் மார்த்தோமா சிரியன் சபை என்றும் மற்றவர் யாக்கோபாய சிரியன் சபை என்றும் அழைத்துக் கொண்டனர். மார்த்தோமா சபையின் விகார் ஜெனரல் ஆக இருந்தவரின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவர் கோவூர்.

ஆப்ரகாம் கோவூரின் இளமைக்கால நண்பர்கள் ஈழவர், ஆதிதிராவிடர் ஆகியோரே! அவரின் கிராமமான கருநாட்டுக்காலிலிருந்து முத்துட்டே எனும் ஊருக்குப் போகும் பாதையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு, ஈழவர் முதலிய தாழ்ந்த ஜாதியினர் சாலை வழியே நடந்து கோவிலை அசுத்தப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்பது அதன் வாசகம். கோவூர் தன் நண்பரான ஈழவச் சிறுவன் ஒருவனோடு அப்பாதையில் நடந்தார். பார்த்தவர்கள் அவனையும் கிறித்துவச் சிறுவன் என்றே நம்பினர். ஆனால் உயர்ஜாதி நாயரையும் நம்பூதிரியையும் பார்த்துப் பயந்துபோன ஈழவச் சிறுவன் ஓடினான். ஏன் ஓடுகிறான் என்று ஒரு நாயர் கோவூரிடம் கேட்டார். என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு ஓடுகிறான் எனக் கூறித்  தண்டனையிலிருந்து தப்பவைத்தார். பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில் என்ற குறளை நினைத்து கோவூர் கூறிய பொய்யை மறக்கலாம்.

ஒருமுறை கோவூருடன் ஈழவ நண்பனான குஞ்ஞிராமன் என்பானும் படகில் ஏறி மறுகரைக்குச் செல்ல முயன்றனர். படகில் பயணிக்கவந்த நம்பூதிரிப் பார்ப்பனன் ஒருவன் குஞ்ஞிராமனை இறங்கச் சொன்னார். அவனும் இறங்கிவிட்டான். ஈழவனுடன் நம்பூதிரி பயணித்தால் தீட்டாயிற்றே. ஆனால் கோவூர் தன் நண்பனைப் பிடித்திழுத்துப் படகில் ஏற்றினார். தீட்டுக்குப் பயந்த நம்பூதிரி ஆற்றில் குதித்துவிட்டான். நீந்தத் தெரியாததால் தண்ணீரைக் குடித்துச் சாக இருந்த நிலையில் ஈழவ குஞ்ஞிராமன் பார்ப்பானைப் பிடித்துப் படகில் ஏற்றிவிட்டான். நம்பூதிரியைப் பார்த்து கோவூர், தீட்டுக் கழிக்க, கரைக்குப் போனதும் இன்னொருமுறை குளித்துக்கொள் என்றார். பார்ப்பானுக்குக் கோபம். என்ன செய்வது? மனதுக்குள் சாபம் இட்டிருப்பான்.

பள்ளியின் ஆசிரியரான தமிழ்ப் பார்ப்பனன் ஒருவர் ஈழவப் பள்ளி மாணவர்களைப் பிரம்பால் அடிக்க அதனை மாணவன் மீது எறிவார். தன்கையில் பிடித்துக் கொண்டு அடித்தால், தீட்டு பிரம்பு வழியே ஆசிரியப் பார்ப்பனன் மீது ஏறிக் கொள்ளுமாம். இதனை நீக்கிட, கோவூர் ஒரு யோசனை சொன்னார். அதன்படி ஈழவ மாணவன் எறிந்த பிரம்பைப் பிடித்துக் கொண்டான். மதிய உணவுக்குமுன் பார்ப்பன ஆசிரியர் குளித்துவிட்டுத் தான் உணவு உண்டார். மறுநாள் முதல் மாணவர்களை அடிப்பதேயில்லை!

எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடன் கல்லூரிப் படிப்புக்காக வங்காளத்திலுள்ள செராம்பூர் கிறித்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். பைபிள்களின் விளக்கவுரைகள் பற்றிய நூல்கள் நிறைய இருந்தன. அத்தனையையும் படித்தார். முரண்பாடுகள் தெரிந்தன. ஆழ்ந்து சிந்தித்தபோது, பைபிள் மீது சந்தேகம் வந்தது. பகுத்தறிவுவாதி கோவூர் பிறந்தார். இரண்டாம் பிறப்பு!

வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் 1801இல் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட ஆசியச் சங்கம் நூலகத்திற்குச் சென்று இந்துமத நூல்களைப் படித்தபோது, வேதாந்தம் என்பது முட்டாள் தனத்தின் உளறல் என உணர்ந்தார். பார்ப்பன மேலாதிக்கம்தான் இந்துமதச் சாரம் என்பதும் புரிந்தது. நான்கு ஆண்டுக்காலம் கல்கத்தா வாசம் அவரை வேதகால நாத்திகரான சார்வாகர் மீதும் அவரின் தத்துவங்கள் மீதும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. நாத்திகம் ஆப்ரகாம் கோவூரை ஆக்ரமித்தது.

