– திராவிட மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாண்ர்
பிராமணர் தமிழரையும், திரவிடரையும் போல இந்தியப் பழங்குடி மக்களல்லர். அவர் கிரேக்க நாட்டையடுத்த மேலை ஆசியாவினின்று பாரசீக வழியாக இந்தியாவிற்குள் புகுந்தவர். அவர் முதன் முதலாகக் குடியேறிய சிந்துவெளி நாடும் அவர்க்குத் தொன்றுதொட்டு உரியதன்று; அது முகஞ்சொதரோ – அரப்பா நாகரிகத்தை வளர்த்த முதுபழம் திரவிட மக்களது.
ஆரியர் சிறுபான்மையராய் இருந்தமையான், இந்தியாவிற் குடியேறிய உடனேயே மாபெரும்பான்மையரான பழம் திரவிட மக்களுடன் கலந்து நாளடைவில் தம் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். அதனால் அவர் எந்த மாநிலத் தில் குடியேறி வாழ்கின்றனரோ அந்த மாநில மொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள் ளனர். ஆயினும், தம் தாய்மொழியிற் சற்றும் பற்றின்றி தம் முன்னோர் மொழியின் கலவைத் திரிபாகிய வேதமொழி யையும், அதற்குப் பிற்பட்ட அரைச் சேர்க்கையான இலக்கிய நடை வழக்காகிய சமற்கிருதத் தையுமே இன்றும் கண்ணும் கருத்துமாகப் பேணி வருகின்றனர். தம் தாய்மொழிகளான திரவிட மொழிகளை, இழிந்தோர் மொழியெனப் பழிக்கவுஞ் செய்கின்றனர்.
தமிழ்த் தெய்வமென்று சிலரால் போற்றப்பெறும் காலஞ்சென்ற தென்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர், பண்டாரகர். உ.வே.சாமிநாதர் அவர்களும் தம் வாழ்நாள் முழுதும் தமிழைக் கற்று மாபெரும் புலவராகித் தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றி, பல அரும் பெருந் தொன்னூல்களை வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றியும், தமிழ்ப் பற்றுக் கொள்ளாதது மிக மிக வருந்தத்தக்கதாம். தவத்திரு. அழகரடிகளின் மாமனாரும் சென்னைவாணருமாகிய காலஞ்சென்ற திருவாளர் தணிகைமணியார் (எம்.ஏ.) ஒருமுறை பர். சாமிநாதர் அவர்களிடம் சென்று, அய்யா! நேற்றுத் தாங்கள் ஆற்றிய சொற்பொழிவு மிக நன்றாயிருந்தது என்று சொல்ல, அப்பண்டாரகர் உடனே சீறி விழுந்து, என்ன அய்யா, நீங்கள்கூடச் சுயமரியாதைக்காரராகிவிட்டீர்கள்! உபந்நியாசம் என்றல்லவா சொல்ல வேண்டும்! சொற்பொழிவு என்கிறீர்களே! இப் புதுச்சொல்லை எங்கே கற்றுக்கொண்டீர்கள்? எனக் கழறினாராம். மற்றொருமுறை பண்டாரகரின் பழைய மாண வரும், குடந்தைப் பொன் வணிகருமான திரு. ப.தி.சொ. குமாரசாமி அவர்கள் சென்னை வந்து பண்டாரகரைக் கண்டு அய்யா நலமா யிருக்கிறீர்களா? என்று அன்புடனும், ஆர்வத் துடனும் வினவ பண்டாரகர் கடும் புலிபோல் பாய்ந்து, என்ன உங்களுக்குச் சமஸ்கிருதத்தின் மேல் இவ்வளவு துவேஷம்? க்ஷேமம் என்று சொல்லக் கூடாதா? ஏன் நலமென்று வழக்கற்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்? என்று சீறி விழுந்தாராம்.
சென்ற ஆண்டு திரு. காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியாரவர்கள் குறளை சென்றோதோம் என்னும் ஆண்டாள் கூற்றிற்கு குறளைச் சென்றோதோம் என்று திரித்து ஓரிடத்திற் பொருள் கூறியது பற்றி ஆட்சி மொழிக் காவலர் திரு. கி. இராமலிங்கனார் (எம்.ஏ.) வினவச் சென்றிருந்த போது, ஆச்சாரியாரவர்கள் (தமிழறிந்திருந்தும்) வடமொழியில் விடை இறுக்க அதை அவர்களது அணுக்கத் துணைவர் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினாராம். அதன்பின், ஆட்சிமொழிக் காவலர், அய்யா! அடிகளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமே! அங்ஙனமிருந்தும் ஏன் வடமொழியில் விடை இறுக்க வேண்டும்? என வினவ, அணுக்கத் துணைவர், ஆச்சாரியார் சுவாமிகள் பூஜை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை, என மறுமொழி தந்தனராம்!
தமிழ் மக்காள்! தமிழ் மாணவர்காள்! தமிழ்ப் புலவர்காள்! பார்த்தீர்களா தவத்திரு. சங்கராச்சா ரியாரவர்கள் கடுங்கூற்றை! தமிழ் இழிந்தோர் மொழியாம்! ஆங்கிலக் கல்வியும் மொழியாராய்ச்சியும் மிக்க இவ்விருபதாவது நூற்றாண்டிலும் தமிழுக்கு இத்துணை இழிப்பும் பழிப்பும் ஏற்படுமாயின், வடமொழி தேவமொழியென்றும், பிராமணர் நிலத்தேவர் (பூசுரர்) என்றும் முற்றும் நம்பப்பட்ட பண்டைக்காலத்தில் இவை எத்துணை மிக்கு இருந்திருத் தல் வேண்டும் என்பதை உய்த்து ணர்ந்து கொள்க.
உண்மையில் தேவமொழி தமிழே! இழிமொழி வடமொழியே! இதை என் ‘The Primary Classical Language of the World’ என்னும் ஆங்கில நூலிலும், வடமொழி வரலாறு என்னும் தமிழ் நூலிலும் கண்டு கொள்க.
********
இந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென்கோடியில் கி.மு.50,000 (அய்ம்பதினாயிரம்) ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திரவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழி யென்று ஏமாற்றித் தமிழகத்திற் புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேறுவதற்குத் தமிழ் வடமொழியி னின்றும் விடுதலை யடைதல் வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும். அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும். முதற்கண் தமிழர் அனை வரும் தமிழ்ப் பெயரே தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று. பிறந்த அண்மையிற் பிறமொழிப் பெயர் பெற்றவரெல் லாரும் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ளலாம். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க் கறிவிக்கலாம்.
தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர். தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும்.
இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் அய்ந்தாண்டிற்குள் தமிழர்தம் அடிமைத்தனமும், அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.
ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடையவில்லை. ஆரியம் நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாம்.
(தமிழ் வளம் என்னும் நூலிலிருந்து)
.