முகப்புக் கட்டுரை : அய்ந்து மாநிலத் தேர்தல்: பி.ஜே.பி. பின்னடைவு! எதிர்க்கட்சி எழுச்சி!

மார்ச் 16-31,2022

மஞ்சை வசந்தன்

 

பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், கார்ப்பரேட் பிடியில் முழுமையாய் சிக்குண்டுள்ள தொலைக்காட்சிகள், குறிப்பாக வடநாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள், பத்திரிகையாளர் என்ற பெயரில் மேதாவிகளாய் விவாதங்களில் பங்குபெரும் அரசியல் வியாபாரிகள் என்று சுயநலக்காரர்களின், ஆதிக்கப் பேர்வழிகளின், அவர்களின் ஊடகங்களின் அரசியல் பார்வை, அதன்வழி அவர்கள் மக்களுக்கு எடுத்து வைக்கும் அரசியல் முடிவுகள் எல்லாம் உண்மையா? சரியா? என்றால் பெரும்பாலும் உண்மையல்ல, சரியல்ல என்பதே உண்மை! சரி! இதற்கு அண்மையில் வெளிவந்த அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை ஒட்டி இவர்கள் வெளிப்படுத்தும், பரப்பும் கருத்துகளைச் சான்றாகக் காட்டலாம்.

பி.ஜே.பி.க்கு சாதகமான முடிவா?

அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியதிலிருந்தே, பி.ஜே.பி. மாபெரும் வெற்றியை, சரித்திரச் சாதனையை செய்துவிட்டதுபோலவும், மோடி அசைக்க முடியாத ஆளுமைமிக்க, இந்திய மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு பெற்ற தலைவர் போலவும் பரப்புரை செய்யத் தொடங்கி-விட்டனர். ஆனால், இவை உண்மையா? என்றால் இல்லை. உண்மையை அடியோடு மறைத்து, தப்பான கருத்தை _ பிம்பத்தை கட்டமைத்துப் பரப்பி வருகின்றனர். உண்மையில் பா.ஜ.க. வளர்ச்சியோ, எழுச்சியோ, சாதனையோ செய்து விடவில்லை. மாறாக, இருந்ததையும் இழந்து நிற்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றினாலும், மக்கள் செல்வாக்கைக் கணிசமாக இழந்துள்ளனர்; இந்த நிலை தொடர்ந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் படுதோல்வி அடைவது உறுதி என்பதே அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் காட்டும் உண்மை.

ஆனால், பி.ஜே.பி அய்ந்து மாநிலத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகவும், எனவே, நாடாளு-மன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி. மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துவிடும் என்று உண்மைக்கு மாறான ஒரு கருத்தை, முடிவை முனைந்து மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இந்தக் கணிப்பும், முடிவும், கருத்துப் பரப்பலும் சரியா? உண்மையா என்றால் ஆதாரபூர்வமாக அடித்துச் சொல்லலாம், உண்மையல்ல, சரியல்ல என்று.

தக்கவைப்பதுதான் வளர்ச்சியா?

இந்த அய்ந்து மாநிலங்களில் பி.ஜே.பி. நான்கு மாநிலங்களில் தேர்தலுக்கு முன் ஆட்சியில் இருந்தது. புதிதாக எந்தவொரு மாநிலத்திலும் அது ஆட்சியைக் கைப்பற்றிவிடவில்லை. இருந்ததை தக்கவைப்பதுதான் சாதனையா? வளர்ச்சியா? நிச்சயமாக இல்லை. இருந்ததைத் தக்கவைத்த நிலையில், சென்ற முறை (2017இல்) பெற்ற, வென்ற இடங்களைவிட இத்தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றிருந்தால் அதை பா.ஜ.க.வின் வளர்ச்சி, சாதனை என்று கொள்ளலாம். ஆனால், சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட, இடங்களைவிட குறைவான அளவே இத்தேர்தலில் பெற்றிருக்கிறது பி.ஜே.பி. அப்படியென்றால் அதன் பொருள் என்ன? பி.ஜே.பி.யின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது, மோடி செல்வாக்கு இழந்து வருகிறார், பி.ஜே.பி. மக்களால் நிராகரிக்கப்படுகிறது என்பதுதானே?

