கே: ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற ஒரே வழி, மாணவர், பெற்றோர், பொது மக்கள், அரசியல் கட்சியினர் ஒழுங்கிணைந்து பெரும் போராட்டமே தீர்வு என்பதால் விரைந்து முன்னெடுப்பார்களா?
– அன்புச் செல்வன், மதுரை
ப: கடந்த ஓராண்டுக்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் பெருந்திரள் எழுச்சி கொண்ட அறப்போரை நடத்தவே நாம் திட்டமிட்டு, மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை குமரியில் தொடங்கி சென்னை வரை நடத்தி, அடுத்தகட்டமாக மக்களை அணிதிரட்ட, திட்டமிட்டபோதுதான் கொரோனா கொடுந்தொற்று கோவிட்_19 தொடங்கி, ஊரடங்கு முதல் பல இன்றியமையாத் தடைகள் தொடர்ந்து, வருவதால் அது தள்ளிப் போகின்றது. இப்போது ‘ஒமைக்ரான் _ டெல்டா வேரியன்ட்’ போன்ற புதுவகை அதீதத் தாக்குதல்கள் என்றாலும், திட்டம் தயார்!
ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தலைநகரில் செய்த அறப்போர் போல ‘நீட்’ ஒழிப்புப் போராட்டம் என்றும் தயார் நிலையில் உள்ளது. அதுதான் ஒரே வழி _ 2024 வரையில்!
கே: அமித்ஷா, ஆளுநர் இருவரின் செயல்பாடுகள் அப்பட்டமான மரபு மீறல், மக்களாட்சி மாண்பு மீறல் என்பதால் உச்சநீதி மன்றம் தீர்வுகாண முடியாதா?
– முரளி, தஞ்சை
ப: அங்கேயும் அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே ‘காயம்’ (நிரந்தரம்) என்ற கிராமியப் பழமொழி போல் அது அங்கே ஆகாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
கே: பா.ஜ.க வீழ்ச்சியை பஞ்சாப் நிகழ்வு வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாமா?
– அருண்பாலா, செஞ்சி
ப: பொறுத்திருந்து பார்ப்போம்.
கே: மழை வெள்ளச் சேதங்களை மத்திய குழு ஆய்வு செய்து பல வாரங்கள் ஆகியும் மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையில், நீதி மன்றத்தை அணுகிப் பெற முடியுமா?
– – குமார், சென்னை
ப: மேலே சொன்ன பதில்தான் இதற்கும். என்றாலும், நியாயங்கள் தேடும் கதவை அடைக்கக் கூடாது என்பது ஏற்கத்தக்கதே!
கே: இந்திய அளவில் பி.ஜே.பிக்கு எதிரான வெற்றிக் கூட்டணியை தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைக்க வேண்டும் என்ற திருமா அவர்களின் வற்புறுத்தல் காலத்தின் கட்டாயம் அல்லவா?
– சரவணன், புதுவை
ப: சரியான வேண்டுகோள்; செறிவான முடிவை கொக்கொக்க கூம்பும் பருவத்தே செய்வார் நமது சமூகநீதிக்கான சரித்திரநாயகர் முதலமைச்சர். நம்புங்கள் _ நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாகவே நடக்கும்!
கே: ஆயுள் கைதிகள் விடுதலையை மதப் பிரச்சினையாக்கி, இஸ்லாமியர்களை தி.மு.க.விற்கு எதிராக மாற்ற முயலும் சதியை உடனடியாக முறியடிக்க, இஸ்லாமியர்களுக்கு தெளிவூட்ட வேண்டியது கட்டாயமல்லவா?
– பெரியார் செல்வம், சேலம்
ப: மதப் பிரச்சினை அல்ல; அது மனித உரிமை. மனிதநேயப் பிரச்சினையாகவே பார்க்க வேண்டிய கருணை ஆட்சியினருடையது! இவ்வாட்சி ‘மதம் பிடித்த’ ஆட்சியல்ல; மனிதநேயம் மலர்ந்திட்ட ஆட்சி. போகப் போகப் புரியும்.
கே: ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதியாகத் தடுக்க என்ன செய்யவேண்டும்?
– சிவசண்முகன், திருச்சி
ப: காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளைக் கண்டறிந்து களையெடுக்க வேண்டும்.
கே: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய போது, மற்ற மாநிலங்களில் தொடங்கப்பட்டவை எல்லாம் நிறைவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பணியைத் தொடங்காததற்கு சட்டப்படி நீதிமன்றம் மூலம் தீர்வுகாண முடியாதா?
– அசோகன்
ப: தீர்மானங்கள் நிறைவேற்றினாலும், ஊறுகாய் ஜாடியில்தான் ஊற வைக்கின்றனர் உத்தம சிகாமணிகள்! இந்நிலையில், மார்க்கம் என்ன? மக்கள்! மக்கள்! மக்கள் எழுச்சிதான்!
கே: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை தற்போது நிரப்பிக் கொள்ளலாம் என்கின்ற உச்சநீதிமன்ற அனுமதி சரியா?
– சசிகுமார், கோவை
ப: இந்த ஆண்டுதான்; முழுத் தீர்ப்பு மார்ச்சுக்குப் பிறகு வரும். அப்போது முழுநீதி கிட்டும். காரணம், இதனை விசாரித்த நீதிபதிகள் நெற்றியடி கேள்விகளால் ஒன்றிய அரசு மூத்த வழக்குரைஞர்களைத் திணறடித்துவிட்டார்கள். அதில் 27 சதவிகித இடஒதுக்கீடு வெற்றிதான் மிகப் பெரிய சாதனை _ தி.மு.க. கிரீடத்தில் ஓர் ஒளி வீசி, பளிச்சிடும் முத்து! ஸீa