நாள் ஒன்றுக்கு 16 மணிநேரம் படித்துக் கொண்டேயிருக்கும் பழக்கத்தால் உடல்நலம் குன்றி, நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்த வெள்ளைக்கார மருத்துவர், யேசுவைப் பிரார்த்திக்குமாறு அறிவுரை கூறினார். பிரார்த்தனையால் நோய் குணமாகும் என்றால், மருத்துவமனைகள் ஏன்? டாக்டர்கள் ஏன்? நோய்க் கிருமிகளால் தானே நோய்கள் ஏற்படுகின்றன! நோய்க் கிருமிகளைக் கடவுள் ஏன் படைத்தார்? நான் பிரார்த்தனை செய்தால் என்னைக் குணமாக்க கடவுள் கிருமிகளைக் கொல்வாரா? என்ற கேள்விகளை மருத்துவரை நோக்கி கோவூர் கேட்டார். டாக்டர் யோசிக்க ஆரம்பித்தார். கல்லூரி இறுதியாண்டு மாணவராக இருந்த 1924இல் நடந்தது இது.

பட்டம் பெற்று யாழ்ப்பாணம் சென்ட்ரல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தபோது அவரின் மகன் ஏரிஸ் கிறித்துவ மதவழக்கம் போல, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயம் போய்வந்தான். கோவூரும் அவரின் துணைவியும் எம்மதம் மீதும் பற்று இல்லாதவர்கள். மதம் பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்ந்து அவர்களின் பிள்ளைகளையும் அப்படியே வளர்த்து வந்தனர். அப்படியிருக்க, மகன் சர்ச் போவது சங்கடத்தை ஏற்படுத்தியது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மகனிடமே கேட்டுவிட்டார். திருப்பலி பூசை எல்லாம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு  அதை யார் பார்த்தார்கள் என்று மகன் பதில் கூறினான். பின் ஏன் அங்கே போகிறாய் எனக் கேட்டதற்கு, அழகிய இளம்பெண்களைப் பார்க்கப் போகிறேன் என்று அந்த மகன் பதில் கூறினான்.

கோவில்கள், கண்ணடிக்கும் கான்ஃப்ரன்ஸ் என்றார் தந்தை பெரியார். சரிதானே!

கோவூரின் மகன் ஏரிஸ், ஃபிரான்ஸ் நாட்டுக்குப் படிக்கப் போய், அங்கேயே ஒரு பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். அவர்களின் திருமணம், யேசு கொல்லப்பட்ட நல்ல வெள்ளிக்கிழமை நாளில் நடந்தது. அது, கிறித்துவர்களுக்குத் துக்கநாள்! எப்படி? துப்பாக்கிக்குப் பிறந்த பீரங்கி!

பணி ஓய்வுக்குப் பின் தம் மகன் வீட்டுக்குப் பிரான்சு நாட்டுக்குப் போன கோவூர், எல்லா அய்ரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்தார். ஆங்காங்கே இயங்கிய பகுத்தறிவாளர் இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி அங்கே உரையாற்றினார். இலங்கை திரும்பியதும் பகுத்தறிவாளர் சங்கத்தைத் தொடங்கினார். 200 பேர்கள்தான் உறுப்பினர்கள். ஆனால், பலரும் படித்தவர்கள். கோவூரின் பிரச்சாரம், பணி ஆகியவை அவரை பூதங்களையும் குட்டிச்சாத்தான்களையும் அடித்து நொறுக்குபவர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தன. அவரைப் பற்றிய செய்தி இல்லாத நாளேடே இல்லை எனும் அளவுக்கு விளம்பரமானார். தமிழ்நாட்டுக்கு நேரெதிர் நிலை!

1950களின் பிற்பகுதியில் ஹடயோகி எல்.எஸ்.ராவ் என்பவர் தாம் நீரின்மேல் நடக்கும் ஆற்றல் பெற்றவர் என்று கூறிக் கொண்டார். அன்று பம்பாயில் இருந்து வெளிவந்த பிளிட்ஸ் எனும் வாரஏட்டின் ஆசிரியர் ஆர்.கே.கரஞ்சியா இந்த ஆளுக்குப்  பெரிய விளம்பரம் தந்தார். தற்போது சினி பிளிட்ஸ் என்ற பெயரில் வெளியாகும் ஏட்டின் ஆசிரியர் பி.கே.கரஞ்சியாவின் தந்தைதான் அவர். புட்டபர்த்தி சாய்பாபா எனும் நபரின் படத்தை மாட்டி வைத்தால் வியாழக்கிழமைகளில் படத்திலிருந்து சாம்பல் (விபூதி) கொட்டுகிறது என்ற பிரச்சாரத்தைச் செய்தவரும் இவரே. பின்னர் அது ஃபிராடு என்பது வெட்டவெளிச்சமாக்கப்பட்டது.

எல்.எஸ்.ராவ் நடப்பதற்குத் தண்ணீர்த் தொட்டி கட்டப்பட்டு நாள் குறிக்கப்பட்டது. ரூ.100/-_ கட்டணம் செலுத்திப் பார்வையாளர்கள் குழுமியிருந்தனர். தொட்டியின் விளிம்பில் நின்று யோக தபஜெபம் செய்து பாவ்லா காட்டிய எல்.எஸ்.ராவ் நீரின் பரப்பில் தன் வலதுகாலை எடுத்து வைத்தார். அது நீரில் அமிழ்ந்தது. இடது காலையும் எடுத்து வைத்தார். ஹடயோகி நீரில் மூழ்கிப் போனார். அவ்வளவுதான் ஹடயோகம்!

வெட்கமில்லாமல் இந்தப் படக்காட்சிகளுடன் தோல்விச் செய்தியை பிளிட்ஸ் வெளியிட்டது. பத்திரிகா தர்மம்?

அந்த எல்.எஸ்.ராவ் 1976 மே 22ஆம் நாள் பெங்களூரில் கோவூரைச் சந்தித்தார். நீரில் நடக்கும் நிகழ்ச்சி மூலம் அவருக்குக் கிடைத்த தொகை ரூ. 27 லட்சம் என்ற விவரத்தைக் கூறினார். பணத்துக்காக மக்களை ஏமாற்றியதை ஒத்துக்கொண்டார்.

மனச்சான்று உறுத்தியது போலும்! இந்தச் செய்தியை கோவூர் அம்பலப்படுத்தினார்.

மறுநாள் டெக்கான் ஹெரால்டு ஏடு, அதே எல்.எஸ்.ராவ், எரியும் தீக்கனலின் மீது 30 விநாடிகள் நிற்கும் சாதனையைச் செய்து காட்டத் தயாராக இருப்பதாகச் செய்தி வெளியிட்டது. அவரை கோவூர் தொடர்பு கொண்டு நிபந்தனைப்படி ரூ.1000/- முன்பணம் கட்டச் சொன்னார். அவர் பணம் கட்டவில்லை. போட்டிக்கும் வரவில்லை. ஆள், அந்தர் தியானம் ஆகிவிட்டார். ஆனால், டெக்கான் ஹெரால்டு ஏடு மட்டும் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இதுவும் ஏடுகளின் நிலை!

1965 செப்டம்பர் 26ஆம் நாள் புட்டபர்த்தி சாய்பாபா என்பவருக்கு கோவூர் நேராகவே கடிதம் எழுதி அறைகூவல் விட்டார். சாய்பாபா சவாலை ஏற்கவில்லை. தாம் ஏதுமில்லாத புரட்டுப் பேர்வழி என்பதைக் காட்டிக் கொண்டார். ஆனாலும் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் என பேதமில்லாது, இவரின் கால்களில் விழுந்து, தங்களின் மவுடீகத்தைப் பறைசாற்றிக் கொண்டது, கொடுமை அல்லவா?

இந்தக் குரோட்டன்சுத் தலையனைப் பிரபல மாஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய செய்தியை 1980களில் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த சண்டே ஏடு அம்பலப்படுத்தியது. பி.சி.சர்க்கார் புட்டபர்த்தியானைப் பார்க்க அனுமதி கேட்டபோது தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டார். மூன்று முறை மறுக்கப்பட்ட நிலையில், வேறு பெயரில் உள்ளே போய்விட்டார். சாய்பாபா அனைவர்க்கும் தரிசனம் தந்தார். பக்கத்தில் வந்த ஆள் கொண்டு வந்த கூடையிலிருந்த லட்டுகளைப் பிரசாதமாகத் தம் பக்தர்களுக்கு வழங்கினார்.

பி.சி.சர்க்கார் முறைவரும்போது லட்டு தீர்ந்துபோனதால் ஒன்றும் தரவில்லை. இவர் லட்டு கேட்டார். நாளை கிடைக்கும் என்றார் சாய்பாபா. நான் உனக்குத் தருகிறேன், லட்டு என்று கூறிக்கொண்டே வித்தைக்காரரான பி.சி.சர்க்கார் ஒரு லட்டை (வரவழைத்து?) சாய்பாபாவுக்குக் கொடுத்தார். சாய்பாபா அதிர்ச்சியடைந்தார். தன் தலைப்பாகையை அகற்றிவிட்டு, நான்தான் சர்க்கார் என்றார் இவர்.

அவ்வளவுதான்! சாய்பாபாவின் ஆள்கள் அவரை அடித்து நொறுக்கித் தூக்கி வெளியே போட்டார்கள்!

மோசடிப் பேர்வழிகளின் தோலை உரிக்கும் நிகழ்வுகள், வெகுஜன ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *