காலம் மாறினாலும் – கோவி.லெனின்

ஜனவரி 16-31

சுருக்கம் விழுந்த தோலாய் இருந்தாலும் முத்தம்மா கிழவியின் வருடல் இனியனுக்கு இதமாக இருந்தது. பத்து வயதாகும் இனியன் முதன்முதலாக தன் கொள்ளுப்பாட் டியைப் பார்க்கிறான். அவன் அப்பா கதிரவனுக்கு ஹைதராபாத்தில் சாஃப்ட்வேர் துறையில் வேலை. அம்மா கலைச்செல்விக்கும் அதே துறைதான். அதனால், தாத்தா, பாட்டி, கொள்ளுப்பாட்டி என்று யாரையும் பார்க்க சொந்த ஊருக்கு வந்ததில்லை. கொள்ளுப்பாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் என்பதால் முதல் முறையாக தன் அம்மா அப்பாவோடு இப்போதுதான் திருவாரூருக்கு வந்திருக்கிறான். அதுவும் இந்த நடுராத்திரி நேரத்தில்.

கொள்ளுப்பேரனின் கன்னத்தை வருடியபடியே, பேரனைப் பார்த்து கிழவி கேட்டாள், ஏண்டா கதிரு இந்த இருட்டு நேரத்துல குடும்பத்தோட வந்திருக்கியா.. அந்த பாழாப்போன சுடுகாட்டைத் தாண்டித்தானே வந்திருப்பே.. புள்ள குட்டிங்களுக்கு ஏதாவது ஆகிப் போயிருந்துச்சுன்னா என்னாடா ஆவுறது? நீ வந்த வழியிலேதானே அந்த முனீஸ்வரன் செலை ரோட்டுல இருக்கு. சின்னப் புள்ள பயந்திட மாட்டானா?

கிழவி மூச்சுத்திணறியபடியே கேள்வி மேல் கேள்வி கேட்க, கதிரவனின் அப்பா கலியபெருமாள்தான் குரலை உயர்த்தினார். அம்மா, நீ ஏதாவது பழசை நெனைச்சிக்கிட்டே பேசிட்டிருப்ப, அவன்தான் நல்லபடியா வந்துட்டான்ல. நீ வேற பயமுறத்துற, பேசாம படுத்துக்கிடம்மா கிழவியிடமிருந்து மறுபேச்சு வரவில்லை.

இனியன் தன் அப்பாவிடம், ஏம்ப்பா பாட்டி பயப்படுறாங்க.. என்ன சுடுகாடு.. என்ன சிலை? என்று கேட்க, அது ஒண்ணுமில்லப்பா.. காலையிலே சொல்றேன். டயம் ஆச்சு நீ தூங்கு என்றபடி, மகனை அறைக்கு அழைத்துச் சென்று தூங்க வைக்கும்படி மனைவியிடம் சொன்னான் கதிரவன். முத்தம்மா கிழவிக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி இருந்தது. கதிரவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து நீலகிரி தைலம் தேய்த்துவிட்டான். கிழவிக்கு இதமாக இருந்தது. முப்பது வருடத்துக்கு முன் சின்னப் பையனா இருந்தப்ப கதிர் தைலம் தேய்த்துவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. கூடவே அந்த சுடுகாடும், சிலையும்.

திருவாரூர் ரயில் நிலையத்திலோ பஸ் ஸ்டாண்டிலோ இறங்கி மடப்புரத்துக்குப் போகணும்னா, ஓடம்போக்கி ஆற்றுப்பாலத்தைக் கடந்து இடதுபக்கம் திரும்பி, காட்டுக்காரத் தெருவழியாகப் போகணும். மடப்புரத்தில்தான் கிழவியோட வீடு. அந்தக் காலத்தில தெரு விளக்கு எதுவும் ஒழுங்கா எரியாது. வீடுகளிலும் கரண்ட் வசதி கிடையாது. சந்தைக்குப் போயிட்டு வந்தாலும், வெளியூரிலிருந்து வந்தாலும் முத்தம்மா கிழவி அந்த வழியாத்தான் வந்தாகணும். ஆத்தோரமா இருக்கிற அந்த சுடுகாட்டைப் பார்த்தாலே அவளுக்குப் பயம் வந்திடும். எல்லாச் சாமியையும் மனசிலே கும்புட்டுக்கிட்டேதான் வருவா. அந்த இடம் வந்ததும், கண்ணை இறுக்க மூடிக்கிட்டு நடப்பாள். யார் கூப்பிட்டாலும் அந்த நேரத்தில் காதிலேயே வாங்கிக்க மாட்டாள். கொஞ்சதூரம் கடந்தபிறகு தான் கண்ணைத் திறப்பாள். அப்பாடி, சுடுகாட்டைத் தாண்டியாச்சுன்னு அவளே அவளைத் தைரியப்படுத்திக்குவா. அப்புறம் கொஞ்ச தூரம் வந்தபிறகு, காத்தாயி அம்மன் கோவில் வாசலிலே முக்கால் தென்னை மரம் உயரத்துக்குப் பிரம்மாண்டமா உட்கார்ந்திருக் கிற வாள்முனீஸ்வரன் சிலையும் அது கையிலே இருக்கிற வெட்டருவாவும் கிழவியைப் பயமுறுத்தும். அந்த பயத்தோடயே கன்னத்திலே போட்டுக்கிட்டு, தலையைக் குனிஞ்சபடியே நடந்தா, கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்திடுவாள். ஆனா, அடுத்த கொஞ்ச நேரத்தில் முத்தம்மா கிழவிக்குச் காய்ச்சல் வந்திடும்.  மாசத்துக்கு ஒன்றிரண்டு தடவையாவது இப்படித்தான் நடக்கும்.

பாழாப்போனவனுங்க அந்த சுடுகாட்டை மாத்துறானுங்களா?- காய்ச்சலோடு அனத்தியபடியே கட்டிலில் கிடப்பாள் கிழவி. சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் போய்ப்பார்த்துட்டாங்க. மாத்த முடியலையேம்மா என்று கலியபெருமாள் பதில் சொன்னதும், ஊக்கும் என்றபடி தன் அதிருப்தியை வெளியிடுவாள் முத்தம்மா கிழவி.

ஆற்றோரமாய் இருப்பது அக்ரகாரவாசிகளின் சுடுகாடு. மக்கள் சொல்ற பேரு, பாப்பாஞ் சுடுகாடு. மற்ற எல்லா சமூகத்தினரின் சுடுகாடுகளும் ஊர்க்கடைசியிலோ தொந்தரவு இல்லாத இடத்திலோதான் இருக்கு. இந்த சுடுகாடுதான், ஊருக்குள்ள போற பாதையில இருக்கு. அதை மாற்றச் சொல்லி போராடிப் பார்த்தாச்சு. அய்தீகப்படி இத மாத்தப்படாது என்று சொல்லிட்டாங்க அக்ரகாரவாசிகள். ஏன் மாத்தப்படாதாம்?

சுடுகாட்டிலிருந்து ஒரு பர்லாங்கு தூரத்தில் ருத்ரகோடீஸ்வரர் கோவில் இருக்குது. அந்தச் சாமிக்குப் பிணவாடை அடிக்கணுமாம். இந்தச் சுடுகாட்டில் பிணத்தைக் கொளுத்தும்போது, அந்த வாடை அவருக்கு நேரடியாப் போய்ச் சேரும்ங்கிறதுதான் அய்தீகம். ஆனா, காலத்தோட வளர்ச்சி யில் அந்த ஒரு பர்லாங் தூரம் முழுக்க வீடுகளும் கடைகளும் வந்திடிச்சி. கோவிலோ  பராமரிப்பே இல்லாம பாழடைஞ்சி போயிடிச்சி. ஒருகால பூசைக்கே திண்டாட்டம். ருத்ர கோடீஸ்வரர் சாப்பிடு றாரோ இல்லையோ பிணவாசனை மட்டும் பிடிச்சே ஆகணும்ங்கிற பிடிவாதத்தோட அக்ரகாரவாசிகள் இருக்காங்க. ஆனா, அந்த வாசனையும் அவரோட மூக்குக்குப் போகாதபடி வீடும் கடையும்  பெருகிடிச்சி. நடைமுறையில் எந்த வாசனையும் கோவிலுக்குள்ளே போகாதபடி தடுப்பு ஏற்பட்டு, மொத்தப் பிணவாடையும் ரோட்டுல போறவங்க மேலேதான் அடிக்கும். உடம்புக்குக் கெடுதி. மனசுக்கும் பீதி. அதனால அதை மாத்தச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் ஊர் மக்கள் போய்ப் பார்த்துட்டாங்க. அய்தீகத்தைத் தான் கோர்ட்டு ஏத்துக்கிடிச்சி. சுடுகாட்டை மாத்த முடியல. ராத்திரி நேரத்துல திகுதிகுன்னு எரியுற நெருப்பும், அந்தப் பிணவாடையும் முத்தம்மா கெழவியை மட்டுமில்ல, அந்தப் பக்கம் போற வர எல்லோரையுமே பயமுறுத்தி காய்ச்சலில் படுக்க வச்சிடும். போதாக்குறைக்கு, விளக்கு இல்லாத வீதியிலே பெருசா உட்கார்ந்திருக்கிற வாள்முனீஸ் வரன் சிலையும் மிரட்டிக்கிட்டே இருக்கும்.  அந்த மிரட்சி இன்னும் போகாததால்தான், கொள்ளுப்பேரனை முதல்முறையா பார்த்ததும், இந்த நேரத்திலா அந்த வழியா வந்தேன்னு முத்தம்மா கிழவி கேட்டாள்.