பி.ஜே.பி.யின் சரிவும் எதிர்க்கட்சிகள் எழுச்சியும்

உண்மையில் இந்த அய்ந்து மாநிலத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான அளவு வளர்ச்சியைப் பெற்றுள்ளன. பா.ஜ.க. கணிசமான அளவு சரிவை, இழப்பைப் பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தை எடுத்துக்கொண்டு உண்மை நிலை என்ன என்பதை ஆய்வோம்.

உத்தரப்பிரதேசம் தேர்தல்: 2017-2022

மேற்கண்ட பட்டியலைக் கூர்ந்து நோக்கினால் கீழ்க்கண்ட உண்மைகள் வெளிப்படும்.

2017 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 312 இடங்களில் வெற்றி பெற்ற பி.ஜே.பி 2022 சட்டமன்றத் தேர்தலில் 255 இடங்களைப் பெற்றுள்ளது. அதாவது 57 இடங்களை பி.ஜே.பி இத்தேர்தலில் இழந்துள்ளது. அதாவது அய்ந்தில் ஒரு பங்கு இடங்களை இழந்துள்ளது. பி.ஜே.பி. உத்தரப்பிரதேசத்தில் 20% சரிவைப் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சி 2017இல் 47 இடங்களைப் பெற்றிருந்தது. தற்போது நடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில் 111 இடங்களைப் பெற்றுள்ளது. சற்றொப்ப இரண்டரை மடங்கு கூடுதல் இடங்களைப் பெற்று, உத்தரப்பிரதேசத்தில் நல்ல வளர்ச்சியை, எழுச்சியை மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.

காங்கிரசும், பகுஜன்சமாஜ் கட்சியும் 2017 தேர்தலைவிட தற்போது இழப்பைப் பெற்றுள்ளன.

ஆக, உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய சாதனை படைத்த கட்சி சமாஜ்வாடி கட்சிதான். மக்களின் செல்வாக்கைப் பெற்ற தலைவர் என்றால் அகிலேஷ் யாதவ்தான். சமாஜ்வாடி கட்சி 2019இல் பெற்ற வாக்கு சதவிகிதம் 18%. ஆனால், தற்போது 32% சற்றொப்ப இரண்டு மடங்கு கூடுதல் சதவிகித வாக்குகளை இக்கட்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால் 2024இல் அதாவது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50% வாக்குகளை சமாஜ்வாடி கட்சி பெறும். மாறாக, பி.ஜே.பி.யின் சரிவு விகிதம் 2019இல் 49%லிருந்து தற்போது 41.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது 22% சரிவை பி.ஜே.பி. பெற்றுள்ளது. இதே விகிதத்தில் சரிவைக் கணக்கிட்டால் 2024இல் 30% வாக்குகளையே பி.ஜே.பி. உத்தரப்பிரதேசத்தில் பெறும் என்பது உறுதி.

அப்படியென்றால் இத்தேர்தல் முடிவு பி.ஜே.பி கொண்டாடக்கூடிய முடிவோ, வெற்றியோ அல்ல. மாறாக, தோல்வியில் ஒடுங்க வேண்டிய முடிவு.

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் பாஜக குறைவான இடங்களையே கைப்பற்றியுள்ளது. இருந்தபோதிலும், போதிய இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வரவுள்ள 2024-ஆம் ஆண்டு தேர்தலில், சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து இடங்களைக் கைப்பற்ற பல்வேறு கட்சிகளும் முயற்சி செய்யும். அப்படி ஒரு வலுவான கூட்டணி அமையும்பட்சத்தில் கண்டிப்பாக அது தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்தக் கூட்டணி யாருடன் என்பது தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு

பி.ஜே.பி. உத்தரப்பிரதேசத்தில் 255 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் 165 தொகுதிகளில் 200 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்திலேதான் வெற்றி பெற்றுள்ளது. அதாவது,

200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகள்

500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள்

1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49 தொகுதிகள்

2000 வாக்குகள் வித்தியாசத்தில் 86 தொகுதிகள்

மொத்தம் 165 தொகுதிகளில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்திலேதான் பி.ஜே.பி. வெற்றி பெற்றுள்ளது.

ஒரு நுட்பமான கணக்கீடு

மேற்கண்ட வித்தியாசத்திலே, உண்மையான வித்தியாசம் அதில் பாதி அளவு வாக்குகள்தான். அதாவது ஒருவர் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார் என்றால், உண்மையான வித்தியாசம் 200 அல்ல, உண்மையான வித்தியாசம் 101 வாக்குகள்தான். தோல்வி அடைந்தவர் பி.ஜே.பி.க்கு சென்ற வாக்குகளில் 101 வாக்குகளை இவர் பெற்றிருந்தால் இவர் வெற்றி பெற்று பெறுவார். ஆக,. உண்மையான வித்தியாசம் 101 வாக்குகள்தான். அதேபோல் 2000 வாக்கு வித்தியாசத்தில் பி.ஜே.பி.க்குச் சென்ற வாக்குகளில் 1001 வாக்குகளை பி.ஜே.பி.யிடம் தோற்றவர் பெற்றிருந்தால் அவர் வெற்றி பெறுவார். அது மட்டுமல்ல, ஒரு தொகுதியில் 200 வாக்குகள், 1000 வாக்குகள் என்பது ஒரு ஊருக்கு ஓரிரு வாக்குகள் கூடுதலாகப் பெற்றாலே வெற்றி பெற்றுவிட முடியும்.

ஆக, இந்த முடிவுகளின்படி பார்த்தால் இன்னும் சற்று கூடுதலாக சமாஜ்வாடி கட்சி ஒவ்வொரு ஊரிலும் உழைப்பையும் கவனத்தையும் செலுத்தியிருந்தாலே ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.

மாயாவதியும் ஒவைசியும்

பி.ஜே.பி. கட்சிக்கு மறைமுகமாக உதவி செய்த கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியும், ஒவைசி கட்சியும் ஆகும். மதவாத பி.ஜே.பி.யை தோற்கடிக்க, அக்கட்சிக்கு எதிராகக் களம் காண வேண்டிய இக்கட்சிகள், மக்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் வாக்குகளைப் பிரித்ததுதான்.

2019இல் 19% வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி தற்போது 13% வாக்குகள் பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவ், மாயாவதி இருவரும் கூட்டுச் சேர்ந்து நின்றிருந்தால் 13+32=45 சதவிகித வாக்குகள் இக்கட்சிகள் பெற்றிருக்கும். மொத்தமுள்ள 403 இடங்களில் 300 இடங்களுக்கு மேல் இக்கட்சிகள் பெற்றிருக்கும். அகிலேஷ் யாதவ் ஆளுங் கட்சியாகவும், மாயாவதி எதிர்க்கட்சியாகவும் இருந்து, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டிருக்கலாம்; மதச்சார்பற்ற ஆட்சியைத் தந்து மதவெறியை, ஆரிய பார்ப்பன, உயர்ஜாதி ஆதிக்கத்தைத் தடுத்திருக்கலாம்; தகர்த்திருக்கலாம். இனிவரும் தேர்தலில் இவர்கள் பி.ஜே.பி.க்கு எதிரான அணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

பஞ்சாப்:

பஞ்சாபைப் பொறுத்தவரை காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்ததற்குக் காரணம், அக்கட்சிக்குள் இருந்த பூசல்கள் மற்றும் கடைசி நேரத்தில் தலைவர்களுக்கு இடையே இருந்த போட்டா போட்டி, மாற்றம் போன்றவை.

பஞ்சாப் மக்கள் பி.ஜே.பி.யை முற்றாக நிராகரித்து சரியான ஆளுங்கட்சியை எதிர்நோக்கியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் காணப்பட்ட போட்டா போட்டிகளே, மக்களை ஆம் ஆத்மியை தேர்வு செய்யத் தள்ளியது. அம்மாநிலத்தைச் சேர்ந்தவரான கெஜ்ரிவால் அதை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இதனால் கெஜ்ரிவால் கட்சி மற்ற மாநிலங்களிலும் வளர்ந்து விடும் என்று கணக்கிடுவதும், கணிப்பதும் தப்பான முடிவாகும்.

உத்தராகண்ட்:

பாஜகவின் கோஷ்டிப் பூசல், ஆட்சி மீதான புகார்களால் இங்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற எண்ணம் அக்கட்சி மேலிடத்துக்கு இருந்தது. அதன் எதிரொலியாகவே 4 மாதங்களில் 3 முதல்வர்கள் இங்கு மாற்றப்பட்டார்கள்.

விவசாயிகளின் தொடர் போராட்டங்கள், ஹரித்துவாரில் துறவிகளின் வெறுப்புப் பேச்சு, கரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதம் என ஆளும் பாஜகவைச் சர்ச்சைகள் சுற்றின.

உத்தராகண்டில் சரியான தலைமையைக் காங்கிரஸால் உருவாக்க முடியாமல் போனது. தலித் தலைவர் யஷ்பால் ஆர்யா, அவருடைய மகன் சஞ்சீவ் ஆகியோரைக் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவந்தது சாதகமாகப் பார்க்கப்பட்டது.

உத்தராகண்டில் தலித் முதல்வர் என்று பேசிவந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், தன்னுடைய நிலைப்பாட்டைக் கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டது அக்கட்சிக்குப் பின்னடைவாக மாறியது.

மணிப்பூர்: 2002ஆ-ம் ஆண்டு முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலம் மணிப்பூர். ஒக்ராம் இபோபி சிங் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். 2017 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. பீரேன் சிங் முதல்வரானார். ஆனால், அந்தக் கூட்டணியால் பாஜக அவ்வப்போது சிக்கல்களை எதிர்கொண்டது.

மணிப்பூரில் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது முக்கியமான பிரச்சினை. ஆனால், மற்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் அதையே முக்கியப் பிரச்சினையாகப் பேசின. மாறாக, எதிர்க்கட்சிகள் பலமாக இருந்த பகுதிகளில் ஆயுதக் குழுக்களின் ஆதரவைப் பெறுவதில் பாஜக முனைப்புக் காட்டியது.

கோவா: கோவாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை எப்படியும் வீழ்த்துவது என்று காங்கிரஸ் கட்சியிடம் முனைப்பு இருந்தது. ஆனால், அக்கட்சித் தலைவர்களின் வழக்கமான பெரியண்ணன் தோரணை மீண்டும் காங்கிரஸுக்குத் தோல்வியைத் தந்திருக்கிறது. கோவாவில் புதிதாகக் களமிறங்கிய மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுடன் ஒரு பனிப்போரை காங்கிரஸ் நடத்திவந்தது. அதன் விளைவாக மஹாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியும் திரிணமூல் காங்கிரஸும் தனித்தனி அணியாகக் களமிறங்கின. கூட்டணியை நாடி வந்த தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகளையெல்லாம் காங்கிரஸ் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆளுங்கட்சி-யின் எதிர்ப்பலையைத் தங்களுக்கான வாக்குகளாகக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் பெறுவதில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. விளைவு, சிதறிய வாக்குகளால் பாஜக மீண்டும் கோவாவைக் கைப்பற்றியிருக்கிறது.

தோற்றவர் வெல்ல முடியும்!

அரசியலில் தோல்வி என்பது நிரந்தரமல்ல. எதிர்க்கட்சித் தகுதியைக்கூட இழந்த பல கட்சிகள் மீண்டும், பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாக வந்த வரலாறு நிறைய உண்டு. எனவே, தோல்வியைக் கண்டு ஒதுங்காமல், தளராமல், மதவாத, பாசிசச் சக்திகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்ச்சியடையச் செய்வதற்கான வியூகம் அமைக்க எழுச்சியுடன் எழுந்து நிற்க வேண்டும்; எதிர்கொள்ள வேண்டும்.

வீழ்ந்தவர் எழ முடியும்! தி.க. தலைவர் அறிக்கை!

“உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேர்தல்களில் தான் பா.ஜ.க. மிகவும் அதிகமாக கவனஞ்செலுத்திய மாநிலம் _ – மற்றவைகளைவிட!

அதன்படி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள அதே சமயத்தில்,  முக்கிய எதிர்க்கட்சியாக அகிலேஷ் யாதவ் அவர்களின் சமாஜ்வாடி கட்சி 2017ஆம் ஆண்டு பெற்ற இடங்களைவிட இரண்டு மடங்கு அதிக இடங்களைத் தற்போது பெற்றுள்ளது.

காங்கிரஸ் செய்யவேண்டியது  என்ன?

காங்கிரஸ் கட்சி தனது அடிக்கட்டு மானத்தையே மாற்றி புதுப்பிக்க வேண்டியது அதன் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது!

காங்கிரசைப் பலவீனப்படுத்திட உள்ளும் புறமும் பல சக்திகள் வேலை செய்தன. பா.ஜ.க. பெற்ற வெற்றி தற்காலிகம்தான் என்று நிரூபிக்க வேண்டிய அளவுக்கு காங்கிரஸ் தலைமை சரியாக ஆய்வு செய்து, அதற்குக் கிடைத்துள்ள தொடர் தோல்விகளை “அதிர்ச்சி வைத்தியமாகவே எடுத்து மீள திட்டமிட வேண்டும்!

காங்கிரசுக்கு ஆதரவு பல மாநிலங்களில் இருந்தும், அதை சரியாகத் திரட்டும் பயிற்சி பெற்ற இயந்திரம் இல்லை; “தலைவர்களின்’’ தன்முனைப்பு கட்சியை பலவீனப்படுத்தி யுள்ளது என்பது எளிதில் எவருக்கும் புரியக்கூடிய ஒன்று.

எதிர்க்கட்சிகள் பெறவேண்டிய பாடம்!

மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம், பாதுகாக்கப்பட வேண்டிய அரசமைப்புச் சட்ட ரீதியான பல வாழ்வாதார உரிமைகள், மாநில உரிமைகள், பன்முக கலாச்சாரம் – இவற்றைப் பாதுகாக்கும் கண்-ணோட்டத்தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வெற்றிகள் – நாட்டின் ஜனநாயகக் கட்டுக்கோப்புக்கும், அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் விடுக்கும் கேள்விக் குறிகளே என்பதை நன்கு புரிந்து, இந்தத் தோல்விகளிலிருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்று, தங்களது பார்வையை – அணுகுமுறையை மாற்றும் புதிய சிந்தனைக்குத் தயாராக வேண்டிய எச்சரிக்கை மணியே – இத்தேர்தல் முடிவு.

11.3.2022 அன்று டில்லி பத்திரிகையாளர் சீமா சிஷ்டி என்பவர், ஆங்கில நாளேடு ‘இந்து’வில் எழுதியுள்ள ஒரு செய்திக் கட்டுரையில்,

‘‘உத்தரப்பிரதேசத்தில்தான் ஏழைகளான இளைஞர்களின் வேலை கிட்டாதவர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக  அதிகமாக கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேர்களாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் ஜி.டி.பி. வளர்ச்சி, உணவு மற்றும் பொருளாதார நிலையில், மற்ற மாநில அரசுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் கீழே உள்ளது.  விலைவாசி ஏற்றம் – இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி மாநிலங்-களுக்கு வேலைக்குச் சென்று, கரோனா கொடுமை காரணமாக வேலை கிட்டாது திரும்பிய நிலையில், அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஹிந்துத்துவா மத உணர்வையே பிரதானமாக்கினார்கள், வென்றுள்ளார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘மயக்க பிஸ்கெட்டுகள் மாதிரி 80:20 என்ற வெறுப்புப் பிரச்சாரத்தின் வேகம் மற்றவை பற்றி பாதிக்கப்பட்ட மக்களை யோசிக்க விடவே இல்லையே’’ என்று சுட்டிக்-காட்டியுள்ளார்.

‘‘ஹிந்துத்துவாவை எதிர்கொண்டு, மண்டல் மூலம் பதிலளிக்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலுக்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் இடைவெளி பல மைல்கள்’’ என்றும் ஒப்பீடு செய்துள்ளார்!

2 ஆண்டுகளில் சாதிக்கலாம்!

இந்தத் தோல்வி முடிவுகளைப் பாடமாகக்கொண்டு எதிர்கட்சியினர் வலுவான கூட்டணி, சமூகநீதி, மாநில உரிமைகள், ஜனநாயகப் பாதுகாப்பு, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் காப்பு அடிப்படையில் ஓரணியைக் கட்டிட தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி _- அது எப்படி சமூகநீதியை உள்ளடக்கிய பொருளாதார, மாநில உரிமைகள், பன்முக கலாச்சாரப் பாதுகாப்பு என்பதை மய்யப்படுத்தினால், இன்னும் 2 ஆண்டு-காலத்தில் (2024 – மக்களவைத் தேர்தலில்) சாதித்துக் காட்ட முடியும்.

வீழ்வது முக்கியமல்ல; விரைந்து எழுவதுதான் மிக முக்கியம்! எதிர்க்-கட்சிகளின் வலுவான ஒற்றுமை அதிகம் தேவை!’’ என தி.க. தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் நிற்க வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியுள்ள கருத்துகளை இந்தியா முழுவதும் உள்ள மதச்சார்பற்ற அரசியல் தலைவர்கள் ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். தங்களுக்குள் உள்ள தனிப்பட்ட “ஈகோ’’வை விட்டொழித்து, நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலம், நலன் இவற்றைக் கருத்தில் கொண்டு ஓரணியில் திரள வேண்டும்.

தனித்துப் பிரிந்து நிற்பதால் எல்லோருக்கும் இழப்பு; ஒற்றுமையுடன் ஓரணியில் நின்றால், எல்லோருக்கும் நன்மை. இதை அடிப்படையில் வைத்து வியூகம் அமைத்தல் கட்டாயம்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதச் சார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைந்தால் பி.ஜே.பி.யை படுதோல்வி அடையச் செய்யலாம். பி.ஜே.பி.யின் பலமே, எதிர்க்கட்சிகள், பிரிந்து நிற்பதுதான். இனியும் இந்தத் தப்பைச் செய்யாது பி.ஜே.பி.யை வீழ்த்துவதில் உறுதியாய் ஒற்றுமையாய் நிற்க வேண்டும்.

எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி வலுவுடன் உள்ளதோ அந்த மாநிலத்தில் அக்கட்சியின் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து, தங்கள் பலத்திற்கு ஏற்ப இடங்களைப் பகிர்ந்து கொண்டு தேர்தலைச் சந்தித்தால் எல்லோரும் அதிக இடங்களைப் பெறலாம்; பா.ஜ.க.வை படுதோல்வியடையச் செய்யலாம்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் காங்கிரஸ் உடன் தேர்தல் கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்தது அறிவுபூர்வமான ஆக்கரீதியான முடிவு. இப்படி ஒவ்வொரு கட்சியும் தங்கள் தவற்றை உணர்ந்து ஒரே அணியில் திரள வேண்டும். காங்கிரஸ் கட்சியும், தற்போது உள்ள நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு பி.ஜே.பி.யை வீழ்த்த வேண்டும் என்பதை முதன்மை இலக்காகக் கொண்டு, தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்கின்ற அணுகுமுறையைப் பின்பற்றி, மற்ற மாநிலங்களிலும் விட்டுக்கொடுத்து கூட்டணி அமைத்தால் பி.ஜே.பி.யை வீழ்த்தி நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற அணி வெற்றி வாகை சூடுவது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *