சிறுநீரகச் செயலிழப்பு
(Kidney Failure)
மரு.இரா.கவுதமன்
சிறுநீர் நச்சுப் பிரிப்பு (Dialysis): சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்த நிலையில், மருத்துவர்கள் “சிறுநீர் நச்சுப் பிரிப்பு’’ (Dialysis) மருத்துவம் செய்வர். சிறுநீரகச் செயலிழப்பால் நச்சுப் பொருள்கள் உடலில் கலப்பதோடு அல்லாமல் பல இணை நோய்களையும் உண்டாக்கும். அந்த நச்சுப் பொருள்கள் உடலில் கலக்காமல் இருக்கவே இம்மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட கீழ்க்காணும் முறைகள் கையாளப்படுகின்றன.
இரத்த நச்சு சுத்தகரிப்பு (Haemodialysis) இரத்தத்தை வெளியே உள்ள கருவியில் செலுத்தி சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றி மீண்டும் _ இரத்தத்தை உடலில் செலுத்துவார்கள். 3 முதல் 4 மணி நேரம் இம்முறையைச் செயல்படுத்த ஆகும். பெரும்பாலும் மருத்துவமனையிலேயே செய்யப்படும் செயல்பாடு இது. ஆனால், இணை நோயின் தீவிரத்தால் மருத்துவமனைக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு வீட்டிலும் செய்ய முடியும்.
உள்ளுடற் சவ்வு நச்சு நீக்கம்:(Peritoneal Dialysis) குழாய்களை வயிற்றின் உள்பகுதியில் செலுத்தி, அதன் மூலம் மருத்துவ நீர்மங்களைச் செலுத்தி, சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றும் முறை இது. இதை வீட்டிலிருந்தும் செய்யலாம்.
பொதுவாக, நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப இம்மருத்துவம் செய்யப்படும். ஆரம்பத்தில் முதல் நாள் இரண்டு, மூன்று முறை கூட செய்ய வேண்டியிருக்கும். பிறகு இந்தச் செயல்பாடு குறையும்.
சிறுநீரக மாற்று மருத்துவம்: 100 சதவிகிதம் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களுக்கு, மாற்றாக வேறு சிறுநீரகம் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை. ஆனால், மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது சற்று தாமதமாகலாம். அதுவரை நச்சுப் பிரிப்பு முறையில் சிறுநீரகத்தின் நச்சுகள் பிரிக்கும் மருத்துவம் மூலம் நோயாளியின் உயிர் பாதுகாக்கப்படும்.
* பொதுவாக முழுமையான குணமளிக்கக் கூடிய மருத்துவ முறை.
* ஒரு சிறுநீரகம்தான் தேவை.
* குடும்ப உறுப்பினர்களிடம் எடுக்கும் சிறுநீரகம் சிறந்தது.
* இணையரிடமோ, நண்பர்களிடமோ சிறுநீரகம் பெறலாம்.
* இவர்கள் “உயிருள்ள உறவுமுறை நன்கொடையாளர்கள்’’ (Live Relatives Donors) என்று அழைக்கப்படுகிறார்கள்.
* இயல்பாக ஒரு சிறுநீரகமே செயல்படப் போதுமானது. அதனால் எந்தக் குழப்பமுமின்றி சிறுநீரகம் கொடுக்கலாம்.
* மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகங்களை தேவையானவர்களுக்குப் பொருத்தி, அவர்களின் உயிர் காக்க முடியும்.
* பாதுகாப்பான, வெற்றிகரமான அறுவை மருத்துவம் இது.
* இரத்தம் ஒரே வகையானதாக சிறுநீரகம் கொடையாளர்களுக்கும், பெறுபவர்களுக்கும் இருக்க வேண்டும்.
* “திசு ஒற்றுமை’’ (Tissue Matching) ஒன்றாக இருக்க வேண்டும்.
* சிறுநீரகக் கொடையாளிக்கு சிறுநீரகத்தை எடுப்பதால் உடல் நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இயல்பான முழு வாழ்க்கையும் எந்தக் குறைபாடும் இன்றி வாழ முடியும்.
* சிறுநீரகம் பெறுபவர் வாழ்நாள் 20 முதல் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
* பொருத்தப்பட்ட சிறுநீரகம் இயல்பு நிலையடைந்து, எளிதாக தன் பணியை முழுமையாகச் செய்யும்.
* கொடையாளிக்கும், பெறுபவருக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் அறுவை மருத்துவம் நடைபெறும்.
* வேறு மருத்துவமனையில் இருந்து பெறப்படும் சிறுநீரகம், பாதுகாப்பாக, அதற்கென்று இருக்கும் பெட்டியில் வைக்கப்பட்டு, பெறுபவர் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பொருத்தப்படும்.
* இன்றைய மருத்துவ வாய்ப்புகளில் கண்களுக்கு அடுத்து அதிகமாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறும் உறுப்பு மாற்ற அறுவை மருத்துவம் சிறுநீரக மாற்று அறுவை மருத்துவமே ஆகும்.
* உயிரோடு இருப்பவர் சிறுநீரகங்கள் எளிதில், ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறப்பாகச் செயல்படும்.
* இயல்பாக அவர் செயல்பட முடியும்.
* கொடையாளிகள் உடல் நிலையில் இணை நோய்கள் இருக்கக் கூடாது.
* இளைஞர்களின் சிறுநீரகங்கள் எளிதில், நோயாளிகளுக்குப் பொருந்தும்.
* கொடையாளிகள் மருத்துவமனையில் சிறிது காலமே தங்க வேண்டி இருக்கும்.
* கொடையாளியின் மன நிறைவுக்காகவும், எந்தக் குறைபாடும் இல்லை என உறுதியளிக்கவும் சில ஆய்வுகளைச் செய்யலாம். வழமையான இரத்த ஆய்வு, சிறுநீர் ஆய்வு, மீள் ஒலிஆய்வு, ஊடுகதிர் கணினி வரைவு போன்றவை செய்து, கொடையாளிக்கு நம்பிக்கை ஊட்டலாம்.
* கொடையாளிகளும், சிறுநீரகம் பெற்றவர்களும், குழந்தைகள் பெற முடியும் _ பெற்றுக் கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. மனத்திடத்திற்காக ஏற்கெனவே சிறுநீரகம் கொடுத்தவர்களிடம், கொடையாளிகள் கலந்துரையாடலாம்.
* யாருக்குச் சிறுநீரகம் கொடுத்துள்ளோம் என கொடையாளிக்குத் தெரிய வேண்டியதோ, தெரிவிக்க வேண்டிய நிலைப்பாடோ சட்டப்படி கிடையாது.
சிறுநீரகச் செயலிழப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருத்துவம் செய்து முழுமையாக நன்றாக ஆக்க முடியும்.
நாள்பட்ட நோய்க்குத்தான் பெருமளவில் கடுமையான மருத்துவம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரம் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.
சிறுநீரகச் செயலிழப்பு முழுமையாக இருந்தால், சிறுநீர் நச்சுப் பிரிப்பு முறையிலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் அறுவை மருத்துவம் மூலமும் நல்வாழ்வு பெற முடியும்.ஸீ