மறுநாள் காலையில் காத்தாயி அம்மன் கோவில் வாசலில் உள்ள வாள்முனீஸ்வரன் சிலைக்குப் பக்கத்தில் நின்று இனியன் போஸ் கொடுக்க, கதிரவன் க்ளிக் செய்தான். அது பழைய சிலையாக பயமுறுத்தவில்லை. நன்றாகப் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததோடு, ரோட்டில் போகிறவர் களை அவ்வளவாக மிரட்டாதபடி சுற்றுச்சுவரெல் லாம் எடுக்கப்பட்டிருந்தது. காட்டுக்காரத் தெருவின் முகமும் மாறியிருந்தது. வீடுகளெல்லாம் கான்க்ரீட்டாக மாறியிருந்தது. சிமெண்ட் ரோடு, பாதாள சாக்கடை வசதி என்று எல்லாவற்றிலும் காலத்துக்கேற்ற வளர்ச்சி.

அப்பா.. பாட்டி ஏதோ ஒரு சுடுகாடுன்னு சொன்னாங்களே.. -இனியன் கேட்க, அதென்ன அம்யூஸ்மெண்ட் பார்க்கா.. போய்ப் பார்க்குறதுக்கு என்று அடக்கிவிட்டான் கதிரவன்.

வீட்டு வேலையாள் வேகமாக ஓடிவந்தான்.

அய்யா.. ஆத்தா பேச்சு மூச்சில்லாம கிடக்கு

வந்த காரியம் முடிந்துவிட்டது. பதிமூன்றாவது வயதில் திருமணமாகி வந்ததிலிருந்து எழுபது வருடம் அந்த வீட்டில் வாழ்ந்த முத்தம்மா இப்போது படமாகத்தான் அங்கே இருக்கிறாள். உறவுகளெல்லாம் கிளம்பிக் கொண்டிருந்தன. கதிரவன் தன் குடும்பத்துடன் புறப்பட்டான். காட்டுக்காரத் தெரு வழியாகத்தான் ரயில்வே ஜங்ஷனுக்கு வரவேண்டும்.

இரவு நேரம். சிமெண்ட் சாலையில் ஆட்டோ அலுங்காமல் குலுங்காமல் போய்க்கொண்டிருந்தது. சின்ன வயதில் அவன் பார்த்த தெருவாக அது இல்லை. பளபளவென மின்சார வெளிச்சத்தோடு இருந்தது. வீடுகளில் நவீன வசதிகள் பெருகியிருப் பதை  டிஷ் ஆன்டெனாக்களும், ஏ.சி. மெஷினின் வெளிப்பகுதிகளும் காட்டிக் கொண்டிருந்தன. திடீரென ஆட்டோ டிரைவர் தன் முகத்தில் கர்சீப்பைக் கட்டினார். என்னாச்சு டிரைவர்? அங்கே பாருங்க அதே சுடுகாடு.. காரியம் முடித்து அக்ரகாரவாசிகள் திரும்பிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். தீயில் வேகிற பிணத்தின் வாடை ரோடெல்லாம் வீசுகிறது. புகை மண்டலத்தால் ரோட்டில் வரும் வாகனம்கூடத்  தெரியவில்லை. நவீன வசதிகள் எல்லாவற்றையும் மாற்றியிருந்தாலும், அய்தீகத்தை மட்டும் அதனால் மாற்றவே முடியவில்லை.

கதிரவன், கலைச்செல்வி, இனியன் எல்லோரும் கர்சீப்பை எடுத்து மூக்கைப் பொத்துகிறார்கள்.

எந்த வாடையையும் உணர முடியாத இடத்தில் பத்திரமாக இருக்கிறார் ருத்ரகோடீஸ்வரர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *