நூல்: ‘பெரியாரின் பேரன்பு’
ஆசிரியர்: ஞா.சிவகாமி
வெளியீடு: ஏகம் பதிப்பகம்,
அஞ்சல் பெட்டி எண்: 2964, 3, பிள்ளையார் கோயில் தெரு, 2ஆம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.
அலைபேசி: 9444 909 194, 9790 819 294
—-* * *
இந்நூலாசிரியர் ஞா.சிவகாமி அவர்கள் தந்தை பெரியார்தம் எண்ணச் சோலையில் பூத்த புரட்சி மலர்களை முகர்ந்து ‘சு’வாசித்தே உயிர்ப்புக் கொண்டவர்; உணர்வு பூண்டவர்; உண்மை விண்டவர், பெரியார்தம் கொள்கையை அணுஅணுவாய் அசைபோட்டு, செரிப்பித்துக் கிடைக்கப் பெற்ற தம் சிந்தனை ஆற்றலுக்கு எழுத்துச் சிறகுகள் பூட்டியுள்ளார்; எழுத்தாளர் என்பதைக் காட்டியுள்ளார்; இலக்கியத் திறனை நாட்டியுள்ளார்.
இந்நூலாசிரியர்,
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – அது
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்’’ எனும் திரைப்பாடல் வரிகளை மேற்கோள் காட்டி,
“என்னைப் பொறுத்தவரை அது ஈ.வெ.ரா.தான்’’ என்கிறார்.
“ஒரு பெரியார்
ஒரு அண்ணா – ஏன்?
ஒரு சிவகாமி மைந்தன்
மட்டும் இல்லாமல்
இருந்திருந்தால் – இந்த
சிவகாமி தலைமைச் செயலகத்தில்
இருந்திருக்க முடியாதே’’
என்பதைப் பதிவு செய்துள்ளார்.
“எமலோகம்
பரலோகம்
சிவலோகம்
எங்கேயிருக்கு?
அன்றுமின்றும்
பூகோளம்
தானே நமக்குப்
பாடமா இருக்கு’’
என மூடநம்பிக்கைகைச் சாடுகிறார்.
“ஈரோட்டுப் பெரியார்
எனச் சொன்னாலே
ஈவும் இறக்கமும்
கலக்குதே நம்
உறவோடு – உயிரோடு
சாதியில்லாச் சமுதாயம்
சாதித்தவர் பெரியார்’’
ஆகிய வரிகளின் மூலம் தான் ஒரு புதுக் கவிதையாக்குநர் என்று காட்டியுள்ளார்.
“ஆறு தெய்வமானால் போதாது;
மலை தெய்வமானால் போதாது;
பெண் தெய்வமானால் போதாது
பெண் வன்கொடுமைகள்
முற்றிலும் நீங்க வேண்டும்’’
என்பதே என் கருத்து என்பதன் மூலம் பெண்-களுக்கு இழைக்கப்பட்ட _ இழைக்கப்படுகிற கொடுமைகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுபட பெரியாரைப் படியுங்கள் என்றும் வலியுறுத்துகிறார்.
இந்நூலாசிரியர், பெரியாரியத்தை உள்வாங்கி அவர்தம் தொண்டறக் கூறுகளான ஜாதி ஒழிப்பு, கடவுள் மத மறுப்பு, சமூகநீதி, வகுப்புரிமை, இந்தி எதிர்ப்பு, பெண்ணுரிமை மற்றும் பெரியாரின் சீர்திருத்தங்கள், போராட்டக் களங்கள் இன்னபிற சிறப்புக் கூறுகள் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முதல் பல கவிஞர்கள், அறிஞர்களின் வரிகளை எடுத்தாண்டு விளக்கியுள்ளமை தனிச் சிறப்பு.
தனது கல்லூரிக் காலத்தில் தந்தை பெரியாரைப் பற்றி, அரசு அலுவலராக இருந்த நிலையிலும் தொற்றி _ படர்ந்து, ஓய்வு பெற்ற பின்பும் செழித்து பூத்து காய்த்து கனிந்து பயனளிக்கும் அறிவுக் கொடியாக விளங்குவதுடன், தந்தை பெரியார்தம் இளமைக் காலம் தொட்டு இறுதிக்காலம் வரையிலுமான அவர்தம் அரிய பணிகளை _ அருமை பெருமைகளை இந்நூல் மூலம் செவ்வனே விளக்கியுள்ளார்.
“சமைப்பது எனக்குப் பிடிக்கும்’’ எனச் சொல்லும் இவர், “Putting Centuries into a Capsule”என்பதைப் போல, பெரியார்தம் சிந்தனைத் தோட்டத்தே விளைந்தவற்றையெல்லாம் தன் சிந்தைத் தூவலுக்குள் அடைத்து, வரிகளாக்கி ஓர் அரிய படைப்பாக இந்நூலைச் சமைத்துள்ளார். பெரியார் உலகம் சமைக்கப் பெண்களால் முடியும் என்பதை மெய்ப்பித்துள்ளார் என்பதை இந்நூலை வாங்கிப் படிப்பவர்கள், பெரியார் ஒரு பேராயுதம் போராயுதம் என்பதை தெள்ளிதில் புரிந்து கொள்ளலாம்.
– பெரு. இளங்கோ